கடந்த 5-ஆம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 மற்றும் 35A சரத்துக்களை விலக்கி இந்திய ஜனாதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் முறைப்படி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பல கட்சிகள் பாரதிய ஜனதா கட்சியின் இந்த முடிவை வரவேற்று இருக்கின்றன; நாடாளுமன்றத்திலும் ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. திமுக உள்ளிட்ட சில கட்சிகள் எதிர்த்து பேசியுள்ளன.
பொதுவாக, 370 சரத்தில் வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரங்களை நீக்கியதை முறைப்படி செய்யவில்லை என்ற ஒர் கருத்தும், காஷ்மீர் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதி மீறப்பட்டு உள்ளது என்ற மற்றொரு கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
வாக்குறுதி மீறப்பட்டுள்ளது என்று கூறுபவர்கள் காஷ்மீரையும், காஷ்மீர் மக்களையும் பரந்துபட்ட இந்திய தேசத்தில் ஓர் அங்கமாகவும், இந்திய கலாச்சாரத்திற்கு ஆட்பட்டவர்கள் என்பதையும் மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு பேசுகிறார்கள் என்பதே பொருளாகும்; பாகிஸ்தானையும், பங்களாதேஷையும் இந்தியாவுடனான பூகோள ரீதியான மற்றும் மரபு ரீதியான உறவுகள் என்ன என்பதை ஆழமாக சிந்திக்காமல் இருப்பதே, இது போன்ற சிந்தனைகள் ஏற்படுவதற்கான காரணங்கள் ஆகும். பாரத தேசம் வடக்கு மற்றும் மேற்கே ஆப்கானிஸ்தான் வரை பரந்து விரிந்து இருந்ததை பலர் நினைவு கொள்வதில்லை.
வளமிக்க இந்தியாவை சுரண்ட பல அந்நிய படையெடுப்புகள் நடந்தேறியுள்ளன. மாவீரன் அலெக்சாண்டர் இந்தியாவின் மேற்கு பகுதியின் விழிம்பு பகுதிக்கு வந்து விட்டு திரும்பி போய்விட்டார்;
முகலாய படையெடுப்புகள் இந்திய தேசத்தை சின்னாபின்னமாக்கியது; அவர்களுடைய ஈவிரக்கமற்ற தாக்குதல்கள் இந்திய சமுதாயத்தை நிலைகுலைய வைத்தன; இந்தியாவை அப்போது ஆண்டுகொண்டிருந்த குறுநில அரசுகளுக்கும், பேரரசுகளுக்கும் இடையே முறையான ஒருங்கிணைப்பு இல்லாமல் இருந்தது;
தங்களுக்கு இதுபோன்ற எதிரிகள் வெளியிலிருந்து உருவாகுவார்கள் என்பதை உணராமல் இருந்து; போர் என்று வந்தவுடன் அனைத்து மக்களையும் திரட்டி போராடாமல் விட்டது; ஈவிரக்கமற்று கொன்று குவித்து அச்ச உணர்வை ஊட்டி ஆட்சியை அபகரிப்பு செய்த அந்நிய ஆக்கிரமிப்பாளர்களிடத்திலும் நீதி, நேர்மை, போர் விதிமுறைகளை தர்மத்தின் அடிப்படையில் கையாள நினைத்த இந்திய அரசர்கள் நிலைகுலைந்து போனார்கள்;
பல்லாயிரம் ஆண்டு காலம் பேணிப் பாதுகாக்கபட்ட நம்முடைய பாரம்பரிய சொத்துக்கள் அழிக்கப்பட்டன; இந்திய கலாச்சாரத்தின் அடையாளமாக விளங்கிய பல கோவில்களில் சொத்துக்கள் கொள்ளை அடிக்கப்பட்டன, சூறையாடப்பட்டன; குஜராத் – சோமநாதர் கோவில் தொடங்கி, தெற்கே மீனாட்சி அம்மன் கோவில் வரையிலும் விலை மதிப்பற்ற தங்கம், வைர ஆபரணங்களை கொள்ளை அடிப்பதே அவர்களுடைய குறியாக இருந்தது.
ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு முன்பு மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுடைய பிரச்சனைகளுக்காக, அதாவது, 1999-ஆம் ஆண்டு இந்தியாவினுடைய மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்த இந்திய உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதியரசர் வெங்கடாச்சலய்யா அவர்களை நான் பலமுறை சந்திக்கக்கூடிய வாய்ப்பு நேர்ந்தது.
பல்வேறு விஷயங்களை பற்றி பேசியபோது, ஆப்கானிஸ்தானியர்கள் இந்தியாவிற்குள் நுழைந்த விதம், அவர்கள் இந்திய ஆண்களையும், பெண்களையும் வெட்டி வீழ்த்திய கொடூர வரலாற்று சம்பவங்களை அவர் சொன்ன விதம் அன்றே ’’பசுமரத்தாணி போல’’ பதிந்தது.
