இது முதல் வெற்றி என்கிறது சி.பி.ஐ தரப்பு. தயாநிதி மாறனுக்கெதிரான வழக்கில் சென்னை நீதிமன்றத்தின் உத்தரவுதான் அவர்களின் நம்பிக்கையான குரலுக்குக் காரணம். மத்திய அமைச்சராக இருப்பவர், தனது அதிகாரத்தின் கீழ் வரும் மத்திய அரசுக்குச் சொந்தமான பொதுத்துறை நிறுவனத்தின் சேவைகளை உபயோகப்படுத்திக்கொள்ள அதிகாரமிருக்கிறது. ஆனால் அதீத சேவைகளைத் தனது தனிப்பட்ட நலன்களுக்கான விருப்பத்திற்கேற்றவாறு முறைகேடாக பயன்படுத்தக்கூடாது என்கிற முக்கியத்துவமான ஒரு தீர்ப்பை சென்னை பெரு நகர சி.பி.ஐ. நீதிமன்றத்தின் நீதிபதி கிருஷ்ண மூர்த்தி ஜன.29-ம் தேதி வழங்கிய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
"பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குச் சொந்தமான தொலைபேசி வசதிகளை தயாநிதிமாறன் முறைகேடாக தனது சொந்த லாபத்திற்காக பயன்படுத்தினார் என சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கைது செய்யப்பட அவரது பி.ஏ. கௌதமன், சன் டி.வி. ஊழியர்களான கண்ணன், ரவி ஆகியோரின் ஜாமீன் மனு தொடர்பான வழக்கில் அவர்களுக்கு ஜாமீன் தரமுடியாது என நீதிபதி கிருஷ்ணமூர்த்தி தீர்ப்பில் குறிப்பிட இந்த வரிகள் மிகவும் உற்சாகத்தை தருகிறது" என்கிறார் சி.பி.ஐ. அதிகாரியான ராஜேஷ் குமார். ஆனால் இதே நீதிபதி கிருஷ்ணமூர்த்தி ஜனவரி 28-ம் தேதி இதே குற்றவாளிகளை சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என வைத்த கோரிக்கையை நிராகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
"கஷ்டடி கோரிய 3 பக்க மனுவில் சி.பி.ஐ. அதிகாரி ராஜேஷ் குமார் ஒரு பக்கத்தில் மட்டுமே கையெழுத்து போட்டிருந்தார். இரண்டு பக்கங்களை கையெழுத்து இல்லாததையும் போதுமான ஆதாரங்களை முன் வைக்காததையும் காரணம் காட்டி, கஷ்டடியை நிராகரித்தார் நீதிபதி. சி.பி.ஐ. கஷ்டடிக்கு அனுமதித்தால் அடித்து துன்புறுத்தி வாக்குமூலம் வாங்க வழியிருக்கிறது என மூவர் தரப்பில் சொல்லும் வாதத்தில் நியாயம் இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
கைதான மூவருக்காக 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களை தயாநிதிமாறன் ஏற்பாடு செய்திருந்த நிலையில், சி.பி.ஐ. தரப்பில் ஒருவர் மட்டுமே ஆஜரானார். வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ.யின் டி.எஸ்.பி. ராஜேஷ்குமாரின் டீம் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தது. மனுவில் ஏதேனும் ஒரு பக்கத்தில் கையெழுத்து இருந்தால் போதும் என்கிற அவர்கள் மாநில நீதிமன்ற நடைமுறையிலேயே இங்கும் செயல்பட்டது அவர்களுக்கு சாதகமாக அமையவில்லை. கையெழுத்து இல்லை என்கிற டெக்னிக்கல் பாயின்ட்டை கௌதமன் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ் கையிலெடுத்து, மூவரையும் துன்புறுத்தி தயாநிதிக்கு எதிராக வாக்குமூலம் வாங்க சி.பி.ஐ. திட்டமிடுகிறது என வாதாடினார். சி.பி.ஐ. தரப்பில் பொத்தாம் பொதுவாக கஷ்டடி கேட்டார்களே தவிர, காரணங்களை சரியாக முன்வைக்கவில்லை" என்கிறது வழக்கறிஞர் வட்டாரம்.
