''பன்னாட்டு மருந்து நிறுவனங்கள், இந்திய மக்களை பரிசோதனைக்கூட எலிகளாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன. இந்த விவகாரத்தில் மத்திய அரசு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது. இது, நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும்''
-இப்படி எச்சரித்திருப்பது… தனியார் தொண்டு நிறுவனத்தினரோ… பொதுநல ஆர்வலர்களோ அல்ல… உச்ச நீதிமன்றம்!
பன்னாட்டு நிறுவனங்களின் மருந்துகள், இந்தியாவில் தாறுமாறாக பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன என்கிற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இங்கே முன் வைக்கப்படுகின்றன. ஆனால், இங்கேயுள்ள அரசுகள் கண்டுகொள்வதே இல்லை!
இந்நிலையில், 'புதிதாக அறிமுகப்படுத்தப்படும் மருந்துகளை விற்பனைக்கு அனுப்பும் முன்பாக அவற்றைப் பரிசோதித்து அதன் விளைவுகள் குறித்து நிறுவனங்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்காக இந்தியர்களிடம் சட்டவிரோதமாக அம்மருந்துகள் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளன. மனநலம் பாதிக்கப்பட்ட 233 பேர், கைக்குழந்தை முதல் 15 வயதுக்கு உட்பட்ட 1,833 பேரிடம் இத்தகைய மருந்துகளைக் கொடுத்து பரிசோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. 2008&ம் ஆண்டு 288 பேரும், 2009&ம் ஆண்டு 637 பேரும், 2010-ம் ஆண்டு 597 பேரும் இதனால் உயிரிழந்துள்ளனர்' என கடந்த ஓராண்டுக்கு முன், தொண்டு நிறுவனங்கள் மூலமாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
நீதிபதிகள் ஆர்.எம். லோதா, ஏ.ஆர். தவே ஆகியோரடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை மீண்டும் இந்த மனு விசாரணைக்கு வந்தபோதுதான் இப்படி, மத்திய அரசை எச்சரித்துள்ளனர் நீதிபதிகள்!
''பன்னாட்டு மருந்து உற்பத்தி நிறுவனங்களின், பரிசோதிக்கப்படாத மருந்துகள், சட்ட விரோதமாக இந்திய மக்களிடம் கொடுத்து பரிசோதித்துப் பார்க்கப்படுகின்றன. இதனால் ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இது நாட்டில் பேரழிவை ஏற்படுத்துகிறது. இப்பிரச்னையைத் தடுக்க அரசு தவறி விட்டது. பரிசோதனைகளால் ஏற்படும் மரணங்கள் தடுக்கப்பட வேண்டும். சட்டவிரோத மருந்துப் பரிசோதனைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
இவ்வகைப் பரிசோதனைகளால், இதுவரை உயிரிழப்பு ஏற்பட்டதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள். இறந்தவர்களின் உயிரைத் திரும்ப அளிக்க முடியாது. ஒரு விசாரணை அமைப்பையோ, குழுவையோ அமைப்பது மிகசுலபமானது. மக்களின் கவனத்தைத் திருப்புவதற்காக குழுக்கள் அமைக்கப்படுகின்றன. முக்கியமான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, விசாரணைக்குழுவை அமைப்பது மிகச் சிறந்த வழியாகிவிட்டது. அரசு தன் பொறுப்பில் இருந்து விலகிச் செல்வதை, அது தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின் மூலம் அறிய முடிகிறது'' என்றும் சாடியுள்ளனர் நீதிபதிகள்!
இப்படி பொதுநலன் சார்ந்த விஷயங்களில் பொதுநலவாதிகள், தொண்டு நிறுவனத்தினர் குரல்கொடுத்தால்… 'வெளிநாட்டு நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பிரச்னை செய்கிறார்கள்' என்று விஷயத்தையே குழி தோண்டி புதைத்துவிடுவதுதான் இங்கே வழக்கம்!
இப்போது, உச்ச நீதிமன்றமே கதறியிருக்கிறது… இந்த அரசியல்வியாதிகள் என்ன செய்யப் போகிறார்களோ?!
-ஜூனியர் கோவணாண்டி
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.