சீனா நமது நாட்டின் மீது தாக்குதல் தொடுத்து அக்டோபர் 20ம்தேதியுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஒருமாதமே நடைபெற்ற இந்தப்போரில் நமது பெரும் நிலப்பகுதியை சீனாவிடம் இழந்து விட்டோம். இப்போர் இந்தியாவுக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியதோடு, ஜம்முகாஷ்மீர் பகுதியில் இருந்த அக்சாய்சின் பகுதி முழுவதையும் இழந்துள்ளோம்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் 2000 ஆண்டுகளுக்கும் மேலாக நல்லுறவு நிலவிவந்துள்ளது. கலாசாரம், மதம் மற்றும் பண்பாட்டின் அடிப்படையில் இரு நாடுகளுக்கும் இடையே நெருங்கியதொடர்பு இருந்து வந்துள்ளது. இருநாடுகளுக்கான நீண்டநெடிய எல்லைக்கோடு இமயத்தில் ஜம்மு – காஷ்மிர் முதல் கிழக்கே அருணாசலப் பிரதேசம்வரை பரவி இருக்கின்றது. இடையில் உத்தரகண்ட் மற்றும் ஹிமாசல பிரதேசத்தையும் அது தொட்டுக்கொண்டு செல்கிறது. இடையே நேபாளமும் பூட்டானும் கிழக்குக்கடைசியில் மியான்மரும் இருக்கிறது.
1962 சீன இந்தியப்போரில் 1,383 இந்திய வீரர்கள் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். காயமடைந்தவர்கள் 1,047, போரில் காணாமல்போன வீரர்களின் எண்ணிக்கை 1,696. சீனராணுவத்தால் போர்க் கைதிகளாக சிறை பிடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,968 ஆகும். இப்போரில் ஈடுபட்ட இந்தியராணுவ வீரர்களின் எண்ணிக்கை 10,000 முதல் 12,000வரை. ஆனால், சீன படையில் சுமார் 80,000 வீரர்கள் இருந்தனர்.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே இரண்டுஇடங்களில் எல்லைப்பிரச்னை இருந்து வருகிறது. ஒன்று ஜம்முகாஷ்மிர் மாநிலத்தில் லடாக்பகுதியில் திபெத்தை (சீனா) ஒட்டி இருக்கும் அக்சாய்சின். மற்றொன்று அருணாசலப்பிரதேசம். அக்சாய் சின் கடல்மட்டத்தில் இருந்து 4,800 மீட்டர் உயரத்தில் உள்ளது . சில இடங்களில் இந்த உயரம் 5,500மீட்டர் வரை இருக்கிறது. பெரும்பாலும் பனிப்பாறைகள் எப்போதும் உறைந்து காணப்படுகின்றன. சோடியம்க்ளோரைட் நிறைந்த ஏரிகள் அதிகமாக உள்ளன.
அக்சாய்சின் 1962 முதல் சீனாவின்வசம் இருந்துவருகிறது. ஜம்மு காஷ்மிர் மாநிலத்தின் 20 சதவிகித நிலப்பரப்பு இது. அக்சாய் சின்னில் 38,000 சதுர கிலோமீட்டர் பகுதியை சீனா கைப்பற்றியிருக்கிறது. இதுபோக, பாகிஸ்தான் கைப்பற்றி வைத்துள்ள ஜம்முகாஷ்மிர் பகுதியில் இருந்து 5,180 சதுர கிலோமீட்டர் இடத்தை 1963ம் ஆண்டு சீனா பெற்றுக்கொண்டுள்ளது. ஜம்மு காஷ்மிர் மன்னர் ஹரிசிங் 1947அக்டோபர் 26 அன்று தனது சமஸ்தானத்தை எவ்வித நிபந்தனையும் இன்றி முழுமையாக இந்தியாவுடன் இணைப்பதாக கையெழுத்திட்டார். அவர்கொடுத்த ஜம்மு காஷ்மிரில் இன்று நம்வசம் வெறும் 45 சதவிகிதம் மட்டுமே இருக்கிறது. மீதிபகுதிகள் பாகிஸ்தான்(35%) மற்றும் சீனா (20%) வசம் இருந்துவருகின்றன. நாம் இழந்தபகுதிகள் அனைத்தையும் மீட்டிடவேண்டும் என 1994ம் வருடம் நமது நாடாளுமன்றத்தில் ஒருதீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால் பலனில்லை.
பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் சமீபத்தில் அளித்துள்ள தீர்ப்பில் கில்கித் மற்றும் பால்டிஸ் தான் (பாக் ஆக்கிரமித்துள்ள ஜம்மு-காஷ்மிர்) பகுதிகள் பாகிஸ்தானுக்கு சொந்த மானதல்ல அவை ஜம்மு காஷ்மிருக்கு சொந்தமானவை என குறிப்பிட்டுள்ளது. ஆனால் நமது மத்திய அரசு அதைமறந்து விட்டது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இமயமலை தொடரில் மொத்தம் 4,500 கிலோமீட்டருக்கு எல்லைகள் இருக்கின்றன. அவற்றில் 3,268 கிலோ மீட்டர் எல்லைப்பகுதி பிரச்னைக் குரியதாக இருந்து வருகிறது.
இந்தியா திபெத் (சீனாவுக்கும்) இடையே மக்மோஹன் எல்லைக்கோடு 890 கிலோ மீட்டருக்கு செல்கிறது. சர்ஹென்றி மக்மோஹன் பிரிட்டிஷ் இந்திய அரசில் வெளிவிவகாரத்துறை செயலாளராக இருந்தவர். திபெத் அதிகாரிகளுடன் 1914ல் இவர் உடன்படிக்கை செய்து கொண்டு, இந்திய திபெத் (சீன) எல்லைக்கோட்டை வரையறுத்தனர். மக்மோஹன் எல்லைக்கோடு முழுக்கமுழுக்க இமய மலைப் பிரதேசத்தில் செல்கிறது. இந்தியா இந்தக்கோட்டைச் சட்டப் பூர்வமான எல்லைக் கோடாகக் கருதுகிறது. ஆனால் சீனா தொடக்கம்முதலே இதனை அங்கீகரிக்கவில்லை. திபெத் சீனாவின் ஒருபகுதி என்பதால் திபெத் தன்னிச்சையாக செய்து கொண்ட உடன்படிக்கை செல்லாது என்று காரணம்கூறுகிறது.
நமது நாட்டின் வட கிழக்கே எல்லை பகுதியில் இருக்கும் அருணாசலப் பிரதேசத்திலும் (சுமார் 90,000 சகிமீ.) சீனா உரிமை கோரி வருகிறது. குறிப்பாக, தவாங் மாவட்டத்தை குறிவைத்துள்ளது. சமீபத்தில் நமதுநாட்டில் இருந்து சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பயிற்சிக்காக சீனாசென்றபோது அந்நாடு அருணா சலப்பிரதேசத்தைச் சார்ந்த அதிகாரி ஒருவருக்கு மட்டும் விசாவழங்க மறுத்து விட்டது. அருணாசல பிரதேசம் சீனாவின் ஒருபகுதிதானே அங்கிருந்து வருபவருக்கு எதற்குவிசா என்றும் பதிலளித்தது.
1950ல் சூ என்லாய் தலைமையில் சீனாவில் ஆட்சி அமைந்தது. அப்போது சீனக்கம்யுனிஸ்ட் கட்சியின் மத்திய செயலாளராக மாவோ சேதுங் இருந்தார். சீனாவில் ஆட்சியை கைப்பற்றிய கம்யூனிஸ்டுகள் சிறிது கூட தாமதம் செய்யாமல் சுதந்தரநாடான திபெத்தை கைப்பற்றி சீனாவுடன் இணைக்கும் நடவடிக் கைகளை மேற்கொண்டனர். 1950ல் தொடங்கிய சீன ஆக்கிரமிப்பு 1959ல் நிறைவுற்றது. திபெத்தில் இருந்து தப்பிவந்த தலாய் லாமாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது. திபெத் சீனாவின் ஒருபகுதி என்பதை ஏற்றுக்கொள்வதாக நேரு அறிவித்தார். ஆனால் மக்மோஹன் எல்லைக்கோட்டை இன்றுவரை சீனா ஏற்றுக்கொள்ளாமல் மறுத்துவருகிறது.
உலகப் பிரச்னைகளை பற்றி பேசிவந்த பிரதமர் நேருவுக்கு உள்நாட்டு பிரச்னையை பற்றியும் அண்டை நாடுகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பது பற்றியும் மட்டும் சிந்திக்க நேரம் இல்லாமல் போய் விட்டது. அதனுடைய விளைவு இன்றுவரை ஜம்மு-காஷ்மில், சீனா இரண்டிலும் சிக்கல்கள் தொடர்கின்றன. நமக்குச்சொந்தமான பகுதிகளை இழந்து விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ஜெனரல் ராபர்ட் லோக் ஹர்ட் என்பவர் சுதந்தர இந்தியாவின் முதல் ராணுவ தலைமைதளபதியாக பதவியில் இருந்தார். இந்திய கடற் படையை வலுப்படுத்த தேவையான திட்ட அறிக்கையைதயாரித்து நேருவிடம் எடுத்துச் சென்ற போது, அகிம்சையை பின்பற்றும் நமக்கு எதிரிகள்யாரும் இல்லை என்று கூறிவிட்டார் நேரு. மேலும், 2,80,000 பேர் இருந்த ராணுவத்தை, 1,50,000 ஆகக் குறைத்து விடும்படியும் உத்தரவிட்டார். நல்லவேளையாக பாகிஸ்தான்செய்த தவறால் நமது ராணுவம் பிழைத்தது. 1947 அக்டோபர் மாதத்தின் மத்தியில் ஜம்மு – காஷ்மீர் மீது பாகிஸ்தான் தாக்குதல்தொடுத்தது. அப்போதுதான் நேருவுக்கு ராணுவத்தின் அவசியம்புரிந்தது.
இந்திய பாகிஸ்தான் இருநாட்டுப் பிரச்னையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச்சென்றவர் நேரு. செல்வாக்கு அற்ற ஷேக் அப்துல்லாவை அந்த மாநில முதல்வர் ஆக்கியது, அரசியல்சாசன சட்டத்தில் ஜம்மு-காஷ்மிருக்காக 370வது பிரிவை உருவாக்கியது என்று பலதவறுகளை இவர்செய்தார். இவருடைய தவறான அணுகு முறையின் காரணமாகத் தான் சீன போரில் நாம் தோல்வியடைந்தோம்.
சீனாவுடனான போர்முடிந்து 50 வருடங்கள் கடந்தபின்பும் அதிகார பூர்வமான வெளியீடுகள் எதையும் இந்திய அரசு வெளியிட்டதில்லை. அப்போரில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை ஆராய்ந்து லெஃப்டினன்ட் ஜெனரல் ஆண்டர்சன்ப்ரூக்ஸ், பிரிகேடியர் பிரேம்பகத் ஆகியோர் 1963ல் தயாரித்த அறிக்கை இன்று வரை ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சீனப்போர் நடப்பதற்கு 12 வருடங்களுக்கு முன்பாக அதாவது 1950ல் ஹிம்மத்சிங் என்பவர் திபெத்தை எவ்வாறு சீனா ஆக்கிரமித்து வருகிறது என்பதுபற்றி விரிவானதொரு அறிக்கை தயாரித்து மத்திய அரசிடம் அளித்துள்ளார். அது காணாமல் போய் விட்டதாம்.
இந்திய சீனப் போரின் போது பலமுடிவுகளை எடுத்த விகே.கிருஷ்ண மேனன், பிஎன்.முல்லிக், ஜெனரல் பி.என்.தாப்பர், லெஃப்டினன்ட் ஜெனரல் பிஎம்.கவுல் இவர்களுக்கு பக்க பலமாக இருந்த பிரதமர் ஜவாஹர்லால்நேரு ஆகியோர்களே நமது தோல்விக்கு முக்கிய காரணமாவார்கள்.
மிகச்சிறந்த அறிவாளி என்ற போதும் விகே.கிருஷ்ண மேனன் நேரு மீது குருட்டுத் தனமான நம்பிக்கை கொண்டிருந்தார். 1957ல் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சரானார். ராணுவத்தை பலவீனப் படுத்தியதில் அதிகபங்கு இவருக்கு உண்டு. சீனா எந்தக்காலத்திலும் இந்தியாவைத் தாக்காது என்று உறுதியாக நம்பியவர் இவர். இந்தியராணுவத்தின் தேவைக்காக ஜீப் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழலுக்கு பெரும்காரணமாக இருந்தவர். இந்தியாவுக்கான ஹைகமிஷனராக இங்கிலாந்தில் இருந்து வந்த கிருஷ்ணமேனன் இதன் காரணமாக பதவிவிலகினார். ஆனால் அவரை தனது மந்திரிசபையில் சேர்த்துக் கொண்டதுடன் அவருக்கு பாதுகாப்பு துறையையும் வழங்கினார் நேரு.
நாட்டின் வட கிழக்குப் பகுதியில் ஏற்பட்டபெரும் பின்னடைவுக்கு ஜெனரல் பிஎம்.கவுல் கடைப்பிடித்த அணுகு முறைகளே காரணம் என்று பல ராணுவநிபுணர்கள் கருதுகிறார்கள். உயர்ந்த மலைப் பகுதிகளில் எப்படி போரை நடத்துவது என்கிற யுத்தத்தந்திரம் சிறிது கூட தெரியாதவர் இவர். முன் அனுபவமும்கிடையாது. 1959 முதல் 1962 வரை நமது ராணுவத்திலும் பாதுகாப்பு அமைச்சகத்திலும் எடுக்கப்பட்டமுடிவுகள் அனைத்தும் ஆழ்ந்த ஆலோசனைசெய்து எடுக்கப்படாமல் அவசரகதியில் எடுக்கப்பட்டன.
பி.என்.முல்லிக் இந்திய சீன போர் நடைபெற்று வந்தநேரத்தில் ஜெனரல் ஆக இருந்தவர். கிருஷ்ண மேனன் சொல்வதை தட்டாமல் அப்படியே பின்பற்றியவர். வடகிழக்கு எல்லை பகுதிகளில், போர் முனையில் இருந்து வந்த இளம் ராணுவ அதிகாரிகள்கூறிய யதார்த்த நிலைமைகளை கேட்காமல் ஒதுக்கித்தள்ளியவர்.
எல்லையில் என்ன நடக்கிறது என்றே நமது பிரதமர் உள்பட பலருக்கும்தெரியாமல் இருந்துவந்தது.
1962 அக்டோபர் 12 அன்று புதுதில்லி பாலம்விமான நிலையத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காகப் புறப்பட்ட பிரதமர் நேருவிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்டகேள்விக்கு பதிலளித்த நேரு, ' சீனர்களை வெளியில்தூக்கி எறியும் படி' இந்திய ராணுவத்துக்கு உத்தரவு இட்டுள்ளதாக கூறினார். அதை நிறைவேற்றுவது எப்போது என்பதை ராணுவத்தினர் முடிவுக்கே விட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். இந்திய பிரதமரின் இந்த அறிவிப்புவெளியாகி சரியாக எட்டாவது நாள் சீனா நமது எல்லைப்பகுதி நெடுகிலும் தனது தாக்குதலை தொடங்கியது. சீனர்களை எங்குதூக்கி எறிவது என்று போர் முனையில் இருந்து வந்த நமது ராணுவ வீரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தெரியவில்லை. ஏனெனில் இந்தியச்சீன எல்லைப்பகுதி எது என்பதே தெரியாமல் தான் நமது ராணுவம் அங்கு இருந்து வந்தது. ஒருமாதம் நடைபெற்ற இப்போரில் இந்திய விமானப்படை பயன்படுத்தப்படவே இல்லை.
1962 அக்டோபர் 20அன்று தொடங்கிய தாக்குதலை சீனா தன்னிச்சை யாகவே நவம்பர் 21 அன்று நிறுத்திக் கொண்டது. தான் ஊடுருவியிருந்த பகுதிகளில் இருந்தும் பின் வாங்கி மக்மோஹன் எல்லைக்கு அப்பால் திரும்பிச்சென்றது. அக்சாய்சின் பகுதி மட்டும் இன்றுவரை சீனாவசம் இருக்கிறது. அருணாசல பிரதேசத்திலும் தொடர்ந்து உரிமைகோரி வருகிறது சீனா. இப்பொழுதாவது நாம் விழித்து கொண்டு எல்லைப் பிரச்னைகளைப் பேசித் தீர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர் காலத்தில் இன்னொரு மோதல் நிகழலாம் என்று ராணுவ நிபுணர்கள் கருதுகிறார்கள்.
Tags ; 1962 இந்திய சீனப் போர், இந்திய சீனப் போர், இந்தியா , சீனா, போர்
நன்றி ; நா. சடகோபன்
சங்கிலை, வேர்ப்பட்டை சமஅளவு அரைத்து சுண்டைக்காயளவு எடுத்து காலை மாலை வெந்நீரில் 20 ... |
பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.