உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் புதிய பிரதமராக நரேந்திர மோடி(53) விரைவில் பதவி ஏற்கவுள்ளார். இந்த உயர் தகுதியை அவர் அவ்வளவு எளிதில் அடைந்து விடவில்லை.
முறையான திட்டமிடல், திட்டத்தை செயல்படுத்த நேரம்-காலம் கருதாமல் பம்பரமாய் சுழன்று உழைத்த வல்லமை. சுமார் பத்து, பதினைந்து கட்சித் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் செய்தித் தொடர்பாளர்களின் விமர்சனங்களையும், வசை மாரிகளையும் அவர்களுக்கு எதிரான அஸ்திரங்களாக மாற்றி திருப்பி அனுப்பிய மதியூகம் போன்ற எத்தனையோ சிறப்பம்சங்கள்தான் அவரை ஒரு மாநிலத்தின் முதல் மந்திரி என்ற பதவியில் இருந்து, பாரத தேசத்தின் பிரதமர் என்ற நிலைக்கு கொண்டு சேர்த்துள்ளது என்று கூறினால் அது மிகைப்படுத்தப்பட்ட ஒப்பீடாக இருக்க முடியாது.
டீக்கடையில் வேலை செய்தவரா, இந்த நாட்டின் பிரதமர் பதவிக்கு வருவது? என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்தை கெட்டியாக பிடித்துக் கொண்டு, அந்த ஒற்றை அஸ்திரத்தை ஒவ்வொரு மேடையிலும் பிரயோகித்து, அடித்தட்டு மக்களின் அன்பையும், அனுதாபத்தையும், ஆதரவையும் அவர் வாக்குகளாக அறுவடை செய்தார்.
நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம் தனது குரல் ஒலிக்கும் வகையில் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர்களுக்கு வான்வழியாகவும், சாலை மார்க்கமாகவும் அவர் மேற்கொண்ட சூறாவளி பிரசார சுற்றுப் பயணத்தை வியக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தன்னம்பிக்கை, மக்களின் நம்பிக்கையை சம்பாதித்தே தீருவது என்ற மோடியின் விடாமுயற்சி, கை மீது மட்டுமல்ல.., கை நிறையவும் பெரும்பலனை தேர்தல் முடிவுகளாக ஈட்டித் தந்துள்ளது.
தேசியத்தின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை… தெளிவான சிந்தனை… கம்பீரமான தோற்றம்… நினைத்ததை சாதிக்க வேண்டும் என்ற துணிச்சல்… ஆவேசமான பேச்சு… இவைதான் மோடியின் முகம்! அவர் கடந்து வந்த பாதை சாதாரணமானதல்ல. பணபலத்தாலோ, அரசியல் பின்புலத்தாலோ நரேந்திர மோடி இந்த பதவிக்கு வந்துவிடவில்லை.
காந்தி பிறந்த குஜராத் மாநிலத்தில் உள்ளது வாட்நகர் என்ற சின்னஞ்சிறு கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி தாமோதரதாஸ் மூல்சந்த் மோடி-ஹீராபென் தம்பதியின் 6 பிள்ளைகளில் 3-வது பிள்ளையாக
17-9-1950 அன்று பிறந்தவர் நரேந்திர மோடி.
"உழைத்தால்தான் சோறு" என்ற நிலைமை இருந்ததால், அந்த குடும்பத்தில் எல்லோரும் உழைத்தனர். ஆரம்ப காலத்தில் ரெயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருந்த தனது தந்தைக்கு மோடி உதவினார். ரெயில் நிலையத்திலும், ரெயில்களிலும் டீ விற்றார். பள்ளி பருவத்தில் அங்குள்ள பஸ் நிலையத்தில் அவரது அண்ணன் நடத்தி வந்த டீக்கடையில் வேலை பார்த்தார். அதோடு பள்ளி படிப்பையும் தொடர்ந்தார்.
படிப்பில் ஒரு சாராசரி மாணவராகவே இருந்தார். பள்ளிப் பருவத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மீது ஆர்வம் கொண்டார். குஜராத் பல்கலைக் கழகத்தில் எம்.ஏ. அரசியல் பொருளாதாரம் படித்தார். அப்போது ஆர்.எஸ். இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் அவருக்கு பிரசாரகர் பதவி கொடுத்தனர். அந்த பதவியில் திறம்பட செயலாற்றினார்.
நாக்பூரில் நடந்த ஆர்.எஸ்.எஸ். பயிற்சி மாநாட்டில் அவரது பணியை மூத்த தலைவர்கள் பாராட்டினார்கள். தொடர்ந்து சங் பரிவார் அமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டதால் அகிலபார வித்யார்த்தி பரிசத் அமைப்பில் முக்கியமான பொறுப்புகளை வகித்தார்.
இந்திராகாந்தி நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்தியபோது அதை எதிர்த்து பிரசாரம் செய்தார். வீடு வீடாக துண்டு பிரசுரங்களை வழங்கினார். அப்போது ஜனசங்க தலைவர்கள் வசந்த் கஜேந்தர கட்கார், நாதலால் ஷட்கா ஆகியோரது அறிமுகம் கிடைத்தது. அவர்கள் மூலம் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தார்.
