கடந்த ஜனவரி 7ஆம் நாள் பாகிஸ்தான் படையினர் நமது ராணுவத்தினர் இருவரைக் கொடூரமான முறையில் கொன்றனர். தலை துண்டிக்கப்பட்டும் உடல் சிதைக்கப்பட்டும் நடந்த கொடூரம் பாகிஸ்தான் ராணுவத்திற்குப் புதிதான செயல்பாடு அல்ல. ஆனால் சற்றே அடங்கியிருந்த இந்த வெறியாட்டம் மீண்டும் தலையெடுப்பதற்கு நமது ‘சிறந்த முறையில் வளைந்து வளைந்து கொடுக்கும்’ நடுவணரசைத் தவிர என்னென்ன காரணங்கள்?
ராணுவத்துக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குமான உரசலகள் பாகிஸ்தானில் வழக்கமானதுதானே? ஆமாம். ஆனால் இம்முறை ராணுவத்துக்கு நேரடியாக களத்தில் இறங்கி அரசைக் கைப்பற்ற தக்கதோர் காரணம் இன்னும் கிட்டவில்லை. நவாஸ் ஷரீஃபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் ராணுவத்தின் ஆசியுடன் தோன்றிய கட்சி. ஆனல் அது ராணுவத்தின் நம்பிக்கையை இழந்து முஷரஃபிடம் சிக்கிச் சின்னாபின்னப்பட்டது. அதன் பின் முஸ்லிம் லீகை நம்புவதற்கில்லை என்று PML (Q) என்று முகமதலி ஜின்னாவின் பேரால் ஒரு கட்சியை ஆள் வைத்துத் துவக்கி அரசியல் ஆட்டம் ஆட ஆரம்பித்தார் முஷரஃப். ஆனால் அதுவும் பெரிதாகப் பரிமளிக்கவில்லை. ராணுவத்தை நடத்தத் தெரிந்த முஷரஃபுக்குக் கட்சியை நடத்தத் தெரியவில்லை. இது வெளியில் தெரியும் காரணம்.
PML (Q) பத்தோடு பதினொன்றாக ராணுவத்தால் ஆக்கப்பட்டது. அதற்குக் காரணம் தற்போதைய பாகிஸ்தான் ராணுவத்தளபதி ஜெனரல் கயானி. முஷரஃபை வளர்த்துவிட்டு வேடிக்கை பார்க்க அவர் என்ன முட்டாளா? முஷரஃபை கூடவே இருந்து பார்த்தவர். முஷரஃபின் செயல்பாடுகளை நன்கறிந்தவர். ஆகவே இம்ரான் கானின் கட்சி ஆதரிக்கப்பட்டது.
கிரிக்கெட்டில் பரிமளித்த இம்ரான் கான் நியாஸி அரசியலில் பரிமளிக்க முடியவில்லை. காரணம் அவருக்கும் முல்லாக்களுக்கும் இடையிலான இடைவெளி. முழுதும் மேற்கத்திய பாணியில் செயல்படும் இம்ரான் கானை மத அடிப்படைவாதம் பயிற்றுவிக்கும் முல்லாக்கள் நம்பத் தயாரில்லை. இம்ரான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் அரசியலும் பொருளாதாரமும் படித்தவர். இவர் மேற்கத்திய கைப்பாவையாகச் செயல்படுவார் என்ற அச்சம்.
போதாக்குறைக்கும் இம்ரானின் முன்னாள் மனைவி ஜெமிமா கோல்ட்ஸ்மித் யூத வம்சாவழி கொண்டவர். இருவரும் மனமொப்பித் தலாக் செய்வதாக இம்ரான் 2004ல் அறிவித்தார். இம்ரானின் அரசியல் செயல்பாடுகளுக்கு ஜெமிமாவால் ஈடுகொடுத்துப் பாகிஸ்தானில் வாழ இயலவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது. இம்ரானது பதான் வம்சாவழியும் நியாஸி பரம்பரைப் பெருமையும் மொஹாஜிரான முஷரஃபை எப்போதும் சந்தேகத்துடனேயே பார்க்கச் செய்தது. நியாஸி பரம்பரை தோல்விகள் பல கண்டது, குறிப்பாக இந்தியாவிடம் பங்களாதேஷை விட்டுக் கொடுத்தது என்ற காரணத்தால் முஷரஃப் இவரை மதித்ததில்லை. இதை பயன்படுத்திக் கொண்ட சக பஞ்சாபியான கயானி இம்ரானை மறைமுகமாக ஆதரித்து முஷரஃபை அடக்கி வைத்தார்.
ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் அல் காயிதா ஊடுருவல் மிக அதிகாமாக இருக்கிறது. 2011ல் பின் லேடன் கொல்லப்பட்ட போது அவனை ராவல்பிண்டி அருகே வைத்திருந்தது குறித்த சில கசப்பான கேள்விகளை ஜெனரல் கயானி கேட்டார். ஆனால் தம் ராணுவத்தினரிடமே பதில் பெற அவரால் இயலவில்லை. கடுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்குக் கண்டித்துவிட்டுப் போய்விட்டார். முல்லாக்களின் பிடியில் இருக்கும் தாலிபான்களின் தாக்குதல்களில் ராணுவம் பலமுறை சிக்கியதும், ராணுவத்தினர் சிலரே தாலிபான்களுக்கு உதவியதும் உண்மையை கயானிக்கு உணர்த்தியது.
