சமூக நீதி! இன்று பெரிதாக பேசப்படும், எழுதப்படும் “டாபிக்”…. இது நமது நாட்டின் பாரம்பரியமா? இல்லை நமக்கு இது அந்நியப்பட்டதா?
வர்ணசிரம தர்மம், மனுஸ்மீருதி, ஆண்டான் – அடிமை– மேலோர், கீழோர்,–என்ற பாகுபாடுகள்– உயர்சாதி இந்துக்கள் தெருவில், தலித் நடந்தால், தானணிந்த செருப்பை அவனது இடுப்பில் சுமக்க வேண்டும், இன்னும் “இரட்டை டம்பளர் முறை” என இந்நாட்டில் தலித்களுக்கு சம உரிமைகள் மறுக்கப்படுகின்றனவே!…. இதைக் களையவே “சமூகநீதி”… எனவே சமூகநீதி அற்ற நிலை இங்கு இருப்பதால்.. இவ்வாக்கியம் இந்நாட்டுக்கு எப்படி அந்நியப்படாமல் இருக்க முடியும்? இது இடதுசாரிகள் மற்றும் “முற்போக்கு” வாதிகளின் வாதம்!
இன்றைக்கு 1000 ஆண்டுகளுக்கு முன்பே ராமானுஜர் “பிரணவ மந்திரத்தை” கோயில் கோபுரம் ஏறி கூவி, தாழ்த்தப்பட்டவனும் இறையருள் பெற செய்த சரித்திரங்களும், “எல்லோரும் இன்புற்று இருப்பதை தவிர வேறொன்றறியேன் பராபரமே” என்ற தாயுமானவர், “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார், வெள்ளை நிறத்துப் பூனையும், கருப்பு நிறத்துப் பூனையும் பாடி, சாதிகள் இல்லையடி என பாப்பாவுக்கு பாடிக்காட்டிய பாரதி வரை “ஜாதி ஒற்றுமை வேண்டும் எனவும்..சாதிக் கொடுமைகளை” சாடிய மதம் இந்து மதம்!
ஆனாலும் அதையும் மீறிய “கொடுமைகள்” நடந்த வண்ணம் இருந்ததுதான்.. இக்காலகட்டத்தில்தான் சுதந்திர போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி மரட்டிய மாநிலம் ரத்னகிரி மாவட்டம் அம்பேவாடா கிராமத்தில் மஹர் என்னும் ஏழை தலித் குடும்பத்தில் 14-வது குழந்தையாக பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கார் பிறந்தார்.
அப்பா ராணுவத்தில் சுபேதராக பணிபுரிந்தால் பல்வேறு ஊர்களில் பல்வேறு அரசு பள்ளிகளில் கல்வி கற்கும் வாய்ப்பு பீம்ராவுக்கு கிடைத்தது….
ஜாதிக் கொடுமைகளை ஒழிக்க பல்வேறு தலைவர்களும், சாதுக்களும் சேவை புரிந்திருந்தாலும் பாபாசாகிப் அம்பேத்கரை இதற்கு ஒரு “ரோல் மாடலாக” கருதுவதற்கு காரணமிருக்கிறது.
ராகுல்காந்தி குடிசைகளை நோக்கி பயணித்து வறுமையை காண புறப்பட்டாலும் அது எங்கோ இடித்தது! ஊழலை ஒழிக்க புறப்பட அன்னா ஹசாரேவை ஊழலின் ஊற்றுக் கண்ணான கருணாநிதி பாராட்டியது “எங்கோ உரசியது” ……….
ஊழல், தீண்டாமை, கல்லாமையே முதன்முதலாக இருந்த சமூகத்திலிருந்து, அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைகழகத்தில், அரசியல், சட்டம் மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்று (உண்மையாகவே பெற்று) (விலைக்கு வாங்காமல் பெற்று) தன்னுடைய சாதியின் போர்வையால், தனக்கு இட ஒதுக்கீடு எனப் பெறாமல், “பொதுப் போட்டியில்” முதலிடம் பெற்று, இந்திய அரசியல் நிர்ணய சபையில் இடம் பெற்ற தலைவர் பாபா சாகிப் அம்பேத்கர் என்பதால் அம்பேத்கரின் சமூக நீதி பார்வையில் உரசலில்லை, நெருடலில்லை நேர்மையிருந்தது.
