அரசியலைக் கிண்டல் செய்யும் சினிமாக்களையே சில நேரங்களில் விஞ்சி விடுகிறது நாட்டு நடப்பு. பீகார் முதல்வர் பதவிக்காக, நிதிஷ் – மஞ்சி இடையே நடக்கும் போட்டியே இதற்கு சமீபத்திய உதாரணம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை, 'நேர்மையான அரசியல்வாதி' என்ற பிம்பத்திற்குச் சொந்தக்காரராக இருந்தவர் பீகார் முன்னாள் முதல்வர் நிதிஷ்குமார். நாடு முழுவதும் இருந்த 'இந்த' இமேஜ், அவரது அடிப்பொடிகளை 'பிரதமர்' கனவு காண வைத்தது. ஜனதாதளக் கட்சியில் லாலுபிரசாத், முலாயம்சிங், சரத்யாதவின் ஜீனியராக இருந்தாலும் தனக்கென தனி பாணி கொண்டவர் நிதிஷ். அதுவே, ஐக்கிய ஜனதாதளம் தனியாகப் பிரிந்து, பீகாரில் ஆட்சியைப் பிடிப்பதற்கும் வழி செய்தது.
பா.ஜ.க.வுடன் இணைந்து, நவம்பர் 2005 முதல் மே 2014 வரை முதல்வராக இருந்தார் நிதிஷ். இவருக்கும் மோடிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். இதனால் பா.ஜ.க. – ஐக்கிய ஜனதாதளம் இடையே பிளவு உண்டானதும் அதன்பின்பு நடந்த மக்களவைத் தேர்தலில், தனியாகப் போட்டியிட்ட ஐக்கிய ஜனதாதளம் 2 தொகுதில்களில் மட்டுமே வெற்றி பெற்றதும் தெரிந்த கதைதான்.
தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ், தனது விசுவாசியா(!?) ஜிதன்ராம் மஞ்சியை அந்தப் பதவியில் அமரவைத்தார். ஆனால், கட்சியினர் தனக்களித்த 'நிதிஷின் ரப்பர்ஷ்டாம்ப்' என்ற முத்திரையினால் 'ரொம்பவே' கடுப்பானார் மஞ்சி. இதனால், கடந்த சில மாதங்களாகவே, கட்சித் தலைமைக்கு விரோதமான கருத்துகள் இவரது பேச்சில் தெறித்தன. இது மட்டுமல்லாமல், ஆட்சி அதிகாரத்திலும் தன்னிச்சையாகச் செயல்பட ஆரம்பித்தார். 'இதுதான் சிக்கலுக்கான விதை. இதனை சரத்யாதவோ, நிதிஷோ சற்றும் எதிர்பார்க்கவில்லை' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
தலித் சமூகத்தைச் சேர்ந்தவரான மஞ்சி, 'அடுத்த முதல்வராகவும் ஒரு தலித் மட்டுமே இருப்பார்' என்று திடீரென அறிவித்தார். இதற்குப்பதில் சொல்ல முடியாமல் நிதிஷ் தவிக்க, ஒரு கூட்டத்தில் மஞ்சியின் ஜாதி, கல்வித்தகுதி பற்றி விமர்சித்தார் சரத்யாதவ்.
இதன்பின், தனக்கு எதிராக செயல்படும் அமைச்சர்களை பதிவி நீக்கம் செய்ய முடிவெடுத்தார் ஜிதன்ராம் மஞ்சி. இதற்கு நிதிஷ்குமார் ஒப்புதல் தரவில்லை. இதைத் தொடர்ந்து, மஞ்சியை முதல்வர் பதிவியில் இருந்து விலகுமாறு சரத்யாதவ் கேட்டுக் கொண்டார். ஆனால், பிகார் ஆளுநர் கேசரினாத்திடம் புதிய அமைச்சர்களின் லிஷ்ட்டை மஞ்சி, டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்தார். இதனால், பா.ஜ.க.வின் ஆதரவைக் கோரப்போகிறார் மஞ்சி என்ற பேச்சு கிளம்பியது.
அதே நேரத்தில், தன் 'வசமுள்ள' 97 எம்.எல்.ஏ.க்களின் உதவியோடு சட்டப்பேரவை கட்சி தலைவராகத் தேர்வானார் நிதிஷ்குமார். இதனை பீகார் சட்டமன்ற சபாநாயகர் உதய்நாராயண் சவுத்ரியும் ஆதரித்தார். இதனையடுத்து, காங்கிரஸ், ஆர்.ஜே.எல்.டி. கட்சி எம்.எல்.ஏ.க்கள் உட்பட 130 பேரின் ஆதரவிருப்பதாக ஆளுநரிடம் தெரிவித்தார் நிதிஷ்.
முதல்வர் மஞ்சி பதவி விலகவில்லை. அவர் ஆட்சி மீது நம்பிக்கை வாக்கெடுப்பும் நடக்கவில்லை என்ற நிலையில், திடீரென அவரை எப்படி நீக்க முடியும் என்று சட்ட நிபுணர்களுடன் ஆளுநர் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.
'இந்தக் காலதாமதம் எம்.எல்.ஏ.க்கள் குதிரை பேரத்திற்கு வழி ஏற்படுத்தும்' என்று குமுறிய நிதிஷ், தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் படையுடன் டெல்லிக்குப் போய் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்திக்க காத்திருந்த நேரத்தில், இடிபோல இறங்கியது அந்தச் செய்தி.
மஞ்சியின் ஆதரவு எம்.எல்.ஏ.வான ராஜேஸ்வர்ராஜ் தொடுத்த வழக்கில், 'சட்டப்பேரவை கட்சித் தலைவராக நிதிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டதில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை' என்று அதற்கு 'இடைக்காலத் தடை' விதித்தது பாட்னா உயர் நீதிமன்றம். 'முதல்வர் யார் என்பதை ஆளுநரே முடிவு செய்வார்' என்றும் அறிவித்தது.
இருந்தாலும், பிரணாப்பை சந்தித்திருக்கிறார் நிதிஷ். இதன் பலனாக, 'வரும் 20-ம் தேதி மஞ்சி தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும்' என்றிருக்கிறார் பீகார் ஆளுநர். தற்போது ஒரு வாரத்திற்கு தன் வசமுள்ள எம்.எல்.ஏ.க்களை 'பாதுகாக்க' வேண்டிய கட்டாயம், கண்டிப்பாக நிதிஷின் தூக்கத்தைப் பறித்துவிடும்.
ஏற்கெனவே ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். என்று கோரிக்கை விடுத்தவர்தான் மஞ்சி. ஆனாலும் விவகாரம் 'பூதாகரமான' நிலையில், அவருக்கு சாதகமாக முடிவு இருக்குமா என்பதே அரசியல் விமர்சகர்களின் கேள்வி. காரணம், காரணம் டெல்லி அரசியலில் கிடைத்த தோல்வியினால் 'சைலன்ட் மோடில்' இருக்கிறார்கள் பாஜக. தலைவர்கள். மஞ்சிக்கு ஆதரவளிப்பதனால் ஏற்படும் எதிர்கால மாற்றங்களை சரியாக கணிக்கும் கட்டாயம், பாஜக கட்சிக்கு உள்ளது. இதனால், மஞ்சிக்கு பா.ஜ.க. ஆதரவளிப்பது சந்தேகம்தான் என்று கூறப்படுகிறது.
அதே வேளையில், நிதிஷூக்கு இது வாழ்வா, சாவா போராட்டம். நம்பிக்கை வாக்கெடுப்பில் கிடைக்கும் வெற்றி, தோல்விகள், ஐக்கிய ஜனதாதளத்திற்கு சாதகமாக மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. இதனால்தான் லாலுவின் துணையோடு களமிறங்கியிருக்கிறார் நிதிஷ்.
இப்போதிருக்கும் சூழல் ஆண்டு இறுதியில் நடக்கப்போகும் பீகார் சட்டப்பேரவையிலும் பிரதிபலிக்கும் என்பது உறுதி. ஏனென்றால், மக்கள் எப்போதும் வெறுமனே பார்வையாளர்களாக மட்டும் இருப்பதில்லை.
நன்றி : ரிப்போர்ட்டர்
– பா.உதய்
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ... |
தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.