மக்களவை மற்றும் ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தல்களில் தொகுதிப் பங்கீடு செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக 24 மணி நேரம் கெடு விதித்துள்ளது.
இந்தக்கால கட்டத்துக்குள் தொகுதி பங்கீடு குறித்து உரியமுடிவு எடுக்கவில்லை என்றால், பாஜக தனித்துப் போட்டியிடும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் தேதி முதல் மே மாதம் 12ஆம் தேதி வரை 9 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன்சேர்த்து தெலங்கானா பிராந்தியத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த ஆந்திர சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த 2 தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக சந்திர பாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பலகட்டங்களாக இரு கட்சிகளையும் சேர்ந்த தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்திய பிறகும் தொகுதிப்பங்கீடு தொடர்பாக இதுவரை சுமுக உடன்பாடு எட்டப்படவில்லை.
பேச்சுவார்த்தையின் போது தெலங்கானா பிராந்தியத்தில் குறைந்தது 48 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 9 மக்களவை தொகுதிகளை தனக்கு ஒதுக்கும்படி தெலுங்குதேசம் கட்சியிடம் பாஜக கேட்பதாக கூறப்படுகிறது. அதுபோல் சீமாந்திரத்தில் 15 சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் 5 மக்களவைத் தொகுதிகளை பாஜக கேட்பதாகவும் தெரிகிறது.
ஆனால், தெலுங்குதேசம் கட்சியோ தெலங்கானா பிராந்தியத்தில் 35 சட்டப் பேரவை தொகுதிகள் மற்றும் 7 மக்களவைத் தொகுதிகளையும், சீமாந்திரத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளை மட்டுமே பா.ஜ.க.,வுக்கு ஒதுக்கமுடியும் என்று கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா தனிமாநில போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததால் அந்தப் பிராந்தியத்தில் பாஜக.,வுக்கு தனி செல்வாக்கு உள்ளது. எனவே தெலங்கானா பிராந்தியத்தில் பாஜக பெரும் சக்தியாக உருவெடுத்து விடக்கூடாது என தெலுங்கு தேசம் கட்சி நினைப்பதே, அக்கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்காததற்கு காரணமாக கருதப்படுகிறது.
தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை முடிந்து விரைவில் கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையுடன் இருந்த பாஜக.,வுக்கு, தெலுங்குதேசம் கட்சியின் இந்த நடவடிக்கை கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொகுதிப் பங்கீடு குறித்து முடிவெடுக்க தெலுங்கு தேசம் கட்சிக்கு பாஜக 24 மணி நேர கெடு விதித்துள்ளது.
இதுதொடர்பாக ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை பாஜக மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு கூறியதாவது:
பாஜக – தெலுங்கு தேசம் கட்சிகளிடையிலான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை. எங்களால் இதற்குமேலும் பொறுமையாக இருக்கமுடியாது.
எனவே, தெலங்கானா மற்றும் சீமாந்திரத்தில் தொகுதிப்பங்கீடு செய்வது தொடர்பாக தனது முடிவை இன்னும் 24 மணி நேரத்துக்குள் பாஜகவிடம் தெலுங்குதேசம் கட்சி தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக பாஜக தலைவர்கள் திங்கள் கிழமை (மார்ச் 31) கூடி முடிவு செய்வார்கள்.
பாஜகவின் தெலங்கானா, ஆந்திரா ஆகிய இருபிரிவுகளுமே தெலுங்கு தேசம் கட்சியுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இல்லை என்று தெரிவித்துள்ளன. எனவே, கூட்டணியின் எதிர்காலம் குறித்து எதுவும் சொல்வதற்கில்லை.
தேர்தலை தனியாக சந்திக்க வேண்டுமென்று, தில்லியில் திங்கள்கிழமை நடைபெறும் பாஜக மத்திய குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால் அதனை ஏற்றுக் கொண்டு தயாராவோம். முன்னெச்சரிக்கையாக, தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப்போட்டியிட தயாராக இருக்கும்படி ஆந்திரம் (சீமாந்திரம்) மற்றும் தெலங்கானா பகுதி தலைவர்களை நான் கேட்டு கொண்டுள்ளேன் என்றார் வெங்கய்ய நாயுடு.
சீமாந்திரம் மற்றும் தெலங்கானா பிராந்தியத்தில், காங்கிரஸ் கட்சி, முன்னாள் முதல்வர் கிரண்குமார் ரெட்டியின் கட்சி, ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், சந்திரசேகர் ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி ஆகிய கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.
ஆனால் முக்கிய எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியோ பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிடும் திட்டத்துடன் ஆரம்பத்தில் இருந்து செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.