அமெரிக்க நாடாளு மன்றத்தில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, தனது பேச்சாற்றல், தொலை நோக்குப் பார்வை ஆகியவற்றின் மூலமாக, தன்னை விமர்சனம்செய்த உறுப்பினர்களையும் கவர்ந்து விட்டார்.
அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் புதன்கிழமை உரையாற்றினார்.
அவரது உரையை ரசித்த நாடாளுன்ற உறுப்பினர்கள், சுமார் 40 முறை கரவொலி எழுப்பினர். சிலமுறை எழுந்து நின்று தங்களது ஆதரவை வெளிப் படுத்தினர்.
இந்நிலையில், மோடியின் உரை குறித்து அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக் குழுத்தலைவர் பாப் கார்க்கர், வியாழக் கிழமை கூறியதாவது:
இந்தியாவுடன் அமெரிக்கா ஏன் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது என்பதை மோடியின் உணர்ச்சிப் பூர்வமான உரையின் மூலம் அறிய முடிந்தது. உண்மையில், இந்தியாவுடன் அமெரிக்கா கொண்டிருக்கும் அரசியல், பொருளாதார ரீதியிலான உறவு முன்பை விட வலுவாக உள்ளது. எதிர் காலத்தில் இது மேலும் வலுப்படும் என்றார் பாப் கார்க்கர்.
எனினும், நாடாளு மன்றத்தில் கடந்த மாதம் பேசிய பாப்கார்க்கர், ஒபாமா நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
இதேபோல், இந்தியாவில் மனித உரிமைப்பிரச்னைகள் இருப்பதாக, 2 வாரங்களுக்கு முன் விமர்சனம் செய்த அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக்குழு உறுப்பினர் பென் கார்டின், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அதிக நண்பர்களை பிரதமர் மோடி பெற்று விட்டதாகப் புகழாரம் சூட்டினார். உலக நன்மைக்காக, இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றவேண்டும் என மோடி அழைப்பு விடுத்திருப்பது முக்கியமான விஷயம் என்றும் பென்கார்டின் கூறினார்.
இதேபோல், அமெரிக்க நாடாளுமன்ற மேலவையின் வெளியுறவுக் குழுவின் மற்றொரு தலைவரான எட் ராய்ஸ் கூறுகையில், "இந்தியா நெகிழ்வுத் தன்மையற்ற அண்டை நாட்டை கொண்டிருப்பதை மோடியின் உரைமூலமாக நாங்கள் புரிந்து கொண்டோம்' என்றார்.
ஆசியக்கண்டத்தில் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளியாக இந்தியா இருக்கவேண்டும் என்பதில் அமெரிக்க நாடாளுமன்றம் இனி கூடுதல்கவனம் செலுத்தும் என்று மற்றொரு உறுப்பினரான எலியட் ஏங்கல் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.