பிறப்பும் இளமையும்
ஆசியாவின் ஞான ஒளி எனப் போற்றப் பெற்ற அரவிந்தர் கல்கத்தாவில் 1872 –ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 – ஆம் நாள் டாக்டர்.கோசு – சுவர்ணலதா தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.
தம் ஐந்தாவது வயதில் டார்ஜிலிங்கில் உள்ள லோரெட்டா ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அங்கு இரண்டாண்டுகள் பயின்றார். ஆசிரியர்கள் அவருடைய கூர்மையான அறிவு கண்டு வியந்தனர்.
இங்கிலாந்தில் அரவிந்தர்
குழந்தைகளின் படிப்பைக் கருதி டாக்டர் கோசு குடும்பம் 1879 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்குப் புறப்பட்டது. அப்போது அரவிந்தருக்கு வயது ஏழு. டாக்டர் கோசு தமது குழந்தைகளின் கல்விப் பொறுப்பை நண்பர் தருவரிடம் ஒப்படைத்து, இந்தியா திரும்பினார். அரவிந்தரும் அவருடைய தமையன்மார் இருவரும், அந்நண்பர் வீட்டில் தங்கிக் கல்வி பயின்று வந்தனர். மான்செஷ்டரில் அரவிந்தர் ஆங்கிலம், இலத்தீன் ஆகிய மொழிகளைக் கற்றார்.
1884- ஆம் ஆண்டு இலண்டன் செயின்ட் பால் கல்லூரியில் சேர்ந்தார். அங்குக் கிரேக்க மொழியில் தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தைக் காட்டிலும் பொதுக் கல்வியில் அதிக கவனம் செலுத்தினார். தமது 18-வது வயதில் தாய் மொழியாகிய வங்க மொழியைக் கற்றார். பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி மொழிகளையும் கற்றார். கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியில் படிக்கும் போது, ஐ.சி.எஸ் நுழைவுத் தேர்வு ஒன்றில் அரவிந்தரின் விடைத் தாள்களைத் திருத்திய பேராசிரியர் ஒருவர்.
"என்னுடைய 13 ஆண்டுகள் அனுபவத்தில்
உன் விடைத்தாள்களைப் போல் அருமையான
விடைத்தாளை நான் பார்த்ததே இல்லை"
எனப் பாராட்டினார்.
அரவிந்தரின் எழுச்சியுரை
ஐ.சி.எஸ். தேர்வில் சிறப்பிடம் பெற்ற போதும் அப்பணியை ஏற்றுக் கொள்வதில் அரவிந்தருக்கு ஆர்வம் இல்லை. நம்நாடு விடுதலை பெற ஏதேனும் ஒரு வழியுண்டா என எண்ணினார். இந்திய மாணவர்கள் சங்கத்தில் சேர்ந்து, அவர்களிடையே எழுச்சிமிகு உரையாற்றினார். ஆங்கிலேயரின் அடக்கு முறைகளையும், இந்திய மக்களின் குமுறல்களையும் கூர்ந்து கவனித்து வந்தார். பல்வேறு நாடுகளின் விடுதலை இயக்கங்களின் எழுச்சிக் குரல் அவர் இதயத்தைத் தொட்டன.
மேலை நாட்டு நாகரிகம் அவரைச் சிறிதும் ஈர்க்கவில்லை. இலண்டனில் இருந்த போது, அவரை விட இரண்டு வயது மூத்தவரான சித்தரஞ்சன் தாஸ் நட்பைப் பெற்றார்.
இந்தியா திரும்பினார்
1893 – ஆம் ஆண்டு அரவிந்தர் இந்தியா திரும்பினார். பரோடா அரசுப் பணியில் சேர்ந்து சிறப்பாகப் பனி புரிந்தார். அவருடைய விருப்பத்தின் படியே, பரோடா பல்கலைக் கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக நியமனம் பெற்றார். மாணவர்கள் அவரைப் பெரிதும் பாராட்டினார். அவருடைய மாணவர்களில் ஒருவரான கே.எம்.முன்ஷி, அவருக்கு மாணவர்களிடையே இருந்த செல்வாக்கினைப் பற்றி எழுதியுள்ளார்.
இந்தியப் பண்பாடு
மேலை நாட்டு நாகரிகத்தில் மனிதப் பண்பாட்டு வளர்ச்சிக்குத் துணை புரியத் தக்கது ஏதும் இல்லை என்பதை உணர்ந்தவர். இந்தியப் பண்பாடு குறித்துப் பெருமையடைந்தார். இத்தகைய பெருமைக்குரிய நாடு அடிமைப்பட்டுக் கிடப்பது பற்றியும் இந்திய மக்களின் வறுமையைப் பற்றியும் எண்ணிப் பெரிதும் வருந்தினார்.
பல்வகைத் திறன்
பன்மொழிப் புலமை, கவிதை புனையும் திறன், அறிவுக் கூர்மை எனப் பல்வேறு சிறப்புக் குரிய அரவிந்தர், இராம கிருஷ்ணர், விவேகானந்தர் ஆகியோரின் அருளுரைகளைப் பெரிதும் விரும்பிப் படித்தார். தமக்கு ஒன்பது வயது மூத்தவரான இரவீந்திரநாத் தாகூரின் கவிதைகளைப் படித்து மகிழ்ந்தார். பங்கிம் சந்திரரின் நூல்களையும் விரும்பிப் படித்தார்.
திருமணம்
1901 – ஆம் ஆண்டு பூபால போசு என்பவரின் அருமை மகளான மிருணாளினி தேவியை மணந்தார். அவருக்கு அப்போது வயது 29. மணமகளுக்கு வயது 14. அரவிந்தர் மூன்று குறிக்கோள்களைக் கொண்டிருந்தார்.
