அந்தச் சிறுவனை கட்டைவண்டியிலிருந்து இறக்கிவிட்ட பெரிய மனதுக்காரர் அறிந்திருக்க மாட்டார், தான் ஒரு மாபெரும் தலைவரின் உருவாக்கத்துக்கு அடிப்படைக் காரணம் என்று.
ஆரம்பப் பள்ளியில் அனைவரும் மரப்பலகைகளில் அமர, தான் மட்டும் வீட்டிலிருந்து கோணிப்பை கொண்டுவரும்
நிர்பந்தத்தின் அவசியத்தை அறியாப் பாலகன் அறிந்தபோது அவன் கண்கள் உகுத்த கண்ணீரின் காரணத்தை மட்டுமல்ல- பேராசிரியர்களின் பேராசானாக, சட்ட வல்லுநராக அவன் வருங்காலத்தில் மலரப் போவதையும்
அந்த ஆசிரியர்கள் அறிந்திருக்கவில்லை.
அந்த மாணவனுக்கு வகுப்பு இடைவேளையில் குனிந்து நின்று இரு கைகளை ஏந்தச் செய்து
தண்ணீர் ஊற்றிய பள்ளி உதவியாளருக்குத் தெரியாது,தீண்டாமையால் அவதிப்படும் அந்த மாணவன்
எதிர்காலத்தில் ‘சாதியை ஒழிக்கும் வழி’யைக் கண்டறிவான் என்று.
கல்லூரியில் அந்த இளைஞரை மட்டும் கீழ்த்தரமாக நடத்திய சக மாணவர்களுக்குத் தெரிந்திருக்காது,
பொருளாதாரம், சட்டம், அரசியல் அறிவியல், தத்துவம், வரலாறு எனப் பல துறைகளில் அவன் பின்னாளில்
மாபெரும் நூல்தொகையைப் படைப்பான் என்று.
மன்னரின் விருப்பத்தால் பரோடா அரண்மனையில் பணியில் சேர்ந்த அந்த ஊழியரை விடாது துரத்திய
அதிகாரபீட ஈனர்களுக்குத் தெரியாது, அவன் உலகம் முழுவதும் வரவேற்கப்படப் போகும்
ஒளிமயமான நிகழ்வு.
பந்தர்பூர் கோயிலுக்கு யாத்திரை செல்ல எண்ணிய பிரிய மனைவி ரமாவின் இறுதி ஆசை மரணித்தபோது
அந்த இளம் கணவன் எடுத்த சபதம் போல, பின்னாளில் புதிய யாத்திரைத் தலமாக நாகபுரியில் ‘தீக்ஷா பூமி’யை உருவாக்குவான் என்று அந்தக் கோயிலின் வைதீகர்கள் நினைத்திருக்க மாட்டார்கள்.
தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனியுரிமை கோரி வட்டமேஜை மாநாட்டின்போது காந்தியுடன் மோதிய
அந்த இளம் தலைவரை கடுமையாக விமர்சித்த சாதி அரசியல்வாதிகள் அறித்திருக்க நியாயமில்லை,
மகாத்மாவே அவரை சுதந்திர இந்தியாவில் சட்ட அமைச்சராக்கப் பரிந்துரைப்பாரென்று.
எருமைகளும் பன்றிகளும் கும்மாளமிடும் மஹாத் குளத்தில் கீழ்சாதி என்பதால் நீரெடுக்க மறுக்கப்பட்ட
தன் மக்களுக்காக சத்தியாக்கிரஹம் செய்த அந்த நாயகனைத் தாக்கத் துடித்த மேல்சாதி இந்துக்களுக்குத் தெரியாது, அவர் மிக விரைவில் அனைவருக்கும் பொதுவான ‘புதிய மனு ஸ்மிருதி’யை உருவாக்கப் போகும் வரலாறு!
பணமும், பதவியும், ஆதரவும் நல்கி,காயங்களுக்கு மருந்திட்டு விலைபேசி,அவரை எப்படியேனும் தங்கள் வலைக்குள்வீழ்த்தத் துடித்த அயல்மத நேயர்கள் அறிய நியாயமில்லை,அவரது உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த தேசபக்தியின் அனல்.
எந்த மக்களால் அவமதிக்கப்பட்டாரோ,எந்த மக்களால் புறக்கணிக்கப்பட்டாரோ,எந்த மக்கள் தீட்டுக்காக முகம் சுழித்தார்களோ,அதே மக்களின் நலனுக்காக-அவர்களும் வாழும் தேசத்தின் ஒருங்கிணைந்த நலனுக்காக-
அவர் படைக்கப் போகும் அரசியல் சாசனத்தை பரிதாபத்துக்குரிய அந்த மக்கள் அறிந்திருக்கவில்லை.
படித்து பட்டங்கள் பெற்று, உயர் பதவிகள் அடைந்தபோதும்அவரை அங்கீகரிக்க மறுத்து அடம் பிடித்த
மரத்துப்போன சமூகத்துக்கு அவர் தந்தபௌத்த மதமாற்ற சவுக்கடியின் வலிஇன்னமும் கூட உணரப்படவில்லை.
அவரது கண்களில் சுடர்ந்த ஒளியை தரிசித்தவர்கள் சிலரே.நமது நன்றிக்குரிய அவர்களும் இல்லாதிருந்தால்
இந்த நாடு என்னவாகி இருக்கும்?அந்தக் காலத்தில் மட்டுமல்ல, இந்தக் காலத்திலும்கூட,இந்தக் கேள்வியை ஏளனமாகப் பார்ப்பவர்களுக்குப் புலப்படாது அந்த மகத்தான தலைவரின் தொலைநோக்குச் சிந்தனை.
பாரதத்தில் மறக்கப்பட்ட மகான் புத்தரை தனது நவயாண மார்க்கத்தால் புத்தெழுச்சி கொள்ளச் செய்த
அந்த நவீன போதிசத்துவரின் பெருமையை பகுத்தறிவாளர்களோ, மதவாதிகளோ, அறிவுஜீவிகளோ
ஜீரணிக்க முடியாது.
ஒடுக்கப்பட்ட சகோதரர்களின் வீழ்ச்சியைத் தடுக்க 22 அம்ச உறுதிமொழித் திட்டம் அளித்தவர்;
எழுதுகோலை ஆயுதமாக்கியதால், முரண்பட்டவர்கள் ரத்தம் சிந்துவதைத் தவிர்த்தவர்; தேசப் பிரிவினையை எதிர்த்தவர்; காஷ்மீர விசேஷ அந்தஸ்தை மறுத்தவர்; இட ஒதுக்கீட்டுக்கு காலக்கெடு விதித்தவர்; புராணக் கொடுமைகளை எதிர்த்தது போலவே பிற மதங்களின் சீரழிவையும் விளக்கியவர்; ஏக்கப் பெருமூச்சுடன் தவித்த தோழர்களுக்கு கல்வியே உயர்வுக்கு வழி என்று வாழ்வனுபவத்துடன் போதித்தவர்; மத்திய ரிசர்வ் வங்கி உருவாகக் கருவானவர்; தீண்டாமைக் கொடுமையை சட்டரீதியாக வென்றவர்; பாகுபாடுகளுக்கு எதிரான குரல்களுக்கு முகமானவர்… அவரது பன்முக ஒளிவீசும் ரத்தின ஜாலத்தை இன்னமும் முழுமையாக நாம் உணர்ந்தோமில்லை.
அவரைப் போல ஒடுக்கப்பட்டால், அவரைப் போல நசுக்கப்பட்டால், அவரைப் போல புறக்கணிக்கப்பட்டால் மட்டுமே அவரது தாபம் புரியும். ஆனாலும் அவற்றை மீறி வென்ற- சிரத்தையின், ஒழுக்கத்தின், விடாமுயற்சியின்
வெளிப்பாடான அவரது ஞானமும், சீறியெழுந்த ஆற்றலின் உத்வேகமும் புரிய, நீங்கள் அண்ணலாக வேண்டும்.
ஈசனை அறிய வேண்டுமானால், ஈசனாவதே வழி.
அம்பேத்கரை அறிய வேண்டுமாயினும்
அதுவே வழி!
.விஜயபாரதம் தீபாவளி மலர்- 2015
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.