முன்பு, நியூயார்க் நகரிலுள்ள ஒரு தொலைபேசி நிறுவனம் தொலைபேசியில் (பேச்சு வழக்கில்) அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை எது என ஒரு ஆய்வு நடத்தியது. ஆய்வு நடத்தும்போது “ஹலோ, ஹலோ” என்ற வார்த்தைதான் அதிகமாக இருக்கும் என நினைத்தது. ஆனால் ஆய்வின் முடிவில் தெரியவந்தது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தை ‘நான்’.
பண்டித தீனதயாள் உபாத்யாயா இதற்கு விதி விலக்கானவர். ‘நான்’ என்ற வார்த்தையை அவர் மிகக் குறைவாகவே பயன்படுத்தினார். நான் திரு. மல்கானியுடன் ஆர்கனைசரில் பணிபுரிந்து வந்தபோது, தீனதயாள்ஜி அவ்வாரப் பத்திரிகையில் ‘அரசியல் குறிப்பேடு’ என்ற தலைப்பில் வாரந்தோறும் சில முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிப்பார். அவை அழகான கருத்தோட்டமும், அழகான வாதத்துடனும் ஆய்வின் முடிவுகள்
வெளிப்படையாகவும் ஏற்கக்-கூடிய-தாகவும் அமைந்திருக்கும். அக்கட்டுரை-களின் தொகுப்பு பிறகு வெளியிடப்பட்டது. ஆனால் அவர் பாரதீய ஜனசங்கத்தின் அகில பாரத பொதுச் செயலாளர் என்ற முறையில் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பலரையும் சந்தித்து வருவதால் அந்த அனுபவங்களை எழுதினால் சுவையாகவும் நன்றாகவும் இருக்கும் என, நான் நினைத்தேன். “பண்டிட்ஜி, நீங்கள் சுற்றுப்-பயணத்தில் பல இடங்களுக்கும் போகிறீர்கள். அந்தப் பயண அனுபவங்களை உங்கள் வாரக் கட்டுரையில் சேர்த்துக் கொண்டால் வாசகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவார்கள். வாசகர் வட்டமும் அதிகரிக்கும்” என அவரிடம் ஒருநாள் என் எண்ணத்தைச் சொன்னேன்.
அவரும் முயற்சி செய்வதாக கூறினார். இரண்டு வாரங்கள் அதுபோல முயற்சித்தார். ஆக்ரா பல்கலைக்கழகத்தில் அவரை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். ஆக்ராவிலுள்ள சில கல்லூரிகளிலும் அவரை பேச அழைத்திருந்தனர். அவரது வாரக் கட்டுரைகளில் அதுபற்றி குறிப்பிட வேண்டும். நான் இங்கு சென்றேன், நான் இதை கேட்டேன், நான் இதைச் சொன்னேன் என்ற விதமாக அது இருக்கும். இரண்டு வாரங்கள் அவர் அப்படியே முயற்சித்தார். பிறகு என்னை கூப்பிட்டு, தன்னால் நான் விரும்பியபடி எழுத முடியாது. ஆனால் பழையபடி ‘அரசியல் குறிப்பேடு’ தொடர முடியும் என கூறிவிட்டார். இதற்கு அவர் ஏன் என்று எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை.
ஆனால் என்னால் ஊகிக்க முடிந்தது. நான் கேட்டபடி எழுத வேண்டுமானால் கட்டுரையாளர் தன்னை மையப்படுத்தி தன்னைச் சுற்றி நடக்கும் விவரங்களைப் பதிவு செய்வது இயற்கையாக அமையும். கட்டுரை முழுவதும் தன்னிலையில் சொல்லப்படும். நான் இங்கு போனேன், நான் இதைப் பார்த்தேன், நான் இதை கேட்டேன், நான் இதைச் சொன்னேன் என்றே அமையும். தீனதயாள்ஜியின் சுபாவத்திற்கு இது முரணானது. தன்னை முன்னிலைப் படுத்தி அவரால் பேச முடியாது.அவரது வெளிப்பாடுகளில் எப்போதும் மையமான இடத்தில் ‘நான்’ இருக்காது.
(ஏகாத்ம மானவ தரிசன ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையத்தின் விழாவில் – முன்னாள் துணைப் பிரதமர் லால் கிருஷ்ண அத்வானி)
Leave a Reply
You must be logged in to post a comment.