பல்லாயிரக்கணக்கானவர்களை கொன்று குவித்து அதன் மூலமாக பாரத மக்களிடத்தில் அச்சம் ஊட்டப்பட்டு, ஏறக்குறைய 1000 வருடம் முகலாயர்களுடைய ஆட்சி இம்மண்ணிலே காலூன்றியது.
எனினும் முற்றாக இந்திய அரசுகள் துடைத்தெறியப்பட்டு விட்டதாக கருதமுடியாது. ஆங்காங்கே பல அரசுகள் தங்களை தக்கவைத்துக் கொண்டன. அவர்கள் இந்திய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும், வழிபாட்டையும் தூக்கி பிடித்தார்கள் என்று சொன்னால் மிகையாகாது! அவர்களுடைய ஆட்சியில் எல்லாமே நியாயமாகத்தான் நடந்திருக்கும், மக்கள் குறையற்று வாழ்ந்திருப்பார்கள், அங்கு ஜனநாயகம் பூத்து குலுங்கியது என்றெல்லாம் பேச வரவில்லை; அவர்களுடைய குறைபாடுகளை வேறு தளத்தில் பேசலாம்.
ஆனால், பாரம்பரிய இந்தியாவினுடைய பண்பாடுகளை, மரபுகளை, அடுத்த தலைமுறைகளுக்கு கடத்திச் செல்வதில் அவர்களுடைய பங்களிப்பு மறக்க முடியாது என்ற அடிப்படையில் அதை நினைவு கூர்கிறோம்.
முகலாயர்கள் வாள்முனையில் தான் பல இந்திய அரசுகளை வீழ்த்தினார்கள்; பல கோவில்களை இடித்து தரைமட்டம் ஆக்கினார்கள்; அவற்றை மசூதி ஆக்கிக் கொண்டார்கள். ஆனால், அந்தத் தொல்லைகளிலும் எல்லைகளைத் தாண்டி பல கோடி மக்கள் பாரதத் தாயின் புதல்வர்களாக அந்த பண்பாடு மாறாமல் இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.
உலகில் பல கண்டங்களும், நாடுகளும் இருக்கின்றன என்பது உண்மை; ஐரோப்பிய நாடுகளில் அந்த பெருமை ரோமுக்கு உண்டு, கிரேக்கத்துக்கு உண்டு; ஆசியாவில் சிந்துச் சமவெளி கங்கை நாகரிகத்தைக் கொண்ட இந்தியாவிற்கு உண்டு, பழம்பெரும் தேசமான சீன நாட்டுக்கு உண்டு; எனவே, இந்தியா என்றால் இந்தியாவினுடைய பாரம்பரியமும், பண்பாடும் தான் அதன் அடையாளங்கள். இந்தியா என்றால் இந்திய பண்பாடு என்று சொல்கிறோம். அதை இந்து என்றும் சொல்லலாம், அதை மதமாகவும் பார்க்கலாம்.
ஆயிரமாண்டு அந்நிய படையெடுப்பு கணிசமான பாரதத்தாயின் புத்திரர்களை வேற்று மதத்திற்கு கபளீகரம் செய்துவிட்டது. அதன் விளைவுகள் ஆங்கிலேயர்களிடத்திலிருந்து விடுதலை பெறுகிற பொழுது பூதாகரமாக வெடித்தது. நம்முடைய வழிபாடுகள் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், பண்பாட்டால், பாரம்பரியத்தால் நாம் பாரதத்தாயின் புத்திரர்கள் என்ற உணர்வு மழுங்கடிக்கப்பட்டது. மதம் என்ற விஷம் தலைக்கேற்றப்பட்டது.
ஆங்கிலேயர்களிடத்தில் இருந்து ஒட்டுமொத்தமான முழுமதியாக விடுதலை பெற்றிருக்க வேண்டிய பாரத தேசம் மதத்துடைய அடிப்படையில் உடைக்கப்பட்டது. அன்று விடுதலைக்காக தலைமை தாங்கியவர்களால் ஏன் ஒன்றுபட்ட தேசத்தை முழுமையாக பெற முடியவில்லை என்று தெரியவில்லை.
ஏறக்குறைய 300 ஆண்டுகள் நம்மை சுரண்டிய ஆங்கிலேயர்கள் நம்மை விட்டுச் செல்கின்ற போது கூட நாம் நிம்மதியாக இருக்கட்டும் என்று அவர்கள் நினைத்ததாகத் தெரியவில்லை. இந்தியாவினுடைய எல்லைக்கோடுகளை துல்லியமாக அளந்து கொடுப்பதில் தவறிவிட்டார்கள்.
