'கடந்த பல்லாயிரம் ஆண்டுகளில் இந்தியா தனது எல்லைகளை விரிவாக்கவோ, பிற நாடுகளிடையே ஆதிக்கம் செலுத்தவோ முயற்சிக்காதது ஏன் என்ற கேள்வியை நாம் அடிக்கடி கேட்டுக் கொள்கிறோம். இதற்குக் காரணமாக, நமது சகிப்புத்தன்மை, கட்டுப்பாடின்மை, திருப்பித் தாக்குவதில் ஆர்வமின்மை, வெளிநாட்டவரை வரவேற்கும் பரந்த மனம், பாரம்பரியக் கலாசாரத்தைப் பேணும் பண்பு, தனிமனிதப் பாதுகாப்பைப் பேணும் தன்மை ஆகியவற்றை இந்திய மனநிலையை ஆராயும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.''
இந்த வாசகத்தை, ஒய்.எஸ். ராஜனுடன் இணைந்து எழுதிய "இந்தியா-2020: புதிய ஆயிரமாண்டுக்கான தொலைநோக்குப் பார்வை (1998)' என்ற தனது நூலில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் குறிப்பிட்டிருக்கிறார். போரை வெறுத்து ஒதுக்கிய பேரரசர் அசோகர் இந்தியாவின் முன்னுதாரணமாக மாறி இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மேற்கண்ட மிக ஆழ்ந்தகன்ற விவகாரத்தை கலாம் எழுப்பினார்.
கலாம் தனது கோடிக்கணக்கான அபிமானிகளால் "மக்கள் குடியரசுத் தலைவர், விஞ்ஞானி, தொலைநோக்குப் பார்வை கொண்டவர், சிந்தனையாளர், தேசபக்தர்' என்றெல்லாம் போற்றப்படுகிறார். அவர் நிச்சயமாக இந்தப் புகழுரைகளுக்கு எல்லாம் மேலானவர். அவரது ஒரு கரத்தில் பகவத் கீதையும் வீணையும், மறு கரத்தில் அணு ஆயுதமும் ஏவுகணைகளும் இருந்தன. அவரது முழுப் பரிமாணமும் அவரை முழுமையான தேசிய சிந்தனையாளராகவே அடையாளம் காட்டுகிறது.
தேசம் சந்திக்கும் பல சிக்கல்களை ஆழ்ந்து ஆராய்ந்து அதற்கான தீர்வு காண டாக்டர் கலாம் முயன்றார். அந்தத் தீர்வுகள் நமது முந்தைய சரித்திரம் அளித்த பாடங்களையே பிரதிபலித்தன. ஆனால், அவற்றைக் கற்கவோ, ஏற்கவோ மறுத்து வருகிறோம். கலாம் எழுப்பிய கேள்விகள் அனைத்துமே மிக முக்கியமானவை.
நாம் தேசத்தை விரிவாக்கவில்லை; அதனால், நமது எல்லைகள் சுருங்கின. நம்மிடையே கட்டுப்பாடில்லை: அதேசமயம், நமது சகிப்புத்தன்மை வறட்டுப் பெருமைக்குரியதாக இருக்கிறது. நமது உறவுகளை பலிகொடுத்து வெளிநாட்டவரை ஏற்கும் தன்மை நம்மை பிளவுபடுத்தி இருக்கிறது. சாகசங்களைவிட சொந்த வாழ்க்கையைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்வதில் காட்டும் ஆர்வத்தால், பிற சாகசக்காரர்களின் கரங்களில் நாம் சின்னாபின்னமாகிறோம். கலாம் கூறியது எத்துணை உண்மை?
1998-இல் தனது நூலில் கலாம் குறிப்பிட்டபடி அவர் காட்டிய வழியில், நமது கல்வி முறையை மறுசீரமைக்கவோ, தேசிய அளவில் விவாதங்களை எழுப்பவோ அப்போது மட்டுமல்ல, இப்போதும் கூட நாம் தயாரில்லை. தற்சமயம், பலரும் கலாம் வாழ்க்கையையும், பொன்மொழிகளையும் எடுத்தாள்கிறார்கள்.
