சென்ற வாரம் கன்யாகுமரி துவங்கி சென்னை வரை திருவள்ளுவர் திருப்பயண யாத்திரையைத் துவக்கினார் தருண் விஜய். யாத்திரையில் அவருடன் கங்கையிலிருந்து புனித நீர், காசியிலிருந்து 5 மாணவர்கள், பாரதியின் காசி இல்லத்திலிருந்து புனித மண் ஆகியவற்றுடன் குமரி வந்த தருண் விஜய், கடந்த 11ம் தேதி முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் கங்கையின் புனித நீரை ஊற்றி பயணத்தை தொடங்கினார்.
முதல் நாள் கன்யாகுமரியில் செய்கு தம்பி பாவலர் இல்லத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருடன் உரையாடி மகிழ்ந்தார். அவரது குடும்பத்தினர், எந்தத் தமிழகத் தலைவரும் வந்திராத தங்களது இலத்திற்கு வருகை தந்த தருண் விஜய்யையும் பாஜகவினரையும் உற்சாகத்துடன் வரவேற்பதாக கூறியதோடு, அவருக்கு நினைவுத் தபால் தலை வெளியிட கோரிக்கையையும் வைத்தனர். தொடர்ந்து கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அவர் பயிற்றுவித்த பள்ளிக்கு சென்று அவரது நினைவைப் போற்றினார்.
தொடர்ந்து அதங்கோட்டரசன் சிலைக்கும் மாலை அணிவித்த தருண் விஜய், கிராம மக்களின் உற்சாக வரவேற்புடன் மக்களிடையே பேசினார்.
இரண்டாம் நாள் தூத்துக்குடியில் சமுதாய நல்லிணக்க பேரவை சார்பில் சக்தி விநாயகர் ஹிந்து வித்யாலயாவில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியிலும் அதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சியில் அமைந்துள்ள கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.சிதம்பரனாரின் திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து எட்டையபுரத்திற்கு சென்ற அவர், அங்கு சீறாப்புராணம் எழுதிய, உமறுப்புலவரின் மணிமண்டபத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அங்கு ஊர்ப் பொதுமக்கள், முஸ்லிம் பிரமுகர்கள் இடையே உரையாடி விட்டு, தொடர்ந்து பாரதியாரின் இல்லத்திற்கு சென்றார். ஊர்ப்பொதுமக்கள், பள்ளிக் குழந்தைகள், உள்ளூர் தமிழறிஞர்கள் உள்ளிட்டோரின் தேவராட்ட வரவேற்போடு மிகவும் இனிதாக நிகழ்ச்சி அமைந்திருந்தது.
பாரதியார் இல்லத்தில் அவரது சிலைக்கு மரியாதை செய்ததோடு, இல்லத்திலுள்ள அரிய புகைப் படங்களைப் பார்வையிட்டார். தொடர்ந்து பாரதியார் சில காலம் ஆசிரியராகப் பணியாற்றிய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளிக்கு விஜயம் செய்தார். அங்கு பள்ளியின் ஆசிரியர், மாணவர், நிர்வாகத்தினரால் வெகு விமரிசையாக வரவேற்கப்பட்டார். மதுரையில் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் சிலைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் சென்று வழிபட்டார்.
தொடர்ந்து மூன்றாம் நாள் சிவகங்கை வேலுநாச்சியாரின் சிலைக்கும் மாலை அணிவித்து அவரது பெருமையை இதுவரை யாரும் பெரிய அளவில் பேசாதது குறித்து தனது வியப்பைத் தெரிவித்தார். தொடர்ந்து காளையார் கோயிலில் மருது சகோதரர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்திற்குச் சென்று மரியாதை செலுத்திய அவர், ஆதி திராவிட, பிற்படுத்தப்பட்ட மக்களை விலக்கி விட்டு இந்தியாவை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து கம்பனின் சமாதி அமைந்த நாட்டரசன் கோட்டைக்குச் சென்றார். யாதும் ஊரே; யாவரும் கேளீர் என்று உலக ஒற்றுமைக்கு வழிகோலிய கணியன் பூங்குன்றனார் பிறந்த பூங்குன்றத்துக்கு சென்று ஊர்ப் பெருமையை பறைசாற்றிய அவர், திருச்சி வரவமேனியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் வீட்டிற்கும் சென்றார்.
தொடர்ந்து திருச்சியில் நடைபெற்ற பொதுவிழாவில், தமிழறிஞர்களுடன் சக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவாவுடன் மேடை ஏறினார். விழாவில் பேசிய திருச்சி சிவா, தங்களுடன் தமிழ் குறித்து பேசுவதை விடுத்து வடமாநிலங்களுக்குச் சென்று தமிழ் வளர்க்கக் கோரினார். மேலும் திருக்குறளை அரசியல் அமைப்புச் சட்டப்படி தேசிய நூலாக அறிவிக்கவும் கோரினார்.