தவிரவும் பாகிஸ்தானிய தாலிபான்களின் வளர்ச்சி ராணுவத்துக்கு மிகவும் கவலை தருவதாக இருந்தது. ஆனால் முல்லாக்களின் ஆதரவில்லாமல் அணுவளவும் அரசியல் செய்ய முடியாது என்ற நிலையில் பாகிஸ்தான் ராணுவம் சில ஆஃப்கன் ஜிஹாதி குழுக்களை ஆதரித்தது. கொடும் ஜிஹாதியும் பாகிஸ்தானிய தாலிபான் தலைவருமான பைதுல்லா மசூத், 2009ல் கொல்லப்பட்ட பிறகு அவரது தம்பி ஹகிமுல்லா மசூத் அமெரிக்காவுக்கு எதிராக மிகக் கடுமையான நிலை எடுத்துத் தாக்குதல்களை நடத்தினார்.
ஹகிமுல்லாவின் குறிக்கோள்கள் ராணுவத்துக்கு மிகவும் இடைஞ்சலாக இருந்தது. தமக்கு இசைவான ஜிகாதிகளை உருவாக்கி அவர்களை தேசமக்களின் முன் நிறுத்தினால் சரியாகும் என்று கயானி கணக்குப் போட்டார். ஆகவே மசூத் சகோதரர்களின் குழுவுக்கு எதிராக ‘நல்ல தாலிபான்’ குழுக்களை ராணுவம் வளர்த்துவிட்டது. அவற்றின் மூலம் வசீரிஸ்தான், வடமேற்கு எல்கைப் பகுதிகள் ஆகியவற்றை ஓரளவுக்கு தன் கட்டுப்பாட்டில் வைப்பதோடு முல்லாக்களின் கணிசமான ஆதரவையும் பெறுவது ராணுவத்தின் திட்டம்.
அப்படி ஒரு கணக்கில் ராணுவம் ஆதரித்தது முல்லா நசீர் என்பவரை. இவர் அல் காயிதா ஆதரவாளர். பாகிஸ்தானில் சர்தாரி அரசை எதிர்ப்பதில் தீவிரமானவர். ”அமெரிக்கா தாக்குகிறது என்று பாகிஸ்தான் அரசு பொய் சொல்கிறது. ஆள்காட்டுவது பாகிஸ்தான் அரசு தான் ஆகவே அவர்களுக்குத் தக்க பாடம் புகட்டுவோம்” என்று நசீர் பேச வந்தது சிக்கல். இவர் மீது ஒரு தற்கொலைத் தாக்குதல் டிசம்பரில் நடந்தது. அதில் தப்பினார். கடந்த ஜனவரி 3ஆம் நாள் அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில் (Drone Attack) கொல்லப்பட்டார்.
இப்போது ராணுவம் “நசீர் எறிகிற கொள்ளிகளில் கொஞ்சம் நல்ல கொள்ளி. அவ்வளவே” என்று சொல்கிறது. “மசூத் சகோதரர்களையும் வசீரிஸ்தான் முல்லாக்களையும் சேர்த்துச் சமாளிப்பது ராணுவ ரீதியில் சாத்தியமில்லை” என்பது ராணுவ தளபதிகளில் குறிப்பாக முன்னாள் ஐஎஸ்ஐ அதிகாரி பிரிகேடியர் அசாத் முனீர் போன்றோரின் கருத்து. (பிறகு ஏனய்யா ஆதரித்தீர்கள்?)
ஆனால் அரசியல் நோக்கர்கள் கருத்து வேறுமாதிரி இருக்கிறது. பாகிஸ்தான் முல்லா நசீரை இழந்தது பேரிழப்பு என்கின்றனர், சலீம் சைஃபி எனும் மூத்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் “நசீரை இழந்தது பேரிழப்பு. ஆஃப்கன் அரசுக்கும் தாலிபாம்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளில் பாகிஸ்தான் இனி நாட்டாமை செய்வது மிகக் கடினம்” என்கிறார். காரணம் நசீரின் வாரிசாக வந்திருக்கும் பஹாவல் கான் பாகிஸ்தானை நம்பமாட்டார்.
சென்ற டிசம்பரில் நசீர் மீது நடந்த தாக்குதல் மசூத் படையினர் நடத்தியது என்று நம்பி அவர்களை வசீரிஸ்தான் பகுதியில் இருந்து வெளியேற்றினார் நசீர். ஆனால் அவர் தற்போது கொல்லப்பட்டது அமெரிக்க ஆளில்லா விமானத் தாக்குதலில். ஆக, முல்லாக்களின் ஆதரவு நிச்சயமாக இஸ்லாமாபாத் அரசியல் அமைப்புகளுக்கு இல்லை என்றாகிவிட்டது.
