ஒருமைப் பாட்டை, கலாசாரத்தை கட்டிக்காத்த தீனதயாள் உபாத் யாயா, நாட்டின் சரித்திரத்தில் நீங்காத இடம் பெற்றுள்ளார். பா.ஜ.,கட்சியின் முன்னோடியான, பாரதிய ஜனசங்கத்தின் அகில இந்திய பொதுச்செயலராகவும், தலைவராகவும் செயல்பட்டு இயக்கத்தை வளர்த்தவர். மிகச்சாதாரண குடும்பத்தில் பிறந்து, படிப்பில் முதல் மாணவராக இருந்து, தேசப்பணியில் தன்னை இணைத்துக்கொண்டவர்.
கடந்த, 1916 செப்டம்பர், 25ல், ராஜஸ்தான் மாநிலம் டான்கியா நகரில், பகவதி பிரசாத் — ராம்பியாரி தம்பதிக்கு பிறந்தவர். சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்ததால், மாமாவிடம் வளர்ந்தார். ஆரம்பகல்வி முதல், கல்லுாரி கல்வி வரை, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார்.
சிறந்த கல்வியாளராக உருவெடுக்க வேண்டிய தீனதயாள், 1937ல், ஆர்.எஸ்.எஸ்., என்ற, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் முன்னாள் தலைவர், பாளசாஹிப்பின் சகோதரர் பாபுராவ் தேவரஸ் மூலம், சங்கத்திற்கு அறிமுகமானார். பின், சங்கத்தின் முழுநேர ஊழியரானார்.
திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கையை துறந்து பிரம்ம சர்ய வாழ்க்கையை மேற்கொண்டவர், தேசப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டார்.
அறிவு கூர்மையுடன், சிறந்த செயல்படுத்தும் திறன் உடைய, பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவை, Active Intellectual என, சங்கத்தின் இரண்டாவது அகில இந்திய தலைவரான ஸ்ரீகுருஜீ பெருமைப்படுத்தி உள்ளார். படிப்படியாக ஆர்.எஸ்.எஸ்., இயக்கத்தில் உயர்ந்து உ.பி.,யின் மாநில இணை அமைப்பாளராக உயர்ந்தார்.
ஷியாம் பிரசாத் முகர்ஜி தலைமையில், 1951 அக்டோபர், 21ல், ‘பாரதிய ஜனசங்கம்’ தொடங்கப்பட்டது. கட்சியை வளர்க்க, ஆர்எஸ்எஸ்., உதவியை ஷ்யாம் பிரசாத் முகர்ஜி நாடினார். அப்போது, வாஜ்பாய், அத்வானி, சுந்தர்சிங் பண்டாரி ஆகியோருடன் தீனயாள் உபாத்யாயாவும், பாரதிய ஜனசங்கத்தில் பணியாற்ற அனுப்பப்பட்டார். சுதந்திரம் பெற்றபின், காங்கிரஸ் தலைமை, சோஷலிச சித்தாந்தத்தை மேற்கொண்டதும், இந்திய பண்பாட்டு கூறுகளை கொண்டகட்சியாக ஜனசங்கம் உருவாக முயற்சி மேற்கொள்ளப் பட்டது. அக்கருத்தில் ஷியாம பிரசாத் அதிக ஈடுபாடுகொண்டவர் என்பதும், சிறந்த பார்லிமென்டேரியன் என்பதாலும், அவர் தலைமையில் ஜனசங்கம் உருவானது. கடந்த, 1952ல், ஜன சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலரானார் தீனதயாள். கட்சியின் ஸ்தாபகரான ஷியாம பிரசாத்முகர்ஜி, ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில், நாட்டின் இறையாண்மையை காக்க மேற்கொண்ட போராட்டத்தில் பங்கேற்க, ஸ்ரீநகர் சென்ற போது, 1953ல் அகால மரணம் அடைந்தார்.
பண்டித நேருவின் கொள்கைகளை, தேசிய அளவில் விமர்சிக்கும் ஷியாம பிரசாத் மறைந்த பின், ஜனசங்கத்தை கட்டுப்பாடு மிக்க, கொள்கைக் கவசம் பூண்ட சிலருடன், அகில இந்தியகட்சியாக உருவாக்க தீனதயாள் மேற்கொண்ட முயற்சி வரலாறு.
பின், 1968ல், கேரள மாநிலம் கோழிக்கோடு நகரில் நடைபெற்ற மாநாட்டில், கட்சியின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அதனால்தான், கோழிக்கோட்டில் தீனதயாளின், 100வது ஆண்டு நினைவாக, பா.ஜ., கட்சியின், பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.) காங்கிரஸ் கட்சி அசைக்கமுடியாத பலத்துடன் இருந்தபோது, நாட்டின் பொருளாதார சித்தாந்தம் பன்முக பார்வையுடன், அனைவரையும் மேம்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என வலியுறுத்தி, பாதை காட்டியவர் இவர்.
முதன் முதலில்பல்வேறு கட்சிகள் அடங்கிய கூட்டணியை உ.பி.,யில் ஏற்படுத்தி வெற்றி கண்டவர். அவர் பாணியில் வாஜ்பாய், ‘கூட்டணி தர்மத்தை’ பாதுகாத்ததை அனைவரும் அறிவர். மற்ற கட்சிகளில் உள்ள நல்ல விஷயங்களை பாராட்ட, இவர் தயங்கியதில்லை. பாகிஸ்தான் மதத்தின் அடிப்படையில், ராணுவத்தின் பிடியில் செயல்பட்டது போல, இந்தியா இருக்க வேண்டிய தில்லை. இங்குள்ள அனைவரும் பாரதத்தின் புதல்வர்கள் என்ற கருத்தை அரசியலில் தெளிவாகக்கூறி, அதற்கு ஆதாரமாக இந்திய சிந்தனைகளை உடைய, ‘எல்லாரும் ஓரினம்’ என்பதை, ‘ஏகாத்ம மானவ வாதம்’ என்ற கருத்தாக பரப்பினார்.
கம்யூனிஸ்ட் கருத்துக்கள் மக்களை மேம்படுத்தாது என்ற கருத்துக்களை ஆதாரமாக்கி, ஆர்.எஸ்.எஸ்., பின்னணியில் கட்சித் தொண்டர்களை பயிற்றுவிக்க, பலதிட்டங்களை வகுத்து வெற்றிகண்டவர். அவரது செயல் சிந்தனைகளை வலுவாக்க வாஜ்பாய், நானாஜி தேஷ்முக், அத்வானி, சுந்தர்சிங் பண்டாரி போன்ற ஆர்.எஸ்.எஸ்., சிந்தனையாளர்கள் அணிவகுத்தனர். மேலை நாட்டு சிந்தனைகள், நம்தேசத்தை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில், பாரதிய சிந்தனைகளை வளர்ப்பதிலும், அதை அரசியல் வழியில் நடைமுறை படுத்துவதிலும் வெற்றிகண்டவர். கம்யூனிசமும், முதலாளித்துவ பொருளாதார சிந்தனைகளும் மனிதனை தவிர்த்து பொருளை அடிப்படையாகக் கொண்டவை. இந்த இரண்டு சிந்தனைகளும் உலகில் நிலைத்துநிற்காது என்றும் குறிப்பிட்டார். ‘கட்டுக் கடங்காத தொழில் வளர்ச்சி மனித உணர்வை மதிக்கவில்லை என்பதையும், சுற்றுச் சூழலை மதிக்கும் இந்திய கலாசாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும்’ என்பதையும், அவர் தொடர்ந்து, ‘அரசியல் டயரி’ என்ற ஆங்கில கட்டுரைகளில் எழுதியிருக்கிறார்.
‘அரசியல் கட்சி என்பது மக்கள் தொண்டாற்ற அமைக்கப்படும் ஊழலற்ற கருவி; அதில் பொருள், பதவி ஆசை கொண்டவர்கள் அதிகம் இடம் பெறுவது அதன் போக்கை மாற்றி விடும்’ என்ற வலுவான கருத்துடன் கட்சியை வளர்த்தார். அவர் கோழிக்கோட்டில் நடத்திய மாநாடு, அரசியல் தலைவர்களை ஈர்த்தது. நீதித்துறையோ, பார்லிமென்டோ ஒன்றுக்கொன்று பெரிதல்ல. நீதித்துறை அதனுடைய தர்மத்தின் கீழும், பார்லிமென்ட் அதன் தர்மத்தின் கீழும் செயல்பட வேண்டும். தர்மமே இவ்விரண்டையும் நெறிப்படுத்தும். ஒன்றிற்கு ஒன்று பெரியதல்ல என, தெளிவுபடுத்தியிருக்கிறார்.
நாட்டில் உள்ள அனைவரின் திறமையையும் பயன்படுத்த வேண்டும் என்பதும், பெண்களுக்கான சமூக வாழ்க்கை தரமும், கவுரவமும் தேவை என்றும் வலியுறுத்தியவர். அத்துடன், ஜனசங்கம் ஒரு வித்தியாசமான கட்சி என்பதை நிரூபித்தவர். அவரது கருத்தைப் பின்பற்றி, வேறு ஒரு பெயரில் பா.ஜ., உதயமானது என்பது வரலாறு.
ஆர்.எஸ்.எஸ்.,சில் பணிபுரிந்த போது, 1947ல், ‘பாஞ்சஜன்யா மற்றும் ஸ்வதேஷ்’ பத்திரிகைகளின் ஆசிரியராக நியமிக்கப்பட்டார். ‘சாம்ராட் சந்தரகுப்தா, ஜகக்குரு சங்கராச்சார்யா’ போன்றவை இவரது சிறப்பான இந்து படைப்புகள். ஆழ்ந்த கருத்துக்களையும், தேசிய சிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டு, இவர் எழுதிய கட்டுரைகளும், நிகழ்த்திய உரைகளும் இன்றும் சிறப்பாக போற்றப்படுகின்றன. ‘அடிப்படை சிந்தனைகளும் கொள்கைகளும்’ என்ற தலைப்பில், 1965 ஜனவரியில், விஜயவாடாவில் நடைபெற்ற கட்சியின் அகில இந்திய கூட்டத்தில், இவர் ஆற்றிய உரை இன்றும் அடிப்படை சித்தாந்தமாக, கட்சியின் வழி
காட்டுதல் களஞ்சியமாக போற்றப்படுகிறது. மிக எளிமையாக வாழ்ந்து மர்மமான முறையில், பீஹார் மாநிலத்தில் உள்ள மொகல்சாராய் ரயில் நிலையத்தில், 1968 பிப்ரவரி, 11ல் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் அவர் உடல் கிடந்தது. கட்சியில் இவரது மரணம், ரஷ்யாவின் கம்யூனிஸ்ட் தலைவர்களின் ஒருவரான டிராட்ஸ்கியின் மரணம் போல வர்ணிக்கப்பட்டது.
தீனதயாளை சோஷலிச தலைவர் ராம்மனோகர் லோகியா, லோக்நாயக் ஜெ.பி., மற்றும் மூதறிஞர் ராஜாஜி ஆகியோர் மதித்து போற்றியதும் உண்டு.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.