மரங்களை தெய்வமாக போற்றி பாதுகாக்கவேண்டும் என்று மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.
பெங்களூரு, பனசங் கரியில் ஞாயிற்றுக் கிழமை நடந்த நிகழ்ச்சியில் ஆதம்ய சேத்தனா அறக்கட்டளையின் 25-ஆவது வார பசுமை ஞாயிற்றுக் கிழமை திட்டத்தைத் தொடக்கி வைத்து மரக்கன்று நட்ட பிறகு, அவர் பேசியது: 30 ஆண்டுகளுக்கு முன் பெங்களூரில் ஒரு வருக்கு ஒரு மரம் என்ற நிலை இருந்துவந்தது. ஆனால், பெங்களூரில் தற்போது 100 லட்சம் பேருக்கு 14 லட்சம் மரங்கள் மட்டுமே உள்ளன. இதை ஒருவருக்கு ஒரு மரம் என்ற வீதத்தில் மரங்களின் எண்ணிக்கையை உயர்த்த நாம் அனைவரும் உழைக்கவேண்டும். மரங்களைத் தெய்வமாகப் போற்றி பாதுகாக்க வேண்டும். மரங்களால் தான் நாம் உயிர் வாழ முடிகிறது. பிராணவாயு இல்லாவிட்டால் மனிதன் வாழமுடியாது என்றால், மரங்களை நடுவதைத்தவிர வேறு வழியில்லை.
பெங்களூரில் உள்ள ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நட்டு அதைப் பாதுகாக்க வேண்டும். மரங்களை நடுவதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து போதுமான விழிப்புணர்வு வந்திருந்தாலும், அதை பாதுகாப்பதில் நாம் மேலும் அக்கறை செலுத்தத் தவறிவிட்டோம்.
மரங்களின் எண்ணிக்கை குறைந்ததால், பூமிவெப்பமயமாகி தட்பவெப்பம் அதிகரித்து விட்டது. மழையும் சீராக பெய்யவில்லை. இதனால் தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. எனவே, மரங்களை நடுவதுதான் இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும். அடுத்த 4 ஆண்டுகளில் ஒருகோடி மரங்களை நடுவதற்கு அதம்யசேத்தனா அறக்கட்டளை திட்டமிட்டுள்ளது. இதில் பொது மக்கள் ஆர்வமாகக் கலந்துகொள்ள வேண்டும் என்றார் அவர்.
Leave a Reply
You must be logged in to post a comment.