ஐதராபாத், காஷ்மீர் மற்றும் ஜீனாகத் உள்ளிட்ட மூன்று அரசுகளை அவர்களுடைய விருப்பத்திற்கு விட்டு விட்டார்கள். ஹைதராபாத் தென்னிந்தியாவின் மையப் பகுதியிலும், காஷ்மீர் இந்தியாவின் வடக்குப் பகுதியிலும், ஜீனாகத் இந்தியாவின் மேற்குப்பகுதியான குஜராத்திலும் இருந்த சமஸ்தானங்களாகும்.
பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழ் அல்லாத, மன்னர் ஆட்சியின் கீழ் இருந்த அந்த மூன்று சமஸ்தானங்களும் தங்களுடைய விருப்பப்படி நடந்து கொள்ளலாம் என்ற வழிகளையும் ஆங்கிலேய அரசே முடிவு செய்துவிட்டது. அவர்கள் தனி ராஜ்ஜியமாகவும் இருந்து கொள்ளலாம், பாகிஸ்தானுடனோ அல்லது இந்தியாவினுடனோ விருப்பப்படி சேர்ந்து கொள்ளலாம் என்று ஆங்கிலேயர்களே முடிவு செய்துவிட்டார்கள்.
இவ்வளவு பெரிய இந்திய தேசத்திற்குள், இரண்டு, மூன்று மாவட்ட அளவிலேயே எல்லைகளைக் கொண்ட அரசுகள் செயல்படுவது எங்ஙனம் சாத்தியம் என்று கூட ஆங்கிலேய அரசு ஏன் சிந்திக்கவில்லை? என்று தெரியவில்லை. சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட்பேட்டன் அந்த மூன்று அரசுகளையும் இந்தியாவுடன் சேர்த்து விட்டிருந்தால் புத்திசாலித்தனமான நடவடிக்கையாக இருந்திருக்க முடியும்.
அது மட்டுமல்ல, பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் எல்லைக்கு வராமல் இருந்த 543 சமஸ்தானங்களையும் அப்படியே விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அவர்கள் இந்தியாவில் விட்டுச் சென்றது நாடு அல்ல; வெறும் கூடுதான். இப்பொழுது அதனுடைய சூழ்நிலைகளை இந்த தலைமுறையினர் உணரமாட்டார்கள், தாராளவாதம் பேசுவார்கள்.
அகிம்சை வழியில் போராடி சுதந்திரம் என்ற ஒன்றை கையிலே வாங்கிக் கொண்டு, இந்திய தேசியக்கொடி ஏற்றும் முன்பே பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது. மதத்தின் பெயரால் நாடு துண்டாடபட்டதைத் தொடர்ந்து இலட்சக்கணக்கான மக்கள் படுகொலைக்கு ஆளானார்கள்.
பல ஆயிரம் ஆண்டு காலம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்தவர்கள், தாங்கள் பிறந்த மண்ணை விட்டு அகதிகளாக மேற்கு பாகிஸ்தானிலிருந்தும், கிழக்கு பாகிஸ்தானிலிருந்தும் வெறும் இடுப்பில் கட்டிய துணிகளோடு இடம்பெயர்ந்த துன்பம் ஒருபக்கம், இந்தியா முழுக்க பரவிக் கிடந்த 543 சமஸ்தானங்களும் தனி ராஜ்ஜியங்களாக செயல்பட முரண்டு பிடித்தது ஒரு பக்கம்.
அன்று உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் படேல் என்ற இரும்பு மனிதர் இந்தியாவுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய 543 சமஸ்தானங்களையும் ஓரிரு நாளில் மண்டியிடச் செய்தார். இந்தியாவுடன் இணைக்கவும் செய்தார்; ஹைதராபாத் நிஜாம் ஐதராபாத்தை பாகிஸ்தானுடன் இணைக்க துடித்தார்; ஆனால், அது நடக்கவில்லை. அப்போது ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தினுடைய மன்னராக ராஜா ஹரிசிங் இருந்தார். அவர் தனது விசுவாசத்தை இந்தியா பக்கம் காட்டினார்.
1816-களில் அப்பொழுது சீக்கிய அரசர்களோடு செய்துகொண்ட அமிர்தசரஸ் ஒப்பந்தத்தின்படி அன்றைய மதிப்பீட்டின்படி 7 கோடியே 50 லட்சம் மதிப்பிற்கு ஆங்கிலேயர்கள் ஜம்மு – காஷ்மீரை குலாப் சிங் அவர்களும் பரிமாற்றம் செய்து விட்டார்கள். குலாப் சிங் வழி வந்தவர் தான் ராஜா ஹரிசிங். இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது, ஒரு சில மாதத்திலேயே பாகிஸ்தான் பகுதியிலிருந்து ஊடுருவிய பழங்குடியின மக்கள் காஷ்மீர் மீது தாக்குதல் தொடுத்து காஷ்மீரை தாக்க முயற்சி செய்தார்கள்.
