உ.பி, பிகார் மாநிலங்களில் 3 மக்களவைத் தொகுதிகளுக்கு (கோரக்பூர், புல்பூர், அராரியா) நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அடைந்துள்ள தோல்வி, அக்கட்சிக்கு எச்சரிக்கை விடுப்பதாகவே அமைந்துள்ளன.
இவற்றில் கோரக்பூரும், புல்பூரும் பாஜக வென்ற தொகுதிகள். அவற்றை சமாஜ்வாதி கைப்பற்றியுள்ளது. பிகாரில் ஆர்.ஜே.டி. ஏற்கனவே வென்ற அராரியா தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது அங்கு சட்ட சபைத் தொகுதிகள் இரண்டில் நடைபெற்ற இடைத் தேர்தலில் (ஜெகனாபாத்- ஆர்.ஜே.டி, பாபுவா- பாஜக) இரு கட்சிகளும் தங்கள் தொகுதிகளைத் தக்கவைத்துள்ளன.
இந்த ஆண்டு இறுதியிலோ, அடுத்த ஆண்டோ நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இத்தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு எச்சரிக்கையாக அமைந்துள்ளன. ஏற்கனவே ராஜஸ்தானில் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக தோல்வி அடைந்துள்ள நிலையில், முக்கியத்துவம் மிகுந்த இரு மாநிலங்களில் பாஜக கூட்டணி தோற்றிருப்பது நல்லதல்ல.
இந்த தோல்விக்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்ததே காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. உ.பி.யில் எதிரெதிர்த் துருவங்களான சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜக எதிர்ப்பு என்ற இலக்குடன் இணைந்து செயல்பட்டதும் இந்தத் தேர்தல் முடிவுக்கு காரணம். அதாவது, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்தால் பாஜக கூட்டணியின் வெற்றியைத் தடுக்க முடியும் என்பது நிரூபணம் ஆகி இருக்கிறது. எனவே வரும் நாட்களில் பாஜக தனது தேர்தல் வியூகம் குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ஆந்திரத்தில் தெலுங்குதேசம் கட்சியும், மஹாராஷ்டிரத்தில் சிவசேனை கட்சியும் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேற நேரம் பார்த்துக் காத்திருக்கின்றன. கோவாவிலும், பஞ்சாபிலும் கூட கூட்டணி அதிருப்திக் குரல்கள் இனி ஓங்கி ஒலிக்கும். கூட்டணிக் கட்சிகளுக்கு இத்தேர்தல் முடிவுகள் பாஜக மீது அவநம்பிக்கையை அளிக்கும். மோடி அலை ஓய்ந்துவிட்டது என்று குறைந்தபட்சம் கர்நாடக மாநில சட்டசபைத் தேர்தல் முடியும் வரை எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்யும். பாஜக கூட்டணி சறுக்கி இருப்பது குறித்து மோடி சிந்திக்க வேண்டும்.
வெற்றிகளுக்கு பிரதமர் மோடி காரணம் என்பதுபோலவே, இந்தத் தோல்விக்கும் அவரே பொறுப்பேற்க வேண்டும். மக்களிடம் ஏற்பட்டுள்ள அதிருபதியின் பின்புலத்தை ஆராய்ந்து சரிப்படுத்தும் கடமை மோடிக்கும் அமித்ஷாவுக்கும் உண்டு.
இந்த இடைத்தேர்தலில் மூன்று தொகுதிகளிலும் பாஜக வென்றிருந்தால், வாக்குப் பதிவு இயந்திரமும் தேர்தல் ஆணையமும் எவ்வாறெல்லாம் தூற்றப்பட்டிருக்கும் என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பாஜக தோற்றுவிட்டதால், இனி மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகள் பழி கூறுவது இயலாது.
இனியும் வடகிழக்கு மாநில வெற்றிகளை அசைபோட்டபடி அசமந்து இருந்துவிடல் கூடாது. இந்தத் தோல்வியை எச்சரிக்கையாகக் கொண்டு பாஜக விழிப்படைய வேண்டும். பாராட்டுப் பத்திரம் வாசிப்போரும், கூஜாக்களும் பாஜகவில் பெருகி வருகின்றனர். அவர்களைத் தள்ளிவைக்கவும், உண்மையான களப்பணியாளர்களை கட்சியில் செயல்படச் செய்யவும் வேண்டிய நேரம் இது.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், பிகார் முதல்வர் நிதிஷ்குமாரும், தங்கள் அரசுகள் மீதான மதிப்பீடாக இதைக் கொள்வதில் தவறில்லை. மக்களவை தொகுதி இடைத்தேர்தல் மத்திய அர்சு மீதான மதிப்பீடாயினும், மாநில அரசுக்கும் இதில் பங்குண்டு. இடைத் தேர்தலில் வாக்குப் பதிவு குறைந்ததும் பாஜகவின் தோல்விக்குக் காரணம். இதைச் சரிசெய்யவும் நடவடிக்கைகள் தேவை.
தோல்வி அடைந்தோருக்கு அறிவுரைகள் கூறுவது போலவே, வெற்றி பெற்றோருக்கு வாழ்த்துகள் கூறுவதும் பண்பாடு. இதுவே மக்களாட்சியின் மாண்பு. வென்றோருக்கு வாழ்த்துக்கள்!
பாஜகவுக்கு எதிரான வலுவான கூட்டணியை மாநிலங்களில் கட்டமைக்க இத்தேர்தல் முடிவுகள் உதவி உள்ளன. அதேசமயம் காங்கிரஸ் கட்சி எங்கும் சோபிக்கவில்லை. எனவே வரும் நாட்களில் மூன்றாவது அணி அல்லது மாநிலக் கட்சிகளின் அணியின் கரம் ஓங்கும். வரும் நாட்களில் இந்திய அரசியல் காரசாரமாக இருக்கும் என்பது நிச்சயம்.
நன்றி முரளி முத்துவேலு
நெல்லிக்காய் தினமும் ஒன்று சாபிட்டால் முடி கருமையாக வளரும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு ,வேர், காயவைத்து ... |
சரியான நேரத்தில் தடுப்பூசி போடாப்படாத குழந்தைகள், வெயில் காலங்களில் அம்மை தொற்றுக்கு உள்ளாகிறார்கள் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.