பிரதமருக்கு ஜெட்லீயின் ஒரு கடிதம்

 பிரதமருக்கு  ஜெட்லீயின் ஒரு கடிதம் தன்னுடைய பிராபல்யம் குறைந்துவரும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் உபாயம் தெளிவாகத் தெரிகிறது. காங்கிரஸினால் அரசியல் வழியில் பாஜகவையோ நரேந்திர மோதியையோ எதிர்க்க முடியாது. அவர்கள் தோல்வியை எதிர்நோக்குகிறார்கள். குஜராத் முதல்வர் நரேந்திர மோதி, அம்மாநில உள்துறை அமைச்சர் அமித் ஷா,

அம்மாநிலத்தின் சட்டம், போக்குவரத்து, சட்டமன்ற விவகார துறைகள் அமைச்சர், பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் மற்றும் பல முக்கிய தலைவர்கள் ஆகியோரைப் பல வழக்குகளில் பொய்யாகச் சிக்கவைக்க புலன்விசாரணை அமைப்புகளைத் துஷ்பிரயோகம் செய்துள்ளது காங்கிரஸ். இது சம்பந்தமான சில விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஷொராபுத்தீன் என்கௌண்டர் வழக்கு

ஷொராபுத்தீன் ஷேக் என்பவர் கொல்லப்பட்ட என்கௌண்டரானது மத்திய அரசின் கீழ் இயங்கும் உளவுத்துறையின் வழிகாட்டுதல்படி நடத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. உளவுத்துறை ஒரு தகவலை ரகசியப் புலனாய்வு மூலம் அணுகும்போது, குறிப்பிட்ட இலக்கைத் தன் கண்காணிப்பில் வைத்திருப்பது வழக்கம். அதற்குப்பிறகு அந்த இலக்கைக் கைப்பற்றிக் கைது செய்யும் வாய்ப்பு வரும்போது மாநிலக் காவல்துறையை அந்நடவடிக்கையில் இணைத்துக்கொள்ளும். குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் குறிவைக்கப்பட்ட மாஃபியாவான ஷொராபுத்தீன் தலைக்கு மத்தியப் பிரதேச அரசு பரிசுத்தொகையும் நிர்ணயித்திருந்தது. அவன் சட்ட விரோதமாக ஆயுதங்கள் வியாபாரம் செய்தவன். தடா சட்டத்தின் கீழ் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டவன். உஜ்ஜையினி மாவட்டம் ஜாமியா கிராமத்தில் உள்ள அவன் வீட்டில் மத்தியப் பிரதேச காவல்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, 40 ஏகே-56 ரக துப்பாக்கிகள், நூற்றுக்கணக்கான ஏகே-56 ரக துப்பாக்கி வெடிமருந்துகள், நூற்றுக்கணக்கான கையெறி வெடிகுண்டுகள் ஆகியவைக் கைப்பற்றப்பட்டன. அவன் பல மாநில அரசுகளின் காவல்துறைகளினால் தேடப்பட்டு வந்தவன்.

24/25-11-2005 அன்று அவன் என்கௌண்டரில் இறந்த பிறகு, அவனுடைய சகோதரர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். அதற்கான நிதியுதவியைக் காங்கிரஸ் கட்சி செய்தது. ஏற்கனவே ஆலோசித்துத் திட்டமிட்ட செயலாக, அப்போதைய தலைமைச் சட்ட ஆலோசகர் திரு கோபால் சுப்பிரமணியம், முதல் தினமே நீதிமன்றத்தில் ஆஜராகி மத்திய அரசின் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடந்துகொள்வதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தலைமை வழக்கறிஞர் மத்திய அரசின் சார்பாக ஆஜாராக, கோபால் சுப்பிரமணியம் நீதிமன்றத்தின் குறிப்பிட்ட உத்தரவு இல்லாமல், தானே தன்னை நீதிமன்ற நட்பாளராக (Amicus Curiae-வாக) நியமித்துக்கொண்டார். வழக்கு விசாரணைகளை CBI வசம் கொடுப்பதாக இந்திய அரசு ஒத்துக்கொண்டது. வழக்கைப் பொறுத்தவரை மத்திய அரசு ஒரு சம்பிரதாயத் தரப்புதான் என்றாலும்கூட, தலைமை வழக்கறிஞர் ஆஜராகி ஒத்திவைப்பு கோரிக்கைகளுக்குக்கூட எதிர்ப்பு தெரிவித்து வந்தார். CBI நேர்மையாக இந்த வழக்கை நடத்தாது என்கிற ஆட்சேபங்கள் எழுப்பப்பட்டதால், உச்ச நீதிமன்றம் தன் மேற்பார்வையில் குஜராத் மாநில போலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு விசாரிக்கலாம் என உத்தரவிட்டது. மீண்டும் அந்த என்கௌண்டரை சரிபார்த்த மாநில போலீஸ் குழுவானது, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விஞ்ஞானப் பூர்வமான விசாரணைகளை மேற்கொண்டு, மூன்று IPS அதிகாரிகள் உட்பட பல போலீஸ் அதிகாரிகளைக் கைது செய்தது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், நீதிமன்ற நட்பாளர் கோபால் சுப்பிரமணியம், மற்ற வழக்குரைஞர்கள் ஆகியோரின் வாதங்களைக் கேட்ட பின்னர், உச்ச நீதிமன்றம் வழக்கை CBI வசம் ஒப்படைத்தது. வழக்கில் இரு வேறு மாநில அரசுகள் சம்பந்தப்பட்டிருப்பதாலும் ஆந்திர மாநிலத்தில் நடந்த சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டியிருப்பதாலும் உச்ச நீதிமன்றம் வழக்கை CBI வசம் கொடுக்க வேண்டியதாயிற்று. உண்மையில், குஜராத் போலீஸுக்கு காங்கிரஸ் அரசின் கீழ் இருந்த ஆந்திர போலீஸ் சரியாக ஒத்துழைப்பு நல்கவில்லை என்பது நீதிமன்றத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜராத் போலீஸின் விசாரணைகளில் இல்லாமலிருந்த, குறிப்பிட்ட நான்கு குறிப்புகள் மீதான விசாரணை வேண்டும் என்பதற்காகத்தான் CBI வசம் வழக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த குறிப்பிட்ட நான்கு குறிப்புகள் மீதான விசாரணைகளை மேற்கொள்ளாமல் CBI தன் விசாரணையை முடித்துக்கொண்டது. அது ஆந்திராவில் நடந்த சம்பவங்களை விசாரிப்பதில் தீவிரம் காண்பிக்கவில்லை. இந்திய ஆட்சிமுறையில் உள்ள கூட்டாட்சித் தன்மையின் உரிமைப்போக்கினைப் புறந்தள்ளிவிட்டு குஜராத்தின் ஆளும் கட்சியை வழக்கில் சிக்க வைப்பதே CBI-யின் குறிக்கோளாக இருந்திருக்க வாய்ப்புள்ளது. குஜராத்தின் அப்போதைய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அம்மாநிலத்தின் சட்டம், போக்குவரத்து, சட்டமன்ற விவகாரத்துறைகள் அமைச்சர் ஆகியோரை இலக்காக வைத்து, இறுதியில் முதல்வர் நரேந்திர மோதியையும் வழக்கில் சிக்க வைக்கவேண்டும் என்கிற ஆர்வத்துடன் CBI நடந்துகொண்டுள்ளது.

