பிரதமர் நரேந்திரமோடி குறித்து தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்வைத்த விமர்சனங்கள் தரம்தாழ்ந்தவை என்று பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களுக்காக அக்கட்சியின் தலைவரும், தில்லி முதல்வருமான அரவிந்த்கேஜரிவால், தனது பேச்சு அடங்கிய ஒருவிடியோ பதிவில், ஆம் ஆத்மி கட்சியின் வளர்ச்சியை சகித்துகொள்ள முடியாமல் பிரதமர் மோடி எத்தகைய எல்லைக்கும் செல்வார்; என்னை கொல்லவும் அவர் தயங்க மாட்டார் என கேஜரிவால் தெரிவித்திருந்தார்.
இது நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், கேஜரிவாலின் இந்தப்பேச்சுக்கு பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேஜரிவால் தெரிவித்துள்ள கருத்துகள் மிகவும் தரம் தாழ்ந்தவை, பொறுப்பற்ற வகையிலும் உள்ளன. இதுஅவரது கீழ்த்தரமான மோதல்போக்கு அரசியலையே காட்டுகிறது.
ஊழல் உள்பட ஏதேனும் சர்ச்சைகளில் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சியினர் தினமும் அகப்படுவதால் ஏற்பட்டவிரக்தியில் அவர் இவ்வாறு கருத்துகளை தெரிவித்துவருகிறார்.
கேஜரிவாலின் இந்தப்பொறுப்பற்ற பேச்சால் உலகநாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான நன்மதிப்பு குறையக்கூடும். உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாட்டை கேஜரிவால் கேலிக் கூத்தாக்கியிருக்கிறார்.
பிரதமர் மோடி மீது நம்பிக்கை வைத்திருக்கும் கோடிக் கணக்கான மக்களின் உணர்வுகளையும் அவர் காயப்படுத்தியுள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றுவதே முதல்வர்களின் அடிப்படை கடமை. இதனைவிடுத்து, இவ்வாறு தரம்தாழ்ந்த அரசியலை கடைப்பிடிப்பதை கேஜரிவால் நிறுத்திக்கொள்ள வேண்டும் என அதில் பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.