இதற்கு பதிலளித்த தருண் விஜய், "2000 ஆண்டுகளுக்கு முன்பு உருவான ஒரு நூலை 65 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வந்த ஒரு சட்டம் அங்கீகரிக்க வேண்டும் என்று கோருவதே வெட்கக்கேடானது. இவர்கள் அங்கீகரித்தால் மட்டும்தான் திருக்குறல் தேசிய நூலாக வேண்டுமா? என்ற கேள்வி கேட்டதுடன், தமிழை வளர்க்க பிற மாநில மக்களிடம்தான் பேசிக் கொண்டு இருக்கிறேன். அதற்காக முயற்சி எடுத்துக் கொண்டு இருக்கிறேன்" என்று பதிலளித்தார். தொடர்ந்து திருக்குறளை எந்த வடிவில் கேட்டாலும் பதிலளிக்கக் கூடிய 3 சிறுமிகளை மேடைக்கு அழைத்து அவர்களை கௌரவித்தார்.
தொடர்ந்து தஞ்சைக்கு வருகை தந்த அவர், ராஜராஜன் கட்டிய பெருவுடையார் கோயிலை சுற்றிப் பார்த்தார். அதன் கட்டடக் கலை, வரலாறு குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரத்திற்கு சென்று, அந்த கோயிலின் பிரம்மாண்டம், சிற்பம், கட்டடக்கலை கண்டு வியந்தார். "இவ்வளவு பிரம்மாண்டமான கோயில்கள், கட்டடங்கள், சிற்பங்கள் குறித்து போதிய அளவு விளம்பரப்படுத்தப்படவில்லை. எனவே இதை எல்லாம் எல்லோருக்கும் தெரிவிக்க வேண்டும்" என்றார்.
பொங்கலன்று, சென்னை திருநின்றவூர் அருகிலுள்ள பாக்கம் கிராமத்தில் பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தருண் விஜய், கிராம மக்களின் அன்பில் நெகிழ்ந்து போனார். தாரை தப்பட்டை வரவேற்புடன் அழைத்துச் செல்லப்பட்ட அவர், தாய்மார்களின் கும்மி, பாட்டுப்பாடி வரவேற்கப்பட்டார். தொடர்ந்து அங்கு பேசிய தருண் விஜய், தமிழகத் தாய்மார்களின் வரவேற்பு, அன்பு எல்லாமே தனது தாயின் நினைவுகளை திரும்பிப் பார்க்கச் செய்கிறது. பிற இடத்தில் இருப்பதாகவே நான் உணரவில்லை என்று குறிப்பிட்டார். தொடர்ந்து சென்னையில் தமிழறிஞர்களுடன் சந்திப்பு ஹோட்டல் உட்லேண்ட்ஸ்ஷில் நடைபெற்றது. பல்வேறு தமிழருஞர்களுடன் கலந்து உறவாடிய அவர் தமிழுக்கும் திருக்குறளுக்கும் தான் செய்ய வேண்டிய பணிகளை அவர்களோடு பகிர்ந்து கொண்டார்.
இறுதியாக, சென்னை மயிலாப்பூரிலுள்ள திருவள்ளுவர் ஆலயத்திற்கு சென்ற தருண் விஜய், சிறப்பு வழிபாட்டுடன் சமஸ்கிருத கல்லூரி வாயில் அருகே உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தி பயணத்தை நிறைவு செய்தார்.
அவரது பயணத்தில் அனைத்து இடங்களிலுமே பொதுமக்கள், தாய்மார்கள், மாணவர்கள், தமிழரிஞர்கள், தமிழ்ச் சங்கங்கள் எல்லாம் போட்டி போட்டு, மாலையிட்டு பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நல்கினர். அனைத்து இடங்களிலுமே ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருந்து நினைவுப் பரிசுகள், திருக்குறள் புத்தகங்கள், திருவள்ளுவர் சிலைகள், சால்வைகள் போர்த்தி மகிழ்ந்தனர்.
தமிழர் ஒருவர் தமிழ் வளர்க்க புறப்பட்டால் நக்கலும் நையாண்டியும் செய்கின்ற மக்கள் பிறர் ஒருவர் உண்மையிலேயே தமிழ் மொழியின் மீது பற்று கொண்டு தனது பற்றுதலை தெரிவிக்க புறப்பட்ட சுற்றுப் பயணத்தில் இந்த காட்சிகள் எல்லாம் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைத்தது என்றால் அது மிகையல்ல.
நன்றி : விஜய பாரதம்
– மு. தயாநிதி
பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.