பாஜக தேசியத் தலைவர் ராஜ் நாத் சிங். தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி…
இந்தியா முழுவதுமே பரவாலாக பிரச்சாரம் செய்திருக்கிறீர்கள். இந்தத் தேர்தலில் பாஜகவுக்கான வாய்ப்புகள் குறித்த உங்களின் மதிப்பீடு என்ன?
“பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தத் தேர்தலில் 300 இடங்களை கைப்பற்றும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். நாங்கள் முன் இருந்ததைவிட சிறப்பான நிலையில் தற்போது உள்ளோம்.”
தென் மாநிலங்களில் உங்கள் கட்சிக்கான வாய்ப்பு என்ன?
“நல்ல நிலையில்தான் இருக்கிறோம். கர்நாடகத்தை பொருத்தவரை, எங்களுக்கு 15-ல் இருந்து 18 இடங்கள் வரை கிடைக்கும். தமிழகத்தில் எங்களது கூட்டணியின் வெற்றி குறிப்பிடத்தக்கதாக இருக்கும். நல்ல எண்ணிக்கையில் நாங்கள் வெற்றி பெறுவோம். எனினும் இதில் எண்ணிக்கை அடிப்படையில் கூற முடியாது. கேரளாவிலும் ஓரளவு வாய்ப்பு உள்ளது. ஆந்திராவில் எங்கள் கட்சி, தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் மூலம் எங்களது வெற்றி வாய்ப்புகள் அங்கு அதிகரிக்கும். தனி தெலங்கானா அமைப்பதற்கு நாங்கள் ஆதரவளித்தோம். அந்த நிலைப்பாட்டிலும் ஆந்திரா மற்றும் தெலங்கானா என இரு மாநிலங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதிலே உறுதியாக இருந்தோம்.”
பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைத்தால், அதன்பின் தெலங்கானா விவகாரங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்படுமா?
“நாங்கள் எப்போதுமே இரு மாநிலங்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறோம். அதுதான் எங்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அதனை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம். காங்கிரஸ் இதனை என்றோ செய்திருக்கலாம். ஆனால், காங்கிரஸ் தேர்தலுக்காக காத்திருந்து, 10 ஆண்டுகள் கழித்து இந்த முடிவை அவசர நிலையில் எடுத்தது.”
உத்தரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
“எங்களின் இலக்கு 60 இடங்கள். அதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.”
பாஜக ஆட்சி அமைத்தால், அதில் நீங்கள் பங்கேற்கமாட்டீர்கள் என்று கூறப்படுகிறது. நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
“இது தொடர்பாக நிறைய கருத்துகள் இருந்து வருகிறது. நான் ஏற்கெனவே கட்சியின் தேசியத் தலைவராக இருக்கிறேன். மேலும், எனக்கு இரண்டு ஆண்டுகளுக்கான பொறுப்பு இருக்கிறது. நான் அதனை நிறைவேற்றுவேன்.”
தேர்தலுக்கு பின் கூட்டணி வாய்ப்பு உண்டா? உங்களின் முந்தைய கூட்டணி கட்சிகளான பகுஜன் சமாஜ் மற்றும் திரிணமூல் ஆகிய கட்சிகளுடன் உங்களின் நிலைபாடு என்ன?
“இதற்கான அவசியம் ஏற்படாது என்றே நான் நினைக்கிறேன். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். எந்த கட்சியாவது எங்களுக்கு ஆதரவு அளிக்க விருப்பப்பட்டால் அதையும் நாங்கள் வரவேற்போம். இது பற்றி இப்போது கூற எதுவும் இல்லை.”
இரட்டை ஆட்சி அதிகாரம் கொண்டதாக, காங்கிரஸை பாஜக விமர்சித்துள்ளது…
“நாங்கள் அப்படி கூறவில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கின் முன்னாள் ஊடக ஆலோசகர் தான் அந்தக் குற்றச்சாட்டை வைத்தார். காங்கிரஸ் தலைமை அதற்கான பதிலை அளிக்க வேண்டும் என்று மட்டும்தான் நாங்கள் எதிர்ப்பார்த்தோம். காங்கிரஸ் பதில் அளிக்கவில்லை. எனவே மன்மோகன் சிங், ‘சந்தர்ப்பவசமாக வந்த பிரதமர்’ என்பது உண்மைதான். அது உண்மை என்றால், காங்கிரஸ் தலைமை இந்த தேசத்தையே காயப்படுத்தியுள்ளது.
பிரதமருக்கு மட்டும் இது இழிவல்ல. அந்தப் பதவிக்கே இழிவு ஏற்பட்டுவிட்டது. இந்த அரசை ரிமோட் கன்ட்ரோலாக இயக்கி வருபவர் இந்த நாட்டை பெரிய அளவிற்கு காயப்படுத்திவிட்டார். அதனால்தான் இந்த அரசு செயல்படாமலே இருக்கிறது. செயலிழந்த கொள்கைகளைப் பற்றி பேசுகிறது. இப்போதாவது காங்கிரஸ் தலைமை இதற்கு பதில் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த நாடே இது குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறது.”
