நம்மில் நிறையப் பேருக்கு மிகப் பெரிய சந்தோஷம் என்ன தெரியுமா? குழந்தைகள் கேள்விகளால் தங்களைத் துளைத்தெடுப்பதுதான்! 'அட… நம்ம குழந்தை எத்தனை புத்திசாலியா இருக்கு? வாய் கொள்ளாத எத்தனைக் கேள்வி கேட்கறது!’ என்று பெருமைப்பட்டுக் கொள்வார்கள் பலரும். 'அடடா… என்னமாக் கேக்கறான் என் குழந்தை? பதில் சொல்ல முடியாம நானே திணறிப் போற அளவுக்கு மடக்கி மடக்கிக் கேக்கறான்’ என்று பெருமைப்பட்டுக் கொள்கிற அதே நேரத்தில், நாம் ஒன்றைக் கவனிக்கவேண்டும்; கடமையெனக் கொண்டு செய்ய முற்படவேண்டும்.
'சீதையை ஏன் ராவணன் தூக்கிச் சென்றான்?’, 'அவனுக்கு ஏன் பத்துத் தலைகள்?’ 'அனுமன் ஏன் குரங்காகப் பிறந்தான்?’ 'அவனுக்கு எப்படி இத்தனை பலம்?’ என்று குழந்தைகள் கேட்கிற கேள்விகளுக்கு உங்களுக்குத் தெரிந்தால், பதில் சொல்லுங்கள். இல்லையெனில், தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் எவரிடமேனும் கேட்டுத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்! அப்படியெல்லாம் மெனக்கிட்டுச் சொல்லாது போனால், 'குழந்தைக்கு என்ன தெரியப்போகிறது’ என்று, நம் மனத்தில் அப்போதைக்குத் தோன்றிய ஏதோ ஒரு பதிலைத் தப்பும் தவறுமாகச் சொல்லிவிட்டால்… குழந்தைகள் வளர்ந்த பின்பு, ராமாயணத்திலும் மகாபாரதத்திலும் எந்த நல்ல விஷயமுமே இல்லை போல என்பதாகவே அர்த்தப்படுத்திக்கொண்டு விடுவார்கள்.
குழந்தைகள் அடுத்த தலைமுறையினர். நமது வித்துக்கள். அந்த வித்துக்களைச் சரியானபடி விதைக்கிற கடமை நமக்கு நிறையவே உண்டு எனும் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், எல்லாத் தருணத்திலும் அப்படியரு பொறுப்புடன் செயல்பட்டார். ஸ்ரீகிருஷ்ணர் என்பவர் சாதாரணர் அல்லர்; பரம்பொருள். ஆனாலும், எத்தனை விஷயங்களில் தன்னைத் தாழ்த்திக்கொண்டிருக்கிறார்? அர்ஜுனனுக்குச் சாரதியாக இருந்தார். அதுவும் எப்படி? அவன் தேரில் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் தோள் கொடுத்தார். ஸ்ரீகிருஷ்ணரின் தோளில் கால் வைத்துத்தான் அர்ஜுனன் தேரில் ஏறினான்; இறங்கினான். இதைவிட ஒருவர் தன்னைத் தாழ்த்திக்கொள்ள முடியுமா என்ன?
அர்ஜுனனுக்கு மரியாதை வழங்கினார் ஸ்ரீகிருஷ்ணர். கம்சனின் சிறையில் இருந்த உக்கிரசேனனுக்கு விடுதலை தேடித் தந்து, மீண்டும் அவனை ராஜபரிபாலனம் செய்யச் சொல்லி, கௌரவப்படுத்தினார். தருமபுத்திரருக்கு ராஜ்ஜியத்தைப் பெற்றுத் தந்தார். இவை அனைத்துக்கும் கண்ண பரமாத்மாதானே காரணம்! அதனால்தான் அவருக்கு 'மானதஹ’ எனும் திருநாமம் சொல்லிப் பூரிக்கின்றனர் ஆன்றோர். அதாவது, மானம் கொடுத்தவன்; மரியாதையை வழங்கியவன் என்று அர்த்தம். இப்படி எத்தனை எத்தனை வெகுமானங்களை, எவ்வளவு பேருக்கு வாரி வழங்கியிருக்கிறார் வள்ளல் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.
இத்தனை பேருக்கு மானம்- மரியாதையை வழங்கிக் காத்தருளிய அவர், தன்னுடைய மானத்தைப் பற்றிக் கவலைப்படாதவனாக இருந்தார். பரந்தாமனான ஸ்ரீகிருஷ்ணர், பொய்யன் என்று பெயரெடுத்தார்; பெண்ணிடம் ஈடுபாடு கொண்டவர் என்று எல்லோரும் சொல்லும்படி நடந்துகொண்டார்; விஷமக்காரன், தந்திரக்காரன் என ஊரே சொல்லும்படி செயல்பட்டார்; சூழ்ச்சிக்காரன் என துரியோதனாதிகள் புலம்பும்படி நடந்து கொண்டார். அர்ஜுனனுக்கு தேரோட்டியவர் என்று அனைவரும் பரிகசித்தார்கள். பாண்டவ சகோதரர்களுக்காகத் துரியோதனனிடம் தூதுவனாகச் சென்றார். பாண்டவ தூதன் என்று எல்லோரும் சொன்னதைப் பெருமையாக ஏற்றுக்கொள்ளவும் செய்தார்.
ஸ்ரீகண்ண பரமாத்மா, எந்த நிலையிலும் எக்காலத்திலும் தன்னைப் பெருமைப்படுத்திக் கொள்ளவே இல்லை. மாறாக, ஒவ்வொரு சூழலிலும் தன்னைச் சிறுமைப்படுத்திக்கொண்டபடியே, தாழ்த்திக் கொண்டபடியே இருந்தார். தன்னுடைய மான- அவமானங்களைப் பற்றியெல்லாம் அவர் கவலைப்படவே இல்லை. மானத்தைப் பற்றிக் கவலைப்படாதவன் என்பதால், அவருக்கு 'அமானி’ என்கிற திருநாமமும் அமைந்தது.
நேர்மையை வலியுறுத்தியவர் ஸ்ரீராமபிரான். சூழ்ச்சியால் எதிரிகளை வீழ்த்தலாம் என அறிவுறுத்தியவர் ஸ்ரீகண்ணபிரான். ராமாயணம், நேர்மையையும் சத்தியத்தையும் வலியுறுத்துகிறது. அதே நேரம் ஸ்ரீகிருஷ்ணர் சூழ்ச்சியை சூழ்ச்சியால் வெல்லலாம் என்பதை மகாபாரதத்தின் மூலம் உணர்த்துகிறார். அதற்காக நாங்களும் சூழ்ச்சி செய்கிறோம் என்று செயல்பட்டுவிடாதீர்கள். சூழ்ச்சியை அழிப்பதற்காகத்தான் சூழ்ச்சி கையாளப்பட்டது. பட்டயம் எடுத்தவன் பட்டயத்தாலே வீழ்வான் என்பதை நமக்கு அறிவுறுத்துவதற்குத்தான் அத்தனை அவப்பெயர்களையும் தாங்கிக் கொண்டார் கண்ணபிரான். 'போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும்… போகட்டும் கண்ணனுக்கே!’ என்பதை அறிந்தவர்கள்தானே நாம்!
இங்கே நம் வீடுகளிலும் தெருக்களிலும் மின் விளக்குகள் இருக்கின்றன. இருட்டத் துவங்கியதும் நாம் என்ன செய்கிறோம்? ஸ்விட்ச்சைப் போடுகிறோம். பளிச்சென்று விளக்கு எரிந்ததும் இருட்டு எங்கேயோ ஓடிவிடுகிறது.
இந்த மின்சாரம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? ஸ்விட்ச்சைப் போட்டதும் எப்படி விளக்கு எரிகிறது? மின்சாரம் எப்படி விளக்கைத் தொடுகிறது என்பதையெல்லாம் ஆராய்ந்து, தெரிந்து கொண்டா நாம் செயல்படுகிறோம்.
வெளி இருளை அகற்றுகிற மின்விளக்கையும், மின்சார விஷயங்களையும் நாம் ஊன்றிக் கவனிக்கிறோமோ இல்லையோ… நம் அக இருளை விரட்டி, நமக்குள் வெளிச்சம் பாய்ச்சுகிற விஷயத்தைக் கூர்ந்து கவனிக்கவேண்டாமா? அக இருளை விரட்டுகிற, உள்ளுக்குள் ஒளியேற்றுகிற பகவானை அறிந்து கொள்ளும் ஆவல் நமக்கு இருக்கிறதுதானே?!
வேதங்களை நமக்குத் தந்த ஞானிகளும் ரிஷிகளும் ஆச்சார்ய புருஷர்களும்… அவ்வளவு ஏன், ஆழ்வார் பெருமக்கள் முதலானவர்களும் ஆராய்ந்து, தெளிந்து, உணர்ந்து, சிலிர்த்து, நமக்கு அருளியிருக்கிறார்கள். நாம் ஆராய்வதற்குப் பதிலாக, நமக்காக, இந்த உலகுக்காக அனுபவித்திருக்கிறார்கள். அனுபவபூர்வமாக அறிந்ததை நமக்கு விரிவாக, அழகாகச் சொல்லியிருக்கிறார்கள்.
ஞானிகள் சொல்வதை ஆராயாமல் ஏற்றுக்கொள்கிற மனப் பக்குவத்துக்கு நாம் வரவேண்டும். ஏனெனில், பகவானைவிட அவரின் அடியவர்களே போற்றத்தக்கவர்கள் என்கின்றன, ஞான நூல்கள். 'எனக்குச் செய்ய வேண்டாம்; என் அடியவர்களுக்குப் பணிவிடை செய்யுங்கள். அவர்களுக்கு நீங்கள் செய்கிற பணிவிடைகளையும் சிஷ்ருஷைகளையும் எனக்குச் செய்ததாக ஏற்றுக்கொண்டு உங்களைக் காத்தருள்கிறேன்’ என்கிறார் பகவான்.
பகவான் ஸ்ரீகிருஷ்ணர், எப்போதுமே தன்னைத் தாழ்த்திக் கொள்கிறவர். அதே நேரம் தன் அடியவர்களை உயர்த்திவிடுபவர். 'கிருஷ்ணா…’ என ஒரு முறை அழைத்தால் போதும்… சேவகனைப் போல் ஓடோடி வருவார் நம்மிடம்.
எங்கே… ஒருமுறை மனதார, ஆழ்ந்த ஈடுபாட்டுடன் 'கிருஷ்ணா…’ என்று அழைத்துத்தான் பாருங்களேன்!
You must be logged in to post a comment.
30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ... |
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
சிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் அழகு. ஒருவரைப் ... |
1apostate