”தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். இரு கட்சிகளும் நமக்கு பரம எதிரிகள்,” என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசினார்.
சென்னையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், அவர் பேசியதாவது:
திராவிட கட்சிகள், 70 ஆண்டுகளாக தமிழகத்தை சின்னா பின்னமாக்கி உள்ளன. நம் பெருமைகளை இழந்து வருகிறோம். பொருளாதாரத்தில் இரண்டாம் இடத்திலிருந்த தமிழகம், தற்போது மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அடுத்து, நான்காம் இடத்தை நோக்கி செல்கிறது.
அடுத்த, 25 ஆண்டுகளில் என்ன வேண்டும் என்று சிந்தித்து, அனைத்து மாநிலங்களிலும் செயல்படுகின்றனர். தமிழக ஆட்சியாளர்கள் மட்டுமே, ஒரு குடும்பத்துக்காக சிந்திக்கின்றனர். எந்த முடிவு எடுத்தாலும், அவர்கள் கஜானா நிரம்புமா என்று பார்க்கின்றனர்.
அரசியல் காமெடி
ரஜினி நேற்று முன்தினம் பேசுகையில், ‘அரியணை உதயநிதி கைக்கு போகும் போது கலவரம் வெடிக்கும்’ என்று, சுட்டிக் காட்டி உள்ளார். துணை முதல்வராக உதயநிதி எப்போது வருவார்; அவர் வந்து விட்டால், தங்கள் பிள்ளைகளை முக்கிய பதவிக்கு நகர்த்தலாம் என்று, அமைச்சர்கள் நினைக்கின்றனர்.
தமிழகத்தில் ஹிந்துக்கள் எழுச்சி பெறும் போது, தி.மு.க.,வினர் பழனிக்கு பால் காவடி எடுப்பர் என்று, விமர்சகர் ஒருவர் கூறினார்; அது, தற்போது நடக்கிறது. பழனி கோவில் மீது அரசியலுக்காக கைவைப்பவர், மண்ணோடு மண்ணாக சாய்ந்திருப்பது சரித்திரம்.
கடந்த, 2023 செப்டம்பரில், சனாதன தர்மத்தை வேரறுப்போம் என உதயநிதியும்; சனாதனத்தை வெட்டி எறிய வேண்டும் என்று சேகர்பாபுவும் பேசினார்.
ஓராண்டு கழித்து, சனாதன தர்மம் வேண்டாம் என்றவர்கள், முருகன் பெயரை வைத்து, பழனியில் பால்காவடி துாக்குவதற்கு பதிலாக, அரசியல் காமெடி செய்கின்றனர். முருகன் பார்த்துக் கொண்டிருக்கிறார்; 70 ஆண்டுகளாக கலாசாரத்தை சீரழித்தவர்களுக்கு, முருகன் நிச்சயம் தண்டனை அளிப்பார்.
தமிழகத்தில், பா.ஜ., ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால், சொந்த பலத்தில் நிற்க வேண்டும். அது தான் முதல் தகுதி. நமக்கு இருவரும் எதிரிகள் தான்; அதில், சமரசம் இல்லை. தி.மு.க., என்பது தீய சக்தி. அதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர்.
இன்றைய அ.தி.மு.க., தன் தன்மையை இழந்து, டெண்டர் ஏஜென்டாக மாறியுள்ளது. எனக்கு நேர்மை குறித்து, பழனிசாமி பாடம் நடத்த வேண்டாம். கூவத்துாரில் டெண்டர் சிஸ்டத்தில் முதல்வராக தேர்வு செய்யப்பட்டவர் அவர்.
காலில் விழுந்து தவழ்ந்து பதவி பெற்ற பழனிசாமிக்கு, ஒரு விவசாயியின் மகனை, ஒரு பைசா வாங்காத அண்ணாமலையை பற்றி பேச, எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. வரும், 2026ல் அ.தி.மு.க.,வுக்கு நான்காம் இடம் கூட கிடைக்காது.
அ.தி.மு.க., கூட்டணி வேண்டும் என்ற தலைவர்கள் மேடையில் உள்ளனர். கடந்த, 2019 லோக்சபா தேர்தலின் போது, வாரணாசியில் மோடி மனுத்தாக்கல் செய்ய, பழனிசாமியை அழைத்த போது, தோற்க போகின்ற மோடிக்காக எதற்கு வர வேண்டும் என்று கேட்டார்.
அதனால் தான் மானமுள்ள அண்ணாமலை, கூட்டணி கட்சி தலைவராக பழனிசாமியை ஏற்கவில்லை.
இரண்டு திராவிட கட்சிகளை துாக்கி எறிய பா.ஜ.,வில் சேர்ந்தேன். பழனிசாமிக்கு இதெல்லாம் தெரியாது. தமிழகத்தில், பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்றால், இரண்டு திராவிட கட்சிகளையும் ஒழித்துக் கட்ட வேண்டும். இருவரும் நமக்கு பரம எதிரிகள்.
ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதிக்கு மரியாதை செய்துள்ளோம். அதேநேரம், தமிழகத்தின் நம்பர் ஒன் ஊழல்வாதி கருணாநிதி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. தமிழகத்தில், பா.ஜ.,வுக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே எப்போதும் கூட்டணி வராது. ஆட்சிக்கு வர, 2026ஐ விட்டால் மீண்டும் வாய்ப்பு கிடைக்காது.
அதற்கான வாய்ப்பு உள்ளாட்சி தேர்தல். அதில், அனைத்து இடங்களிலும் பா.ஜ., நிற்கும். அதற்கு நீங்கள் தயாராக வேண்டும். வரும் காலம் நம் காலம்.
இவ்வாறு, அண்ணாமலை பேசினார்.
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |