ஊடக வெளிச்சமில்லாது உண்மையாகப் பாடுபடும்
ஊர்க்காவல் படையினரின் ஊதியம் உயர்த்தி உதவுங்கள்
உயர்நீதி மன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர்
K.அண்ணாமலை பொதுநல மனு
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை அறிக்கை
தமிழக காவல்துறையின் ஒரு துணை அமைப்பாகப் பணியாற்றும் ஊர்க்காவல்ப் படை, காவல் துறையினருக்கு உறுதுணையாக 1946ஆம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார்கள். புயல், மழை, வெள்ளம், நிலநடுக்கம், நோய்தொற்று, சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் ஊர் காவல் படையின் பங்கு அளப்பரியது.
மேலும் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களின் அனைத்து பணிகளையும் அதாவது வாகனம் ஓட்டுவது, போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது, இரவு ரோந்துப் பணிகள், பாதுகாப்புப் பணிகள் விஐபிகளுக்கு பாதுகாப்பு கொடுப்பது, தேர்தல் கால பணிகள், நீதிமன்ற வழக்குகளுக்கு ஆஜராவது போன்ற காவல்துறையினர் செய்யும் அனைத்து பணிகளையும் ஊர்க்காவல் படையினரும் செய்து கொண்டிருக்கிறார்கள்.
தன்னார்வ தொண்டாக அவர்கள் காவல் பணியின் அனைத்து ஏவல்களையும், செய்ய முன்வந்து இருக்கும் ஊர்காவல் படையினருக்கு காவலர்களுக்கான பயிற்சிக்கு இணையாக முறையான பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. ஊர்க்காவல் படையின் சட்டம் 1963 பிரிவு 7-ல் காவல் துறையினருக்கு இணையான பொறுப்பும், அதிகாரம் ஊர்க்காவல் படையினருக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் உண்மையாகப் பணியாற்றும் இந்த ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாளும் அல்லது 25 நாட்களுக்கு வேலை வாங்கினாலும் அவர்களுக்கு வெறும் ஐந்து நாள் சம்பளமோ அல்லது பத்து நாள் சம்பளம் தான் வழங்கப்படுகிறது. அவர்கள் பணி செய்த காலம் முழுமையாகக் கணக்கிடப்படுவது இல்லை.
காவல் துறையிலே ஒரு பகுதிநேரப் பணியாக ஊர்காவல் படையினர் இயங்கி வந்தாலும், பலர் இப்பணியை முழு நேரப்பணியாகவே செய்து வருகிறார்கள். அவர்களுக்கு 5 அல்லது 10 நாட்களுக்கான பணிக்காலம் மட்டும் வழங்கப்படும் என்ற அரசின் ஆணை G.O.Ms.No.115 dated December19, 2019, காரணமாக ஒவ்வொரு ஊர்க்காவல் படையினருக்கும் வெறும் 2800 அல்லது 5600 ரூபாய் மட்டுமே சம்பளமாக கிடைக்கிறது.
இது இன்றைய காலகட்டத்தில் எவருக்குமே மிகச் சிறிய தொகை. குடும்பம் நடத்த இத்தொகை போதுமானதாக இருக்காது என்பதை கருத்தில் கொண்டு நான் சென்னை உயர் நீதிமன்றத்தில், முன்னாள் காவல்துறை அதிகாரி என்ற பொறுப்புணர்வுடன், ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தேன்.
இவ்வழக்கு மாண்புமிகு நீதியரசர் சஞ்சீவ் பேனர்ஜி, நீதியரசர் ஆதிகேசவலு அடங்கிய உயர்நீதிமன்றம் முன்பாக விசாரணைக்கு வந்தது இந்த மனுவை பரிவுடன் ஏற்ற நீதிபதிகள், ஊர் காவல் படையின் சட்டப்பிரிவு 1963 ன்படி வெளியிடப்பட்ட அரசு ஆணை 115 (தேதி 19 12 2019) – ன்படி ஊர்க்காவல் படையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கு ஐந்து அல்லது பத்து நாட்களுக்கு மட்டுமே பணியில் அமர்த்துவது என்பது குறைவு என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், நீதியரசர்கள் தங்கள் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே 2015ஆம் ஆண்டு வழங்கிய ஒரு தீர்ப்பில் ஊர்க்காவல் படையினருக்கு வழங்கப்படும் ஒரு நாள் ஊதியம் மற்ற காவலர்களுக்கு ஒரு மாதத்திற்கான ஊதியத்தில் ஒருநாள் ஊதியமாக உதவிக்கு சமமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர்.
இப்படையில் பணியாற்றும் பெண்களும் ஆண்களும் இதையே தனது முழு நேர தொழிலாகவும் கொண்டுள்ளனர் என்று மனுதாராகிய நான் குறிப்பிட்டுள்ள உண்மையையும், ஊர் காவல் படையினருக்கு வழங்கப்படும், பத்து நாள் சம்பளம் மட்டும் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதாது என்பதில் உள்ள நியாயத்தையும் நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.
வெறும் பத்து நாள் வருமானம் அவர்கள் குடும்பத்திற்கு போதாது. மேலும் ஊர்காவல் படையில் பணியாற்றுபவர்களில் ஒரு சிலருக்கு மாதம் முழுதும் வேலை கொடுக்கும் ஒரு சிலருக்கு வெறும் பத்து நாள் மட்டும் வேலை கொடுப்பது எதன் அடிப்படையில் என்பதை அரசுத் தரப்பு விளக்கவில்லை.
காவல் படையில் பணியாற்ற ஒவ்வொரு தன்னார்வலர்களுக்கும் குறைந்தபட்சம் பத்து நாள் ஊதியம் 5600 ரூபாய் வழங்கப்படும் என்ற அரசு ஆணையில் குறுக்கீடு செய்யாமல், ஊர்க்காவல் படைப் பணியை மட்டுமே, தான் செய்யும் முழுநேரத் தொழிலாக கொண்ட காவலருக்கு, வெறும் பத்து நாள் சம்பளம் போதாது என்ற உண்மை நிலையை உணர்ந்து மாநில அரசு அவர்களுக்கான ஊதியத்தையும் பணி காலத்தையும் உயர்த்தித் தரும் என்று தாம் நம்புவதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
நீதியரசர்கள் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு தன்னலம் பாராமல் பணியாற்றும் தன்னார்வத் தொண்டர்கள் அடங்கிய ஊர்காவல் படையினருக்கு பெரும் உற்சாகத்தை வழங்கியிருக்கிறது அவர்கள் பணிக்கு ஏற்ற ஊதியமும், பணிக்கால அதிகரிப்பும், குடும்பம் நடத்த தேவையான பொருள் ஈட்ட உதவும்.
ஆகவே, மாநில அரசு உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள அறிவுரையை, மாநில அரசு மீது தெரிவித்துள்ள நம்பிக்கையை மதித்து ஊர்காவல் படையினருக்கு ஊதிய அதிகரிப்புக்கான உத்தரவை வெளியிட வேண்டுமென்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அன்புடன் வேண்டுகிறேன்.
நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ... |