டெல்லி முதல்மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் உள்பட 5 பேர் ஊழல்வழக்கில் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரி வாலின் செயலாளர் அலுவலகம் உள்பட தலைமைசெயலக வளாகத்தில் பல இடங்களில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின் படியே தனது அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.
இதனை மறுத்த சி.பி.ஐ., முதல்–மந்திரி அலுவலகத்தில் சோதனை நடத்தவில்லை. முதல்மந்திரியின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அலுவலகத்தில் தான் சோதனை நடத்தப்பட்டதாக சிபிஐ. கூறியது.
அன்றைய தினமே அரசு அதிகாரிகளான இந்திய நுண்ணறிவு தகவல்தொடர்பு நிறுவனத்தின் (ஐ.சி.எஸ்.ஐ.எல்.) நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.கவுஷிக், முன்னாள் இயக்குனர்கள் ஏ.கே.துக்கல், ஜி.கே.நந்தா, என்டீவர் சிஸ்டம்ஸ் என்ற தனியார்நிறுவன இயக்குனர்கள் சந்தீப்குமார், தினேஷ் கே.குப்தா மற்றும் சிலர்மீது சி.பி.ஐ. வழக்கு பதிவுசெய்தது. குற்றச்சதி, தவறான நடவடிக்கை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்தது.
இந்நிலையில், நேற்று டெல்லி முதல்மந்திரியின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரை சி.பி.ஐ. ஊழல் வழக்கில் கைதுசெய்தது. அவருக்கு உறுதுணையாக இருந்ததாக அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனத்தினர் 4 பேரையும் அதிகாரிகள் கைதுசெய்தனர்.
இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘‘ராஜேந்திர குமார் டெல்லி அரசின் பல்வேறு பதவிகளில் பணியாற்றி உள்ளார். 2007 முதல் 2014–ம் ஆண்டுவரை அவர் வகித்த பதவிகளில் இருந்தபோது ரூ.50 கோடிக்கு மேல் மதிப்புள்ள அரசு பணிகளை முறை கேடாக என்டீவர் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார். இதற்கு சில அதிகாரிகளும் அவருக்கு உடந்தையாக இருந்துள்ளனர். டெல்லி அரசுக்கு இதனால் ரூ.12 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர்களுக்கு ரூ.3 கோடிக்குமேல் லஞ்சமாக வழங்கப் பட்டுள்ளது’’ என்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.