குறிக்கோள்
முதலாவதாகத் தம் புலமையும் அறிவாற்றலும் குடும்பத்தின் நலனுக்கு என நிறுத்திக் கொள்ளாமல், அவற்றை நாட்டு மக்களின் நலனுக்கே பயன்படுத்த விரும்பினார்.
இரண்டாவது இறைவனை அறிய வேண்டிய நெறிமுறைகளை உணர விரும்பினார்.
மூன்றாவதாகத் தம் நாட்டை அடிமைத் தளையனின்றும் விடுவித்து அந்நியரிடமிருந்து மீட்டாக வேண்டும் எனப் பெரிதும் விரும்பினார். அதற்கெனத் தம்மை முழுதும் ஈடுபடுத்திக் கொண்டார்.
சூரத் காங்கிரசு
1907 – ஆம் ஆண்டு கூடிய சூரத் காங்கிரசுப் பேரவைக் கூட்டம், தீவிரவாதிகள் மிதவாதிகளிடையே கருத்து மோதலை ஏற்படுத்துவிட்டது. திலகர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். தமிழகத்திலிருந்து தீவிரவாதிகளான பாரதியார், வ.உ.சி. சர்க்கரைச் செட்டியார் முதலானோர் சென்றிருந்தனர். கல்கத்தாவிலிருந்து அரவிந்தர் தம் தொண்டர்களுடன் சென்றார். அங்கு திலகரைச் சந்தித்துப் பேசினார். தீவிரவாதிகள் கூட்டத்திலும் கலந்து கொண்டார்.
அரவிந்தர் தம் தீவிரமான பேச்சாலும், எழுத்தாலும் மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். அதனால் வெகுண்ட ஆட்சி அவரை அலிப்பூர் சிறையில் அடைத்து வைத்து 1909 –ஆம் ஆண்டு விடுதலை செய்தது. அலிப்பூர் சதிவழக்கில் அரவிந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் சார்பில் சித்தரஞ்சன் தாசு வாதாடினார்.
வழக்கு ஆறு மாதம் நடைபெற்றது. 208 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். விசாரணையின் போது 1908 மே 5 முதல் ஓராண்டு அலிப்பூர் சிறையில் வைக்கப்பட்டார். விசாரணைக் கைதியாக இருந்தும், தண்டிக்கப்பட்ட கைதி போலவே நடத்தப்பட்டார். 9 அடி நீளம் 5 அடி அகலமுள்ள அறையில் தனித்து வைக்கப்பட்டுப் பெரும் அவதிக்கு உள்ளானார். சாதனையிலும் தியானத்திலும் பொழுதைக் கழித்தார்.
தத்துவ ஞானியாக மாறினார்
அரவிந்தர் சிறை புகுமுன் புரட்சிக்கனலாக இருந்தார் சிறையிலிருந்து வெளிவந்த போது தத்துவ ஞானியாக மாறி இருந்தார். பின்னர், கல்கத்தாவிலும், வெளியூர்களிலும் பல கூட்டங்களில் பேசினார். இதற்கிடையில் அரவிந்தர் கைது செய்யப்படுவார் என்றும், நாடு கடத்தப்படுவார் என்றும் வதந்திகள் உலவின. அரவிந்தர் இது குறித்துக் கவலை கொள்ளவில்லை.
ஒரு நாள் இரவு அரவிந்தரைக் கைது செய்ய வாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிந்ததும், வங்கத்திற்கு அருகில் உள்ள பிரெஞ்சுப் பகுதியான சந்திரநாகூர் சென்றடைந்தார். சந்திர நாகூரில் சுமார் ஒன்றரை மாதம் யோகா சாதனைகளில் ஈடுபட்டிருந்தார். பின்னர், அங்கிருந்து ஒருநாள் இரவு கப்பல் ஏறி, இந்திய அரசியல் பெருமக்கள் பலருக்குத் தஞ்சமளித்த இடமான புதுவைக்கு 1910 ஏப்ரல் 4 ஆம் நாள் பிற்பகலில் வந்து சேர்ந்தார். பாரதியாரும் மற்றவர்களும் அவரைத் துறைமுகத்தில் வரவேற்றனர்.
அரசியலிலிருந்து விலகினார்
அரவிந்தர் எளிய வாழ்வே வாழ்ந்து, யோகா சாதனைகளிலேயே பெரிதும் ஈடுபட்டிருந்தார். தாம் தலைமை தாங்கி நடத்திய புரட்சியாளர்களுடன் சில ஆண்டுகள் கடிதத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார். பின் அதையும் கைவிட்டு விட்டார். அவரை மீண்டும் அரசியலில் ஈடுபடுத்த 1910 முதல் 1928 வரை லாலா லஜபதிராய், சித்தரஞ்சன் தாசு, ரவீந்திரநாத் தாகூர், மகாத்மா காந்தி உள்பட பலர் முயற்சி செய்தனர். எனினும், அரசியல் ஈடுபாடுகளை அவர் முற்றிலும் நிறுத்தி விட்டார். 1910 முதல் 1950 வரை 40 ஆண்டுக் காலம் அரவிந்தர் புதுவையிலே வாழ்ந்து இயற்கை எய்தினார். விடுதலை வீரர், ஆன்மீக அரசியல் தலைவர், அருட்செல்வர் எனப் போற்றப் பெற்ற அரவிந்தர் அவர்கள். 1950 டிசம்பர் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். அவருடைய பெருமையும் புகழும் இந்திய வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும்!
நன்றி : செல்வி சிவகுமார்
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.