அவர் என்ன சொன்னார் என்பது குறித்த சிந்தனையே இல்லாமல், அவரை உச்சியில் வைத்துக் கொண்டாடுகிறார்கள். அரசு, ஊடகம், கல்வித் துறை, அறிவுஜீவிகள் உள்ளிட்ட ஒட்டுமொத்த தேசத்துக்கும் அவரது ஆராய்ச்சிச் சிந்தனைகள் சிந்திக்கத் தகுந்தவை.
இப்போதும்கூடக் காலம் கடந்துவிடவில்லை. கலாம் எந்த நோக்கத்துடன் பாடுபட்டாரோ, அந்தக் கருத்தியலில் அவரது நினைவைப் போற்றும் வகையில் நாம் செயல்பட முடியும். ஆனால், இந்தியாவின் பங்களிப்பும், தேவையும் குறித்து இந்தியர்களுக்கு நேர்மையான ஆய்வு அணுகுமுறை இல்லாத வரை இதற்கான தொடக்கம் சாத்தியமில்லை.
கலாமின் பொக்ரான் அணுகுண்டு சோதனையும், ஏவுகணைகளும் இந்தியாவை புவியியல்ரீதியாகவும், வியூகரீதியாகவும் பலசாலியாக முன்னிறுத்தின என்பது மறுக்க முடியாத உண்மை. "இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மறுவடிவமைத்தல்: சவால்களும் வியூகங்களும்' என்ற தனது நூலில் முன்னாள் வெளியுறவுச் செயலர் ராஜீவ் சிக்ரி, அமெரிக்காவுடன் இந்தியா நட்புறவு கொள்ள முயன்ற நிகழ்வுகளைக் குறிப்பிட்டிருக்கிறார்.
1950-களில் ஜவாஹர்லால் நேரு காலத்திலேயே அமெரிக்காவுடன் இணக்கமாகச் செல்ல இந்தியா முயன்றபோதும், சுமார் ஐம்பது ஆண்டுகளாக அந்நாட்டுடன் நமது உறவு மோசமானதாகவே இருந்துவந்தது. 1998-இல் இந்தியா அணு ஆயுத நாடான பிறகே, தெற்காசிய பிராந்தியத்தில் பாதுகாப்பு, புவியியல்ரீதியாக இந்தியாவின் செல்வாக்கு தவிர்க்க முடியாதது என்பதை உணர்ந்த அமெரிக்கா நம்முடன் உறவை மேம்படுத்தியது என்கிறார் சிக்ரி.
பொக்ரான்-2 அணுகுண்டு சோதனையுடன், இந்தியாவின் வளர்ந்துவரும் பொருளாதார சக்தியும் அமெரிக்காவிலுள்ள இந்திய வம்சாவளியினரின் செல்வாக்கும் சேர்ந்து பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின.
நமது பொருளாதார சக்தியும் கடல்கடந்த இந்தியர்களின் செல்வாக்கும் அமெரிக்காவின் கண்களைத் திறந்தன என்பது மட்டுமே உண்மையல்ல. கலாமின் அணுகுண்டுதான் மேற்கத்திய உலகில் நமக்கு மரியாதையைப் பெற்றுத் தந்ததற்கு மிகப் பெரிய காரணம். அணு ஆயுத சக்திக்குள் அச்சத்தை ஏற்படுத்தும் திறன் ஒளிந்திருக்கிறது.
முதல் அணுகுண்டு வெடிக்கப்பட்டபோது, அதை வடிவமைத்த விஞ்ஞானியும், ஹிந்து ஆன்மிகத்தால் கவரப்பட்டவருமான டாக்டர் ராபர்ட் ஓபன்ஹீமர் பகவத் கீதையின் சுலோகம் ஒன்றை மேற்கோளாகக் காட்டினார்: "ஆயிரக்கணக்கான சூரியன்கள் ஒரே நேரத்தில் விண்ணில் வெடிக்கும்போது உருவாகும் கதிரியக்கம் அளவுகடந்த வலிமையின் வெளிப்பாடாக இருக்கும். அப்போது, உலகங்களையே சிதறடிக்கும் மரணமாக மாறுவேன்'.
