தலித் சமூகத்தினருக்கு தனியார்துறையில் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசு தீவிரமுயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து மத்திய சமூக நீதித்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: தலித்துகளுக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்குதல், பதவிஉயர்விலும் இடஒதுக்கீடு அளித்தல், பெரிய அளவில் தலித்மாநாட்டை நடத்துதல், தலித் எழுத்தாளர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்தல் ஆகியவை அவற்றில் குறிப்பிடத்தக்க திட்டங்களாகும்.
இந்தத் திட்டங்களுக்கான செயல்வடிவத்தினை பிரத்யேகமாக பிரதமர் அலுவலகம் தயாரித்துள்ளது. பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோரின் ஆலோசனையின்படி இந்த செயல்வடிவம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மத்திய சமூக நீதித்துறை அமைச்சர் தவார் சந்த் கெலோட்டிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், தலித்துகளுக்கு தனியார்துறையில் இட ஒதுக்கீடு வழங்கும்திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துமாறும் பிரதமர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்தத் திட்டம் தொடர்பாக ஆய்வுசெய்ய உயர்நிலைக் குழு விரைவில் அமைக்கப்படவுள்ளது. இந்தக்குழுவானது முக்கிய வர்த்தகத் தொழிற்சங்கங்களுடன் இந்த விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தும். இதையடுத்து, இதுதொடர்பான அறிக்கையானது பிரதமர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்படும்.
Leave a Reply
You must be logged in to post a comment.