உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி 23 ஆகஸ்ட் 2024 அன்று உக்ரைனுக்கு பயணம் மேற்கொண்டார். 1992-ம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் ஏற்படுத்தப்பட்ட பின்னர், இந்தியப் பிரதமர் ஒருவர் உக்ரைனுக்கு மேற்கொண்ட முதல் பயணம் இதுவாகும்.
அரசியல் உறவுகள்
இருதரப்பு உறவுகளை விரிவான கூட்டாண்மை என்பதிலிருந்து, எதிர்காலத்தில் ராஜ்ஜிய கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்தும் வகையில் பணியாற்றுவதில் பரஸ்பர ஆர்வத்தை இரு தலைவர்களும் வெளிப்படுத்தினர்.
பரஸ்பர நம்பிக்கை, மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இரு நாட்டு மக்களின் நலனுக்காக இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதிப்படுத்தினர்.
கடந்த மூன்று தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க அளவு வலுப்பெற்றுள்ள இருதரப்பு உறவுகளின் நிலையான மற்றும் நேர்மறையான போக்கு குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். ஜூன் 2024-ல் அபுலியா மற்றும் 2023 மே மாதம் ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே, இந்தியா மற்றும் உக்ரைன் இடையேயான சந்திப்புகள் உட்பட பல்வேறு நிலைகளில், இந்தியா மற்றும் உக்ரைன் இடையே வழக்கமான ஈடுபாடுகள் ஆற்றிய பங்களிப்பை இரு தலைவர்களும் பாராட்டினர். மார்ச் 2024-ல் உக்ரைன் வெளியுறவு அமைச்சரின் புதுதில்லி பயணம், இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் இடையே பல்வேறு தொடர்புகள் மற்றும் தொலைபேசி உரையாடல்கள்; இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் உக்ரைன் அதிபர் அலுவலகத் தலைவர் இடையே, ஜூலை 2023-ல் கீவ் நகரில் நடைபெற்ற 9-வது சுற்று வெளியுறவுத்துறை அளவிலான ஆலோசனையின் போது, பரஸ்பர புரிதல், நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
துடிப்புமிக்க குஜராத் உலகளாவிய உச்சிமாநாடு 2024 மற்றும் ரைசினா பேச்சுவார்த்தை 2024 ஆகியவற்றில், உக்ரைன் அரசு பிரதிநிதிகள் பங்கேற்றதற்கு தலைவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை உறுதி செய்தல்
பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நாடுகளின் இறையாண்மைக்கு மரியாதை போன்ற ஐ.நா சாசனம் உள்ளிட்ட சர்வதேச சட்டத்தின் கொள்கைகளை நிலைநிறுத்துவதில் மேலும் ஒத்துழைப்பதற்கு இரு நாடுகளும் தயார் என்பதை பிரதமர் மோடியும், அதிபர் ஜெலன்ஸ்கியும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இந்த விவகாரத்தில் நெருக்கமான இருதரப்பு பேச்சுவார்த்தையின் விருப்பத்தை அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
இந்திய தரப்பில் தனது கொள்கை ரீதியான நிலைப்பாட்டையும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலம் அமைதியான தீர்வில் கவனம் செலுத்துமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, 2024 ஜூன் மாதம் சுவிட்சர்லாந்தின் பர்கன்ஸ்டாக்கில் நடைபெற்ற, உக்ரைனில் அமைதிக்கான உச்சி மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டது.
இந்தியாவின் இத்தகைய பங்கேற்பை, உக்ரைன் தரப்பு வரவேற்றதுடன், அடுத்த அமைதி உச்சிமாநாட்டில் இந்தியாவின் உயர்மட்ட பங்கேற்பின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தது.