தகுதி, ஞானம், கல்வி, அடிப்படையில், நாட்டில் நிலவும் சமூக சீர்கேட்டை, பாகுபாட்டை சரிசெய்ய, களைய, நீக்க சீர்திருத்தங்களை உருவாக்கிய தலைவர் என்னும் முறையில் அம்பேத்கார் மற்ற தலைவர்களிடம் இருந்து மாறுபடுகிறார்.
சமூகநீதி என்கிற வாக்கியத்தின் முக்கிய அம்சம் என்ன? முழு அர்த்தம் என்ன? என்பதை தெரிந்து கொண்டால் அது எப்படி இடதுசாரிகளால், “முறைதவறி” உச்சரிக்கப்படுகிறது என்பது புரியும்.
நீதியின் இரண்டு பரிமாணங்கள் சமூக நீதியும் இயற்கை நீதியுமாகும்! இயற்கைநீதி என்பது நாட்டின் நீதி மன்றங்கள் எல்லாவித தடங்கலும், இடையூறும், இன்றி அனைவருக்கும் சம நீதி தரவேண்டும் என்பதாகும்!
சமதர்ம சமூகமும், பொருளாதார ஏற்றதாழ்வுகளை அகற்றி அனைவருக்கும் சமவாய்ப்பு, தருவதே சமூகநீதியாகும்! பொருளாதார நீதியும், சமதர்ம சமூகமும் சேர்ந்த கலவை சமூகநீதி ஆகும்!
இது வாய்வார்த்தையால் மட்டும் நிறைவேற்றப்படக் கூடிய “அரசியல் கோஷம்” அல்ல தேர்தல் அறிக்கையின் ஷரத்து மட்டுமே இதை உயிர்பிக்க முடியாது! இது செயல் வடிவத்தின் முழு உருவம் என்று முன்னாள் நீதிபதி கிருஷ்ணய்யர் கருத்து சொல்லியுள்ளார்.
தான் தாழ்த்தப்பட்ட ஜாதியில் பிறந்ததால் அந்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் அம்பேத்கார் தனியாக அமர்த்தப்பட்டார். குடிக்க தண்ணீர் கூட பள்ளிக்கூட “பியூன்” வந்தாலே உண்டு.
ஏதாவது ஒருநாள் “பியூன்” லீவு எடுத்தால் அன்று இவருக்கு குடிக்க தண்ணீர் கிடையாது… இதை “நோ பியூன் நோ வாட்டர்” என்றும் புத்தகத்தில் அம்பேத்காரே எழுதியுள்ளார்.
கணவன் இறந்தவுடன் மனைவி உடன்கட்டை ஏறும் “சதி” என்னும் அவலம் இருந்தாலும். குடும்பத்தில் சொத்தில் பெண்ணுக்கு பங்கு ஏதுமில்லை என்ற காலம்… இதுவே அம்பெத்காருக்கு சிந்தனையை சீண்டிய காலம்..
ஜாதி, இனம், பாலினம், ஆட்சி அதிகாரம், செல்வம் இவற்றை தாண்டியது சமூகநீதி! எல்லாவித ஏற்றத்தாழ்வுகளையும் அகற்றுதல் என்பது ஒருபுறமிருந்தாலும், இதனால் சமூகத்தின் உயர் வகுப்பாறின் நெஞ்சில் விரோதத்தை சம்பாதிக்க கூடாது என அம்பேத்கார் எண்ணினார். எனவெ சமூக ஒற்றுமையை திடமாக வலியுறுத்தினார்.