கீதையை ஆழ்ந்து பயின்றவரும் வீணையில் விற்பன்னருமான கலாமின் பார்வையில் இதே கருத்து, 1998 பொக்ரான் அணுகுண்டு சோதனையின்போது வெளிப்பட்டது. "நான் எனது காலடிக்குக் கீழ் மாபெரும் அதிர்வொலியைக் கேட்டேன். அது நமது அச்சத்தை மீறி ஒலித்தது. அந்தத் தருணம் அற்புதமானது. அது இந்திய அறிவியலுக்கும் தொழில்நுட்பத்துக்கும் மகுடம் சூட்டியது'.
சக்தியும் ஆற்றலும் எப்போதுமே அபாயகரமானவை. அதேசமயம், இவை இல்லாமல் இருப்பது அதைவிட அபாயகரமானது. மாபெரும் ஜனநாயக நாடு இந்தியா. உலக மக்கள்தொகையில் ஆறில் ஒரு பங்கு இங்குதான் உள்ளது.
உலகுக்கு அற்புதமான மனிதத் தன்மை மிகுந்த சிந்தனைகளை வழங்கிய புத்தர், ஆதிசங்கரர், மகாத்மா காந்தி உள்ளிட்டவர்கள் உதித்த நாடு இது. எந்த நாட்டையும் ஆக்கிரமிக்காத சரித்திரம் கொண்டவர்கள் நாம். ஆனால், நமது உச்சபட்ச சகிப்புத்தன்மையும், இளகிய மனமும் நமக்கு உலக அரங்கில் மரியாதையைப் பெற்றுத் தரவில்லை. அதற்கு மாறானதையே நாம் பெற்றோம்.
இதற்கு மாறான மற்றொரு காட்சியும் உண்டு. 1970-களில் சுமார் 3 கோடி சீன மக்கள் வறுமையிலும், பசியிலும் உழன்ற நேரத்தில், அப்போதைய அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹென்றி கிஸிங்கர் சீன அதிபரைச் சந்திக்க பெய்ஜிங்கில் பல நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. ஏன் தெரியுமா? சீனா பட்டினி மிகுந்த நாடாக இருந்திருக்கலாம். ஆனால், அதனிடம் நூற்றுக்கணக்கான அணு ஆயுதங்கள் இருந்தன. உலகம் சக்தியையே மதிக்கிறது. இதிலிருந்து இந்தியா கற்க வேண்டிய படிப்பினை இருக்கிறது. ஏனெனில், மகாத்மா காந்தியால் "பெருந்தன்மையானவர்கள்' என்று வர்ணிக்கப்பட்ட ஹிந்துக்களை பத்துக்கு எட்டு என்ற விகிதத்தில் கொண்டுள்ள நாடு இந்தியா.
பொக்ரான் சோதனைக்குப் பிறகு இந்தியாவின் புவியியல்ரீதியான முக்கியத்துவம் இதுவரை காணாத வகையில் பலமடங்கு உயர்ந்தது. அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. 2012 டிசம்பரில் அளித்த அறிக்கையில், "2030-இல் அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் உலகின் மூன்றாவது வல்லரசாக இந்தியா இருக்கும்' என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால், கலாமின் அணுஆயுத ஆற்றலும், ஏவுகணைகளும் இல்லாமல் போயிருந்தால் இந்தியாவை உலக வல்லரசாக ஒருநாளும் மேலைநாடுகள் ஏற்றுக் கொண்டிருக்காது.
ஜப்பான் பல லட்சம் கோடி டாலர்களுடன் பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. ஆனாலும், அந்நாடு உலக வல்லரசாக மதிக்கப்படுவதில்லை. சக்தி அல்லது அதிகாரம் என்பது விரிவான பொருளை அடக்கியதாகும். பொருளாதார சக்தி மட்டுமே ஒரு நாட்டை வலிமையாக்கி விடாது. ராணுவ வலிமை பெறாமல் பொருளாதாரத்தில் வலிமை பெறுவதென்பது இந்தியா ஏற்கெனவே அனுபவித்தது போன்ற ஆக்கிரமிப்புக்கே வழிகோலும்.
பொருளாதாரக் கூட்டுறவு, அபிவிருத்திக்கான கூட்டமைப்பு (ஓஇசிடி) நாடுகளுக்காக ஆங்கஸ் மேடிசன் என்ற ஆய்வுத் தணிக்கை நிறுவனம் அளித்த அறிக்கையில், இந்தியா சுமார் 1,700 ஆண்டுகளாகப் பொருளாதாரத்தில் செழித்தோங்கி இருந்ததைக் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், நமது செல்வ வளம் காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பாளர்களை வரவேற்பதாக அமைந்திருந்ததே தவிர, நம்மை வலிமையான தேசமாக்கிவிடவில்லை. மாறாக, அடிமை நாடாக்கியது. அன்னிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆளுகைக்கு உள்படுத்தியது.
நாம் இன்றும்கூட அதிகார சக்தியை நாகரிகமற்றது என்றே வெறுக்கிறோம். ராணுவ வலிமைக்கு எதிரான நமது குழப்பமான மனப்பான்மை, கலிங்கப் போரில் ஏற்பட்ட அழிவுகளைக் கண்டு போர் வாளைத் துறந்த பேரரசர் அசோகர் காலத்திலேயே நமது மனதில் விதைக்கப்பட்டுவிட்டது. கலிங்கப் போருக்குப் பிந்தைய நேரத்தில் அசோகரின் நிலைமை, மகாபாரதப் போருக்கு முந்தைய அர்ஜுனனின் நிலைமை போலவே இருந்தது.
அர்ஜுனன் போருக்கு முன் அழுது புலம்பினார். அசோகரோ போருக்குப் பின் வேதனையில் ஆழ்ந்தார். பகவத் கீதையை உபதேசித்த ஸ்ரீகிருஷ்ணரால் அர்ஜுனனின் குழப்பம் அகன்றது. அவன் போர் வீரனானான். பேரரசர் அசோகருக்கு அத்தகைய வாய்ப்புக் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்ல, அசோகரின் தடுமாற்றம் நமது தேசியப் பெருமிதமாக முன்னிறுத்தப்பட்டுவிட்டது. விளைவு, நாம் ஆக்கிரமிக்கப்பட்டோம். அடிமைகளாக்கப்பட்டோம்.
சாத்வீகமானவர்கள், போரைத் தவிர்ப்பவர்கள் என்கிற அர்த்தமற்ற பெருமித உணர்ச்சியால், நாம் இதுவரை ஆக்கிரமிப்பாளர்களின் கொடுங்கரங்களில் சிக்கி அதற்காகப் பெருத்த விலைகளைக் கொடுத்திருக்கிறோம். நமது அறிவுஜீவிகள் பலவாறாக விமர்சித்தபோதும், கலாம் தலைமையில் நிகழ்த்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை இந்த அர்த்தமற்ற குழப்பத்தைப் போக்கியதுடன், இந்தியாவை உலக வல்லரசுப் பட்டியலில் சேர்த்துவிட்டது.
"தி எகனாமிஸ்ட்' இதழ் (மார்ச் 30, 2013) "இந்தியா வல்லரசாக மாறுமா?' என்ற தலைப்பில் எழுதிய தலையங்கத்தில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது: "இந்தியா வல்லரசாக மாறுவது உறுதி என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வல்லரசாக ஆவதற்கு இந்தியா விரும்புகிறதா என்பதே உண்மையான கேள்வி' எனவேதான், "ஆம், நாங்கள் வல்லரசாக விரும்புகிறோம்' என்று ஒருமித்த குரலில் 127 கோடி மக்களும் அறைகூவல் விடுக்க வேண்டும் என்று விரும்பினார் தேசிய சிந்தனையாளரான கலாம். நமது சரித்திரத்தை ஆழ்ந்து ஆராய்வதும், அதிலிருந்து தக்க படிப்பினைகளைப் பெறுவதுமே அந்த மாபெரும் தலைவருக்கு நாம் செய்யும் மகத்தான கெüரவமாக இருக்கும்.
கலாம் தலைமையில் நிகழ்த்தப்பட்ட பொக்ரான் அணுகுண்டு சோதனை அர்த்தமற்ற குழப்பத்தை போக்கியதுடன், இந்தியாவை உலக வல்லரசு பட்டியலில் சேர்த்துவிட்டது.
நன்றி ;எஸ். குருமூர்த்தி
தினமணி
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ... |
மகிழம் பூ குடி தண்ணீர் மகிழம் பூவைச் சுத்தம் பார்த்து எந்தக் கிருமியும் இல்லாமல் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.