இந்த வழக்கில் ஏற்கெனவே யாகூப் மேமன், பாலிவுட் நடிகர் சஞ்சய்தத் உள்ளிட்ட 100 பேருக்கு கடந்த 2007-ல் தண்டனை விதிக்கப்பட்டது. யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். இந்தி நடிகர் சஞ்சய்தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைகாலம் முடிந்து விடுதலையானார்.
இவ்வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட முஸ்தபாதோசா, அபு சலீம் மற்றும் கரீமுல்லா கான், பிரோஸ் அப்துல் ரஷீத் கான், ரியாஸ் சித்திக், தாஹிர்மெர்ச்சன்ட் ஆகியோர் மீதான வழக்கு தனியாக நடத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. நிழல் உலகதாதா தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி பரூக்தக்லா கைது செய்யப்பட்டான். துபாயில் கைதுசெய்யப்பட்ட தக்லா பின்னர் இன்று காலை டெல்லி கொண்டு வரப்பட்டான்.
அவரது முழு பெயர் முஸ்தக் முகமது மியா என்ற பரூக் தக்லா (வயது 57) என்பதாகும். மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதிகளுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்துகொடுத்தாக இவன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டான். பின்னர் துபாய் தப்பிச் சென்ற தக்லா அங்கிருந்து பாகிஸ்தான் சென்று ஆயுதப் பயிற்சி பெற்றதாகவும் கூறப்படுகிறது. தக்லாவை மும்பை நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்த உள்ளனர்.
இதை தொடர்ந்து தாவூத் இப்ராஹிம் விரைவில் கைது செய்யப்படுவான் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாவூத்தை சர்வதேச தீவிரவாதி என அமெரிக்கா அறிவித்தபின், அவனுக்கு ஐ.நா.வும் தடை விதித்துள்ளது. இதனிடையே தாவூத் இந்தியா திரும்பி சரணடைய விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Leave a Reply
You must be logged in to post a comment.