‘பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி’ எனப்படும், விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் நிதி டிபாசிட் செய்யப்படும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், அதிகபட்சமாக, 3.24 லட்சம் விவசாயிகள் நிதி உதவி பெற்றுள்ளனர்.
கடந்த 2019 பிப்ரவரியில், ‘பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி’ என்ற பெயரில் விவசாயிகளுக்கு நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் உதவித் தொகை டிபாசிட் செய்யப்படும் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார்.நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு உதவும் வகையில் இத்திட்டம் தீட்டப்பட்டு அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.
இந்த திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், மூன்று தவணைகளில் மொத்தம் 6,000 ரூபாய் விவசாயிகளுக்கு வழங்கப்படும். இந்த தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.வங்கி பரிவர்த்தனை வாயிலாக, விவசாயிகளுக்கு பணம் வரவு செய்யப்படும் உலகிலேயே மிகப்பெரிய திட்டமாக இது திகழ்கிறது.
பயனைடையும் விவசாயிகளின் விபரங்கள், மிகவும் வெளிப்படையாக இருக்கும் வகையிலும் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதுவரை நாடு முழுதும் உள்ள 11 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு, 17 தவணைகளில் 3.24 லட்சம் கோடி ரூபாய் வரை வங்கிகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளது. இத்திட்ட வரையறைகளின்படி தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிய வேண்டியது மாநில அரசுகளின் பொறுப்பு.தகுதி வாய்ந்த விவசாயிகள் யாரும் விடுபட்டு போய் விடக் கூடாது என்பதை, உறுதி செய்வதற்காக தேசிய அளவிலான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
‘விக் ஷித் பாரத் சங்கல்ப் யாத்ரா’ பிரசாரத்தின் வாயிலாக இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, ஒரு கோடிக்கும் அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.விவசாயிகளின் தகவல்களை பதிவு செய்வதற்காக நாடு முழுதும், ஐந்து லட்சம் பொது சேவை மையங்கள் அமைக்கப்பட்டு வீடுகளுக்கே நேரடியாக சென்று விவசாயிகள் பற்றிய விபரங்களை பதிவு செய்யும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
கடந்த ஜூலை 31 நிலவரப்படி தமிழகத்தில் இத்திட்டத்தின் கீழ், 46 லட்சத்து 76 ஆயிரத்து 80 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்கில் மொத்தம் 10,900 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரியில் 11,399 விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர். இவர்களது வங்கிக் கணக்கில், 32.35 கோடி ரூபாய் வரையில் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய விவசாயத்துறை இணையமைச்சர் ராம்நாத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலேயே அதிகபட்ச பயனாளிகளாக, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த, 3 லட்சத்து 24 ஆயிரத்து 51 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ... |