கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக, சென்னையைச் சேர்ந்த ஒருநிறுவனம் உள்பட 2 தனியார் நிறுவனங்களை பற்றிய விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்துகொள்வதற்கு ஸ்விட்சர்லாந்து அரசு ஒப்பு கொண்டுள்ளது.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த சிலசெல்வந்தர்களும் தங்களது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, கருப்புப்பணம் உருவாவதைத் தடுக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் தீவிரமுயற்சி மேற்கொண்டுள்ளது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது.
அதன் ஒருபகுதியாக, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக்கணக்கு விவரங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த 2 நிறுவனங்களை பற்றிய விவரங்களையும், 3 தனிநபர்கள் பற்றிய விவரங்களையும் மத்திய அரசிடம் அளிப்பதற்கு ஸ்விஸ் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.
இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: மும்பையைச் சேர்ந்த ஜியோடெஸிக் லிமிடெட் நிறுவனம், சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர் பிரைசஸ் நிறுவனம் மற்றும் ஜியோடெஸிக் நிறுவனத்தில் முக்கிய பொறுப்புவகிக்கும் பங்கஜ்குமார் ஓம்கார் ஸ்ரீவாஸ்தவா, பிரசாந்த் சரத் முலேகர், கிரண் குல்கர்னி ஆகியோரைப் பற்றிய விவரங்களை இந்திய அரசு கேட்டிருந்தது.
"நிர்வாக ஒத்துழைப்பு' என்ற அடிப்படையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பற்றிய விவரங்களை இந்திய அரசுக்கு அளிப்பதற்கு ஸ்விஸ் அரசின் ஒருங்கிணைந்த வரித்துறை ஒப்புக் கொண்டுள்ளது என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. எனினும், மேற்கொண்டு விரிவான விவரங்கள் எதையும் ஸ்விஸ் அரசு வெளியிடவில்லை.
மும்பையில் 1982-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜியோடெஸிக் லிமிடெட் நிறுவனம், கணினி தொழில்நுட்ப சேவையை வழங்கிவந்தது. ஒரு காலத்தில் மிகவேகமாக வளர்ந்து வரும் நிறுவனம் என்று அறியப்பட்ட இந்தநிறுவனம், நிர்வாக ரீதியில் சில முறைகேடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி பங்குச்சந்தை நடவடிக்கைகளில் ஈடுபடுவதில் இருந்து இந்திய பங்கு, பரிவர்த்தனை வாரியம் (செபி) விலக்கிவைத்தது. அதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்துக்கு எதிராக செபி விசாரணை நடத்தி வருகிறது. இதுதவிர, இந்த நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர்களுக்கு எதிராக, அமலாக்கத்துறை அதிகாரிகளும், மும்பை காவல் துறையின் பொருளாதாரக் குற்றத் தடுப்புபிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னையைச் சேர்ந்த ஆதி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனை வணிகம் மற்றும் இதரவர்த்தகங்களில் ஈடுபட்டு வேகமாக வளர்ச்சியடைந்த இந்த நிறுவனத்துக்கு அரசியல் பிரமுகர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து, கருப்புப்பண மோசடியில் இந்த நிறுவனம் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் பலமுறை சோதனை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இவ்விரு நிறுவனங்களும் தங்கள் மீதான முறைகேடு குற்றச் சாட்டு களுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், இந்தியாவுக்கு தகவல் அளிக்கும் ஸ்விட்சர்லாந்து அரசின் முடிவை எதிர்த்து, சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், தனிநபர்களும் மேல்முறையீடு செய்யவும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் கருத்துகளை அறிய செய்தியாளர்கள் முயன்ற போதும், தொடர்பு கொள்ள முடியவில்லை.
கருப்புப் பணம் பதுக்குவோருக்கு அடைக்கலம் கொடுப்பதாக உலக நாடுகள் குறைகூறினாலும், அந்த மோசடிக்கு ஒருபோதும் உடந்தையாக இருப்பதில்லை என்று ஸ்விஸ் அரசு மறுத்து வருகிறது. தங்கள் நாட்டு சட்டப்படி, வங்கி வாடிக்கையாளர்கள் பற்றிய விவரங்கள் மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப் படுகின்றன என்று ஸ்விஸ் அரசு கூறி வருகிறது. எனினும், ஸ்விஸ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வெளிநாட்டினர் வரி ஏய்ப்புசெய்ததாக ஆதாரங்களை அளித்தால், அவர்களைப் பற்றிய விவரங்களை சம்பந்தப்பட்ட நாடுகளுக்கு ஸ்விஸ் அரசு அளித்து வருகிறது. இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுடன் இந்த தகவல்களை ஸ்விஸ் அரசு பகிர்ந்து கொள்கிறது.
இதுதவிர, பிற நாட்டு வாடிக்கை யாளர்களைப் பற்றிய விவரங்களை தாமாகப் பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தம், இந்தியா, ஸ்விஸ் இடையே ஏற்கெனவே கையெழுத்தாகி யுள்ளது. இந்த நடைமுறை அடுத்த ஆண்டு முதல் அமலுக்கு வரவுள்ளது.
அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ... |
குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.