அதிர்ச்சி அளிக்கும் விதமாக, CBI-யின் சட்ட இலாக்கா அமித் ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இவ்வழக்கில் முகாந்திரம் எதுவும் இல்லை என்று கருத்து தெரிவித்த பிறகும்கூட, CBI-யின் மேற்பார்வை அதிகாரி ஒருவர், அமித் ஷாவைக் கைது செய்வது மாநில போலீஸ் அதிகாரிகள் சிலரை இவ்வழக்கில் சாட்சிகளாக வளைக்க உதவும் என்று "குறிப்பு" எழுதினார். இறுதியில் நரேந்திர மோதியை விசாரணை செய்வதற்கும் அமித் ஷா கைது அவசியம் என்று தன் கருத்தையும் முன்வைத்தார் அவர். அப்போது CBI இயக்குனராக இருந்த அஸ்வினி குமாரும் அந்தக் குறிப்பை அங்கீகரித்து உறுதிப்படுத்தினார்.

வழக்குத் தொடர்வதற்கு ஏதுவான சாட்சியங்கள் இல்லாத நிலையில் கூட அமித் ஷாவை CBI கைது செய்தது. அமித் ஷாவைக் கைது செய்ய வேண்டும் என்பதற்காக, குஜராத்தில் நன்கு அறியப்பட்ட நில ஆக்கிரமிப்பாளர்களான ராமன்பாய் படேல், தஷ்ரத்பாய் படேல் ஆகியோரின் பொய்யான சாட்சியங்களின் மீது CBI நடவடிக்கை எடுத்துள்ளது. குற்றப் பத்திரிகையில் உள்ள CBI-யின் கருத்துப்படி, அமித் ஷா என்கௌண்டர் முடிந்து ஆறு மாதம் கழித்து அந்த இருவரிடமும் ஷொராபுத்தீன் தனக்கென வேறு வழி எதையும் விட்டுவைக்கவில்லை என்று சொன்னதாகக் கூறப்பட்டுள்ளது. இது நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட ஒப்புதல் வாக்குமூலமாகச் சேர்க்கப்பட்டுள்ளது. ராமன்பாய் படேல், தஷ்ரத்பாய் படேல் ஆகிய இருவரும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் என்பதையும், அவர்கள் பேரில் குஜராத்தில் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன என்பதையும், கவனத்தில் கொள்ளவேண்டும். காங்கிரஸ் கட்சியின் அப்போதைய மாநிலத் தலைவரான சங்கர்சிங் வகேலாவின் தலைமையில் நடந்த ஒரு விழாவில், இவ்விருவரும் அமித் ஷாவிற்கு எதிராக பொய் சாட்சியங்கள் அளித்தமைக்காகப் பாராட்டப்பட்டார்கள். அவர்களை சமூக விரோதத் தடுப்புச் சட்டத்தின் கீழான தடுப்புக்காவலில் (PASA detention) இருந்து காப்பாற்றுவதாகக் கூறி, வலிந்து பெறப்பட்டதே அவர்களது சாட்சியங்கள். ஆனால் இவர்கள் இருவரையும் தடுப்புக் காவலில் எடுப்பதான எண்ணத்தை அரசு கொண்டிருக்கவில்லை என்பது குஜராத் அரசு ஆவணங்கள் மூலம் தெரிகின்றது. அவ்விருவரும் அஜய் படேல் என்பவர் மூலமாக அமித் ஷாவுக்கு குறிப்பிட்ட தினங்களில் மூன்று தவணைகளில் ரூ75 லக்ஷம் பணம் கொடுத்ததாகவும் கூறியிருந்தார்கள். மூன்று குறிப்பிட்ட தேதிகளைச் சொல்லி அத்தினங்களில் அஜய் படேலிடம் பணம் கொடுத்ததாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் அஜய் படேலின் கடவுச் சீட்டு (passport) நிறுவியுள்ளபடி, அவர் குறிப்பிட்ட சில தினங்களில் இந்தியாவிலேயே இல்லை என்பதனால், இது பொய்யான சாட்சியம் என்பது தெளிவாகிறது. அமித் ஷாவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட அற்பத்தனமான குற்றப் பத்திரிகையில் இது ஒரு முக்கியமான அம்சமாகும். மற்றவற்றிற்கிடையில் இந்தக் குற்றப்பத்திரிகை மீதுதான் குஜராத் உயர் நீதிமன்றம், முதல் நோக்கில் அமித் ஷாவுக்கு எதிரான வழக்கிற்கு முகாந்திரமே இல்லை என்று கூறி ஒரு விவரமான உத்தரவு மூலம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இருப்பினும் சி.பி.ஐ அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை அணுகவே, உச்ச நீதிமன்றம், அமீத் ஷா குஜராத்திற்கு வெளியே அரசியல் சம்பந்தப்பட்ட எந்தவிதமான நடவடிக்கைகளிலும் கலந்துகொள்ளாமல் இருக்கலாம் என்று உத்தரவிட்டது. அவர் இரண்டு வருடங்கள் குஜராத்துக்கு வெளியே தான் இருந்தார். உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

துளசி பிரஜாபதி என்கௌண்டர்

ஷொராபுத்தீன் வழக்கின் நீட்டிப்பாக CBI-யினால் கட்டப்பட்டதுதான் துளசி பிரஜாபதி வழக்கு. நீதிமன்றத்தில் ஒரு குறிப்பிட்ட வேண்டுதலை வைத்துத்தான் இந்த வழக்கின் விசாரணையை CBI கோரியது. குஜராத் போலீஸால் கைது செய்யப்பட்ட ஷொராபுத்தீன் போலீஸ் காவலில் இருக்கும்போது காணாமல் போனதற்கு சாட்சியமாக இவர் இருந்ததால், அதன் தொடர்பாக இவரும் அகற்றப்பட்டார் என்பதே CBI தொடர்ந்துள்ள இவ்வழக்கின் தோற்றம். இதில் அமித் ஷாவுக்கு எதிராக CBI வசம் இருக்கும் ஒரே சாட்சியம், அவர் இவ்வழக்கில் குற்றம் சட்டப்பட்டுள்ள IPS அதிகாரி R.K.பாண்டியன் என்பவருடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார் என்பதுதான். அரசியல் நிகழ்வுகள், அரசியல் போராட்டங்கள் ஆகியவற்றைக் கண்காணிக்கும் மாநில உளவுத்துறையின் கண்காணிப்பாளர் என்கிற முறையில் IPS அதிகாரியான ஆர்.கே.பாண்டியன் தன்னுடைய அலுவல் நிமித்தமாக குறிப்பிட்ட சம்பவத்தின் முன்பும் பின்னரும் அமித் ஷாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பில் இருந்ததாக சமகாலத்தைய பரந்த ஆவணங்கள் காண்பிக்கின்றன. எந்த ஒரு மாநிலத்திலும், நடக்கும் அரசியல் நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமாதலால், அம்மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தன் உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கவேண்டியதும் அவசியம்தான். எந்தவித சாட்சிக் குறிப்புமின்றி, துளசி பிரஜாபதி வழக்கில் அமித் ஷாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மிக முக்கியமாக, 11.04.2011-லிருந்து 6 மாதத்திற்குள் துளசி பிரஜாபதி வழக்கின் விசாரணைகளை முடிக்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தாலும், அரசியல் சதித்திட்டத்தின் ஒரு பகுதியாக CBI வேண்டுமென்றே அந்த உத்தரவுக்குக் கீழ்படியாமல், டிசம்பர் 2012-ல் நடக்கவிருந்த குஜராத் சட்டமன்றத் தேர்தலுக்குச் சில மாதங்கள் முன்பாக அமித் ஷாவைக் கைது செய்யும் முகாந்திரமாக, 4.09.2012 அன்று ஒரு குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. அமித் ஷாவும் உச்ச நீதிமன்றத்தை அணுக வேண்டியதாயிற்று. CBI தானாகவே இரண்டு வழக்குகளும் ஒரே மாதிரியானவை என்று கூறி ஷொராபுத்தீன் வழக்கின் குற்றப்பத்திரிகையுடன் இந்தக் குற்றப்பத்திரிகையையும் இணைத்துள்ளதால், தனியாக மற்றொரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று 08.04.2013 அன்று உத்தரவிட்டு மீண்டும் அமித் ஷா கைது செய்யப்படுவதைத் தடுத்தது உச்ச நீதிமன்றம்.

துளசி பிராஜபதியும் முன்னாள் ராஜஸ்தான் உள்துறை மந்திரி குலப் சந்த் கதாரியாவின் கைதும்

ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் உள்துறை அமைச்சரும் ராஜஸ்தான் சட்டமன்றத்தின் இன்றைய எதிர்கட்சித் தலைவருமான குலப் சந்த் கதாரியா அவர்கள் அம்மாநில பாஜக தலைவர்களுள் முக்கியமானவர். ஷொராபுத்தீன், துளசி பிரஜாபதி ஆகிய இரு நபர்கள் இருக்கிறார்கள் என்பதைக்கூட அறியாதவர் அவர். ஆர்.கே.மார்பிள்ஸ் என்கிற பளிங்குக் கற்கள் வியாபார நிறுவனத்தினரிடமிருந்து துளசி பிரஜாபதி மிரட்டல் வசூல் செய்து வந்ததற்காக அவனை அகற்ற முடிவு செய்தார் குலப் சந்த் என்று அவருக்கு எதிராக இவ்வழக்கில் ஒரு துணைக் குற்றப்பத்திரிகையை CBI தாக்கல் செய்தது. CBI-யின் கருத்துப்படி இரண்டு நோக்கங்கள் இருந்தன; ஒன்று ஷொராபுத்தீன் வழக்கின் நேரடியான சாட்சி என்பதால் அவனை அகற்றுவது குஜராத் போலீஸின் நோக்கம்; இரண்டாவது, R.K.மார்பிள்ஸ் நிறுவனத்தாரிடமிருந்து மிரட்டல் வசூல் செய்தான் என்பதர்காக அவனை அகற்ற வேண்டும் என்பது அமைச்சர் குலப் சந்த் கதாரியாவின் நோக்கம். என்ன ஒரு நிகழ்வுப் பொருத்தம்! 26.12.2005க்கும் 28.12.2005க்கும் இடையில் குஜராத் காவல்துறை அதிகாரி D.G..வஞ்ஜாரா IPS அவர்களை குலப் சந்த் கதாரியா அவர்கள் உதய்பூர் அரசு மாளிகையில் சந்தித்ததாக CBI கூறுகிறது. இதற்கு CBI தரும் சாட்சியம் என்னவென்றால், D.G.வஞ்ஜாரா தங்கியிருந்த அதே காலக்கட்டத்தில் குலப் சந்த் கதாரியாவின் நேர்முக உதவியாளரும் அங்கே தங்கியிருந்தார் என்பதுதான். இருப்பினும், குலப் சந்த் கதாரியா தன் மனைவியுடன் 25.12.2005 அன்று மும்பை சென்று 02.01.2006 வரை தங்கியிருந்து பாஜக தேசிய செயற்குழு கூட்டத்திலும், பாஜக தேசிய கவுன்ஸில் கூட்டத்திலும் பங்கேற்று, பின்னர் மும்பையிலேயே புத்தாண்டு விழாவையும் கொண்டாடிவிட்டுத் தன் மனைவியுடன் 02.01.2006 அன்று ஜெய்பூர் திரும்பியதாக ராஜஸ்தான் அரசு ஆவணங்கள் அறுதிச்சான்றுடன் நிறுவுகின்றன. அந்தக் குறிப்பிட்ட மூன்று தினங்களும் குலப் சந்த் கதாரியா ராஜஸ்தானில் இல்லவே இல்லை; மும்பையில்தான் இருந்துள்ளார். அவர் D.G.வஞ்ஜாராவை சந்திக்கவேயில்லை. தேசிய செயற்குழு கூட்டத்திலும், தேசிய கவுன்ஸில் கூட்டத்திலும் அவர் பங்கேற்றதை பாஜக பதிவு செய்துள்ளது. அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிஷன் அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் கையொப்பமிட்ட அதே வருகைப் பதிவேட்டில் இவரும் கையொப்பமிட்டுள்ளார். அவர் ஜெய்பூரிலிருந்து மும்பை சென்று திரும்பியதற்கான விமானப் பயணச் சீட்டுகளும், அந்தப் பயணத்திற்காக அவர் பெற்ற பயணப்படிக்கான சான்றுகளும் சமகால சான்றுகளாக ராஜஸ்தான் அரசு ஆவணங்களில் இருக்கின்றன. 26 நவம்பர் 2005-லேயே ஷொராபுத்தீன் இறந்துவிட்டதால், அவனைக் கொல்லச் சதி செய்யும்பொருட்டு குலப் சந்த் கதாரியா D.G.வஞ்சாராவை டிசம்பர் 2005-ல் சந்திப்பதற்கான தருவாய் இல்லை. காங்கிரஸ் கட்சி கொடுத்த அழுத்தத்தின் காரணமாக, மூத்த அரசியல் தலைவர்களை வழக்குகளில் சிக்க வைக்கவேண்டும் என்பதற்காக இம்மாதிரியான நேர்மையற்ற ஒரு குற்றப்பத்திரிகையை அவர்களுக்கு எதிராகத் தயாரித்துத் தாக்கல் செய்துள்ள அதிகாரிகள், வழக்குத் தொடரத் தகுந்தவர்கள் ஆவார்கள்.

இஷ்ரத் ஜஹான் என்கௌண்டர்

ஷொராபுத்தீன், துளசி பிரஜாபதி வழக்குகள் போலவே இஷ்ரத் ஜஹான் வழக்கும் முழுவதுமாக மத்திய அரசின் உளவுத்துறையினால் கையாளப்பட்டதுதான். இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ள இரண்டு பாகிஸ்தானியர்கள் உட்பட சில நபர்கள், நரேந்திர மோதி, எல்.கே.அத்வானி போன்ற தலைவர்களைக் கொலை செய்யும் நோக்கத்துடன் திட்டமிட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை தகவல் பெற்றது. மத்திய அரசு தன்னுடைய உளவுத்துறையின் மூலமாக அந்நபர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்து வந்தது. இது தேசியப்பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒரு அம்சமாகும். அந்த இரண்டு பாகிஸ்தானியர்களையும் அவர்களுடன் இருந்த இஷ்ரத் ஜஹான் மற்றும் ஜாவீத் ஷேக் என்கிற பிரானேஷ் பிள்ளையையும் கைது செய்யுமாறு குஜராத் போலீஸை உஷார்படுத்தியது மத்திய அரசுதான். அந்த நால்வரையும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணையும் செய்தார்கள். அதனைத் தொடர்ந்து அவர்கள் என்கௌண்டரில் கொல்லப்பட்டார்கள். இந்தக் காரியத்தில் குஜராத் மாநிலத்தின் அரசியல் ஸ்தாபனம் சம்பந்தப்படவேயில்லை. என்கௌண்டர் உண்மையானதா போலியானதா என்பது மத்திய உளவுத்துறையின் அறிவுக்குட்பட்ட செய்திப்பொருளாகும்.

உண்மை மறுப்பில் இருந்துகொண்டிருந்த புது தில்லி அரசியல் ஸ்தாபனம்தான் இஷ்ரத் ஜஹானின் உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல் செய்தது. லஷ்கர்-இ-தொய்பா என்னும் பயங்கரவாத இயக்கத்தின் துணை அமைப்பான ஜமாத்-உத்-தவா தன்னுடைய அதிகாரப் பூர்வ இணையதளத்தில், இஷ்ரத் ஜஹான் லஷ்கர் பயங்கரவாதி என்றும், அவளுடைய இறப்பு ஒரு "உயிர்த்தியாகம்" என்றும் வெளியிட்டதன் மூலம், இஷ்ரத் ஜஹான் ஒரு பயங்கரவாதி என்பது உறுதியாகிறது. லஷ்கர் பயங்கரவாதிகளுக்கும், அவர்களுடைய நடவடிக்கைகளை பாகிஸ்தானிலிருந்து மேற்பார்வை செய்துகொண்டிருக்கும் அவர்கள் தலைவனுக்கும் இடையே நடந்த பரிவர்த்தனைகள், தொடர்புகள் பற்றிய தகவல்கள் மத்திய உளவுத்துறையிடம் உள்ளன. குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், மத்திய உள்துறை அமைச்சகமும், இஷ்ரத் ஜஹான் தற்கொலைப் படையாக நடக்க முடிவு செய்திருந்த லஷ்கர் பயங்கரவாதி என்று தெரிவித்துள்ளது. டேவிட் ஹெட்லீ என்கிற லஷ்கர் பயங்கரவாதி ஒருவனும் அமெரிக்க உளவுத்துறை அமைப்பான FBI-யினால் கைது செய்து விசாரிக்கப்பட்டவன் என்பதும் இங்கே தொடர்புபடுத்தத் தகுந்தது. அவன், FBI நடத்திய விசாரணையில் இஷ்ரத் ஜஹான் லஷ்கரின் தற்கொலைப் படை என்று உறுதி படுத்தியிருந்தான். இந்த உண்மையும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உறுதிமொழிப் பத்திரத்தில் சொல்லப்பட்டிருந்தது. மேலும், குஜராத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தில், நடந்த என்கௌண்டர் போலியானதல்ல உண்மையானது என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. ஆயினும் ஷிவ்ராஜ் பாடீல் இடத்தில் ப.சிதம்பரம் உள்துறை மந்திரியாகப் பொறுப்பேற்றதும், மாறுபட்ட அரசியல் ஈடுபாடு உருவானது. ஏற்கனவே தாக்கல் செய்த உறுதிமொழிப் பத்திரத்தை நீர்த்துப்போகச் செய்யுமாறு, புதிய உறுதிமொழிப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய உள்துறை அமைச்சகம் வற்புறுத்தப்பட்டது. புதிய உறுதிமொழிப் பத்திரத்தில், நடந்த என்கௌண்டர் மற்றும் மத்திய உளவுத்துறை ஆகியவற்றிற்கும் தனக்கும் சம்பந்தமில்லாதவாறு காட்டிக்கொண்டது உள்துறை அமைச்சகம். ஆச்சரியம் அளிக்கும் விதத்தில், குஜராத் உயர் நீதிமன்றம், மத்திய அரசு, மாநில அரசு, மனுதாரர் ஆகிய தரப்பினரால் பரிந்துரை செய்யப்பட்ட தலா ஒரு நபர் கொண்ட 3-நபர் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்தது. சதிஷ் வர்மா என்கிற IPS அதிகாரி மனுதாரர் சார்பில் நியமிக்கப்பட்டவர். மத்திய அரசு தன்னுடைய நியமன அதிகாரியாக கர்னாயில் சிங், சத்யபால் சிங், ஆர்.கே.வர்மா என்று ஒவ்வொருவராக மாற்றிக்கொண்டே இருந்தது. இந்த விசாரணையானது அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்ததால் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இவ்விசாரணையில் விருப்பமின்றி பங்கேற்றனர்.