ஹரிசிங் ஏற்கனவே இந்தியாவுடன் இணைப்பதற்கான மனநிலையுடனே இருந்தார். ஆனால், மவுண்ட்பேட்டன் ஜம்மு-காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைப்பதற்கு பல நெருக்கடிகளை கொடுத்து வந்தார். ஜின்னாவும் அதையே விரும்பி இருக்கிறார். எனவே காஷ்மீர் மீதான படையெடுப்பிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள ராஜா ஹரிசிங் இந்தியா உதவியை நாடினார். பட்டேல் அவர்கள் இந்தியப் படையை அனுப்பி காஷ்மீரை மீட்டுத் தந்தார். ஆனால் அதற்கு முன்பாக ஒரு உத்திரவாதத்தை ராஜா ஹரிசிங்கிடமிருந்து நேரு அவர்களும், பட்டேல் அவர்களும் பெற்றிருந்தார்கள்; ”எந்தவித நிபந்தனையும் இல்லாமல் காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்க வேண்டும்” என்பதே அந்த நிபந்தனை.
எனவே, காஷ்மீர் இந்தியாவினுடைய ஒருங்கிணைந்த பகுதியாக இணைக்கப்பட்டு விட்டது. போரிலே வென்ற பிறகு, காஷ்மீர் இந்தியாவுடன் முற்றாக இணைந்த பிறகு, அந்த பிரச்சினையை நேரு அவர்கள் ஐநாவுக்கு ஏன் எடுத்துச் சென்றார் என்பது இதுவரை புரியாத புதிராகவே இருக்கிறது. அதன் காரணமாகவே சம்பந்தமில்லாமல் பல நாடுகளும் இந்த பிரச்சனையில் மூக்கை நுழைக்கின்றன.
இதுவரை காஷ்மீரை அடிப்படையாக கொண்டு பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் பல போர்களை சந்தித்து விட்டோம். 1947, 1965, 1971, 1999 என பாகிஸ்தானுடன் போரும், 1962-ல் சீனாவுடன் போரும், பெரிய போர்கள் மட்டுமின்றி 1980-க்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகாலமாக காஷ்மீர் எல்லையில் நாம் தினமும் போரைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
1962-க்கு பிறகு, அருணாச்சல பிரதேசம் மற்றும் இந்திய – சீன எல்லைகளில் சீனாவுக்கும், நமக்கும் எல்லை பிரச்சினை வந்தாலும் கூட எந்த உயிரிழப்பையும் சந்திக்கவில்லை. ஆனால் காஷ்மீர் எல்லையில் நமது இந்திய வீரர்கள் காயம் படாத நாளே இல்லை என்ற சூழல் உருவாகி இருக்கிறது.
காஷ்மீரை தளமாகவும், கேடயமாகவும், பின்புலமாகவும் வைத்தே பாகிஸ்தான் தொடர்ந்து தனது போர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு 370 எனும் சிறப்பு அந்தஸ்து வலுசேர்த்து வந்தது. மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், நமது நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல்கள், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் எல்லையில் புல்வாமாவில் நடந்த தாக்குதல் என அனைத்துமே இதை சார்ந்ததே!
காஷ்மீர் பாரதத்தாயின் தலைப்பகுதியில் உள்ளடக்கிய கேந்திரம் நாகரீகத்தின் தொட்டில்களாக கருதப்படும் சிந்துச் சமவெளியின் சிந்து நதி உற்பத்தி ஆகக்கூடிய பகுதி அந்த இடம். ஆயிரமாண்டு முகலாயர்களுடைய ஆட்சி காலத்திலே கூட காஷ்மீர் அவர்களது ஆட்சிக்கு உட்பட்டு இருந்ததாக வரலாறு இல்லை. ஆங்கிலேயர் கூட அந்த பகுதியை இந்திய வம்சாவளி மன்னர்களுக்கே கொடுத்திருக்கிறார்கள்.
காஷ்மீர் என்று அழைக்கக்கூடிய ஜம்மு, காஷ்மீர், லடாக் என்ற மூன்று பகுதிகளில், பாரம்பரிய இந்துக்கள் ஜம்முவிலும், புத்த மதத்தை தழுவக் கூடியவர்கள் லடாக் பகுதியிலும், இஸ்லாமிய மதத்தை தழுவக் கூடியவர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கிலும் இருக்கிறார்கள். இந்தியாவினுடைய பாரம்பரிய கோவில்களான அமர்நாத், வைஷ்ணவி கோவில்கள் அங்கே தான் இருக்கின்றன.
ஆப்கானிஸ்தான் பகுதியிலிருந்து 1400-க்கு பிறகு தான், காஷ்மீர் பகுதிக்குள் இஸ்லாம் நுழைந்திருக்கிறது. இன்றைய காஷ்மீர் இஸ்லாமியர்களும் அண்மைகாலத்தில் தங்களது அடையாளங்களை இழந்தவர்களே! இந்திய பாரம்பரியத்திற்கு உடையவர்களே!