எம்.ஏ. பட்டப்படிப்பு முடித்ததும் தீவிர அரசியலில் ஈடுபட்டார். அந்த நேரத்தில் பாரதீய ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி நாடு முழுவதும் ஒற்றுமை யாத்திரை நடத்தினார். குஜராத் மாநிலத்தில் அந்த யாத்திரைக்கு முழு பொறுப்பையும் ஏற்று வெற்றிகரமாக நடத்தி காட்டினார்.
1995-ல் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்கு நரேந்திரமோடி முக்கிய பங்கு வகித்தார். இதனால் கட்சியில் செல்வாக்கு அதிகரித்தது. குஜராத்தில் இருந்து டெல்லி சென்று அரசியல் பணிகளில் தீவிரம் காட்டினார். அவரது வேகமான அரசியல் பணியை பார்த்து அரியானா, இமாச்சல பிரதேச மாநில கட்சி பணிகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
1998-ல் பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்டார். அப்போது குஜராத் தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வில் நரேந்திர மோடி முக்கிய பங்காற்றினார். அவரது தேர்தல் வியூகமும், தேர்ந்தெடுத்த திறமையான வேட்பாளர்களும் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித் தந்தது.
கேசுபாய் படேல் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். ஆனால், கேசுபாய் படேல் மீது ஊழல் குற்றச்சாட்டும், திறமையில்லாத முதல்வர் என்றும் புகார்கள் குவிந்தன. 2001-ல் மிகப்பெரிய பூகம்பத்தை குஜராத் சந்தித்தது. அப்போது மறுசீரமைப்பு பணியை கேசுபாய் படேல் சரிவர செய்யவில்லை என்று மாநிலம் முழுவதும் மக்கள் கொந்தளித்தனர்.
அவரை முதல்-மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கட்சியினர் போர்க்கொடி தூக்கினார்கள். கேசுபாய் படேலை மாற்ற கட்சி மேலிடம் முடிவு செய்தது. 2001 அக்டோபர் 7-ந் தேதி குஜராத் முதல்-மந்திரி அரியணையில் நரேந்திர மோடி அமர்ந்தார்.
அடுத்த ஆண்டே சட்டசபையின் பதவிக் காலம் முடிவடைந்தது. அதை தொடர்ந்து நடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்று மீண்டும் முதல்-மந்திரி ஆனார். தொடர்ந்து 4 முறை வெற்றி வாகை சூடி யாராலும் வீழ்த்த முடியாத முதல்-மந்திரியாக திகழ்கிறார்.
இந்த தொடர் வெற்றிக்கு காரணம், குஜராத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்து சென்றதுதான். விவசாயத்தில் அதிக கவனம் செலுத்தினார். நிபுணர்களை அழைத்து அவர்களின் ஆலோசனைப்படி நீர் மேலாண்மை நடவடிக்கைகளை செயல்படுத்தினார். ஏரி, குளம் உள்பட நிலத்தடி நீரை சேமிக்க 5 லட்சம் கட்டுமானங்களை உருவாக்கினார்.
புதுப்புது பயிர் தொழில் நுட்பங்களை புகுத்தியதால் விவசாயம் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்தது. குஜராத் பருத்தி தொழில் மிகுந்த மாநிலம். மரபணு தொழில்நுட்பத்தை புகுத்தியதால் பருத்தி விளைச்சல் பல மடங்கு பெருகியது. பருத்தி உற்பத்தியில் அந்த மாநிலம் முன்னணியில் உள்ளது.
மின்மிகை மாநிலமாக குஜராத்தை உருவாக்கினார். அங்கு 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்கிறது.
தொழில் வளர்ச்சிக்காக சிங்கப்பூர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தொழில் நுணுக்கங்களை அறிந்து அவற்றை தனது மாநிலத்தில் செயல்படுத்தினார். தொழில் வளர்ச்சிக்காக தனிக் குழுவை அமைத்து மற்ற மாநிலங்களில் இருந்து வெளியேறும் தொழில் நிறுவனங்களை அழைத்து தொழில் தொடங்க அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்தார்.
2002-ல் குஜராத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் காரணமாக மற்ற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கடுமையான விமர்சனத்துக்குள்ளானார்.
அந்த கருத்தை அகற்ற குஜராத் மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை, மற்றும் உண்ணாவிரதங்களை நடத்தி மதக் கலவரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து, அனைத்து தரப்பு மக்களிடமும் நம்பிக்கை பெற்றார்.
2014 – பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசை வீழ்த்துவதற்கு, குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடிதான் சரியானவர் என்ற கருத்து பா.ஜனதாவில் உருவானது. இதனால் மெல்ல மெல்ல அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற கருத்தும் கட்சியின் உயர்மட்ட தலைவர்களிடையே வலுப்பெற்றது.
