ஈழத்தமிழர்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு பெற்றுத் தர பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனை சந்தித்த பிறகு இலங்கை தமிழ் எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார்.
தேனியில் உள்ள ஒரு பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொள்ள மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று வந்தார். இதற்கிடைய இலங்கை மட்டக்களப்பு தொகுதி தமிழ் எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் குச்சனூர் சனீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு பொன்.ராதாகிருஷ்ணனை சந்திக்க வந்தார். அப்போது இலங்கை எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
இலங்கையில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகள் கூட்டாக சேர்ந்து மைத்ரி பாலசிறிசேனாவை அதிபராக ஆட்சியில் அமர்த்தி உள்ளோம். ராஜபக்சேவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற முயற்சி வெற்றி அடைந்து உள்ளது. தற்போது சில நடவடிக்கைகள் எங்கள் மக்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறிசேனா ஜனாதிபதியாக இருந்தாலும் அதில் பல கட்சிகள் முக்கியமாக இருக்கிறது. முன்பு எதிர்க்கட்சியாக இருந்த ரனில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி தற்போது முக்கிய பங்காளி கட்சியாக இருக்கிறது. ரனில் விக்ரமசிங்கே தான் தற்போது பிரதமராக இருக்கிறார். இவர்கள் எல்லாம் அங்கு முக்கியமாக இருப்பதால் தமிழ் மக்கள் சார்பில் எதிர் காலத்தில் பல விசயங்கள் முன்னெடுக்க படலாம் என்று நம்புகிறோம். புதிய அரசாங்கம் வந்ததும் தமிழ் மக்கள் பிரச்சினைகளை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் தெரிவித்துள்ளோம். எங்களின் பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்று இருக்கிறார்கள். அதன்படி மேற்கொள்வதாகவும் உறுதி அளித்து உள்ளார்கள்.
வடக்கு, கிழக்கு மாகாண பகுதிகளில் முன்னாள் ராணுவ அதிகாரிகளை ஆளுநர்களாக நியமித்து இருந்தார்கள். தற்போது உடனடியாக அவர்கள் நிறுத்தப்பட்டு, புதியவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளார்கள். எனவே சீரமைப்பு பணிகளை மேற்கொள்வதில் எங்களுக்கு எளிமையாக இருக்கும்.
மாகாண சபையின் ஆட்சியில் தலையீடு செய்வது இல்லை என்றும், இயன்ற அளவில் அதற்கு ஆதரவு தருவேன் என்றும் புதிய அதிபர் சிறிசேனா கூறி இருக்கிறார். அதிகார பகிர்வு பெற பல முயற்சி எடுத்து வருகிறோம். தற்போதைய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். அரசு எங்களிடம் பேச உள்ளார்கள். புதிய அரசு வந்ததும் எங்களுக்கு அமைச்சுப் பதவி கொடுப்பதாக அழைப்பு விடுத்தது. நாங்கள் மக்களின் உரிமைக்காக தான் குரல் கொடுக்கிறோம். எங்களுக்கு அமைச்சுப்பதவி வேண்டாம் என்று விட்டோம். 100 நாட்களில் பாராளுமன்றம் கலைய உள்ளது.
இதுவரை கிழக்கு மாகாணம் உள்பட பல இடங்களில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை இருந்தது. பல இடங்களில் மக்கள் குடியமர்த்தப்படாமல் இருந்தனர். இந்த நிலைமைகளை எல்லாம் மாற்றி அமைக்க தற்போதைய அரசாங்கம் முடிவு எடுக்கிறது. ஆரம்ப கட்டமாக தமிழர்கள் குடியேற்றப்பட்டு வருகிறார்கள். விரைவாக குடியேற்றம் நடைபெற உள்ளது. அதன்பிறகு தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்த மக்களை அழைத்து குடியமர்த்த உள்ளோம். இதுவரை அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையில் இருந்தோம். இப்போது அதற்கான நடவடிக்கைகளை ஏற்படுத்தி தமிழ்நாடு மற்றும் உலகின் பிற நாடுகளில் உள்ள ஈழத்தமிழர்களை இலங்கைக்கு அழைத்து குடியமர்த்தப்படும். இலங்கையில் இருந்து சுமார் 12 லட்சம் மக்கள் பிற நாடுகளுக்கு இடம் பெயர்ந்து உள்ளனர். இந்தியாவில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் உள்ளனர். உலகம் முழுவதும் உள்ள இலங்கை தமிழர்களை மீண்டும் வருமாறு அழைப்பு விடுப்போம்.
இவ்வாறு இலங்கை எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறினார்.
பின்னார் சுமார் 1½ மணி நேரம் காத்திருந்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுடன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு பொன்.ராதாகிருஷ்ணனிடம் நிருபர்கள் கேட்ட போது, 'இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு சமஉரிமையும், சிறப்பான வாழ்வும் அளிக்க வேண்டும் என்று இலங்கை புதிய அதிபருக்கு கோரிக்கை வைக்கிறேன். முன்பு இருந்ததை விட சிறப்பான வாழ்வு அவர்களுக்கு அமைத்துக் கொடுக்க வேண்டும். தமிழர்கள் பகுதியில் ராணுவத்தை வெளியேற்ற இன்னும் கால அவகாசம் தேவைப்படுவதாக இலங்கை அரசு கூறுகிறது. விரைவில் ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்' என்றார்.
பிரதமர் மோடி
பின்னர் இந்த சந்திப்பு குறித்து இலங்கை எம்.பி. சீனித்தம்பி யோகேஸ்வரன் கூறுகையில், 'மத்திய மந்திரியை மரியாதை நிமிர்த்தமாக சந்தித்து பேசினேன். இருந்த போதும் இலங்கையின் புதிய அரசாங்கம் தமிழர்கள் பற்றி சிந்திப்பதால் அது சார்பான கருத்துக்களை நீங்கள் இலங்கை அரசிடம் கொடுக்க வேண்டும். தமிழர்களின் உரிமைக்கான தீர்வு திட்டத்தை வலியுறுத்த வேண்டும். மத்தியில் ஆட்சியில் இருக்கும் பிரதமர் நரேந்திரமோடி, இலங்கை தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எனது அன்பான வேண்டுகோளை முன் வைத்தேன். முன்னாள் அதிபர் ராஜபக்சே ஆட்சியின் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. அதில் அவரோ, அவருடைய சகோதரர்களோ ஊழல் செய்து இருந்தால் அவர்கள் மீது புதிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்' என்றார்.
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.