பாஜவின் மாபெரும் பிதாமகரும், 3 முறை பிரதமர்பதவியை வகித்தவருமான அடல்பிஹாரி வாஜ்பாய் டெல்லியில் இன்று மரண மடைந்தார். அவருக்கு வயது 94.
நீண்டகாலமாக உடல்நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், மருத்துவ மனையிலுமாக சிகிச்சை பெற்று வந்தார் வாஜ்பாய் இந்த நிலையில் இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வாஜ்பாய் உயிர்பிரிந்தது.
1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம்தேதி குவாலியரில் பிறந்த வாஜ்பாய், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்தியசுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1942-ம் ஆண்டு சிறையில் அடைக்கப் பட்டார். தீவிர இந்துத்துவா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர், 1957-ம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து இன்றைய பாஜக.வுக்கு முன்னோடி அமைப்பான பாரதிய ஜனசங் எம்.பி.யாக முதன் முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
9 முறை லோக்சபா, 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும்சவாலாக இருந்தார். 1975-ம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்து போராடி, கைதாகி சிறைசென்ற அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார். 1970களில் பாரதிய ஜன சங், ஜன சங்கமானது. பின்னர் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதாகட்சி உதயமானது ஜனசங்கமும் அதில் சங்கமமானது.
அப்போது 1977களின் இறுதியில் அமைக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றினார் வாஜ்பாய். பின்னர் ஜனதா கட்சி உடைய பாரதிய ஜனதா கட்சி உதயமானது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார் வாஜ்பாய். காங்கிரஸுக்கு மாற்று சக்தியாக பாஜக வளரத்தொடங்கியது. இந்தியாவின் 10-வது பிரதமராக 1996-ம் ஆண்டு பதவி ஏற்றார். எனினும், நாடாளுமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் போனதை தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.
1998-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக. தலைமையிலான தேசியஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, இரண்டாவது முறை பிரதமராக பதவி ஏற்றார். 1999-ல் மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், பொக்ரான் அணுகுண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இந்தவெற்றிகளின் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலகநாடுகள் அறியச் செய்தார். பாகிஸ்தானுடனான நல்லுறவை ஏற்படுத்த பேருந்து போக்குவரத்து, அமைதிபேச்சு வார்த்தை என பல்வேறு நடவடிக்கைகளை வாஜ்பாய் எடுத்தார்.
2004-ம் ஆண்டு பிரதமராக தனது 5 ஆண்டுகால பதவியை நிறைவுசெய்த வாஜ்பாய், 2005-ம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வுபெற்றார். கடந்த 2002-ல் குஜராத்தில் கோத்ரா படுகொலைகள் நடைபெற்றபோது மோடி அங்கே முதல்வராக இருந்தார். அப்போது, யாராக இருந்தாலும் ராஜதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியது பெரும்பாராட்டைப் பெற்றது. நாட்டிலேயே மிகவும் உயரியதான பாரதரத்னா விருது வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது.
மரபுகளை புறந்தள்ளி ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச் சென்று சிறப்புக் குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார். அனைத்து கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர் வாஜ்பாய்.
Leave a Reply
You must be logged in to post a comment.