பிரதமர் மன்மோகன் சிங்கை ஒரு பலவீனமான பிரதமர் என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி விமர்சித்துள்ளார். அது பற்றி உங்கள் கருத்து?
“இந்த அரசே பலவீனமாகத்தான் இருக்கிறது. இந்த அரசை ஜன்பத்தில் உள்ள கதவு எண்.10-ல் (சோனியா காந்தியின் வீட்டு முகவரி) இருப்பவர் பலவீனமாக்கி உள்ளார்.
அத்வானி சில வருடங்களுக்கு முன்னர் இந்த விமர்சனத்தை வத்தார். முதலில் காங்கிரஸ் சஞ்ஜய் பாருவின் புத்தகத்திற்கு பதில் கூறட்டும்.”
பாஜகவின் கொள்கை ஆலோசகராக இருந்துவரும் ஆர்.எஸ்.எஸ்ஸிடம், பாஜகவின் ரிமோட் கன்ட்ரோல் உள்ளதே?
“இந்த நாட்டில் இருப்பது, ஒரே ஒரு ரிமோட் கன்ட்ரோல்தான். அதுதான் கதவு எண்.10, ஜன்பத். சஞ்ஜய் பாரு இதனை தனது புத்தகத்தில் கூறியுள்ளார். நான் கூறவில்லை. நாட்டில் நிறைய ரிமோட் கன்ட்ரோல் இருக்க முடியாது. இதில் எங்கு ஆர்.எஸ்.எஸ் இடம்பெறுகிறது. ஆர்.எஸ்.எஸ் கொள்கைகள் குறித்து பேசும்போது, நாங்கள் அனைவரும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களாக மட்டும்தான் இருப்போம்.”
நரேந்திர மோடி பிரதமரானால், அவரது அதிகாரத்தில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இருக்காது என்று நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் மதச்சார்பற்ற சமூக அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனரே?
“காங்கிரஸ் மற்றும் மதசார்பற்றவர்கள் என்று கூறிகொள்ளும் சிலர், இப்படிப்பட்ட பயத்தினை சிறுபான்மையினர் மனதில் தங்களது வாக்குக்காக புகுத்தியுள்ளனர். ஆனால் நாங்கள் இந்த பயத்தை போக்குவோம். சிறுபான்மையினரிடமிருந்து நம்பிக்கையையும் அன்பையும் பாஜக பெறும். அனைத்து மக்களும் சமம். இதுதான் எங்களது கொள்கை. மோடியும் அதனைதான் வலியுறுத்தி வருகிறார்.”
2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் ஏற்படுத்திய கறை இன்னும் அழியவில்லையே?
“இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் தீர்க்கப்பட்டுவிட்டது. மேலும், சர்வதேச அமைப்புகளும் இதனை ஆராய்ந்து பார்க்கலாம். ஆனால் உச்ச நீதிமன்றத்தைவிட பெரிய நீதி மையம் இருப்பதாக தெரியவில்லை. மோடி குற்றமற்றவர் என்று நிரூபிக்கப்பட்டுவிட்டது. இதில் மேலும் அவரது நேர்மையை குலைக்கும் வகையில் கேள்விகள் ஏன் எழுகிறது என தெரியவில்லை. நரேந்திர மோடி மதசார்பற்றவர் என்பது எனக்கு தெரியும்.”
பெண் ஒருவரை வேவு பார்த்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் விசாரணை நடத்தப்படும் என்று காங்கிரஸ் கூறி உள்ளது?
“இது தேவை தானா என்று தெரியவில்லை. ஏற்கெனவே இது தொடர்பாக ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டுவிட்டது. ஏதற்கு மேலும் ஒரு கமிஷன். காங்கிரஸின் இதுபோன்ற கொள்கைகள் ஆரோக்கியமற்றதாக இருக்கிறது. எப்படி இரண்டு கமிஷன்கள் ஒரு விஷயத்திற்காக விசாரணை மேற்கொள்ள முடியும்?”
ராபர்ட் வதேரா மீது அவதூறு பரப்பப்படுவதாக பிரியங்கா பிரச்சாரங்களில் கூறுகிறாரே?
“நாங்கள் தனிநபர் பிரச்சினை குறித்து அவதூறு செய்யவில்லை. ‘வால் ஸ்ட்ரீட்’ பத்திரிக்கை இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளது. மக்கள் உண்மையை தெரிந்துகொள்ள விரும்புகின்றனர்.”
பாஜக ஆட்சி அமைத்தால், ராபர்ட் வதேரா விவகாரத்தில் உங்கள் கட்சியின் நிலைபாடு என்ன? அவரது சொத்துக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வீர்களா?
“நாங்கள் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்பட மாட்டோம். மற்ற விவகாரங்களை போலவே இதனையும் கையாள்வோம்.”
ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ... |
முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ... |
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.