தற்போது திடீரென்று குல்லா அணிந்த முல்லா ஒருவர் தோன்றி பாகிஸ்தானைக் கலக்குகிறார். அவர் பெயர் தாரிக் உல் காத்ரி. பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் தற்போது கனடா நாட்டுப் பிரஜை. இஸ்லாமிய மதக் கோட்பாடுகளில் தீவிர நம்பிக்கை உடையவர். ஆனால் வஹாபி இஸ்லாமில் நம்பிக்கை அற்றவர். சுஃபி மற்றும் இன்னபிற சாத்வீக வழிகளில் நம்பிக்கை உடையவர் என்று கூறப்படுகிறது. காத்ரி பஞாபில் உள்ள ஜங் பகுதியில் “சேக்ரட் ஹார்ட்” கிறிஸ்தவப் பள்ளியில் ஆரம்பப்பள்ளிப் படிப்பும் பிறகு பல்வேறு முல்லாக்களிடம் இஸ்லாமியப் படிப்பும் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் சட்டமும் படித்தவர். இஸ்லாமுய சட்டம் மற்றும் தத்துவப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்றவர். முல்லாக்களை முகம்மலரச் செய்யும் முகமாக காத்ரி முன்னிறுத்தப்படுகிறார்.
இவர் 1981ல் மின்ஹஜ் உல் குரான் (குரானின் வழியில் என்று பொருள்) என்ற அமைப்பைத் துவக்கினார். அதன் மூலம் பல தொண்டு அமைப்புகள், மத ஒற்றுமைப் பேச்சுகள் என்று நடத்துகிறார். இவருக்கு பணம் கொட்டுகிறது. செலவுக்குக் கவலையில்ல்லை. ஆனால் அந்தப் பணம் எங்கிருந்து வருகிறது என்பது பெரிய கவலை. ஏனென்றால் விடை தெரியவில்லை.
கடந்த டிசம்பர் 23ஆம் தேதி லாகூரில் காத்ரி ஒரு மாநாடு நடத்தினார். 20 லட்சம் பேர் கலந்து கொண்டதாகச் சொல்கிறார். பாகிஸ்தானில் 70% எம்.பிக்கள் வரி ஏய்க்கிறார்கள் என்பது தொடங்கி பல ஊழல்களைப் பட்டியலிடுகிறார், நேர்மையான வீரம் செறிந்த பாகிஸ்தான் ராணுவம் சர்தாரி அரசால் வஞ்சிக்கப்படுவதாகக் கூறுகிறார். இவர் ராணுவத்தின் கைப்பாவை என்பது இந்த வார்த்தைகளில் தெளிவாகிறது. ஜனவரி 14, 2013 அன்று இஸ்லாமாபத் நோக்கிய நடைப்பயணம் நடத்தியதில் 25000 பேர் கலந்து கொண்டதாகவும், அப்போது அரசு இவரைக் கொல்ல முயன்றதாகவும் சொல்லப்படுகிறது..
ராணுவத்தின் முன்னாள் செல்லப்பிள்ளை 60 வயது இம்ரான் கான் கோபித்துக் கொண்டு 61 வயதான காத்ரிக்குப் போட்டியாக இப்போது தானும் ஒரு மாநாடும் நடைப் பயணமும் நடத்த இருக்கிறார்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் சில நிகழிவுகளை கோர்வையாகப் பார்த்தால் நம்மீது பாகிஸ்தான் வெறியாட்டம் துவக்கியது ஏன் என்பது புலப்படும்.
பிரதமர் மன்மோகன் சிங் வழக்கமான உறவுகள் பாகிஸ்தனுடன் சாத்தியமில்லை என்கிறார். (பேசிட்டாருங்கோவ்!)
இத்தகைய பின்னணியில் நடந்துள்ள தாக்குதலில் பலியான நமது சகோதர ராணுவவீரர்கள் இருவருக்கு நாம் மனதார அஞ்சலி செலுத்துவதோடு அவர்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்.
அப்போது இன்னொரு ப்ரார்த்தனையையும் செய்யவேண்டும். “உற்றார் உறவினர், நண்பர் பகைவர் என்று பேதம் பார்க்காதே. நல்லதை நாட்டுவதும் தீயதை ஓட்டுவதும் மட்டுமே லட்சியமாகக் கொண்டு போராடு” என்று கீதோபதேசம் செய்த இறைவனே! உன் உபதேசப்படி நடக்கும் தலைவர்கள் என் தேசத்தை ஆள ஆவன செய் என்றும் ப்ரார்த்திக்க வேண்டும்.
வந்தே மாதரம்! ஜெய் ஹிந்த்!!
நன்றி ; அருண் பிரபு
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
பொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ... |
மாதுளம் பூ பல வகை நோய்களுக்கு அருமருந்தாக உபயோகப்படுகிறது. இப்பூவினால் இரத்த மூலம், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.