பாண்டவர்கள் வனவாசம் இருந்த விராடபுரம்தான் இப்போதைய தாராபுரம் என்று சொல்கிறார்கள். அப்படி வனவாசத்தில் இருந்தவர்கள் இத்தலத்திலுள்ள காடு அனுமந்தராயன் சுவாமியை வழிபட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாது, வியாசராஜர் தான் வாழ்ந்த காலங்களில் எழுநூற்று
முப்பத்தியிரண்டு தலங்களில் ஆஞ்சநேய மூர்த்திகளை பிரதிஷ்டை செய்தார். அதில் 89&வது மூர்த்தியாக பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த காடு அனுமந்தராயன் என நம்பப்படுகிறது.
சுவாமியின் மூலஸ்தானத்தில், பகல் நேரங்களில் சூரியன் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறான் என்றால், காற்று, எந்நேரமும் உள்ளே வீசியபடியே இருக்கிறது. மூலவரின் கருவறையின் மேலே தளம் இல்லாமல் திறந்த நிலையிலே இருக்கிறது.
இவரது உருவ அமைப்பு மற்ற ஆஞ்சநேயர்களைவிட மாறுபட்டிருக்கிறது. திருப்பதியில் விளங்கிவரும் வெங்கடாசலபதியைப் போன்று நெடிதுயர்ந்த உயரம். இரு பாதங்களும் வடக்கு நோக்கி இருக்க, இடுப்பில் கேடயம்&கத்தி கொண்டு, கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலை அணிந்துகொண்டிருக்க, வலது கை அபய ஹஸ்தமாக திகழ்கிறது. இடது கை சௌகந்திக மலரை ஏந்தியிருக்கிறது. முகம் வடகிழக்கு திசை நோக்கித் திரும்பியிருக்கிறது. கிரீடத்தின் பின்புறம் பட்டாகத்தியும், மூன்று சலங்கைகளும் அலங்கரிக்கின்றன.
1810&ம் ஆண்டில் வெள்ளையர்கள் ஆட்சி புரிந்த காலத்தில், டீலன் துரை என்பவர் மாவட்ட கலெக்டராக இருந்த பொழுது அவரைக் கொடிய நோய் பீடித்தது. அவர் இந்த ஆஞ்சநேயரை தரிசித்து நோய் நீங்கப்பெற்றார். அதன் நன்றிக் கடனாக இந்த கர்ப்பகிரகத்தை அவர் கட்டியதாக முன்னோர்கள் தெரிவிக்கிறார்கள்.
இப்பகுதி, ஒரு காலத்தில் அடர்ந்த மரங்களும், செடி, கொடிகளும் நிறைந்திருந்ததால், ‘காடு’ என அழைக்கப்பட்டது. அதனாலேயே இக்கோயில் மூலவர் காடு அனுமந்தராயன் என்று அழைக்கப்பட்டார். இந்தக் கோயிலில் லட்சுமி நரசிம்மர் அருளாட்சி புரிகிறார். வெகுகாலத்திற்கு முன் பவானி சங்கமத்துறையில் ஆற்றுக்கடியில் இருந்தவர் இவர். ஒருநாள் தன் அடியாருக்கு காட்சி அளித்து, தன்னை காடு அனுமந்தராயர் கோயிலில் வைத்து வழிபடுமாறு அருள் வாக்குச் சொன்னார். அவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட லட்சுமி நரசிம்மர் நூறாண்டுகளுக்கும் மேல் புராதனமானவர். வருடந்தோறும் நரசிம்ம ஜெயந்தியையும் இக்கோயிலில் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
ஆஞ்சநேயருக்கு அருகாமையில் உள்ள சந்நதியில் ராமர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோர் மூலமூர்த்தியாக விளங்கி வருகிறார்கள். ராமருக்கு அர்ச்சனை, பூஜைகள் செய்த பிறகே ஆஞ்சநேயருக்கும் மற்ற மூர்த்திகளுக்கும் செய்யப்பட்டு வருகின்றன.
துங்கபத்ரா நதிக்கரையிலிருந்து கொண்டு வந்த புனித மண்ணை வைத்து ராமர் சந்நதியில் பிருந்தாவனத்தை அமைத்திருக்கிறார்கள்.
கலியுகத்தின் கண்கண்ட தெய்வமாம் அனுமனை வழிபட வாழ்வின் இன்னல்கள் நீங்கி, வளம் பெருகும். சகல காரியங்களிலும் வெற்றி கிடைக்கும் என்பது நிதர்சனம். அந்த வகையில் இந்த காடு அனுமந்தராயனும் தன்னை நாடி வரும் பக்தர்களின் வாழ்வில் வளம் தந்து அருள்கிறார் என்பது பலரது அனுபவ நம்பிக்கை.
ஈரோட்டிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ளது தாராபுரம். அங்கே அமராவதி ஆற்றங்கரைக்குச் செல்லும் வழியில் பூங்கா சாலையில் காடு அனுமந்தராயன் கோயில் அமைந்திருக்கிறது.
Tags; ஹனுமான், ஹனுமான் மந்திரம், ஆஞ்சநேய, ஹனுமார் , ஹனுமத்தாசன், காடு அனுமந்தராயன்
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.