கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார்

 இளமைப் பருவம்
திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி வட்டாரத்திலுள்ள ஓட்டப்பிடாரம் எனும் ஊரில் வழக்கறிஞராக விளங்கிய உலகநாத பிள்ளைக்கும், பரமாயிக்கும் 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள், ஐந்தாம் நாளில் பிறந்தார்.

தொடக்கக் கல்வியை ஓட்டப்பிடாரத்திலேயே கற்றார். ஆங்கிலக் கல்வியைக் கற்க அவ்வூரில் வாய்ப்பில்லாமல் இருந்தது. சிதம்பரனாரின் தந்தையார் தம் செலவிலேயே ஆங்கிலம் கற்பிப்பதற்காக ஒரு பள்ளியை ஆங்கில ஆசிரியரைக் கொண்டு உருவாக்கினார்.

தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியையும், திருநெல்வேலியில் கல்லூரிக் கல்வியையும், திருச்சியில் வழக்கறிஞருக்குரிய பயிற்சிக் கல்வியையும் கற்றார். ஓட்டப் பிடாரத்திலுள்ள வட்டார அலுவலகத்தில் எழுத்தாளராகச் சில காலம் பணியாற்றினார்.

பின்னர் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார் இவரது தந்தையார் உலகநாதபிள்ளை எட்டையபுரம் சமஸ்தான வழக்கறிஞர். அவருடைய தாத்தா வள்ளிநாயகம் பிள்ளையும் வழக்கறிஞர். சிதம்பரனார் இளமையிலேயே இறைப்பற்றில் நாட்டமிக்கவராக விளங்கினார்.

அரசியல் பணி
வாணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர் இந்திய நாட்டின் வளத்தையெல்லாம் சுரண்டிக் கொள்ளையடித்துச் செல்வதைக் கண்டு மனம் கொதித்தார். அவர்கள் கடல் மீது ஆதிக்கம் செலுத்துவதைத் தடுத்து நிறுத்த, 'சுதேசி ஸ்டீம் நாவிகேசன்' எனும் கப்பல் கம்பெனியைப் பதிவு செய்தார். இந்தக் கம்பெனிக்கு மூலதனமாக ரூபாய் பத்து லட்சம் திரட்டத் திட்டம் தீட்டினார். இருபத்தைந்து ரூபாய் பெறுமானமுள்ள நாற்பதினாயிரம் பங்குகளைத் திரட்டினார். பாலவ நத்தம் சமீன்தார், பாண்டித் துரைத் தேவர், தலைவராகவும் சிதம்பரனார் செயலாளராகவும், அமையக் கப்பல் செலுத்தும் முயற்சி தொடங்கியது.

ஆங்கிலேயரின் எதிர்ப்புக் கிடையில் பாலகங்காதரத் திலகரின் நன்முயற்சியால் வங்கக் கடலில் கப்பல் செலுத்தும் முயற்சி வெற்றி பெற்றது. தூத்துக்குடி துறைமுகத்தில் சுதேசிக் கப்பல் பெருமிதத்தோடு மிதந்து சென்றது. சிதம்பரனாரின் விடுதலை வேட்கையும் ஆங்கிலேயர் நடத்த வந்த 'பிரிட்டீஷ் இந்தியா ஸ்டீம் நாவிகேசன்' கம்பெனிக்கு எதிராகச் 'சுதேசி ஸ்டீம் நாவிகேசன்' கம்பெனியை நடத்துவதையும் கண்டு திருநல்வேலி துணை ஆட்சியராக இருந்த ஆசுதுரை ஆத்திரங் கொண்டான். சிதம்பரனாரைத் தண்டிக்கத் தக்க சூழ்நிலைக்காக எதிர் நோக்கியிருந்தான்.

திலகரின் தலைமையின் கீழ் இந்திய விடுதலைக்காகப் போராடிய சிதம்பரனார் மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினார். 'வந்தே மாதரம்' பிள்ளை என அழைக்கப்பட்டார். ஆட்சியாளர்கள் அவரைக் கண்டு நடுங்கினர். தென்னாட்டுத் திலகராக விளங்கிய சிதம்பரனாரின் பேச்சுரிமைக்குத் தடை விதித்தனர். ஆங்கிலேயர்கள் வங்கத்தை இரண்டாகப் பிரித்த போது நாடெங்கிணும் கிளர்ச்சிகள் பெருகின.

தலைவர்கள் கைது செய்யப்பட்டன. மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஆட்சியாளர்கள் போராட்ட வீரர்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்தனர். இப்போராட்டத்திற்குத் தலைமை தாங்கிய விபின் சந்திரபாலர் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலை பெற்ற அந்த நன்னாளில் நெல்லை தாமிரபரணி ஆற்றின் கரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தினார். இதனால் சினங்கொண்ட திருநெல்வெலி ஆட்சி செய்த கலெக்டர் சிதம்பரனார் வெளியே செல்லக் கூடாதென நிபந்தனை விதித்து ஜாமீனில் வெளியே வர அனுமதித்தான்.

நெல்லையில் தடையை மீறி பிபின் சந்திரபாலரின் விடுதலையை விழாவாகக் கொண்டாடியதற்காகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற சுப்பிரமணிய சிவாவின் சொற்பொழிவுக்குத் தலைமை தாங்கியதற்காகவும் நீதிபதி பின்லே இரட்டை ஆயுள் தண்டனை (நாற்பது ஆண்டுகள்) விதித்துத் தீர்ப்பளித்தான். அரசியல் கைதி என்ற காரணங்காட்டி ஆட்சியாளர், சிதம்பரனார் வழக்கறிஞராக தொழில் நடத்தும் உரிமையைப் பறித்துக் கொண்டனர்.

சிதம்பரனாரின் வழக்கு, பிரிவுக் கவுன்சிலுக்குச் சென்றது. அங்கு ஆறு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக மாற்றப்பட்டது. 41/2 ஆண்டுகள் கோவை, கண்ணனூர் சிறைகளில் தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்தார். பாளையங்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

பாளையங்கோட்டைச் சிறையிலிருந்து கோயம்புத்தூர் சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள சிறையில் ஜெயிலரால் எண்ணிலடங்கா தொல்லைகளை அனுபவித்தார். சணல் எந்திரத்தைச் சுற்றும் வேலை கொடுக்கப்பட்டது. அதனால் அவரது கைத் தோல் உரிந்து இரத்தம் கசிந்தது. எண்ணெய் ஆட்டும் செக்கினை மாட்டிற்குப் பதிலாகப் பகலெல்லாம் வெயிலில் ஒருவரே இழுத்திட ஜெயிலர் கட்டளையிட்டான்.

ஜெயிலரின் கொடுமை தாங்காத கைதிகளெல்லாம் ஒன்று திரண்டு அவனைத் தாக்கினார். அதனால் கலக்கமடைந்த சிறை அதிகாரி மற்ற கைதிகளெல்லாம் சிதம்பரனாரைச் சந்திக்காதபடி, தனியறையில் அடைத்து நூலை முறுக்கும் வேலையைக் கொடுத்தான். பின்னர் அச்சுக் கோர்க்கும் பணிக்குமாற்றினான்.

கோவைச் சிறையில் சிதம்பரனார் ஒரு அரசியல் கைதியைப் போல நடத்தப்படாமல், ஒரு கொலைக் குற்றவாளியைப் போல் நடத்தப்பட்டார். கோவை சிறையில் இரண்டரை ஆண்டுகள் பெருந்துன்பத்தை அனுபவித்தபின், கண்ணனூர் சிறைக்குக் கை விலங்கிட்டு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து 1912-ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் விடுதலையானார்.

சிறையிலிருந்து வெளியே வந்த பின் வறுமையில் வாடினார் சிதம்பரனார். இக்காலத்தில் அவர் அரிசி, நெய் முதலிய வியாபாரம் செய்து குடும்பம் நடத்த வேண்டியதாயிற்று. வழக்காடியதொரு காலம்; வாணிபம் நடத்தியதொரு காலம். நாட்டிற்காக உடைமைகளை எல்லாம் இழந்த ஒரு தேசியவாதிக்கு ஏற்பட்ட இந்த அவலநிலை தமிழகத்தின் பெருமைக்குக் களங்கமாக அமைந்தது.

இலக்கியப் பணி
நாட்டு விடுதலைக்காகப் போராடிய காலத்திலும், நற்றமிழ் இலக்கியத்திலுள்ள ஈடுபாட்டை வெளிபடுத்தத் தவறவில்லை. மதுரைத் தமிழ்ச் சங்கத்தோடு இடையாத தொடர்பு கொண்டு தம் தமிழ் அறிவை வளர்த்துக் கொண்டார். மதுரைத் தமிழ்ச் சங்கம் இவரது தமிழ்ப் புலமையைப் போற்றிச் 'சங்கப் புலவர்' எனும் விருந்தினை வழங்கிச் சிறப்பித்தது. பெரும் புலவராக விளங்கி சோழவந்தான் அரச சண்முகனாரிடம் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்களை முறையாகக் கற்றார்.