அரசியல் ஜனநாயகம் ஆட்சி மாற்றத்தை மட்டுமே உருவாக்கும், வலியவன், எளியவன் என்ற வார்த்தைகள் விளையாடும். ஆனால் உண்மையில் எளியவனுக்கு எந்த ஏற்றத்தையும் தராது. எனவே சமுதாய ஜனநாயகம் வேண்டும். இதுவே ஜாதி ரீதியான தாழ்வுகளை அகற்றி அனைவரையும் உயர்த்த வழிவகுக்கும் என்று அம்பேத்கார் நம்பினார்.
வலியவனுக்கு சட்டம் வளைந்து கொடுக்கிறது. வறியவனுக்கு சட்டம் தொந்தரவுதான் கொடுக்கிறது. அநீதி இப்படித்தான் ஆரம்பமாகிறது. பெண்கள் வெறும் பிள்ளை பெறும் இயந்திரமாக இச்சமூகம் வைத்திருக்கிறது. இதிலே முஸ்லீம் பெண்களும் அடங்கும். அவர்களின் “பர்க்கா” அவர்களின் சுதந்திரத்தை நசுக்குகிறது.
“தலாக்” என்ற மூன்றுமுறை உச்சரிப்பு அதன் மூலம் அவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி! பலதார மணமும் முஸ்லீம் பெண்களுக்கு மாபெரும் அநீதி இழைக்கும் செயலாகும்!
எனவே பெண்களின் திருமணம், விவாகரத்து மற்றும் வாரிசு உரிமைகளுக்காக பெண்கள் போராட வேண்டும் என்பது அம்பேத்காரின் கருத்தாக இருந்தது.
சமூகத்தின் எல்லா பொறுப்புகளுக்கும் பெண்கள் வர வேண்டும் என இப்போது கோரப்படும் 33 சதவீதத்தை 75 ஆண்டுகட்கு முன்பே கோரியவர் பாபாசாகிப் அம்பேத்கார் அவர்கள். பெண்ணுரிமையை பேணாமல் சமூகநீதி சாத்தியமில்லை என்பது அம்பேத்காரின் கருத்தாக இருந்தது!
அரிஸ்டாட்டிலும். பிளாட்டோவும், காந்தியும் அம்பேத்காரை பெரிதும் கவரவில்லை “பெண்கள் மூடநம்பிக்கையை வளர்க்கும் கூடாரங்கள்” – பெண் கல்வியே சமூகநீதியின் மையக்கருத்தாக அம்பேத்கார் கருதினார்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பது பிரெஞ்சு புரட்சியின் தாரக மந்திரம் அம்பேத்காரும் இதையே சமூகநீதியின் கருத்தாக கருதினார்.
1936-ல் தாமோதர் ஹால் கூட்டத்தில் தேவதாசிகள், முரல்யாக்கள் மற்றும் ஜோகத்தினிகள் இடையே பேசும் போது தேவதாசி முறையை ஒழிக்க வேண்டுமென அம்பேத்கார் கூறினார்.
1942 ஜீலை 20 நாகபுரியில் ஒடுக்கப்பட்ட பெண்கள் மாநாட்டில் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்”. அடிமையாக நடத்தப்பட கூடாது என்றார்.
இதன் வெளிப்பாடாக அவர் உருவாக்கியதுதான் “ஹிந்து கோடு”. இதில்தான் பெண்களுக்கு சொத்துரிமை, திருமணம், விவாகரத்தில் பாதுகாப்பு முதலியவைகளை புகுத்தினார்.
இதோடு மட்டுமின்றி, தாழ்த்தப்பட்ட, மலைஜாதி மக்களுக்கு உரிமை, பெண்ணுரிமை மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான உரிமையும் சேர்ந்த்தே சமூகநீதி என்பது அம்பேத்கரின் கோட்பாடு.
இதனால்தான் 1953-ல் வெளியான “காகா கோல்கர் கமிஷன்” பரிந்துரையில், பெண்கள் எந்த ஜாதியினரானாலும் “பிற்படுத்தப்பட்டவர்கள்” என்றும், அரசாங்க வேலை வாய்ப்பில் மற்ற பிறபடுத்தப்பட்டவர்களுக்கு— 20% வகுப்பு 1, 33% வகுப்பு 2, 40% வகுப்பு 3&4 வேலை வாய்ப்புகள் தரப்பட வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்தது. இதன் மூலம் அம்பேத்கர் ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் தலைவராக இல்லாமல், மொத்த தாழ்த்தப்பட்டோருக்கும் தலைவராக விளங்கினார்.
இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கிய கமிட்டி மற்றும், மைனாரிட்டி மற்றும் மனித உரிமை கமிட்டிகளின் ஆலோசனை குழுவில் உறுப்பினராக இருந்தார் அம்பேத்கர்.
இவருடைய சீரிய சீர்திருத்த கருத்துக்களைத்தான் 1947–டிசம்பர் 13 முதல் 19-வரையும் ஜனவரி 20 முதல் 22 வரை 9 நாட்கள் நடைபெற்ற அரசமைப்பு சட்ட குழு ஏற்றது. ஜஸ்டிஸ் கஜேந்திகட்கர் முதலானோர் பாராட்டினர்.
அரசமைப்பு சட்டம் பாகம் 3-ல் ஜாதி, மதம், ஊர், பாலினம் மூலம் தீண்டாமை தொடரக்கூடாது என்றார்.அம்பேத்கார்
எல்லோருக்கும் சம உரிமை, அனைவரின் சட்டத்தின் மூலம் சமம் என்ற உரிமைகளை பெற்றுத்தந்தார்.
அரசமைப்பு சட்டம் பாகம் 4-ல் அரசிற்கு வழிகாட்டு குறிப்புகளை ஏற்படித்தித் தந்தார். இதில்தான் “பொது சிவில் சட்டமும்” “பசு வதை சட்டமும்” கொண்டுவரப்பட வேண்டுமென ஆலோசனை கூறினார்.
பிரிவு 38-ன் மூலம் வருமானத்தின் அடிப்படையில் ஏற்படும் வேறுபாடிகள் களையப்பட வேண்டும். ஏழை என்பதால் வாய்ப்புகள் மறுக்கப்படுவதை தடை செய்தார்.
பிரிவு 39-ன் மூலம் வாழ்வதற்கு உரிமையும், வாழ்வை கொண்டு செல்ல வாய்ப்புக்கள் சமமாக பிரித்துத்தரப்பட வேண்டும் என சட்டமியற்றினார்.
சமூக நீதியே சமூக நல்லிணக்கத்தை காக்கும் சமூக ஸ்திரத்தன்மையே தேசபக்தியை உருவாக்கும் என்பதெ அம்பேத்காரின் பார்வையாக இருந்தது.
இதைத்தான் நரேந்திர மோடியும், சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களை மற்றவர்களுக்கு இணையாக உயர்த்த “ஸ்கில் டெவலப்மெண்ட்” என்கிற தனி அமைச்சகத்தை உருவாக்கி வேறுபாடுகளை களையும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
அம்பேத்கார் இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சமூக சீர்திருத்தவாதி! இந்து மதத்திலிருந்த “குறைபாடுகளை” மதம் மாறினால் தீர்ந்துவிடும் என அவர் நம்பவில்லை – மாறாக மதத்திற்குள் இருந்தே போராடினார். தனது இறுதி நாட்களில் 1956-ம் ஆண்டு, இந்திய மதங்களில் ஒன்றான, இந்து மதத்தின் ஒரு பகுதியான, புத்தமதத்திற்கே மாறினார்!
தீவிர தேச பக்தர், சமூக போராளி, சொல்லும் செயலும் ஒன்றே என்று வாழ்ந்து காட்டியவர்! பெண் முன்னேற்றத்திற்கு போராடியது மட்டுமல்ல, அதற்கான மாபெரும் சட்ட சீர்திருத்தம் செய்து பெண்களுக்கு பதுகாப்பு அளித்தவர்.
மொத்தத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் தேவ தூதன்….அம்பேத்கார்
நன்றி ; எஸ்.ஆர். சேகர்
பாஜக மாநிலப் பொருளாளர்
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.