ஆகையினால், வழக்கு CBI-யிடம் ஒப்படைக்கப்பட்டது. மனுதாரரால் நியமிக்கப்பட்ட அதிகாரி தானாகவே விருப்பம் தெரிவித்ததால் அவரும் CBI-க்கு உதவி செய்யலாம் என்கிற நோக்கத்தில் விசாரணைக்குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டார். அதற்குப் பிறகு நடந்தது சமீபத்திய விசாரணை வரலாற்றில் மிகவும் இழிவுக்குரிய ஊழல்களில் ஒன்றாகும். CBI அதிகாரிகள் அடிக்கடி சிறைச்சாலைக்கு வருகை புரிந்து, குற்றம் சாட்டப்பட்டுள்ள பல தரப்பட்ட காவல்துறை அலுவலர்களிடம் பேரம் பேசினர். மூத்த காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராகவோ, மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராகவோ, குஜராத் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவோ சாட்சியம் கூறும் பக்ஷத்தில், குறிப்பிட்டுள்ள 90 நாட்களுக்குள் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல் ஜாமீன் கிடைக்க வழி செய்வதாக அவர்களிடம் பேரம் பேசப்பட்டது. கைது செய்யப்படாத அலுவலர்களிடம், மத்திய உளவுத்துறை அதிகாரிகளுக்கு எதிராகவோ, குஜராத் அரசியல் தலைவர்களுக்கு எதிராகவோ சாட்சியம் கூறும் பக்ஷத்தில், அவர்கள் குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்களாக அல்லாமல் வெறும் சாட்சிகளாக மட்டுமே குறிப்பிடப்படுவார்கள் என்று பேரம் பேசப்பட்டது. மத்திய உளவுத்துறை அதிகாரிகளையும், குஜராத் அரசியல் தலைவர்களையும் வழக்கில் சிக்கவைக்க வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும் இது.

இந்த இஷ்ரத் ஜஹான் வழக்கில், விசாரணைகள் செய்யப்பட்ட பின்னர் 14 நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் காவல்துறை அலுவலர்கள். அவர்களில் முதலாவதாக 6 பேர்கள் CBI-யின் அரசியல் சதித்திட்டத்தின் படி கைது செய்யப்பட்டார்கள். மீதமிருந்த 8 பேரும் பேரம் பேசுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டார்கள். பேரம் என்னவென்றால், கைது செய்யப்பட்டவர்கள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் ஜாமீன் பெறுவார்கள் என்பதும், கைது செய்யப்படாதவர்கள் வழக்கில் சிக்கவைக்கப்படமாட்டார்கள் என்பதும்தான். அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், CBI குறிப்பிடுபவர்கள் மீது குற்ற நடைமுறை சட்டத்தின் 161-வது பிரிவின் கீழ் குற்றம் சாட்டி சிக்க வைத்து, பின்னர் கைது செய்யப்பட்ட அலுவலர்கள் ஜாமீனில் வெளிவந்தவுடன், தங்களின் வாக்குமூலங்களை குற்றப்பிரிவு சட்டத்தின் 164-வது பிரிவின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என்பதுதான். ஷொராபுதீன் மற்றும் துளசி பிரஜாபதி வழக்குகளில் கடந்த 6 வருடங்களுக்கும் மேலாக சிறையில் துன்புறும் தங்கள் சக அலுவலர்களின் நிலைமையைப் பார்த்த, இஷ்ரத் ஜஹான் வழக்கில் குற்றம் சட்டப்பட்ட அலுவலர்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக CBI-யின் பேரத்திற்கு இசைந்தார்கள். தான் சற்றும் நேர்மையின்றி பேசிய பேரத்தின் படி, CBI முதல் காரியமாக, கைது செய்யப்பட்ட 6 பேரின் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமல், அவர்களின் ஜாமீன் மனுவையும் எதிர்க்காமல் அவர்கள் வெளிவரும்படி பார்த்துக்கொண்டது. அவர்கள் 25/26/27–05-2013 ஆகிய தின்ங்களில் ஜாமீனில் வெளி வந்ததைத் தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்படாமலிருந்து மற்ற அலுவலர்களின் பெயர்களை, அவர்கள் CBI சொல்லியபடி மத்திய உளவுத்துறை அதிகாரிகள் மற்றும் குஜராத் அரசியல் தலைவர்கள் ஆகியோரை வழக்கில் சிக்கவைத்த காரணத்தால், CBI 3 ஜூன் 2013 அன்று தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் சேர்க்காமல் விட்டது. CBI குறப்பத்திரிகையைத் தாக்கல் செய்த உடனேயே, குற்றம் சட்டப்பட்டிருந்த அலுவலர்கள் பேசிய பேரத்தின்படி "சாட்சிகளாக" மாற்றப்பட்டு தங்களுடைய வாக்குமூலங்களை 04.06.2013 முதல் 07.06.2013 வரையிலான நாட்களில் குற்ற நடைமுறை சட்டத்தின் 164-வது பிரிவின்படி பதிவு செய்தார்கள்.

இம்மாதிரியான பேரம் பேசுதல் ஐ.மு.கூ. அரசின் செயல்வகை.

அஜ்மீர் ஷெரிஃப் தர்கா குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பவ்னேஷ் படேல் என்பவர், நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அம்மனுவில், சில காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் மத்திய அமைச்சர்களும், தேசிய புலனாய்வு நிறுவனத்தின் அதிகாரிகளும், வழக்கில் மூத்த R.S.S அதிகாரிகளை சிக்கவைக்குமாறு தனக்கு மிகவும் அழுத்தம் கொடுப்பதாக்க் குறிப்பிட்டுள்ளார். அவர்கள் தன்னைப் பலமுறை சந்தித்ததாகவும், R.S.S தலைவர்களை வழக்கில் சிக்கவைக்கும் பக்ஷத்தில், தன்னிடமிருந்து குற்ற நடைமுறைச் சட்டம் 164-வது பிரிவின் கீழ் தன் வாக்குமூலத்தைப் பதிவு செய்துகொண்டு தன்னை விடுதலை செய்துவிடுவதாகவும் அரசியல் பேரம் பேசினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். குற்ற நடைமுறை சட்டம் 164-வது பிரிவின் கீழ் வாக்குமூலம் பதிவு செய்த சில நிமிடங்களிலேயே விசாரணை நீதிமன்றத்தில் தன் வாக்குமூலத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். இவரைப்போலவே, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஹர்ஷத், முகேஷ் எனும் மேலும் இருவரும் அதே போல புகார் செய்துள்ளனர்.

R.S.S, பாஜக தலைவர்களுக்கு எதிராக, ஐ.மு.கூ அரசும் அதன் விசாரணை அமைப்புகளும் பின்பற்றும் கோட்பாடு இதுதான் என்று தோன்றுகிறது.

இந்தப் போக்கை காங்கிரஸ் கட்சி கூடுதலாகக் கைக்கொண்டுள்ளாதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சர்களும் மூத்த காங்கிரஸ் தலைவர்களும் கொண்ட ஒரு அரசியல் குழு இயங்கி வருகின்றது. குஜராத் மாநில காவல்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற IPS அதிகாரி ஒருவர் உள்துறை அமைச்சரின் ஆலோசகராக எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறார். அவருக்கு, குஜராத் அரசியல் தலைவர்களை வழக்குகளில் சிக்கவைப்பதில் ஒருங்கிணைப்பு வேலைகள் செய்வதைத்தவிர வேறு எந்த உருப்படியான வேலைகளும் அமைச்சகத்தில் இல்லை. அவர், சிறைவைக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் குடும்பத்தினரை சந்தித்து, பொய் சாட்சியங்கள் அளிக்கும் பக்ஷத்தில் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று பேரம் பேசுகிறார். விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் சிறைச்சாலைகளுக்குச் சென்று சிறைவைக்கப்பட்டுள்ள அலுவலர்களைச் சந்தித்துப் பேரம் பேசுகின்றனர். ஐ.மு.கூ அரசின் கீழ் விசாரணை அமைப்புகள் ஈடுபடும் சட்டவிரோத நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று.

விசாரணை அமைப்புகளில் பணிபுரியும் மூத்த அதிகாரிகளுக்கு அவர்கள் ஓய்வு பெற்றபின் வேறு சில அரசு பெரும் வருமானம் கொண்ட பணி நியமன்ங்கள் தரப்படும் என்று வாக்குறுதியும் அளிக்கப்படுகிறது. முன்னாள் CBI இயக்குனர்கள் இருவருக்கு, ஊதியம் அதிகமுள்ள பதவிகள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) இயக்குனராக இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர், அவருடைய சேவைகளின் பயனாக துணை வேந்தராக நியமிக்கப்படவிருக்கிறார்.

உளவுத்துறையின் ரகசிய செயற்பாடுகளை முழுமையாக வெளிக்கொணரும் செயல் முறையாக, CBI இந்த செயற்பாடுகளை புலனாய்வு செய்யும். தேசியப்பாதுகாப்பு சமரசத்திற்குள்ளாகும். உளவுத்துறையின் அதிகாரிகள், அவர்களுக்குத் தகவல் தருபவர்கள் ஆகியோர் கேள்விக்கு உள்ளாக்கப் படுவதோடு அல்லாமல் , அவர்கள் தரும் தகவல்களின் நம்பகத்தன்மையும் சோதிக்கப்படுகின்றது.

இஷ்ரத் ஜஹான் ஒரு லஷ்கர் பயங்கரவாதி என்பதை அறுதி செய்யும் சான்று இருந்தும்கூட, அப்படி ஒரு உண்மை இருப்பதை மறுக்கும் விதமாக நடந்துகொள்ளச் சொல்லி CBI வற்புறுத்தப்படுகின்றது. தேசிய புலனாய்வு அமைப்பின் (NIA) குழு கூட இஷ்ரத் ஜஹான் தற்கொலை படைக்கான பயிற்சி அடைந்த லஷ்கர் பயங்கரவாதி என்று கூறிவருகின்றது. இது சம்பந்தமாக டேவிட் ஹெட்லி அளித்து FBI மற்றும் NIA ஆகிய அமைப்புகள் மீட்டெடுத்த சான்றுப்பத்திரத்தில் 168-வது பக்கத்தை நீக்குவதற்கான முயற்சியும் நடக்கின்றது. இஷ்ரத் ஜஹானுக்கு நற்சான்றிதழ் வழங்க முடியாது. இஷ்ரத் ஜஹான் பற்றிய உள்துறை அமைச்சகத்தின் மாற்று அபிப்பிராயமும், ஜமாத்-உத்-தவா இஷ்ரத் ஜஹான் இறப்பை உயிர்தியாகமாகக் கொண்டாடியதற்கு வருத்தம் தெரிவித்து அவர் எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதும், ஒத்துப்போவது கவனிக்கப்பட வேண்டியது அவசியம்.

ராஜஸ்தான் மாநில முன்னாள் பொதுப்பணித்துறை/சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் ரஜீந்தர் ராத்தோர் வழக்கு

ரஜீந்தர் ராத்தோர் மூத்த பாஜக தலைவர். 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் அவர் சம்பந்தப்பட்ட ஒரு பொது நல வழக்கு CBI விசாரணை கேட்டு தொடரப்பட்டது. CBI-யும் ஆஜராகி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகக் கூறியது. பிரபலமான மாஃபியாவான தாரா சிங் என்பவன் கொல்லப்பட்ட என்கௌண்டர் வழக்கில் ரஜீந்தர் ராத்தோரை சிக்கவைப்பதே CBI-யின் நோக்கம். தாரா சிங் ஜாட் சமூகத்தைச் சேர்ந்தவன்; ரஜீந்தர் ராத்தோர் ராஜபுத்திர வகுப்பைச் சேர்ந்தவர். அவருக்கு எதிராக எந்தவிதமான சான்றுகளும் இல்லை. ஆகவே CBI இரண்டு சாட்சியங்களைச் சார்ந்திருந்தது. முதலாவதாக, தாராசிங் மீது ரஜீந்தர் ராத்தோர் உட்பகைக் கொண்டிருந்த்தாக ஒரு சாட்சியம் கூறியது; இது வெறும் கேள்விப்பட்டச் செய்திதான். இரண்டாவதாக, வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த கூடுதல் DGP ஜெயின் அவர்களுடன் ரஜீந்தர் ராத்தோர் ஓரிரு முறைகள் பேசியிருந்தார் என்பது. ஒரு சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர், சட்டமன்றம் இயங்கிக்கொண்டிருக்கும்போதும் சட்ட ஒழுங்கு பற்றிய பல விஷயங்கள் விவாதிக்கப்படும்போதும், சட்ட ஒழுங்கை கண்காணிக்கும் அதிகாரிகளுடன் பேசுவது என்பது சாதாரணமான விஷயம். ஒரு குறிப்பிட்ட தினத்தில், அமைச்சரும் கூடுதல் டிஜிபியும் ஒரே அலைபேசி கோபுரத்தின் எல்லைக்குள் இருந்துள்ளனர். இருவரும் ஒரு சர்வதேச கிரிக்கெட் டெஸ்ட் போட்டியைக் காண எஸ்.எம்.எஸ் விளையாட்டு அரங்கத்தில் வேறு வேறு இட்த்தில் அமர்ந்திருந்திருக்கின்றனர். இந்த அற்பத்தனமான சாட்சியங்களைக்கொண்டு ரஜீந்தர் ராத்தோர் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். முன்னதாக, CBI இயக்குனர் A.P.சிங் அவர்களும், தலைமை வழக்கறிஞர் G.E.வஹன்வதி அவர்களும் வழக்கு தொடரக்கூடிய அளவுக்கு ரஜிந்தர் ராத்தோருக்கு எதிராக சாட்சியங்கள் இல்லை என்று எழுத்து மூலம் தங்கள் கருத்தைத் தெரிவித்திருந்தனர். பிறகு, கூடுதல் சட்ட ஆலோசகரான ஹரேன் ராவல் அவர்களின் அச்சுறுத்தல் மிகுந்த கடிதத்தின் பேரில் CBI தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டது. விசாரணை நீதிமன்றத்தில், அவருக்கு எதிராக வழக்கு தொடர முகாந்திரம் இல்லை என்று கூறி ரஜீந்தர் ராத்தோர் விடுவிக்கப்பட்டார். ஆயினும் விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து CBI தொடர்ந்த சீராய்வு மனுவை உயர்நீதிமன்றம் அனுமதித்தது. தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ரஜீந்தர் ராத்தோர் தடை பெற்றுவிட, வழக்கு அங்கே நிலுவையில் இருக்கின்றது.

D.G.வஞ்ஜாரா IPS அவர்களின் வழக்கு

மேலே குறிப்பிடப்பட்ட சில வழக்குகள் சம்பந்தமாக D.G.வஞ்ஜாரா IPS அவர்கள் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கின்றார். அவர் மேல் தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப்பத்திரிகையைப் பார்க்கும்போது, மத்திய உளவுத்துறையின் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தன்னுடைய முழு ஈடுபாட்டையும் ஒத்துழைப்பையும் நல்கியுள்ளார் என்று தோன்றுகிறது. அனைத்து வழக்குகளிலும் அவரைச் சிக்க வைத்து பின்னர் அவருக்கு அழுத்தம் கொடுத்து அவரிடமிருந்து பொய்யான வாக்குமூலம் பெறவேண்டும் என்பதே காங்கிரஸ் கட்சியின் உபாயம். இதற்காகவே, குஜராத் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற IPS அதிகாரி ஒருவர், அவர் ஓய்வு பெற்றவுடனேயே மத்திய உள்துறை அமைச்சருக்கு ஆலோசகராக மத்திய அரசுப் பணியில் நியமனம் செய்யப்பட்டார். மத்தியப் புலனாய்வு அமைப்புகளை பயன்படுத்தி, பாஜக தலைவர்களுக்கு எதிராக பொய்வழக்குகள் தொடுப்பது எப்படி என்றும், முக்கியமான பாஜக தலைவர்களை பொய்யான வழக்குகளில் சிக்கவைப்பது எப்படி என்றும், திட்டம் போடுவது மட்டுமே இவரின் பணி. D.G.வஞ்ஜாராவுடன் பேரம் பேசி, அவருக்கு உதவுவதாக வாக்களித்து அவர் மூலம் பாஜக தலைவர்களை வழக்குகளில் சிக்க வைக்கும் பணியும் இவரிடமே கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை வெற்றி பெறவில்லையென்றாலும், இவ்விஷயத்தில் இவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

இந்தப்போக்கையே காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. மத்திய அமைச்சர்களும் சில காங்கிரஸ் கட்சி அதிகாரிகளும் கொண்ட ஒரு அரசியல் குழு, நரேந்திர மோதி, அமித் ஷா மற்றும் சில முக்கிய பாஜக தலைவர்களை குற்ற வழக்குகளில் சிக்கவைக்கவேண்டும் என்கிற நோக்கத்துடன், அரசியல் சதித்திட்டம் தீட்டி வருகின்றது. இந்த நடவடிக்கைகளை, உள்துறை அமைச்சரின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற IPS அதிகாரி ஒருங்கிணைப்பு செய்து வருகிறார். அவர், சிறையில் உள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு விடுதலை வாங்கித்தருவதாக வாக்களித்து, முக்கியமான பாஜக தலைவர்களை வழக்குகளில் சிக்கவைக்குமாறு தூண்டிவிட்டு, அவ்வதிகாரிகளின் குடும்பத்தினரை நேரடியாக சந்தித்துப் பேரம் பேசி வருகிறார். மத்திய புலனாய்வுத்துறை அதிகாரிகள், சிறைச்சாலைகளுக்குச் சென்று அங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் நேர்மையற்ற காரியங்கள் செய்ய பேரம் நடத்துகிறார்கள்.

காங்கிரச் கட்சியின் அரசியல் தகுதிகளுக்கு ஒத்துப் போகின்ற விதத்தில், இம்மாதிரியான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக, புலனாய்வு அமைப்புகளின் மூத்த அதிகாரிகளுக்கு அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு, பெரும் வருமானம் உள்ள பணி நியமனங்கள் கொடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்படுகின்றன. CBI-யின் முன்னாள் இயக்குனர்கள் இருவருக்கும், சமீபத்தில் ஓய்வு பெற்ற NIA இயக்குனர் ஒருவருக்கும் பெரும் வருமானம் கொண்ட பணி நியமனங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

ஹரின் பாண்டியா வழக்கு

ஹரின் பாண்டியா அவர்கள் கொல்லப்பட்ட பின்னர் அவ்வழக்கை CBI வசம் ஒப்படைத்தது குஜராத் அரசுதான். அவருடைய கொலையில் குஜராத் போலீஸோ குஜராத்தைச் சேர்ந்த எந்த ஒரு நபரோ ஈடுபடவில்லை என்று தீவிர புலனாய்வு மேற்கொண்ட CBI தெரிவித்திருந்தது. திறமை மிகுந்த விசாரணை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, குற்றவாளிகளுக்குத் தண்டனையும் வழங்கப்பட்டது. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டவுடன், குஜராத் அரசும் CBI-யும் தொடர்ந்த மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. தற்போது அங்கே வழக்கு நிலுவையில் உள்ளது. இருப்பினும், மிகவும் காலதாமதமான நிலையிலும் கூட, இவ்வழக்குக்கு அரசியல் சாயம் பூசி பாஜக தலைவர்களை சிக்கவைப்பதற்கான முயற்சிகள் செய்யப்பட வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சக்தி மிகுந்த அரசு வட்டாரங்களில் ஆலோசனைகள் வழங்கி வருகிறார்கள்.

வழக்கின் முதற்படியிலேயே அதை CBI வசம் ஒப்படைத்தது குஜராத் அரசுதான். புலனாய்வு நடத்தியதும் வழக்கு தொடர்ந்ததும் CBI தான். இன்று தன்னுடைய விசாரணையே தவறு என்று கூறும்படியாக CBI-க்கு அழுத்தமும் நிர்பந்தமும் கொடுக்கப்படுகிறது.

குஜராத் அரசின் தலைமை வழக்கறிஞர், சில அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு எதிரான விசாரணைகள்

குஜராத் அரசின் தலைமை வழக்கறிஞர், சில அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக CBI விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. தலைமை வழக்கறிஞர் உயர் நீதிமன்றத்தில் ஆஜராகும் ஒரு வழக்கில் தயார் செய்துகொள்ளும் விதமாக அவரும், அமைச்சர்கள் சிலரும், அதிகாரிகள் சிலரும் சந்தித்து பேசியவற்றை அதே சந்திப்பில் கல்ந்துகொண்ட ஒரு போலீஸ் அதிகாரியின் உதவியுடன் ஒலிநாடாவில் பதிவு செய்து, வழக்கில் குறுக்கீடு செய்வதாக குற்றம் சாட்டப்படுகின்றது. இது உண்மையில், தலைமை வழக்கறிஞரும் அவருடைய கட்சிக்காரரான குஜராத் அரசும் (அரசு சார்பாக அரசு அதிகாரிகள்) விவாதித்து ஒரு சட்டப்படியான உபாயத்தை தயார் செய்கிறார்கள் என்பதுதான். ஒரு சட்ட உபாயத்தைத் தயாரிப்பது என்பது எவ்வாறு வழக்கில் குறுக்கீடு செய்வதாகும்? முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுவதற்கு முன்னர் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை என்பதால், சாட்சியங்கள் கலைக்கப்பட்டதாகக் கூறமுடியாது. ஒரு வக்கீலுக்கும் அவருடைய கட்சிக்காரருக்கும் இடையேயான விவாதம் சிறப்புரிமை கொண்டது. எனவே, தலைமை வழக்கறிஞரையும், சில அமைச்சர்கள் அதிகாரிகளையும் துன்புறுத்துவதற்கென்றே இந்த விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது. CBI விசாரிக்கலாம் என்று ஒரு பேச்சுக்காக ஒத்துக்கொண்டாலும், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கிலும் இம்மாதிரி விசாரித்திருக்க வேண்டுமே! அப்போதைய சட்ட அமைச்சர், தலைமை வழக்கறிஞர், கூடுதல் சட்ட ஆலோசகர், நிலக்கரி அமைச்சக அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள், CBI அதிகாரிகள் ஆகியோர் அனைவரும் கலந்து ஆலோசித்து விவாதித்ததையும் விசாரணை செய்திருக்க வேண்டும். மறுப்புக்கிடமின்றி, இந்தக் கூட்டத்தில்தான், உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய நிலை அறிக்கை திரித்து மாற்றியமைக்கப்பட்டது. குஜராத் அரசு பணியாளர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளலாம் என்றால், அதே மாதிரியான சூழ்நிலையில் உள்ள விவகாரத்தில், அதுவும் CBI-யின் அதிகாரிகளே கலந்துகொண்ட விவகாரத்தில், ஏன் மத்திய அரசு பணியாளர்களுக்கு எதிராக விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை?

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு பயன்படுத்திய சஞ்ஜீவ் பட் IPS

குஜராத் முதல்வருக்கும் பாஜக தலைவர்களுக்கும் எதிராக யுத்தம் மேற்கொள்ளும் விதத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட போலீஸ் அதிகாரிகளைப் பயன்படுத்துகிறது என்பதற்கான ஒளிரும் உதாரணமாகத் திகழ்வது, மேலே குறிப்பிடப்பட்ட சஞ்ஜீவ் பட் என்னும் போலீஸ் அதிகாரியின் வழக்குதான்.

2002 கலவரங்களுக்குப் பிறகு 8 ஆண்டுகள் கழித்து, தன்னை திடீரென்று கலவரம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் சாட்சியமாக 2010-11-ல் காட்டிக்கொண்டார் சஞ்ஜீவ் பட். இது சமகால ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சஞ்ஜீவ் பட் முக்கியமான காங்கிரஸ் தலைவர்களுடன் குஜராத் முதல்வருக்கு எதிரான சதித்திட்டங்களில் ஈடுபட்டார் என்பதும், அப்போதைய குஜராத் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் சக்தி சிங் கோஹில் (இவர் 2012 தேர்தலில் தோல்வி அடைந்தவர்) என்னும் காங்கிரச் தலைவரிடமிருந்து சஞ்ஜீவ் பட் பல " "அன்பளிப்புகள்" "பரிசுகள்" பெற்றார் என்பதும் சமகால நிகழ்வுகளாக ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சியின் அரசியல் சதித்திட்டங்களில் சஞ்ஜீவ் பட்டும் ஈடுபட்டிருந்தார் என்பதற்கு அவருடைய மின் அஞ்சல்கள் சான்றாக உள்ளன. அவர் காங்கிரஸ் கட்சியுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதற்கு, அவர் முதல்வர் நரேந்திர மோதிக்கு மிகவும் கீழ்த்தரமான மொழியில் எழுதிய இரண்டு கடிதங்களே சான்று. ஒரு கட்டுக்கோப்பான காவல் துறையைச் சேர்ந்த அதிகாரியின் நடத்தைக்கு மாறாக கீழ்தரமான மொழியில் எழுதப்பட்ட அவ்விரண்டு கடிதங்களையும் அவை முதல்வர் நரேந்திர மோதியைச் சேருவதற்கு முன்பே ஊடகங்களில் வெளியிடவும் செய்தார் சஞ்ஜீவ் பட்.

காங்கிரஸ் கட்சியின் அங்கமான சஞ்ஜீவ் பட், சில NGO-க்களுடன் சேர்ந்து, இணை மனுதாரராக, நரேந்திர மோதிக்கு எதிராக பல மனுக்களைத் தாக்கல் செய்துள்ளார். சஞ்ஜீவ் பட் மூலமாக நரேந்திர மோதிக்கு எதிராக காங்கிரஸ் எடுத்த அத்தனை முயற்சிகளும், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் உட்பட, திறமை மிகுந்த நீதிமன்றங்களில் தோற்றுப்போயின.

பணி இடைநீக்கத்தில் இருக்கும் போலீஸ் அதிகாரியான சஞ்ஜீவ் பட், தன் மனைவிக்கு காங்கிரஸ் சார்பாக டிசம்பர் 2012 சட்டமன்றத் தேர்தலில் நரேந்திர மோதியை எதிர்த்து போட்டியிட டிக்கட் வாங்கும் அளவிற்கு, கங்கிரஸ் கட்சிக்குத் தவிர்க்க முடியாதவராக ஆகிவிட்டார்.

மேலே கொடுகப்பட்டுள்ள உண்மைகள் ஐ.மு.கூ அரசு புலனாய்வு அமைப்புகளை எவ்வாறு துஷ்பிரயோகம் செய்கின்றது என்பதற்கான சில விளக்கங்களாகும். இந்த உண்மைகளைக் கவனத்தில் கொண்டு ஆய்வு செய்து, புலனாய்வு அமைப்புகளின் சுதந்திரத்தையும் செயல்பாட்டுத் திறனையும் மீட்டு நிலைநிறுத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு உண்டு என்று நம்புகிறேன். இந்த நடைமுறை வழக்கம் நிறுத்தப்படவில்லையென்றால் இந்திய ஜனநாயகம் பாதிக்கப்படக்கூடிய முன்னுதாரணமாகிவிடும்.

மேலே கூறப்பட்டுள்ள அனைத்து வழக்கு விசாரணைகளிலும் CBI, NIA ஆகிய இரண்டு அமைப்புகளும் காங்கிரஸ் கட்சி அரசியலுக்கு உடந்தையாக இருந்துள்ளன. அரசியல் நோக்கம் மற்றும் உள்நோக்கம் கொண்ட விசாரணைகள் அனைத்தும், தற்போது பணியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு  அருண் ஜெட்லீ பிரதமருக்கு எழுதிய தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...