ஒரு வாதத்திற்கு ’’KASHMIR IS FOR KASHMIRIS’’ என்று எடுத்துக் கொண்டால் கூட எந்தவொரு குறிப்பிட்ட மதத்தினருக்கான மாநிலமாக எடுத்துக்கொள்ள முடியாது. இந்த ஒரு விஷயத்தை தான், 370 சரத்தை எதிர்க்கக்கூடிய அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் கவனிக்கத் தவறுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறேன்.
உலகெங்கும் பல தேசங்கள் பல்வேறு விதமாக உருவாகி இருக்கின்றன. இந்திய தேசம் இந்த மண்ணை அடிப்படையாகக் கொண்ட தேசம்; அமெரிக்கா போன்ற நாடுகள் பூர்வீக குடிகளை அழித்து உருவாக்கப்பட்ட தேசம்; பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் படையெடுப்புகளாலும், சுரண்டல்களாளும் உருவாக்கப்பட்டது.
தென் ஆப்பிரிக்கா கறுப்பினத்தவர்களுடைய தேசம், நிறவெறிக்கு எதிராக போராடி பெற்ற தேசம்; சோவியத் ரஷ்யாவில் இருந்து பிரிந்து சென்ற தேசங்கள் இன அடிப்படையில் பிரிந்து செல்கின்றன; செக்கோஸ்லோவாக்கியா மூன்று தேசங்களாக பிரிந்ததும் அப்படித்தான். ஆனால் அவைகள் எல்லாம் மொழி அடிப்படையிலோ அல்லது இனம் அடிப்படையிலோ பிரிந்து செல்வதற்கான காரணம் இருந்தது.
ஆனால், இந்தியாவில் அதுபோன்ற அடக்குமுறையும் ஒடுக்குமுறையும் எந்த ஒரு இனமும் அனுபவிக்கவில்லை. இஸ்லாமியர்கள், கிறுத்தவர்கள் அல்லது பெளத்தர்கள் அல்லது சீக்கியர்கள் அல்லது ஜைனர்கள் அல்லது வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் வழிபாட்டு ரீதியாக ஒடுக்கப்படுகிறார்கள் என்று சொல்லமுடியாது. இந்தியாவில் பூர்வீக மதமான இந்து மதத்தை தவிர பிற மதங்கள் செழித்தோங்குகின்றன.
இந்தியாவின் பூர்வீக குடிகளான பட்டியல் பிரிவில் இடம்பெற்றிருக்கக் கூடிய பல்வேறு சமூகங்கள் எண்ணற்ற சமூகக் கொடுமைகளை அனுபவித்து இருக்கின்றன, அனுபவித்து வருகின்றனர்; எனினும் அவர்கள் தங்களுடைய தனி அடையாளங்களுக்காக போராடி கொண்டிருக்கலாம்; ஆனால், தனி நாட்டுக்காக போராடவில்லை.
அந்நிய ஆதிக்கத்திடம் இருந்து விடுதலையாகிற பொழுது துண்டாக நின்ற ஒரு பகுதி இந்தியாவுடன் ஒன்றாகி விடுகிறேன் என்று 70 வருடங்களுக்கு முன்பே ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் இந்தியாவுடன் இரண்டறக் கலந்து பிறகு, எந்த அடிப்படையில் அந்த பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது?
எப்படி இந்தியாவினுடைய எந்த அரசியல் சட்டமும் அங்கு செல்லுபடி ஆகாமல் போனது? எதற்காக தனி அரசியல் சாசனமும், தனிக்கொடியும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது? அந்த தனி அந்தஸ்து கொடுக்கப்பட்டதால், அந்த மக்களுக்கு ஏற்பட்ட பலன் என்ன? அதை வழங்கிய இந்திய தேசத்திற்கு ஏற்பட்ட பின்விளைவுகள் என்னென்ன? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும் அல்லவா! வாக்குறுதியை மீறி விட்டார்கள்! என்று வரலாறு தெரியாமல் பேசுவது எந்த விதத்தில் நியாயம்.
காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட அந்த சிறப்பு அந்தஸ்து அதன் பலன், அதன் அதிகாரம் அனைத்தும் காஷ்மீர் மக்கள் அனைவருக்கும் சென்றடைந்து இருக்கிறதா? கிழக்குப்பகுதி லடாக் மக்கள் தங்களை தனி மாநிலமாக்க வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தார்களே காரணம் என்ன?
