தமிழக பாஜ.,வின் மூத்த தலைவரான சி.பி. ராதா கிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அவருடனான எனது பாசமிகுநெருக்கம் 35 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகும்.அவருடன் பழகியகாலத்திய ருசிகர அனுபவங்களில் சில.
தமிழக பாஜ., தலைவராக சி.பி. ராதாகிருஷ்ணன் செயல்பட்டு வந்த காலமது. அவரின் நண்பரான சொர்ணா சேதுராமன் அப்போது சென்னை மாவட்ட பாஜ தலைவராக இருந்தார். திருநாவுக்கரசரின் பரிந்துரையால் கிட்டிய பதவி. அப்போது மாவட்டக்கட்சி நிகழ்ச்சிகள் தொடர்பாக அடிக்கடி சொர்ணா சேதுராமனுடன் சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கெடுத்துக் கொள்வது வழக்கம்.
அக்காலகட்டத்தில் கட்சியினரின் களப்பணி நெருக்கம் காரணமாகத் தனக்குவந்த தொலைபேசி அழைப்புகளை கவனத்தில் எடுத்துக்கொள்ள முடியாமல் சி.பி. ராதாகிருஷ்ணன் இருந்தார்.
இந்த தகவல் தினமலர் நாளிதழில் டீக்கடை பெஞ்சு பகுதியிலும் இடம்பெற்றது. சொர்ணா சேது ராமனைச் சொர்ணா என்றே விளிப்பது வழக்கம். எனவே “சொர்ணாவுடன் சிபிஆர்” என எழுதப்பட்டு இருந்தது. இதனால் சி.பி. ராதா கிருஷ்ணனின் வீட்டில் குழப்பம் கும்மி அடித்தது.
சி. பி. ராதாகிருஷ்ணன் தொடர்புகொண்டு பேசினார். நானும், “சொர்ணா சேதுராமனுடன் சி பி ஆர்” என்பதற்கு பதிலாக, “சொர்ணாவுடன் சி பி ஆர்” என்று பெயர்ச்சுருக்கம் வந்த காரணத்தால் ஏற்பட்ட தர்மசங்கடம் இது. எனவே இதற்குத்தீர்வு உண்டு தெரிவித்தேன். இந்த தகவலை அந்து மணியிடம் சொன்னேன். அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.
மறுநாள் சொர்ணா சேதுராமன் என்ற பெயர் சொர்ணா என்ற சுருங்கியதால் ஏற்பட்ட கலக்கத்தைவிளக்கி, டீக்கடை பெஞ்ச் பகுதியில் ஒரு வாசகம் வெளியிடடோம். இதனையடுத்து சிபிஆர் இல்லத்தில் அமைதி தாண்டவம் ஆடத்தொடங்கியது.
அவர் எப்போது சென்னைக்கு வந்தாலும் அவருக்கும் எனக்கும் நெருக்கமான பொது நண்பரான கிருஷ்ணன் பாலா இல்லத்தில்தான் தங்குவார். அந்த வீடு தான் சி.பி. ராதாகிருஷ்ணனின் சென்னையில் கட்சிப் பணிக்களமாக இயங்கி வந்தது. கிருஷ்ணன்பாலா சென்னையில் எனக்குக் கிடைத்த முதல் நண்பன். ராஜாஜியிடம் செயலாளராக இருந்தவர். பின்னர் பல்வேறு பத்திரிகைகளில் பணியாற்றி வந்தவர். அவரின் இல்லத்தில்தான் சி.பி. ராதாகிருஷ்ணன் உடன் நான் மணிக் கணக்கில் விவாதித்ததுண்டு.
ஒருமுறை எங்களுக்குள் ஏற்பட்ட விவாதத்தின் போது அவரிடம் நான், “தேசியக் கயிறு வாரியத்தின் தலைவராக நீங்கள் இருக்கிறீர்களே! ஏற்றுமதி எந்தநிலையில் இருக்கிறது?” என்று கேட்டேன்.
அவரின் விளக்கம் இதோ:”நான் பொறுப்பேற்ற பிறகு ஏற்றுமதியின் அளவை வழக்கத்தைவிட பல மடங்குகள் அதிகமாக்கி இருக்கிறோம். ஆனாலும் உலகச்சந்தையில் இந்தியக் கயிற்றுப் பொருட்களுக்கு எதிர்பார்க்கும் அளவுக்கான கிராக்கி இல்லை. நமது நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கயிறு இரண்டு குறைபாடுகளோடு இருக்கிறது. இதனால்தான் உலக அரங்கில் இந்திய கயிற்றுப் பொருட்களுக்கு மதிப்புகுறைவாக இருக்கிறது. கயிற்றின் சுற்றளவு ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்.