கோவை சிறையிலிருந்த போது ஜேம்ஸ் ஆலள் எழுதிய 'As a in Thinketh' என்ற ஆங்கில நூலை 'மனம் போல் வாழ்வு' எனும் தலைப்பிலும், "Get from the Heart" எனும் ஆங்கில நூலை 'அகமே புறம்' எனும் தலைப்பிலும், "From poverty to power" எனும் ஆங்கில நூலின் முதல் பகுதியை 'வலிமைக்கு மார்க்கம்' எனும் தலைப்பிலும், இரண்டாம் பகுதியைச் 'சாந்திக்கு மார்க்கம்' எனும் தலைப்பிலும், மொழி பெயர்த்துள்ளார்.

தம் சுயசரிதையை ஆசிரியப்பாவில் தமிழில் வரைந்துள்ளார். இந்நூல் கவிதை வடிவில் தமிழில் வெளிவந்த முதல் வாழ்க்கை வரலாறு என்ற பெருமையைப் பெற்று விளங்குகிறது. 'மெய்யறம்' 'மெய்யறிவு' என பாடல் திரட்டு முதலிய கவிதை நூல்களையும் எழுதியுள்ளார்.

'விவேகபாநு' இதழில் ஆசிரியராகப் பணியாற்றிய வ.உ.சி. நல்ல பதிப்பாளராகவும் விளங்கினார். தமிழையே உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். 'வ.உ.சி கண்ட பாரதி' என்ற நூலை எழுதினார். தம் உயிர் பிரியும் தருவாயில் வ.உ.சி என்ற தணியுமெங்கள் சுதந்திரதாகம், என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம் என்ற பாரதியின் பாடலைக் கேட்டுக் கொண்டே உயிர் துறந்தார்.

வாழ்நாளெல்லாம் நாடும் மொழி, மக்கள் என வாழ்ந்த அந்தத் தியாகச் செம்மல் 1936-ஆம் ஆண்டு நவம்பர்த் திங்கள் 18-ஆம் நாள் இம்மணுலக வாழ்வை நீத்தார். அவர் ஏற்றிய விடுதலை வேட்கை எனும் ஒளி நாடெங்கிலும் பரவி அன்னியரிடமிருந்து உரிமையைப் பெற்றுத் தந்துள்ளது.

வ.உ.சி ஏழை எளியர்களின் நண்பனாக தொழிலாளர்களின் தோழனாக, சீர்திருத்தச் செம்மலாக, விடுதலை வீரராக., செந்தமிழின் ஆர்வலராக விளங்கினார். அவர் வாழ்வு மானிடப் பண்புக்கு இலக்கணமாக அமைந்தது.

நன்றி : செல்வி சிவகுமார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் ...

இந்தியாவை அறிந்து கொள்ளுங்கள் வினாடி வினாவில் கலந்து கொள்ள மோடி வலியுறுத்தல் இந்தியாவை  அறிந்துகொள்ளுங்கள் வினாடி வினாவில் பங்கேற்குமாறுபுலம்பெயர்ந்த இந்தியர்களையும், மற்ற நாடுகளைச் ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தல ...

5-நாள் அரசு முறைப்பயணத்தில் 31 தலைவர்களை  மோடி சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோடி, அரசு முறை பயணமாக மூன்று ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயா ...

இது மோதலுக்கான நேரமல்ல மோடி கயானாவில் பேச்சு கர்பியன் நாடான கயானா சென்றுள்ள பிரதமர் மோடி, நேற்று ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜ ...

இந்தியாவின் செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது. – மோடி பெருமிதம் '' இந்தியாவின் டி.என்.ஏ.,விலும், செயல்பாட்டிலும் ஜனநாயகம் உள்ளது,'' என ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிக ...

140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பனிக்லக்கிறேன் – மோடி நெகிழ்ச்சி '140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்குத் தேவைப்படும் உடற்பயிற்சிகள்

நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ...

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

சாத்துக்குடியின் மருத்துவக் குணம்

சாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். வாய் சுத்தமாகும். ...