முன்னாள் ராணுவவீரர் தற்கொலை விவகாரத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலும் மலிவான அரசியலில் ஈடுபடுவதாக தில்லி பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து கட்சியின் தில்லி பிரதேசதலைவர் சதீஷ் உபாத்யாய், மூத்த தலைவர் விஜேந்தர்குப்தா செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:முன்னாள் ராணுவவீரர் தற்கொலை விவகாரத்தை வைத்து ராகுல் காந்தியும், அரவிந்த் கேஜரிவாலும் தரம்தாழ்ந்த அரசியலில் ஈடுபடுகின்றனர். வாக்குவங்கி அரசியலுக்காக "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' விவகாரத்தில் தரம் தாழ்ந்த கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
ராணுவ வீரர்கள் நிகழ்த்திய துல்லியதாக்குதல் சம்பவத்தில் ஆதாரம் கேட்டு ராணுவ வீரர்களை அவமதித்த தில்லி முதல்வர் கேஜரிவால், பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலை மனதில் வைத்தே முன்னாள் ராணுவ வீரர்களின் உரிமைகளுக்காக குரல்கொடுக்கிறார்.
ராகுல் காந்தியின் பாட்டியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் 1971-ஆம் ஆண்டு நடைபெற்ற போரின் வெற்றியை அரசியல்லாபத்துக்கு பயன்படுத்தியதும், "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' நிறுத்தப்பட்டதும் உண்மைதானே? அடுத்தடுத்து ஆட்சி அமைத்த காங்கிரஸ் "ஒரேபதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்துக்காக செய்தது என்ன? உச்ச நீதிமன்றம் தலையிட்டபிறகு காங்கிரஸ் ஆட்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்துக்காக ரூ. 500 கோடிக்கு மட்டுமே ஒப்புதல்அளித்த விஷயம், தற்போது போராளியாக காட்டிக் கொள்ளும் ராகுல் காந்திக்கு தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின்கீழ் 20 லட்சத்து 63 ஆயிரத்து,763 முன்னாள் ராணுவ வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டதும், அவற்றில் 19 லட்சத்து 12 ஆயிரத்து 520 முன்னாள் ராணுவ வீரர்கள் "ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம்' திட்டத்தின் கீழ் பயன்களைபெற ரூ.5,507 கோடி ஒதுக்கியிருப்பதும் ராகுல் காந்திக்கு தெரியுமா?
இதுபோல கண் எதிரில் தற்கொலை செய்து கொண்ட விவசாயி கஜேந்திர சிங்கை காப்பாற்ற அரவிந்த் கேஜரிவால் எடுத்தமுயற்சிகள் என்ன? உரி தாக்குதலில் வீரமரணமடைந்த வீரர்களின் எத்தனை குடும்பங்களை தில்லி முதல்வர் இதுவரை சந்தித்துள்ளார்? இது போன்ற கேள்விகளுக்கு ராகுல் காந்தியும், அரவிந்த் கேஜரிவாலும் பதில் அளிக்க வேண்டும் என்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.