ஆனால் இந்தியக் கயிறு பெரிதும் சிறிதுமாக நீண்டுஇருக்கின்ற காரணத்தால் ஒரு அழகிய வடிவமைப்போடு பொருட்களை உற்பத்தி செய்வதில் சிரமம்இருக்கிறது. கயிற்றை உற்பத்தி செய்யும் போது இழைகள் வெளியே நீட்டிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க முடியவில்லை. இந்த இரண்டு பிரச்சனைகளை தீர்த்துவிட்டால் உலக அரங்கில் இந்தியக் கயிற்றுப் பொருட்களுக்கான மதிப்பு கூடி, ஏற்றுமதி பெருகும். அதற்குத்தான் எங்கள் அதிகாரிகளோடு நான் கலந்து பேசிக் கொண்டிருக்கிறேன். இதுதான் பதில்.
மதுரவாயலில் உள்ள எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் எனக்குநேரடி நெருக்கமான இளம் விஞ்ஞானி ஹரிராம் சந்தரை அழைத்து, இதுகுறித்து விவாதித்தோம். அவர் தன் துறைத்தலைவரான முனைவர் பழனிச்சாமியிடம் விவரித்தார். அதைத்தொடர்ந்து பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை நிபுணர்கள் குழு சி.பி. ராதாகிருஷ்ணனைச் சந்தித்து பேசியது. பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.
“எங்கள் இரண்டு பிரச்சனைகளை தீர்க்க உங்களால் முடியுமானால், உதவிடத்தயார்.” என்றார் சிபி ராதாகிருஷ்ணன். தேசியகயிறு வாரியத்தின் தலைமை இடமான ஆலப் புழாவுக்கு பல்கலைக் கழக நிபுணர் குழு என்னுடன் கிளம்பியது. இந்தத் துறையில் முனைவர் பட்டம்பெற்று, பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் முனைவர் நடராஜன் தான் பதிலளித்த முதல் அறிஞர்.
வாரிய அதிகாரிகளின் அனைத்துச் சந்தேகங்களுக்கும் உடனடியாக உரிய விளக்கங்கள் கிட்டிவிட்டதால், இந்தத் திட்டம் அடுத்த கட்டத்தை நோக்கிச் சென்றது. இவ்வாறாக ஓராண்டுக்கும் மேலான தொடர் முயற்சிகளின் காரணமாக, இந்த இரு பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ள எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்திற்குத் தேசியக் கயிறு வாரியம் நிதியுதவி வழங்கியது. எம்ஜிஆர் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் அதிபர் அருண்குமார் இத்திட்டத்தைச் சீரமைத்து த் தந்தார்.
அடியேனை ஆலோசகராகக் கொண்ட ஆராய்ச்சிக் குழு மூன்று ஆண்டுகால முனைப்பான முயற்சிகளுக்குப் பிறகு, இந்த இரு பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான இயந்திரத்தை வெற்றிகரமாகக் கண்டுபிடித்து, இயக்கியும் காட்டியது. இதே போன்ற இயந்திரத்தை உருவாக்குவது தொடர்பாக இயந்திர உற்பத்தித் தொழிற்சாலையோடும் வார்த்தை நடந்து முடிந்திருந்தது. புதிய தொழில்நுட்பத்தை பிரம்மாண்ட விழாவில் வெளியிடுவது என்று தீர்மானிக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்த போது, லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. ஆகவே அந்தப் பணி அப்படியே தள்ளிப் போயிற்று. இவ்வாறாக அடுத்தடுத்த பல்வேறு இடைத் தடைகள். அந்த விழா நடக்காமலேயே போய்விட்டது.
இந்த நிலையில் சி.பி. ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். ஆகவே அவரின் தலைமையிலேயே இந்த புதிய தொழில்நுட்ப அறிமுக விழா நடத்தப்படக்கூடும். கோடிக்கணக்கில் இந்த தொழில்நுட்ப ஆய்வுக்காக நிதி வழங்கப்பட்டது. இதனை நேரடியாகத் தலையிட்டு வழங்க ஏற்பாடு செய்து கொடுத்தவரே சி.பி. ராதாகிருஷ்ணன் தான்.
எனவே பல்கலைக்கழகத்தின் அலுவலர்கள் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்தனர். அருகில் நான் இருந்த நிலையில், அந்தக் குழுவினர் கேட்டார்கள்: “திட்டமிட்டபடி பணி முடிந்துவிட்டது. இதில் தங்களுக்கான மரியாதை என்ன என்று சொன்னால் அதை முறைப்படி முழுமையாகச் செய்து விடுகிறோம்” என, வாசகத்தில் சூசகத்தைக் கலந்து அதிகாரிகள் பேசினார்கள்.
அதைக் கேட்ட சி. பி. ராதாகிருஷ்ணன் சொன்ன பதில் இதோ: எங்களுக்குத் தேவையான தொழில்நுட்பம் உங்களிடம் கிடைக்கிறது என்ற நம்பிக்கையில், நூருல்லாவின் பரிந்துரையின் பேரில் இதைச் செய்திருக்கிறேன். பல்கலைக்கழகத்திற்கு நற்பெயர் கிடைத்து இருக்கிறது. அதைவிட முக்கியம் தேசிய அளவில் பேசிய பிரச்சனைகளுக்குத் தீர்வு கிடைத்தது. உலக அரங்கில் இந்தியா முத்திரை பதிக்கப் போகிறது. அதுவே எனக்குப் போதும். நீங்கள் நினைப்பது போல் நான் எதையும் ‘வாங்கிப்’ பழக்கம் இல்லை. இப்படித்தான் அவர் நேர்மை மிகுந்த பதிலளித்தார்.
நான் அவரிடம் கேட்டேன் :”அரசியல் களத்தில் உங்களுக்கு எப்படி இது சாத்தியமாகிறது? அரசியலுக்கான உங்கள் செலவை எந்த வருமானத்தில் செலவழிக்கிறீர்கள்? அவர் சொன்னார்: அரசியலுக்குள் இறங்கிய போது 34 சொத்துகள் என்னிடம் இருந்தன. இப்பொழுது அவை 24 சொத்துகளாகச் சுருக்கிப் போயின. முக்கியமான செலவின் போதெல்லாம் ஒரு சொத்தை விற்று, அந்த தொகையைக் கொண்டு தான் நான் செலவழித்தேன். நான் கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து தான் வாழ்க்கையை வழி நடத்திக் கொண்டிருக்கிறேன். -முறுவல் பூத்த முகத்தோடு அமைதியாகத் தெரிவித்தார் சி.பி. ராதாகிருஷ்ணன்.
கிருஷ்ணன் பாலா சென்னையில் தனிமரமாக வாழ்ந்து வந்தார். அடிக்கடி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய சூழல் நிகழ்ந்து வந்தது. அப்போதெல்லாம் அவரின் மருத்துவச் செலவுகளை சி.பி. ராதாகிருஷ்ணன் தான் பார்த்துக்கொண்டார். பாலா தனித்து இருந்ததால், உணவுக்கான வசதி இல்லாமல் மேலும் நலிந்தார். எனவே வேடசந்தூரில் உள்ள தன்னுடைய நூற்பாலைக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் அழைத்துச் சென்றார். விருந்தினர் மாளிகையில் அவரைத் தங்க வைத்தார்.
கிருஷ்ணன் பாலா வைத்திருந்த ஆயிரக்கணக்கான நூல்களையும் கொண்டு சென்று கிருஷ்ணன் பாலா தங்கி இருந்த அறையிலேயே ஒரு நூலகத்தை உருவாக்கிக் கொடுத்திருந்தார். சி.பி. ராதாகிருஷ்ணனின் அரவணைப்பிலேயே கிருஷ்ணன் பாலாவின் கடைசி காலம் நிறைவடைந்தது.
சி.பி. ராதாகிருஷ்ணன் உடனான பாசப்பூர்வமான இணக்கம் காரணமாக அவர் அடிக்கடி எங்கள் குடும்பத்தை, தன் இல்லத்து விசேஷ களுக்கும், நூற்பாலைக்கும் அழைப்பு விடுத்துக் கொண்டே இருந்தார். நானும் அதன்படி குடும்பத்தோடு சென்று வந்திருக்கிறேன். இவ்வாறாக பல முறை நான் வேடசந்தூரில் உள்ள நூற்பாலைக்கு குடும்பத்தாருடைய சென்றிருக்கிறேன். அப்பொழுது அவர் எங்களுடன் படங்கள் எடுத்துக்கொண்டு, விருந்து உபச்சாரங்களைச் செய்து, நட்புறவோடு பேசிப் பழகி, அனுப்பி வைத்தார்.
இவ்வாறான ஏராளமான நேச நெருக்க நெஞ்சக நட்பினரான சி.பி. ராதாகிருஷ்ணன் உடனான என் பழக்கத்தை ஆசை தீர அசை போட்டு பார்த்துக் கொள்கிறேன். அதிரடி அரசியலில் நாட்டம் காட்டாமல், நாகரீக கோட்பாட்டோடு அரசியல் நடத்தி வந்தவர் சி.பி. ராதாகிருஷ்ணன். தடாலடி அரசியல் அணுகுமுறைகளும், தில்லாலங்கடித் திருவிளையாடல்களும் மலிந்து போன இந்த அரசியலில் இருந்து அவர் விடைபெற்றது அவருடைய பண்புக்கு இணக்கமானதாகும்.
நன்றி -ஆர் நூருல்லா, தினமலர்
சிலந்திப்பூச்சி விஷம், கருங்குஷ்டம், கரப்பான், ரோகம் இவை ஆடுதீண்டாப்பாளை மூலம் குணமாகும். உடல்பலம் ... |
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |