கார்த்தி சிதம்பரம் வெளிநாட்டிற்கு தப்பிவிடக் கூடாது என்பதற்காகவே இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் சர்குலர் அனுப்பியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனத்திற்கு அன்னியமுதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லாத சான்றிதழ் பெற்றுத்தருவதாக கூறி, மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக பணம்பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. சட்ட விரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும், கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்குபதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் வாசன்ஹெல்த் கேர் லிமிடெட் நிறுவனம் ரூ.2,262 கோடி அளவில் அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக எழுந்தபுகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை அந்நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதேபோல் அட்வான்டேஜ் ஸ்ட்ராடஜிக் கன்சல்டிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கும் விளக்கம்கோரி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிறுவனத்தின் நிர்வாக குழுவில் கார்த்திசிதம்பரம் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், சென்னை நுங்கம் பாக்கம் உள்ளிட்ட 14 இடங்களில் மே 16ம் தேதி காலை 6 மணியளவில் 14 பேர் கொண்ட டெல்லி சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். பின்னர் அவர் ஆஜராக சிபிஐ, அமலாக்கத் துறை அதிகாரிகள் கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பினர்.
கார்த்தி சிதம்பரம் ஆஜராகாததால், அவரை விசாரணைக்கு ஆஜராக அனைத்து நடவடிக்கை களையும் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்கு வருமான வரித் துறை, அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய துறைகள் கடிதங்களை அனுப்பியது. இந்த கடிதங்களை பரிசீலித்த மத்திய அரசு, தேடப்படும் குற்றவாளியாக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்தது.
இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும், கார்த்திசிதம்பரம் குறித்து லுக் அவுட் சர்குலர் அனுப்பியது. இந்த நிலையில், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த மத்திய அரசின் உத்தரவு மற்றும் தமக்கு பிறப்பிக்கப் பட்ட லுக் அவுட் சுற்றறிக்கையை திரும்பப்பெறவும் கார்த்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தார்.
இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது விஜய் மல்லையா போல் வெளிநாட்டுக்கு தப்பிவிடக்கூடாது என்ற நோக்கிலேயே கார்த்திக் சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. விஜய் மல்லையாவுடன் ஒப்பிட்டுபேசியதற்கு கார்த்திக் சிதம்பரம் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து கார்த்திக் சிதம்பரம் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானால் லுக் அவுட் நோட்டீஸ் திரும்ப பெறப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையை நீதிபதி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.