உக்ரைனில் அமைதிக்கான உச்சி மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமைதி கட்டமைப்பு குறித்த கூட்டு அறிக்கை, பேச்சுவார்த்தை, இராஜதந்திரம் மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் நியாயமான அமைதியை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஒரு அடிப்படையாக செயல்பட முடியும் என்று உக்ரேனிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
உக்ரேனிய மனிதாபிமான தானிய முன்முயற்சி உட்பட, உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு முயற்சிகளை தலைவர்கள் பாராட்டினர். உலக சந்தைகளுக்கு, குறிப்பாக ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில், விவசாய உற்பத்திகளை தடையின்றி வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
பரந்த அளவில் ஏற்றுக்கொள்ளக்கூடிய மற்றும் விரைவில் அமைதியை மீட்டெடுப்பதற்கு பங்களிக்கும் புதுமையான தீர்வுகளை உருவாக்க அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையே, நேர்மையான மற்றும் நடைமுறை ஈடுபாட்டின் அவசியத்தை பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தினார். விரைவில் அமைதி திரும்புவதற்கு சாத்தியமான அனைத்து வழிகளிலும் பங்களிக்க, இந்தியா தயாராக இருப்பதாக அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
பொருளாதார, விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு
வர்த்தகம் மற்றும் வணிகம், வேளாண்மை, மருந்துகள், பாதுகாப்பு, கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாச்சாரம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, தொழில், உற்பத்தி, பசுமை எரிசக்தி போன்ற துறைகளில் வலுவான கூட்டாண்மையை கண்டறிவது குறித்தும், இரு நாடுகளின் வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் அதிக ஈடுபாடு குறித்தும் தலைவர்கள் விவாதித்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையே எதிர்காலம் சார்ந்த வலுவான பொருளாதார கூட்டாண்மையை உருவாக்குவதில், வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம், தொழில்துறை மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கான இந்தியா-உக்ரைன் அரசுகளுக்கு இடையிலான ஆணையத்தின் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.
மார்ச் 2024-ல் உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவுக்கு வருகை தந்தபோது நடத்தப்பட்ட ஐ.ஜி.சி.யின் ஆய்வு மற்றும் 2024-ல் இருதரப்புக்கு வசதியான நேரத்தில் ஐ.ஜி.சி.யின் 7-வது அமர்வை விரைவில் கூட்டும் நோக்கில், கூட்டுப் பணிக்குழுக்களின் கூட்டங்களை நடத்துவதற்கான முயற்சிகளையும் அவர்கள் பாராட்டினர். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், ஐ.ஜி.சி.யின் இணைத் தலைவர்/தலைவராக நியமிக்கப்பட்டதை உக்ரைன் தரப்பு வரவேற்றது.
தற்போதைய போர் தொடர்பான சவால்கள் காரணமாக 2022-ம் ஆண்டிலிருந்து பொருட்களின் வருடாந்திர இருதரப்பு வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க குறைவு ஏற்பட்டுள்ள பின்னணியில், இருதரப்பு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை, மோதலுக்கு முந்தைய நிலைக்கு மீட்டெடுப்பது மட்டுமல்லாமல், அவற்றை மேலும் விரிவுபடுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும் சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராயுமாறு தலைவர்கள் ஐ.ஜி.சி.யின் இணைத் தலைமை நாடுகளுக்கு அறிவுறுத்தினர்.
இந்தியா மற்றும் உக்ரைன் இடையே, பெரிய வர்த்தகம் மற்றும் வணிகத்திற்கான தடைகளை நீக்குவது தவிர, பரஸ்பர பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகளுக்காக, எளிதாக வர்த்தகம் செய்வதை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர். கூட்டுத் திட்டங்கள், ஒத்துழைப்புகள், முயற்சிகள் ஆகியவற்றைக் கண்டறிய அதிகாரிகள் மற்றும் வர்த்தக மட்டங்களில் அதிக ஈடுபாட்டை இருதரப்பும் ஊக்குவித்தன.
வேளாண் துறையில் இருதரப்புக்கும் இடையேயான வலுவான உறவுகள் குறித்தும், தரநிலைகள் மற்றும் சான்றிதழ் நடைமுறைகளை ஒத்திசைப்பது உள்ளிட்ட, ஒன்றுக்கொன்று தொடர்புடைய பகுதிகளில் உள்ள வலிமையின் அடிப்படையில், இருதரப்பு கலந்துரையாடல் மற்றும் சந்தை அணுகலை மேம்படுத்துவதற்கான விருப்பத்தையும் தலைவர்கள் நினைவு கூர்ந்தனர்.
