கூட்டாட்சியையும் தீவிரவாதத்தையும் எதிரெதிர் நிலைகளில் நிறுத்தி விவாதிப்பது அர்த்தமற்றது

கூட்டாட்சியையும் தீவிரவாதத்தையும் எதிரெதிர் நிலைகளில் நிறுத்தி விவாதிப்பது அர்த்தமற்றது இந்தியா கடந்த முப்பது ஆண்டுகளாக தீவிரவாதிகளின் பார்வை இலக்காக, உள்நாட்டு அளவிலும் எல்லை தாண்டிய அளவிலும் இருந்துவருகிறது. நாம் பஞ்சாபில் வெற்றிகரமான முறையில் தீவிரவாதத்தை சமாளித்தோம். ஜம்மு-காஷ்மீரில் நிலைமை முன்பை விட பரவாயில்லை. ஆனாலும் சிறிதளவு சீண்டப்பட்டாலும் பிரச்சினை மறுபடியும் கொந்தளிக்கக்கூடிய

நிலையில் அது எப்போதும் உள்ளது. வடகிழக்கு பிராந்தியமோ, தீவிரவாதத்தால் தொந்தரவுக்குள்ளாகியிருக்கிறது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தியாவில் உள்நாட்டு அளவில் ஜிகாதி அமைப்புகளின் தாக்கம் இல்லை என்று நாம் பெருமிதத்துடன் கூறிவந்தோம். ஆனால் இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. அரசு ரீதியாகவும், அரசு சாராத இயக்கங்களின் ஆதரவுடனும் இந்தியாவுக்குத் தொந்தரவுகளைத் தரும் அண்டை நாடு ஒன்று நம் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ளது. அதனால் இந்தியாவுக்குத் தீவிரவாதத்தை எதிர்க்கத் தீவிரமானதும் தொடர்ச்சியானதுமான அணுகுமுறை தேவை. பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்பது தடையற்றதாக இருக்க வேண்டும். தடை செய்ய இயலாத வகையில் அது இருக்க வேண்டும்.

ஜிகாதி  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு வரலாற்றில் தீவிரவாதம் தொடர்பாக அது கடைப்பிடிக்கும் மென்மையான அணுகுமுறை பல சுவாரசியமான அத்தியாயங்களைக் கொண்டது. தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடோ சட்டத்தை திரும்ப அமல்படுத்தியபோது காங்கிரஸ் கட்சி அதை சிறுபான்மையினருக்கு எதிரானதென்றும் தீவிரவாதத்தைத் தடுக்காது என்றும் கூறியது. பயங்கரவாதிகளைப் புலனாய்வு செய்யவும், தண்டிக்கவும் பொடா சட்டம் வலுவான கருவியாகும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தேர்தல் அறிக்கை பொடோவைத் திரும்பப் பெறப்போவதாக வாக்குறுதி அளித்தது. பாரதீய ஜனதா கட்சியுடன், இந்நாட்டில் உள்ள பாதுகாப்பு அமைப்புகளும், பொடோவை வாபஸ் பெறுவதில் அசௌகரியத்தை உணர்ந்தன. ஆனாலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டு, பொடோவில் உள்ள இரண்டு அம்சங்கள் சேர்க்கப்பட்டன. பிணையில் வெளிவருவது தொடர்பாகவும், வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பாகவும் இருந்த இரு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை. ப.சிதம்பரம், உள்துறை அமைச்சராகப் பதவி ஏற்றபோது, மாவோயிஸ்டுகள் குறித்து தொடக்கத்தில் அவர் வெளிப்படுத்திய பார்வைகள் நம்பிக்கை கொள்ளத்தக்கதாக இருந்தன. ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஏடு ஒன்றில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எழுதிய கட்டுரை ஒன்று ப.சிதம்பரத்தின் உற்சாகத்தை நீர்க்கச் செய்தது. அவரும் தனது பாதையை மாற்றிக் கொண்டார். மாவோயிஸ்டுகளுடன் போராடுவது மாநிலங்களின் பொறுப்பு என்றும் மத்திய அரசால் உளவுத்துறை அளவிலும், பாதுகாப்புப் படையினரை வழங்குவதிலும் மட்டுமே உதவ முடியும் என்றும் அவர் பேசத் தொடங்கினார்.

தீவிரவாதத்தைச் சமாளிப்பதென்பது மாநில மற்றும் மத்திய அரசுகளின் கூட்டுப் பொறுப்பாகும். தீவிரவாதம் இந்தியாவின் இறையாண்மையைப் பாதிப்பது. பொது ஒழுங்கு மட்டுமின்றி சட்ட ஒழுங்குக்கும் அது பங்கம் ஏற்படுத்துகிறது. அரசியல் சாசனக் கொள்கையின் அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்புக்குப் பொறுப்பு மத்திய அரசே. பொது ஒழுங்கு மற்றும் காவல்துறை அதிகாரம் என்பது மாநில அரசுகளின் பொறுப்பு. தீவிரவாதத்தை எதிர்கொள்வது என்பது மத்திய மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டியது என்பதே கூட்டாட்சித் தத்துவத்ம். கூட்டாட்சியையும் தீவிரவாதத்தையும் எதிரெதிர் நிலைகளில் நிறுத்தி விவாதிப்பது அர்த்தமற்றது. அந்த எதிர்நிலைகள் கற்பனையானவையும்கூட.

தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையம் அமைப்பதில் எந்த ஆட்சேபணையும் யாருக்கும் இருக்கவே முடியாது. ஆனால் அதிகாரமும், வரம்புகளும் அரசியல் சாசன வரைமுறைகளுக்குள் இருத்தல் அவசியம். எல்லை தாண்டிய தீவிரவாத செயல்பாடுகள் குறித்த உளவுத் தகவல்களைச் சேகரிப்பதும், நடவடிக்கைகளைக் கண்காணிப்பதும், குறிப்பாக வெளியிலிருந்து இந்தியாவுக்கு வரும் தொந்தரவுகள் தொடர்பாக விழிப்புடன் இருப்பதும் மத்திய அரசின் திறன் மற்றும் வரம்புக்குட்பட்டதாக இருத்தல் வேண்டும். தீவிரவாத அமைப்புகளுக்கு ஒரு மாநிலத்திலிருருந்து மற்றொரு மாநிலத்தில் தொடர்புகள் இருக்கும். தேசிய உளவு அமைப்புகளின் தகவல்களைச் சேகரித்துப் பொருத்தமான தகவல்களை மாநில அரசுகளுக்குத் தெரிவிப்பதும் மத்திய அரசின் பொறுப்பாகும். சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் பிற சட்டங்களின் அடிப்படையிலும் குற்றங்களைப் புலனாய்வு செய்வதற்கு ஏற்கனவே மத்திய அரசின் தேசியப் புலனாய்வு அமைப்புக்கு சர்வ அதிகாரங்களும் தரப்பட்டுள்ளன. உளவுத் தகவல்களைச் சேகரிப்பதற்கும், அவற்றைச் சரியானபடி பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு அமைப்பு தேவை என்பது நாம் புரிந்துகொள்ளக்கூடியதே. தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையத்துக்கு போலீஸ் அதிகாரங்களை ஏன் மத்திய அரசு கொடுக்க வேண்டும்? தேசிய உளவு அமைப்பு அல்லது மாநிலக் காவல் துறையின் அதிகார வரம்புக்குள் தான் போலீஸ் அதிகாரம் இருக்கிறதே? இன்டெலிஜென்ஸ் பீரோ எனப்படும் ஐபி அமைப்பின் கீழே தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையம் கொண்டுவரப்படத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் இயக்குனர் ஐபியின் இயக்குனருக்குத் தனது பணிகள் குறித்து அறிவிக்கை அளிக்க வேண்டும். உளவுத்துறை அமைப்புகள் போலீஸ் அதிகாரத்துக்குள் செல்லக் கூடாது.