ஜம்மு-வில் வாழ்ந்த ஜம்மு-வின் பூர்வக்குடி மக்களான காஷ்மீர் பண்டிட்டுகள் ’’காபீர்’’ என்று முத்திரை குத்தப்பட்டு, தங்களுடைய பெண் துணையை விட்டு வெளியேற வேண்டும் அல்லது கொல்லப்படுவார்கள் அல்லது கொல்லப்பட்டார்களே! அதனால் பல்லாயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட்டுகள் அகதிகள் ஆனார்களே; இதற்காகவா சிறப்பு அந்தஸ்து கொடுக்கப்பட்டது?
சரி, இஸ்லாமியர்களாவது முழுமையாக பலன் பெற்றார்களா? என்றால் அதுவும் இல்லை. அங்கு எத்தனை தொழிற்சாலைகள் அனுமதிக்கப்பட்டன? எத்தனை கல்விக்கூடங்கள் தொடங்கப்பட்டன? உலகின் ஆப்பிள் களஞ்சியமாக விளங்கக்கூடிய காஷ்மீரில் என்ன பொருளாதார வளர்ச்சியை காண முடிந்தது?
பன்மடங்கு குளிரைத் தாங்கும் திறன் கொண்ட காஷ்மீர் ஆடுகளின் ரோமங்களில் தயாரிக்கப்பட்ட காஷ்மீர் கம்பளிகளும் மற்றும் பிற வகை ஆடை உற்பத்திகளும் செழித்தோங்கியதா? என்ன வளர்ச்சியை காஷ்மீர் வாசிகள் கண்டார்கள்? மாறாக மூன்று குடும்பங்கள் மட்டுமே வாழ்க்கை வாழ்வதற்கான சொர்க்க பூமியாக காஷ்மீர் மாற்றப்பட்டது.
ஒரு மதம், மூன்று குடும்பங்கள் மட்டுமே ஆட்சி செய்யும் வாய்ப்பைத் தான் அந்த சிறப்பு அந்தஸ்து வழங்கி இருக்கிறது. மொழி விடுதலை, மொழி தேசியம், இன தேசியம் பேசி ஆட்சிக்கு வரக்கூடிய எல்லா பகுதிகளிலும் இந்த அநியாயமே நடந்திருக்கிறது, நடந்து கொண்டிருக்கிறது.
’’காஷ்மீர் மாநிலம் காஷ்மீரிக்கு’’ என்று கிளம்பிய போராட்டத்தைப் போலவே, ’’திராவிட நாடு திராவிடருக்கே’’ என்று இங்கும் ஒரு கும்பல் தமிழக ஆட்சியை கைப்பற்றியது. ’’காஷ்மீர் காஷ்மீரிய மக்களுக்கு’’ என்ற சிறப்பு அந்தஸ்து கோரிய சேக் அப்துல்லா இந்தியா மீது மதரீதியாக வெறுப்பு வைத்திருந்ததாக தெரியவில்லை.
ஆனால், இன்று வரையிலும் பிரிவினைவாதத்தை உள்ளே வைத்துக்கொண்டு தமிழகத்தில் ஒரு குடும்பம் திராவிடம் என்ற சொல்லுக்குள்ளும், தமிழ் என்ற மொழிக்குள்ளும் ஒளிந்துகொண்டு பிரிவினைவாத இன்று வரையிலும் விதைத்து வருகிறார்கள். இந்தியாவில் உருவான தேசிய இனப் போராட்டங்கள் அனைத்திற்குமே ஏதாவது ஒரு மதம் தான் பின்புலமாக இருக்கிறது. ஒரு பழமொழி உண்டு ’’இலைகள் மறைத்தாலும் காற்று விடுவதில்லை’’ என்று; அதுபோல தான் வடகிழக்கு மாநிலங்களிலும், தமிழ் தேசியத்திற்கும், திராவிடத்திற்கும் மதவாத அமைப்புகள் பின்புலமாக இருக்கின்றன.
காஷ்மீர் மக்கள் கடந்த 70 ஆண்டு காலமாக சிறப்பு அந்தஸ்தை அனுபவித்து வருகிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் போராட வேண்டிய அவசியமென்ன? அவர்களை ஆயுதம் தூக்க வைப்பது யார்? கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அவர்களுக்கு வழங்கப்பட்ட எந்த சலுகை பறிக்கப்பட்டது? எனினும் காஷ்மீரின் ஒரு மதத்தினரை போராடத் தூண்டுவது யார்? என்பது வெட்ட வெளிச்சமாகவில்லையா? பாகிஸ்தான் தன்னுடைய சொந்த நலனுக்காக காஷ்மீர் இஸ்லாமிய சகோதரர்களை பலிகடா ஆக்கி வருகிறது
கடந்த 70 ஆண்டுகாலமாக இத்தனை சிறப்பு அந்தஸ்து பெற்றும் காஷ்மீர் மக்கள் நிம்மதி அடையவில்லை என்றால் யாரை குறை சொல்வது? உண்மையிலேயே, அவர்கள் யாருக்கு எதிராக போராடி இருக்க வேண்டுமெனில், எல்லாவிதமான சிறப்பு அதிகாரங்களையும் கையிலேயே வைத்துக் கொண்டு காஷ்மீர் மக்களை வளப்படுத்த தவறிய அந்த மூன்று குடும்பங்கள் மீது தானே அந்த கோபம் திரும்பி இருக்க வேண்டும். இந்திய மக்கள் மீதும், இந்திய அரசு மீதும், பனியிலும், வெயிலிலும் தன்னுடைய குடும்பங்களை எல்லாம் விட்டுவிட்டு எல்லையில் பணியாற்றும் அப்பாவி இந்திய போர்வீரர்கள் மீதும் அவர்கள் கோபம் திரும்ப வேண்டியதில்லை.
