ஹெலிகாப்டர் ஊழலில் சோனியா காந்திக்கு தொடர்புள்ளதாக பாஜக குற்றம் சாட்டியதால் ராஜ்யசபாவில் அமளி ஏற்பட்டது. ரூ.3700 கோடி மதிப்பிலான, அகஸ்டா வெஸ்ட் லேண்ட் சொகுசு ஹெலிகாப்டர் பேர ஊழல்தொடர்பாக இத்தாலி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், அந்நிறுவன முன்னாள் நிர்வாக அதிகாரி புரூனோ ஸ்பானோ வுக்கும் கியூசெப்பி ஓர்ஸிக்கும் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பில் பக்கம் 93, 204-ல் சோனியாவின் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது என்று பாஜக சார்பில் குற்றச் சாட்டு முன்வைக்கப் படுகிறது. இத்தாலி நீதிமன்ற தீர்ப்பில் ரூ.250 கோடிக்கு லஞ்சம்வழங்கியதாக
கூறப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தத்தைபெற காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங், அப்போதைய தேசியபாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரிடம் தான் பேரம் நடந்துள்ளது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாக பாஜக.,வினர் தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து மக்களவையில் விவாதிக்கவேண்டும் என்று பாஜக எம்.பி. மீனாட்சி லெகி நேற்று அவையில் வலியுறுத்தினார். இதேவிவகாரம் தொடர்பாக மாநிலங்களவையில் விவாதம் நடத்தகோரி பாஜக எம்.பி.க்கள் சுப்பிரமணியன் சுவாமி, பூபேந்திரயாதவ் ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இன்று ராஜ்ய சபா தொடங்கியதும், சுப்பிரமணியன் சுவாமி, இந்தவிவகாரம் குறித்து பேச ஆரம்பித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்கள், குலாம்நபி ஆசாத் தலைமையில் தர்ணா நடத்தியதால் அமளி நிலவியது. சோனியா காந்தி இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியது: பாஜக ஆட்சிக்கு வந்து 2 வருடங்கள் ஆகிவிட்டன. ஹெலிகாப்டர் ஊழல்வழக்கை விசாரித்து முடித்திருந்தால் உண்மை வெளியே வந்திருக்கும். இந்த ஊழலில் எனக்கு தொடர்புஇல்லை. எனவே எனக்கு பயமும் இல்லை என்றார்
Leave a Reply
You must be logged in to post a comment.