அமெரிக்காவில் உள்ள தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையம், உத்திகளை வகுப்பதையும், உளவுத்துறை தகவல்களை ஒருங்கிணைப்பதையும் மட்டுமே செய்கிறது. எந்த வகையான நடவடிக்கைகளிலும் அந்த அமைப்பு இறங்குவதில்லை. கூட்டுத் திவீரவாதப் பகுப்பாய்வு மையம் ஒருங்கிணைக்கும் பணியைச் செய்கிறது. இந்திய மையத்தைப் பொருத்தவரை உளவுச் செயல்பாட்டையும் செய்தபடி, நடவடிக்கைகளிலும் இறங்குவதாக அதன் திட்டம் உள்ளது. இப்படியான அதிகாரம் ஒரு உளவு அமைப்புக்குக் கொடுக்கப்படும்போது அது மாநில அரசுகளின் சட்ட ஒழுங்கு நிர்வாகத்தில் தலையிடுவதாக இருக்கும். அதனாலேயே மாநில அரசுகள் இந்த திட்டத்துக்கு சரியாகவே ஆட்சேபணை தெரிவிக்கின்றன.

ஏன் மத்திய அரசு மாநில அரசுகளை நம்பாமல் இருக்கக் கூடாது? தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையத்தின் திட்டத்தைப் பொருத்தவரை அதன் நடவடிக்கைகள் மாநில அரசின் காவல்துறையை ஒருங்கிணைப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலக் காவல் துறைகளைத் தீவிரவாதத் தடுப்புச் செயல்பாடுகளுக்கு நம்ப இயலாது என்று சந்தேகப்படுவதற்கான காரணங்கள் ஏதேனும் உள்ளனவா? அதீதமான சூழ்நிலைகளில் தேசிய உளவு அமைப்பும் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படலாம்.

ஒரு உளவு அமைப்புக்குத் தேடுதல் வேட்டை, பறிமுதல் செய்தல் மற்றும் கைது போன்ற நடவடிக்கைகளைப் புரியும் அதிகாரத்தை வழங்குவது மிகவும் அபாயகரமானதாகும். உளவு அமைப்பு என்பது ரகசியமாகப் பணிபுரிவதாகும். சட்ட வரம்புகளுக்கு உட்படாத ஒரு அமைப்பாகும். அதன் நிதிநிலை மற்றும் செலவுகளுக்கு எந்தக் கணக்கும் கிடையாது. இந்தியாவின் முக்கிய தேசிய வளமான ஐபி, படிப்படியாகத் தனது பிரதான நோக்கமான பாதுகாப்பு பணிகளை விட்டுவிட்டு, அரசியல் மற்றும் அரசியல் சார்பு நடவடிக்கைளுக்குத் தன் கவனத்தைத் திருப்பிவிட்டது. இந்த அணுகுமுறையை மாற்றுவது கண்டிப்பாக  அவசியம் என்று நான் கருதுகிறேன். ஐபி என்ற உளவு அமைப்பின் செயல்பாடுகள் அரசியல் அடிப்படையிலோ, புலனாய்வு அடிப்படையிலோ இருக்கக் கூடாது. உளவுத் தகவல்களை சேகரிப்பது, அதை ஆய்வது மற்றும் பகிர்வது ஆகியவை மட்டுமே அதன் வேலை. அதைத் தான் தேசியத் தீவிரவாதத் தடுப்பு மையமும் செய்ய வேண்டும்.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப் ...

கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா ஆர்வம் – மோடி பல்வேறு துறைகளில் கரீபியன் நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அத ...

கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிஷ்டம் – மோடி பெருமிதம் பிரதமர் ஆக கயானா நாட்டிற்கு வந்தது எனது அதிர்ஷ்டம்,'' ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருக ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், ...

மருத்துவ செய்திகள்

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...