மோடியின் பதவி காலத்தில் குஜராத் கண்ட அபார வளர்ச்சி காரணமாக மோடியே பிரதம வேட்பாளருக்கு பொருத்தமானவர் என்ற கருத்தை வலுப்பெறச் செய்தது. இதனால் அவரையே பிரதமர் வேட்பாளராக நிறுத்துவது என பா.ஜனதா உறுதியான முடிவை எடுத்தது.
எப்போது கட்சியால், பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டாரோ? அப்போதே நரேந்திர மோடி தனது தேசிய பயணத்தை தொடங்கிவிட்டார். தேர்தல் தொடங்குவதற்கு முன்பாகவே பெரும்பாலான மாநிலங்களில் அவர் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சூறாவளியாக சுழன்றார். தனது கர்ஜனை பிரசாரத்தால் எதிர்க்கட்சிகளை கதி கலங்கவைத்தார்.
16-வது பாராளுமன்றத்துக்கான தேர்தல் தேதி 9 கட்டங்களாக அறிவிக்கப்பட்ட பின்பு மோடி இன்னும் வேகம் பெற்றார். ஓய்வின்றி 20 வயது இளைஞனை போல் எல்லா மாநிலங்களுக்கும் பறந்து சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். ஒரே நாளில் 2, 3 மாநிலங்களுக்கெல்லாம் தனி விமானத்தில் பறந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். 25 மாநிலங்களில் அவர் 3 லட்சம் கி.மீ. தொலைவுக்கு பயணம் செய்து, 437 பிரசார கூட்டங்களில் பங்கேற்றுப் பேசி பாரதிய ஜனதாவை வெற்றிக்கு வழிநடத்தினார்.
மோடியின் பிரசாரத்தால் பெரியவர்கள் மட்டுமின்றி 18 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டனர். அவர் எங்கு சென்றாலும் பெருங்கூட்டம் திரண்டது. காங்கிரசுக்கு எதிரான மோடியின் பிரசார வியூகம் வலுப்பெற்றபோது, அவருக்கு ஆதரவாக அலை வீசுவது கண்கூடாக தெரிந்தது.
"எனக்கு மத்தியில் ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்தால் குஜராத் மாநிலத்தின் வளர்ச்சியை மாதிரியாக கொண்டு நாட்டை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச் செல்வேன். ஊழலற்ற ஆட்சியை தருவேன்". என்ற மோடியின் கோஷம் தேசத்தையே ஈர்த்தது.
மேலும், தேர்தலுக்கு முன்பே காங்கிரஸ் தலைவர்களும், 3-வது அணி தலைவர்களும் தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்துவதற்கு வியூகம் வகுக்காமல் மோடி இப்போதே பிரதமர் ஆகிவிட்டதுபோல் பேசுகிறார் என்று அவரை மட்டுமே குறிவைத்து தாக்கியதும், மோடிக்கு ஒருவிதத்தில் சாதகமாயிற்று.
தேர்தலுக்கு பிறகு தொங்கு பாராளுமன்றம் அமையும் என்ற கருத்தை காங்கிரசும், முலாயம் சிங், லாலுபிரசாத், மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றோரும் முன்வைத்தனர்.
இதனால், எங்கே தொங்கு பாராளுமன்றம் அமைந்து விடுமோ என்று வாக்காளர்கள் கருதவும் நேர்ந்தது. இதுவும் மோடியின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரிக்க காரணமாக அமைந்தது. ஓட்டுப்பதிவு நாள் நெருங்க, நெருங்க இது வேகம் பிடித்தது.
நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது என்ற வாதத்தை காங்கிரஸ் தொடர்ந்து எதிர்த்து வந்திருக்கிறது. ஆனால் பாரதீய ஜனதா இந்த தேர்தலில் பெற்றுள்ள வெற்றி, மோடி அலை வீசியது என்பதற்கு சான்றாக அமைந்து விட்டது. இந்த தேர்தலில் வீசியது மோடி அலை அல்ல, சுனாமி என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்து உள்ளன.
வேகமாக வீசி வந்த மோடி அலை, தேர்தல் முடிவுகளில் சுனாமியாக மாறி காங்கிரசையும், 3-வது அணியையும் ஒருசேர சுருட்டி வீசிவிட்டது என்பதே உண்மை.
16-வது பாராளுமன்றத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான ஓட்டுகள் நேற்று காலை எண்ணப்பட்டது. தொடக்கத்தில் இருந்தே பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுவிட்டது. எதிர்க்கட்சிகள் இதற்கு முன் எப்போதும் பெறாத வெற்றியை இந்த தேர்தலில் பா.ஜனதா நிகழ்த்தி காண்பித்து உள்ளது.
இதற்கு மிக முக்கியமான காரணம், பா.ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி என்றால் அது நூற்றுக்கு நூறு உண்மை.
ஜனநாயக நாட்டில், சாமானிய குடும்பத்தில் பிறந்த ஒருவர், பிரதமராகவும் உயர முடியும் என்பதற்கு வாழும் உதாரணமாக மோடி திகழ்கிறார்.
ஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ஒரு நல்ல ... |
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ... |
Leave a Reply
You must be logged in to post a comment.