இன்று பல இடங்களில் பல தலைவர்கள் மறியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களின் தமிழ் உணர்வை பெரிதும் மதிக்கிறேன். ஆனால் கைதான தலைவர்கள் பலர், காரணமே இல்லாமல், வேண்டுமென்றே நம் பாரதப்பிரதமரைக் கடுமையாக விமர்சித்திருப்பது கண்டிக்கத்தக்கது. சாலையில் அமர்ந்த தலைவர்கள் பல பேர் ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் தான். வேலைநிறுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்ட பல தலைவர்கள் பல்வேறு காலக்கட்டத்தில் ஆட்சியில் பங்கெடுத்துக் கொண்டவர்கள் தான்.
அப்போது காவிரிப்பிரச்சினையில் அவர்களின் தீவிரமும், அணுகுமுறையும் எப்படி இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே! கையில் வாய்ப்பு இருந்தும் தங்களை முன்னேற்றுவதற்கு அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினார்களே தவிர, தமிழனை முன்னேற்றுவதற்கு எந்த முயற்ச்சியும் எடுக்காமல், இன்று சாலைமறியல் செய்த ஸ்டாலினும், கனிமொழியும் தங்கள் கட்சி 18 ஆண்டுகள் மத்தியில் ஆட்சியின் அங்கமாகத்தானே இருந்தார்கள்? எந்தவித அழுத்தம் கொடுக்கப்பட்டது? ஏன் இந்த 125 ஆண்டு கால பிரச்சனை அதிகம் ஆட்சியில் இருந்தவர்களால் தீர்க்கப்படவில்லை? ஆனால் இப்பிரச்சனைக்காக மத்திய அரசு இந்தக்காலக்கட்டத்தில் தமிழகத்திற்கு எந்தவிதத்திலெல்லாம் நியாயத்துடன் செயல்பட முடியுமோ அப்படி செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
அணைகளில் தண்ணீர் இல்லை என்று கர்நாடகா சொன்ன போது, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் வேண்டிய அளவு நீர் இருக்கிறது என்று தகவல் சொன்ன பின்பு தான், உச்சநீதிமன்றத்தினால் நமக்கு ஓரளவு நியாயம் கிடைத்திருக்கிறது. அதே போல், பெங்களுரில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது மரியாதைக்குரிய திரு. ராஜ்நாத்சிங் அவர்கள் தலையிட்டு, உடனே மத்திய இராணுவப்படை அனுப்பியதன் காரணமாகவே தான் அங்கே தாக்குதல்கள் ஓர் கட்டுக்குள் வந்திருக்கிறது.
ஆனால் வைகோ போன்றவர்கள் மிக மிக அப்பட்டமான, அடாவடித்தனமான, அநாகரிகமான வார்த்தைகளால் திரு. மோடி அவர்களை மிக மிக மோசமாக விமர்சிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம். எதிர்மறையான அரசியலே செய்து கொண்டிருக்கும் வைகோவிற்கு, தமிழகத்தில் எதிர்காலமே இல்லை என்பதை உணர்ந்து வைகோ பேச வேண்டும்.
இத்தனை காலம் அரசியலில் பணியாற்றிக் கொண்டு, இந்த தமிழக மக்களுக்கு குழப்பத்தை மட்டுமே முன்னிறுத்திக்; கொண்டிருக்கும் வைகோ போன்றவர்களுக்கு மோடியின் நல்ல நிர்வாகத்தை தெரிந்து கொள்ளும் தன்மை இருக்க வாய்ப்பில்லை. அதே போல், சீமான் போன்றவர்கள் உணர்வு பூர்வமாகவும், அறிவுப்பூர்வமாகவும் ஒரு பிரச்சினையை அணுகாமல், உணர்ச்சி பூர்வமாக அணுகி இன்று வாழக்கூடிய, வளரக்கூடிய ஒர் இளைஞரின் உயிரை பலி வாங்கியிருக்கிறார்கள். உயிரிழந்த அந்த சகோதரருக்கு எங்களது அஞ்சலியையும், அவர்கள் குடும்பத்திற்கு என் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
காங்கிரஸ் ஆண்ட காலம் முழுவதும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் இருந்ததால் தான், உச்சநீதிமன்றம் இந்த காவிரி குழுவை அமைத்தது. அது மட்டுமல்ல, மாநிலங்களில் எந்த பிரச்சினை எழுந்தாலும் காவிரி கண்காணிப்பு குழுவை அணுகவும் என்றும், கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது உடனே வாரியம் அமைக்கத் தேவையில்லை (எண் : DE 32013) என உச்சநீதிமன்றமே கருத்து தெரிவித்திருக்கிறது. ஆனால், காவிரி கண்காணிப்புக்குழு அமைத்து 3 வருடங்கள் ஆகியும், இரண்டு மாநிலங்களும் அதை அணுகவில்லை என்பதும், இந்த மாதம் 12ந்தேதி கூடிய கூட்டத்தில் கூட சரியான தகவல்களோடு இரண்டு மாநிலங்களும் செல்லவில்லை என்பதே உண்மை!
ஆனால் இன்று தமிழக அரசின் அணுகுமுறையால் ஓரளவிற்கு தண்ணீர் பெற இருக்கிற நேரத்தில், சொல்லிவைத்தாற் போல் தமிழக அரசியல்வாதிகள் நடந்து கொள்வது தவறான அணுகுமுறை. இதில் மோடி இரண்டு மாநிலங்களையும் குறி வைத்தார் என்ற விதண்டாவாதம் வேறு. உச்சநீதி மன்றம் தீர்ப்பில் குறிப்பிடும் போது இரண்டு மாநிலங்களும் அமைதி காக்க வேண்டும் என்று தான் கூறியிருக்கிறது.
அண்ணன் தம்பிக்கிடையே பிரச்சினை என்றால், அண்ணணும் தம்பியும் சமாதானமாக போங்கள் என்று தான் குறிப்பிடுவார்கள். அதற்காக உடனே தமிழகம் மீது அக்கறை இல்லை என்று தவறாக மோடியின் கருத்தை முன்னெடுப்பது சரியில்லை. அதே போல், கலவரத்தைக் கட்டுப்படுத்தாத காங்கிரஸ் அரசை கட்டுப்படுத்தியது மத்திய அரசு தான். ஏன், இவர்களே 12ந்தேதி கலவரத்திற்கு 4 நாட்கள் கழித்துத்தான் பொங்கி எழுந்திருக்கிறார்கள். தமிழர்கள் காக்கப்பட வேண்டும், தாக்கப்படுவது கண்டிக்கப்பட வேண்டும். ஆனால் உணர்ச்சிகளைத் தூண்டி, இளைஞர்களை பலி வாங்கும் சுய நல அரசியலுக்கு தமிழகம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இன்று போராடுபவர்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசியலில் என்ன என்ன நிலைப்பாடு எடுத்தார்கள், அதில் மக்களுக்கான அவசியத்தைக் கொண்டு வருவதில் இருந்ததா அல்லது தனக்கான அமைச்சகத்தைக் கேட்டு பெறுவதில் இருந்ததா என்பதையும் மக்கள் புரிந்தே வைத்திருக்கிறார்கள்.
தமிழக மக்களுக்கு நியாயமான, உரிமையான தண்ணீர் கிடைக்க வேண்டும். ஆனால் அநியாயமான உணர்ச்சிகளும்;, அணுகுமுறையும், இன்று அதிகமாகக் காணப்படுகிறது என்பதே உண்மை. தமிழக மக்களின் வலியைப் போக்குகிறேன் என்று சொல்லி, தங்களின் வலிமையைக் கூட்டிக் கொள்ளும் நிகழ்வாகவே இன்றைய மறியல்கள் இருந்தன. தமிழக மக்கள் இத்தகைய பிரித்தாளும் சுயநல அரசியலை இனம் கண்டுத்தான் இருக்கிறார்கள் என்பதை எதிர்காலம் சொல்லும். இல்லையென்றால்; தமிழகத்தின் எதிர்காலத்தை இவர்கள் போராட்டகளமாக மட்டுமே மாற்றிக் கொண்டிருப்பார்கள் என தெரிவித்துக்கொள்கிறேன்.
Dr. தமிழிசை சௌந்தரராஜன்
மாநில தலைவர்
வேப்பமரத்தின் பூக்கள் உடலுக்கு உரமளிக்கும். வயிற்று வலியைக் குணப்படுத்தும். குடற்புழுக்களைக் கொல்லும். இரத்தத்தைச் ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.