மருந்து தயாரிப்பில் மேற்கொள்ளப்படும் ஒத்துழைப்பு, கூட்டாண்மையின் வலுவான தூண்களில் ஒன்று என்பதை அங்கீகரித்த தலைவர்கள், அதிக சந்தை அணுகல் மற்றும் முதலீடுகள் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கான வசதி மற்றும் பரிசோதனைகள், ஆய்வுகள், பதிவு நடைமுறைகள் ஆகியவற்றுக்கான விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்தினர். மருந்துகள் மற்றும் மருந்துபொருட்கள் தயாரிப்பில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான விருப்பத்தை இரு தரப்பினரும் வெளிப்படுத்தினர், பயிற்சி மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வது உட்பட, இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் மருந்து கட்டுப்பாடு குறித்த உக்ரைன் அரசுத்துறைக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதையும், மருந்து ஒத்துழைப்பு குறித்த இந்திய-உக்ரைன் கூட்டுப் பணிக்குழுவின் 3-வது கூட்டத்தை 2024 ஆகஸ்டில் மெய்நிகர் முறையில் நடத்தியதையும் இரு தலைவர்களும் வரவேற்றனர். குறைந்த செலவில், தரமான மருந்துகளை வழங்குவதற்கான உறுதியான ஆதாரமாக இந்தியா இருப்பதை உக்ரைன் தரப்பு பாராட்டியது.
இருதரப்பு உறவுகளின் சட்ட கட்டமைப்பை விரிவுபடுத்துவது, குறிப்பாக முதலீடுகளை பரஸ்பரம் பாதுகாப்பது, கல்வி ஆவணங்கள், கல்விப் பட்டங்கள் மற்றும் பட்டங்களை பரஸ்பரம் அங்கீகரிப்பது தொடர்பான பணிகளை விரைவுபடுத்துவது என்றும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்த இந்தியா மற்றும் உக்ரைன் இடையேயான ஒப்பந்தத்தை வெற்றிகரமாக அமல்படுத்துதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்தியா-உக்ரைன் கூட்டு பணிக்குழுவின் சிறப்பான செயல்பாடு மற்றும் இருதரப்பு ஆராய்ச்சி திட்டங்கள் நிறைவு ஆகியவற்றை சுட்டிக்காட்டிய இருதரப்பும் வழக்கமான பரிமாற்றங்கள் மற்றும் திட்டங்களை, குறிப்பாக தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல், கிளவுட் சேவைகள், உயிரி தொழில்நுட்பம், புதிய பொருட்கள், பசுமை ஆற்றல் மற்றும் பூமி அறிவியல் போன்ற துறைகளில் நடத்துவதை ஊக்குவித்தன. 2024 ஜூன் 20 அன்று நடைபெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான கூட்டுப் பணிக் குழுவின் 8-வது கூட்டத்தை இருதரப்பும் வரவேற்றன.
பாதுகாப்பு ஒத்துழைப்பு
இந்தியா மற்றும் உக்ரைன் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய தலைவர்கள், இந்தியாவில் உற்பத்திக்கான கூட்டு ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை மற்றும் வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பு உட்பட, இரு நாடுகளிலும் உள்ள பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையே, வலுவான உறவை எளிதாக்குவதை நோக்கி தொடர்ந்து பணியாற்ற ஒப்புக் கொண்டனர். 2012 பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் கீழ் நிறுவப்பட்ட ராணுவ – தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான இந்திய-உக்ரைன் கூட்டு பணிக்குழுவின் 2-வது கூட்டத்தை இந்தியாவில் விரைவில் நடத்தவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
கலாச்சார மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள்
இந்தியா மற்றும் உக்ரைன் இடையேயான நீடித்த நட்புறவில் கலாச்சார மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் ஆற்றிய முக்கிய பங்கை அங்கீகரித்த இருதரப்பும், கலாச்சார ஒத்துழைப்புக்கான இருதரப்பு திட்டம் நிறைவடைந்ததையும், இந்தியா மற்றும் உக்ரைனில் கலாச்சார விழாக்களை நடத்துவது என்ற முடிவையும் வரவேற்றன. இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டம் மற்றும் கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சிலின் பொது கலாச்சார உதவித்தொகை திட்டம் ஆகியவற்றின் கீழ் வழங்கப்படும் கல்வி உதவித்தொகைகள் உட்பட, மக்களுக்கு இடையேயான கலாச்சார பரிமாற்றங்களை நீடித்து நிலைநிறுத்தி மேலும் விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தை தலைவர்கள் வலியுறுத்தினர்.