ஜம்மு, காஷ்மீர், லடாக் உள்ளிட்ட அனைத்து மக்களுக்கும் தானே அந்த சிறப்பு அந்தஸ்தும், அதிகாரமும்; தாங்கள் அந்த பகுதியில் ஒரு சில சதம் எண்ணிக்கையில் கூடுதலாக இருக்கிறோம் என்ற அடிப்படையில், ஒரு மத்க் குழுவினர் அதே மண்ணின் இன்னொரு பூர்வீக குடிமக்களை வன்முறையில் அழித்தொழிப்பது எந்த விதத்தில் நியாயம்.
கடந்த முப்பது வருடங்களாக இந்திய தேசத்திற்குள்ளேயே, இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகப் போரிடுவதற்கு ஒரு அரசியல் சரத்து தவறாக பயன்படுமேயானால் இந்திய தேசத்தை உயிராக நேசிக்கும் எந்தவொரு குடிமகனும் அதை ஏற்றுக் கொள்ளமாட்டான். அப்படிப்பட்ட 370- சரத்தை நீக்குவதே ஒவ்வொரு இந்திய குடிமகனின் கோரிக்கையாக இருந்தது.
கடந்த 70 ஆண்டுகளில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து என்ற ஒரு பெயருக்காக இந்திய அரசு கொட்டிக் கொடுத்தது ஏராளம். அதே இந்திய அரசு யாருக்கு கொட்டிக் கொடுத்ததோ அவர்களிடமிருந்து தன்னை கட்டி பாதுகாத்துக் கொள்ள செலவழித்ததும் ஏராளம்.
காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை உதாரணமாகக் காட்டி, வடக்கில் பல மாநிலங்களும், தெற்கே சில மாநிலங்களும் மாநில சுயாட்சி கோரிக்கையை முன்வைத்து கொண்டிருக்கின்றன. மாநில சுயாட்சி சிறப்பு அந்தஸ்து கேட்கக்கூடிய எவரும் அந்த மக்களுக்காக கேட்பதில்லை.
காஷ்மீரில் எப்படி மூன்று குடும்பங்கள் மட்டுமே தளைத்தோங்கியதோ, அதேபோல, தமிழ் – திராவிட தேசியம் பேசிப் பேசியே ஆட்சிக்கு வந்த, ஓரிரு குடும்பங்களே தளைத்தோங்கியிருக்கினறன. காஷ்மீர் ஆட்சியாளர்கள் ஏமாற்றியது போல, தமிழகத்தில் திராவிடக் கும்பல்கள் ஏமாற்றி வருகின்றன.
திராவிடம் பேசி, தமிழால் உயிர் வாழ்ந்து ஆட்சியில் அமர்ந்தவர்கள், அவர்கள் வாரிசுகளை தயார் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். தாத்தா முடிந்து மகன் வந்தார்; மகன் முடிந்து பேரனும் தயார் செய்யப்படுகிறார். இந்தியாவில் முளைத்திருக்கக் கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கும் இரண்டு முக்கியமான கேந்திரமே காரணமாக அமைந்திருக்கின்றன.
இந்தியாவின் தலைப்பகுதியில் காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் தென் மூலையில் திராவிடம் தலைதூக்குவதற்கு உடந்தையாக இருந்தது. காஷ்மீருக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தும் மக்களை பொருளாதார ரீதியாக வளர்க்கவில்லை; இந்திய அளவிலும் மதிப்போடும் அவர்களை அடையாளப்படுத்தவில்லை. மாறாக, காஷ்மீர் மக்கள் தங்களை தாங்களே தனிமை படுத்திக் கொள்ளவே பயன்பட்டது. அதேபோல்தான் திராவிடமும்; திராவிடத்தால் தமிழக மக்களுடைய வாழ்வு மேம்படவும் இல்லை; இவர்களால் தமிழர்கள் பெருமை அடையவும் இல்லை.
எப்படி 370-ஆல் காஷ்மீர் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களோ, திராவிடத்தால் தமிழர்களும் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டார்கள். கடந்த 5-ம் தேதி மோடி அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக காஷ்மீர் மக்கள் உண்மையான விடுதலையை காணப் போகிறார்கள். வடதுருவப் பனிக்கரடிகளை போல 370 மற்றும் 35 A துயரத்திலிருந்து மீள போகிறார்கள். இந்திய மக்களின் நெஞ்சில் குத்தியிருந்த 370 என்ற முள் அகற்றப்பட்டு விட்டது.
இந்திய தேசம் ஒன்றென்று இனி இந்தியர் அனைவரும் மார்தட்டிக் கொள்ளலாம். கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்று இதுவரை சொல்லளவில் இருந்த நமது எல்லை செயலளவில் வரப்போகிறது. இந்திய தேசத்தில் மட்டும் தான் நமது சுயமரியாதையோடு நம்மை வளப்படுத்தி கொள்ள முடியும்.
வேறு எந்த தேசத்திற்கு சென்றாலும் வளமாக வாழலாம். ஆனால், அங்கே நாம் இரண்டாம் தர குடிமக்களே! ஒவ்வொருவரின் நம்பிக்கையும் மனதிற்குள் இருக்க வேண்டியவை. அவை வெளியில் வந்து ஆர்ப்பரிக்கக்கூடாது. மொழி வாதம், இனவாதம், மதவாதம் பூசி இந்த மண்ணை துண்டாட எவரும் அனுமதிக்கக் கூடாது. மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு, சிறுபான்மையினர், பெரும்பான்மையினரை வீழ்த்தவும், அமுக்கவும் உடந்தையாக எவரும் இருக்கக் கூடாது.
ஓரிரு குடும்பங்களை முன்னிறுத்த இன பேதத்தை, மொழி பேதத்தை கிளப்பக் கூடாது. இந்தியாவின் இறையாண்மைக்கு சவாலாக இருந்த 370 இப்பொழுது இரத்தாகியிருக்கிறது. அதை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானது திராவிட தேசியம். இதுவும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா இந்தியாவாக இருக்க முடியும். மொழி, இனம், மதவாதம் பேசக்கூடியவர்கள் உள்ளடக்கத்தில் தேசப் பிரிவினைவாதிகளே; தேச விரோதிகளே! மொழி, இன, மத, சாதிய பேதங்களை மறந்து இந்தியராக பரிணமிப்போம்.
இந்தியா வளம் பெறட்டும்! இந்தியா பலம் பெறட்டும்!!எந்த ஒரு நாட்டிலும் சட்டங்களும், திட்டங்களும் அந்த மக்களின் சுதந்திரத்திற்கும், நல்வாழ்வுக்கும் ஆனதாகும். அந்த வகையில், ஏதோ ஒரு காரணத்திற்காக, ஏதோ ஒரு சூழலில், தற்காலிகமாக, இடைக்கால ஏற்பாடாக கொடுக்கப்பட்ட சிறப்பு சலுகை, அது பெரும்பாலான மக்களுக்கு பலனளிக்காத போது, அந்த வாக்குறுதியை கொடுத்தவர்களுக்கே பெரும் பாதிப்பை உண்டாக்குகிற பொழுது, அந்த சரத்தை என்றோ நீக்கியிருக்க வேண்டும், ஆனால், இப்பொழுது நிறைவேறியிருக்கிறது.
இந்திய புராணங்களில் தான் சில கதைகள் வரும். ’’வரம் கொடுத்தவர்களையே வரம் வாங்கியவர்கள் அழிக்க முற்பட்டதுண்டு’;’ அதுபோன்ற சந்தர்ப்பம் உருவாகின்ற பொழுது, வரம் கொடுத்த அவர்கள் தங்களையும் தங்களை சார்ந்தவர்களையும் காப்பதற்கு என்ன நடவடிக்கை எடுப்பார்களோ, அதுபோன்ற நடவடிக்கையை மோடி, அமித்ஷா அரசு செய்திருக்கிறது. 370 மற்றும் 35 A சரத்துக்களை நீக்கியிருக்கிறது.
இதில் எந்த வாக்குறுதியும் மீறப்படவில்லை; மாறாக, ஆட்சிக்கு வந்தால் 370 நீக்கப்படும் என்று இந்திய மக்களுக்கு மோடி கொடுத்த வாக்குறுதி காப்பாற்றப்பட்டிருக்கிறது.
இதுவே ஜனநாயகம்!! இதுவே சமத்துவம்!! இதுவே உண்மையான சகோதரத்துவத்திற்கு இட்டு செல்லும்!! இதுவே இந்திய அரசியல் சாசனத்தின் ‘’PREAMBLE ’’ மூலக்கரு ஆகும்.
வாழ்க ! இந்தியா !!
வளர்க ! இந்தியர் ஒற்றுமை !!
மோடி,அமித்ஷா அரசு பணி சிறக்கட்டும் !!
நன்றி டாக்ட்டர் கிருஷ்ண சாமி
ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ... |
உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ... |
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |