உணர்ச்சிபூர்வமான மஹாகவி சுப்ரமணிய பாரதியாரின் பாடல்களை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்குடன் கடந்த 23 ஆண்டுகளாக அவரது பிறந்த நாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடி வரும் வானவில் பண்பாட்டு மையம், இவ்வருடம் 24-ஆம் ஆண்டு விழாவை “பாரதி பெருவிழா தேசபக்திப் பெருவிழா”வாக டிசம்பர் 09, 10, 11 தேதிகளில் கொண்டாட ஏற்பாடு செய்துள்ளது.
அது தொடர்பாக இன்று 05/12/2017 பகல் 12.00 மணிக்கு மயிலை பாரதிய வித்யா பவன் சிற்றரங்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் வழக்கறிஞர் திரு ரவி பேசியதாவது.
பாரதியாரின் வழித் தோன்றல்கள் திரு ராஜ்குமார் பாரதி, திரு நிரஞ்சன் பாரதி இருவரும் டிசம்பர் 9-ஆம் தேதி இந்த ஆண்டு பாரதி திருவிழாவைத் தொடங்கி வைக்கிறார்கள். முதல் நாள் முதல் நிகழ்ச்சியாக மாலை 6 மணிக்கு “பாரதி யார்?” என்ற நாடகம் இடம்பெறும். புகழ்பெற்ற திரைக் கலைஞர் திரு வீணை பாலச்சந்தர் அவர்களின் புதல்வர் திரு எஸ்.பி.எஸ்.ராமன் இயக்க, இசைக்கவி ரமணன் அவர்கள் பாரதியாகத் தோன்றுவார். இடம் தி.நகர் பத்மா சேஷாத்ரி பால பவன் வளாகத்தில் அமைந்துள்ள பாரத் கலாச்சார் அரங்கம்.
ஒட்டு மொத்த திருவிழாவிற்கும் முத்தாய்ப்பாக இரண்டாம் நாள் 10.12.2017 ஞாயிற்றுக் கிழமை நிகழ்வில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு குடியரசு துணைத் தலைவர் திரு வெங்கையா நாயுடு வருகை புரிகிறார். அவரோடு கூட மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோஹித், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு கே. பாண்டியராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர்.
முன்னாள் மத்திய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் இயக்குநர் பத்மஸ்ரீ திரு டி.ஆர்.கார்த்திகேயன் அவர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் “பாரதி விருது” வழங்கி கௌரவிப்பார்.
திருவையாற்றில் தியாக பிரம்மத்திற்கு உற்சவம் நடத்தி பஞ்ச ரத்ன கீர்த்தனைகள் இசைப்பது போலவே, மஹாகவி பாரதிக்கும் இசை வைபவம் நடத்தலாமே எனத் தன் விருப்பத்தை வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர், பொற்றாமரைத் தலைவர் திரு இல.கணேசன் அவர்களது கூற்றுப் படியே, சென்ற ஆண்டு முதல் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் “பாரதி ஐந்து” – பாரதியார் பஞ்ச ரத்ன இசை நிகழ்ச்சியில் இந்த ஆண்டு முன்னணிப் பாடகர்கள் திரு ராஜ்குமார் பாரதி, திருமதி சுதா ரகுநாதன், திருமதி நித்யஸ்ரீ மஹாதேவன், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், திரு உன்னி கிருஷ்ணன், திரு ஓ.எஸ்.அருண், உள்ளிட்ட 100 இசைக் கலைஞர்கள் பங்கேற்பர். பத்ம பூஷண் டாக்டர் உமையாள்புரம் திரு கே.சிவராமன் தலைமை வகிப்பார். தொடர்ந்து 12 மணிக்கு நடன நிகழ்ச்சி இடம்பெறும்.
இரண்டாம் நாள் இரண்டாம் பாதியிலிருந்து, 10.12.2017 ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 2 மணி முதல் நிகழ்ச்சிகள் திருவல்லிக்கேணி பாரதியார் இல்லத்தில் நடந்தேறும். 2 மணிக்கு நூற்றுக்கணக்கான இளஞ் சிறார்கள் பங்கேற்கும் ஓவியப் போ, மாறுவேடப் போட்டி நடத்தப்படும். மாலை 5 மணிக்கு அமரர் எம்.பி.எஸ். சென்னை இளைஞர் குழுவினரின் “பாரத சமுதாயம் வாழ்கவே” சிறப்பு சேர்ந்திசை நிகழ்ச்சி.
மாலை 6 மணிக்கு நாரத கான சபா நாட்டியரங்கம் வழங்கும் “அழகெனும் தெய்வம்” நடன நிகழ்ச்சி. 7 மணிக்கு, “தெய்வம் நீயென்றுணர்” செல்லின் செல்வர் திரு சுகி சிவம், மரபின் மைந்தன் திரு முத்தையா, திருமதி பாரதி பாஸ்கர் பங்கேற்கும் சிறப்புக் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடாகி இருக்கிறது.
மஹாகவி பாரதி மனத்தளவில் மிகவும் ஆசைப்பட்டு அவருக்கு வாய்க்காமல் போன ஜதி பல்லக்கு ஊர்வலம் மூன்றாம் நாள் 11.12.2017 திங்கட் கிழமை காலை பாரதியாருக்கு சால்வை, பொற்பை சமர்ப்பித்து திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோவில் முன்புறம் தொடங்கி, பாரதியார் இல்லம் வந்தடையும்.
காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை கவிப் பொழிவு. பாரதி மீது பிரியம் கொண்ட பல்வேறு அமைப்பினர் கவிதை வாசிப்பார்கள்.
முனைவர் வ.வே.சு எழுதி, டாக்டர் ஸ்வர்ணமால்யாவின் ரங்கமந்திரா குழுவினர் அறங்கேற்றும் “வந்தே மாதரம்” புதுமையான நாட்டிய நாடகம் மாலை 6 மணிக்கு இடம்பெறும்.
மாலை 7 மணிக்கு “புதுமைப் பெண் – ஒரு பரிணாமப் பார்வை” விழாப் பேருரை நிகழ்த்துபவர் கோவையைச் சேர்ந்த திருமதி ஜெயந்திஸ்ரீ பாலகிருஷ்ணன். அத்துடன் இந்த வருடத்திற்கான தேசபக்திப் பெருவிழா நிறைவுறும்.
விழாவின் வெற்றிக்கு புரவலர்கள் தரும் பங்களிப்பு அளப்பரியது. அனைவருக்கும் நன்றி.
உணர்ச்சிப் பிழம்பான பாரதியின் சிந்தனைகளை உலகெங்கும் கொண்டு செல்ல அச்சு மற்றும் காட்சி ஊடகத்தினராகிய உங்களது ஒத்துழைப்பை நாங்கள் பெரிதும் எதிர்பார்க்கிறோம். இந்த “பாரதி பெருவிழா தேசபக்திப் பெருவிழா” குறித்த முன்னோட்டத்தையும், செய்திகளையும் வெளியிட்டுத் துணை புரிய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் வழக்கறிஞர் திரு ரவி பேசினார்.
பார் போற்றும் புலவன் பாரதிக்கு மயிலையில் விழா எடுப்பதைப் பெருமையாகக் கருதுவதாக சட்டமன்ற உறுப்பினர் முனைவர் திரு ஆர்.நட்ராஜ் (இ.கா.ப. ஓய்வு) மகிழ்ச்சி தெரிவித்தார்.
பொற்றாமரைத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு இல.கணேசன் பேசும் போது, “நாடகத்தால், நடனத்தால், அவருடைய ஜதி பல்லக்கைச் சுமந்து கொண்டு ஊர்வலத்தால், கவிதையால், அதோடு கூட சொற்பொழிவால் அஞ்சலி செலுத்துகின்ற இந்தத் திருவிழா என்பது ஏதோ ஒரு இயக்கதால் நடத்தப்படும் விழா அல்ல. சென்னையிலும், அதன் சுற்று வட்டாரத்திலும் இருக்கும் பாரதி பக்தர்கள் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்க வேண்டும்.”
“மகாமகம் தேதியை அறிவிக்கிறார்கள். அழைப்பதில்லை. கும்ப மேளா தேதியையும் அறிவிக்கிறார்கள். அழைப்பதில்லை. தெரிந்த மாத்திரத்தில் எப்படி லட்சக் கணக்கான பக்தர்கள் கூடுகிறார்களோ, அது போல பாரதி அன்பர்களுக்கு இது ஒரு மகாமகம், இது ஒரு கும்பமேளா, இது ஒரு பாரதி திருவிழா. எனவே அனைவரும் குடும்பத்தோடு வந்து இந்த மூன்று நாள் நிகழ்வுகளிலும் கலந்து கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் – பொற்றாமரைத் தலைவர் திரு இல.கணேசன், வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் – வழக்கறிஞர் திரு ரவி, திரு பி.என்.வேதநாராயணன் (இ.ஆ.ப. ஓய்வு) சட்டமன்ற உறுப்பினர் – முனைவர் திரு ஆர்.நட்ராஜ் (இ.கா.ப. ஓய்வு), பாரதிய வித்யா பவன் இயக்குநர் திரு என்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர்.
கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ... |
இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.