இரு நாடுகளிலும் உள்ள குடிமக்களின் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உயர்கல்வி நிறுவனங்களின் கிளைகளை பரஸ்பரம் திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
இரு நாடுகளுக்கும் இடையே நட்புறவை மேம்படுத்துவதிலும், மக்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதிலும் உக்ரைனில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை இரு தலவர்களும் பாராட்டினர்.
2022-ம் ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்களை வெளியேற்றுவதில் உக்ரைன் தரப்பு அளித்த உதவி மற்றும் ஆதரவுக்காகவும், அதன் பின்னர் உக்ரைனுக்குத் திரும்பிய அனைத்து இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ததற்காகவும், உக்ரைன் தரப்புக்கு இந்திய தரப்பு தனது நன்றியை மீண்டும் வலியுறுத்தியது. இந்திய குடிமக்ள் மற்றும் மாணவர்களுக்கு எளிதான விசா மற்றும் பதிவு வசதிகளுக்கு உக்ரைன் தரப்பு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியதற்காக, இந்திய தரப்புக்கு உக்ரைன் தரப்பில் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டதோடு, இந்தியா மற்றும் உக்ரைன் இடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்துள்ளதையும் வரவேற்றது.
உக்ரைனின் புனரமைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் இந்திய நிறுவனங்களை ஈடுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயவும் இருதரப்பும் ஒப்புக் கொண்டன.
தீவிரவாதத்தை இரு தலைவர்களும் வன்மையாக கண்டித்தனர். பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் அனைத்து வடிவங்கள் மற்றும் வெளிப்பாடுகளுக்கு எதிராக சமரசமற்ற போராட்டம் நடத்த அவர்கள் அழைப்பு விடுத்தனர். சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் அடிப்படையில் இந்தத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர்கள் குறிப்பிட்டனர்.
சமகால உலக யதார்த்தங்களை பிரதிபலிக்கும் வகையிலும், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகளை கையாள்வதில் அதிக பிரதிநிதித்துவம் கொண்டதாகவும், சிறப்பானதாகவும், திறமையானதாகவும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் விரிவான சீர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கான தனது ஆதரவை உக்ரைன் மீண்டும் வலியுறுத்தியது.
சர்வதேச சூரியசக்தி கூட்டணியில் உக்ரைன் இணைவதை இந்திய தரப்பு ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தது.
இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த அம்சங்கள் குறித்த தலைவர்களின் விரிவான விவாதங்கள் மற்றும் பகிர்ந்து கொள்ளப்பட்ட ஆர்வமுள்ள பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துக்கள் பரிமாற்றம் ஆகியவை, இந்தியா-உக்ரைன் உறவுகளின் ஆழம், பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையை பிரதிபலித்தன.
இந்தப் பயணத்தின் போது தமக்கும், தமது குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான உபசரிப்புக்காக அதிபர் ஜெலன்ஸ்கிக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி, பரஸ்பரம் வசதியான வாய்ப்பைப் பயன்படுத்தி, இந்தியாவுக்கு வருகை தருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தார்.
வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ... |
இதன் மற்றொரு பெயர் மரவள்ளிக்கிழங்கு, மரச்சீனிக்கிழங்கு ஆகும். இதை உண்பதால் பித்தவாத தொந்தரவையும் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |