எகிப்து அரசியலில், நேற்று யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு சம்பவங்கள் மளமளவென நடந்து முடிந்தன. “பதவி விலக முடியாது’ என்ற அதிபர் முபாரக்கின் உரையால் கொந்தளித்த மக்கள், அதிபர் மாளிகை, அரசு “டிவி’ போன்ற இடங்களை முற்றுகையிட்டனர். தாரிர் சதுக்கத்தில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் குவிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பீதியடைந்த அதிபர் முபாரக், தலைநகர் கெய்ரோவை விட்டு தப்பி ஓடியதாக நேற்று மாலை தெரிவிக்கப்பட்டது. ஆனால், இரவில் அவர் பதவி விலகினார்.
எகிப்து அதிபர் ஹோஸ்னி முபாரக்(82) பதவி விலகக் கோரி, கடந்த 17 நாட்களாக லட்கணக்கான மக்கள் வீதிக்கு வந்து போராடினர். நேற்று 10 லட்சம் பேர் கொண்ட மாபெரும் ஆர்ப்பாட்டம் தாரிர் சதுக்கத்தில் நடக்கும் என, ஆர்ப்பாட்டக் குழுக்கள் அறிவித்தன. அதில், பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து, சாரி சாரியாக மக்கள் சதுக்கத்தை நோக்கி வரத் துவங்கினர். இதனால், நேற்று முன்தினமே சதுக்கம் நிரம்பி வழிந்தது. ராணுவம் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தது. நிலைமை மோசமாவதை உணர்ந்த ராணுவம், அரசு “டிவி’யில் அதிபர் முபாரக் தோன்றி, தனது முடிவை அறிவிப்பார்’ என்று தெரிவித்தது.
வெடித்துச் சீறிய மக்கள் வெள்ளம்: “பதவி விலகுவேன்’ என்ற வாக்குறுதியை எதிர்பார்த்து நேற்று முன்தினம் மக்கள் ஆவலோடு சதுக்கத்தில் இருந்த திரையின் முன் காத்திருந்தனர். சிறிது நேரத்தில் திரையில் முபாரக் தோன்றினார். அவர் கடந்த காலத்தில் நாட்டில் நிகழ்ந்த பல்வேறு பிரச்னைகளை தனது தோளில் தாங்கியதை விவரித்தார். அவரது 17 நிமிடப் பேச்சின் இறுதியில், “செப்டம்பரில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடத்த ஏற்பாடுகளைச் செய்து வருகிறேன். அது வரை நான் அதிபர் பதவியை விட்டு விலகப் போவதில்லை. எனினும், எனது சில அதிகாரங்களை துணை அதிபர் ஒமர் சுலைமானிடம் அளிக்க உள்ளேன்’ என்றார். கூடியிருந்த மக்கள் மத்தியில் சில வினாடிகள் அமைதி நிலவியது. அவ்வளவுதான்… அதையடுத்து பெரும் கூச்சலும், அழுகையும், வசை பாடலும் கலந்து எதிரொலிக்க ஆரம்பித்தன. சிலர் முபாரக்கை நோக்கி செருப்புகளை காட்டி,”கழுதையே! ஓடிப் போ’ என்று கத்தினர். தொடர்ந்து நாடு முழுவதிலும் அதிபரின் உரை எதிர்பாராத பெரும் மோசமான விளைவை ஏற்படுத்தியது. ஆயிரக்கணக்கான மக்கள், அதிபர் மாளிகை, அரசு “டிவி’ அலுவலகம் இரண்டையும் முற்றுகையிட்டனர்.
ராணுவப் புரட்சி? : தொடர்ந்து ராணுவ உயரதிகாரிகளின் அவசரக் கூட்டம் நடந்தது. அதன் இறுதியில், “அதிகாரபூர்வ அறிக்கை’ ஒன்று வெளியானது. அதில், நாட்டின் முழுக் கட்டுப்பாடும் ராணுவத்தின் கையில் வந்து விட்டதாகவும், நாட்டின் பாதுகாப்புக்கான ஆலோசனையில் உயர்மட்டக் குழு ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், அதிபர் முபாரக்கின் பிடிவாதத்திற்கு அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கவலையும், கண்டனமும் தெரிவித்தன. எகிப்தின் ஜனநாயகத் தலைவர் முகமது எல்பரேடி,”எகிப்து எந்நேரம் வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும்; ராணுவம் நாட்டைப் பாதுகாக்க வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். காலையில் ராணுவ உயர்மட்டக் குழு கூடியது. இந்த இரண்டுக் கூட்டங்களிலும், அதிபர் முபாரக்கும், துணை அதிபர் ஒமர் சுலைமானும் கலந்து கொள்ளவில்லை. ராணுவமும் முபாரக்கும் கைகோர்த்ததின் காரணமாக, அவர் இதில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
இரண்டாவது கூட்டத்தின் முடிவில் அரசு “டிவி’ ராணுவத்தின் “இரண்டாவது அதிகாரபூர்வ அறிக்கையை’ வெளியிட்டது. அதில்,”செப்டம்பரில் பாரபட்சமற்ற வெளிப்படையான தேர்தல் நடத்தும் பொறுப்பை ராணுவம் ஏற்றுக் கொள்ளும். தற்போதைய குழப்ப நிலை முடிவுக்கு வந்தவுடன், அவசரநிலைச் சட்டம் உடனடியாக நீக்கப்படும். மக்கள் உடனடியாக போராட்டத்தைக் கைவிட்டு அவரவர் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. இதனால், நாட்டில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு விட்டதாக தகவல்கள் பரவின.
நாடு முழுவதும் பரவிய ஆர்ப்பாட்டம்: ராணுவத்தின் இரண்டு அறிக்கைகளிலும் திருப்தி அடையாத மக்கள், நேற்று தங்கள் ஆர்ப்பாட்டத்தை தாரிர் சதுக்கத்திற்கு வெளியே நாடு முழுவதும் பரப்பினர். கெய்ரோ நகர், அலெக்சாண்டிரியா, சூயஸ், மன்சூரா, டாம்ன்ஹர், டன்டா, மன்ஹல்லா, அசுயிட், சொகாக், பனிசாபி, போர்ட் சயீத், டமியெட்டா, கின் மற்றும் ஆரிஷ் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும் மக்கள் ஆயிரக்கணக்கில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
{qtube vid:=0ct_QAo1Yuc}
முபாரக் தப்பி ஓட்டம்? : இந்நிலையில், அதிபர் முபாரக் நாட்டை விட்டு ஓடி விட்டதாக அல் அரபியா செய்தி நிறுவனம் தெரிவித்தது. அவர் சினாய் தீபகற்பத்தில் உள்ள ஷரம் எல் ஷேக்கில் இருப்பதாக சொன்னது. ஆனால், முபாரக் பதவி விலகி விட்டதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது. “அதிபர் முபாரக் பதவி விலகுகிறார். தனது அதிகாரத்தை ராணுவத்திடம் ஒப்படைக்கிறார்’ என, துணை அதிபர் ஒமர் சுலைமான் அரசு தொலைக்காட்சி மூலம் அறிவித்தார். இதையடுத்து, தாரிக் சதுக்கத்தில் கூடியிருந்தவர்கள், ஆடிப்பாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “எகிப்து சுதந்திர எகிப்தாகி விட்டது’ என, கோஷங்கள் எழுப்பினர்.
அருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் பெருக்கும். அரசு கர்பப்பை கோளாறு, ... |
*கரோனா இரண்டாம் அலையில் நாம் அடித்துசெல்லப்பட்டு கொண்டு இருக்கும் நிலையில் கோவிட் 19 ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.