கஷ்டடி மறுக்கப்பட்ட அதே 28-ந் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை நடந்தது. இதில் சீனியர் வழக்கறிஞர் மூலம் ஒரு விரிவான மனுவை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அதில், 'தயாநிதிமாறனுக்கு மத்திய அரசு 3 தொலைபேசி இணைப்புகளை அவரது வீடு, தொகுதி, டெல்லி அலுவலகம் ஆகிய இடங்களில் உபயோகித்துக்கொள்ள அனுமதி கொடுத்துள்ளது. அதில் ஒரு தொலைபேசியில் வீடியோ சிக்னல்கள் உட்பட அனைத்து சிக்னல்களையும் அனுப்பும் அகண்ட அலை வரிசை பொருத்தப்பட்டிருந்தது. இதைத் தவிர இரண்டு செல்போன் இணைப்புகளை அதிகாரபூர்வமாக அளித்துள்ளது. அவர் அதை எல்லாம் மீறி 364 தொலைபேசி இணைப்புகளை பயன்படுத்தியுள்ளார். அது போதாதென்று 4 லைன்களை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து பயன்படுத்தியுள்ளார்.
சன் டி.வியின் தொழில்நுட்ப அதிகாரியான கண்ணன் இந்த இணைப்புகளை சன் டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உபயோகப்படுத்தினார். அதற்காக 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்களை அய்கா டெல் நிறுவனத்திடமிருந்து சன் டி.வி. வாங்கியுள்ளது. எலக்ட்ரீசியன் ரவிதான் இந்த இணைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் வேலைகளைச் செய்தவர். இந்த ரகசிய வேலைகளை பாதுகாக்க தயாநிதிமாறன் பி.எஸ்.என்.எல். ஊழியர்களை கூட தன் வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டார். அவரது பி.ஏ. கெளதமன்தான் பி.எஸ்.என்.எல். அதிகாரிகளுடன் இணைந்து இந்த ஒளிபரப்பு வேளைகளில் எந்தத்தடையும் வராமல் பார்த்துக் கொண்டார். பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர்களான வேலுச்சாமியும், பிரம்மதத்தும் உயர்வகை தொலைபேசி தொடர்புகளான ஐ.எஸ்.டி.என். பி.ஆர்.ஏ. பிராட் பேண்ட் ஆகியவற்றை தயாநிதிமாறனுக்கு அளித்துள்ளனர். சேவை என்கிற பெயரில் அழைக்கப்பட்ட இந்த இணைப்புகளோடு பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் கணக்குகளில் பில் எதுவுமே வராது. இப்படி இந்திய நாட்டின் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறையை பயன்படுத்தி, கொள்ளை லாபம் அடைந்தார் தயாநிதி மாறன்' என பகீர் தகவல்கள் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தயாநிதி தரப்பில், 'இந்த வழக்கிற்கு எந்த முகாந்திரமும் இல்லை. வாய்மொழி உத்தரவாக ஆவணங்கள் எதுவுமில்லாமல் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது' என வைக்கப்பட்ட வாதத்தை சி.பி.ஐ. கடுமையாக எதிர்த்தது. 'தற்போதைய நிலையில், வழக்கு தொடர்பான பல உண்மைகளைக் கோர்ட்டில் கூட சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதிமாறன அதை அழித்து விடுவார்' என சி.பி.ஐ. வைத்த வாதத்தை ஏற்றுக் கொண்ட தீதிபதி, 'குற்றவாளிகளை ஜாமீனில் வெளியேவிட்டால் அவர்கள் சாட்சிகளை அளிப்பார்கள்' எனக் கூறி ஜாமீன் மனுவை நிராகரித்தார்.
நீதிபதி தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ.யும், சிறையில் இருப்பவர்களும் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றுள்ளார்கள். ஹாட்டாகவே செல்கிறது இந்த விறுவிறு வழக்கு.
நன்றி : நக்கீரன்
– தாமோதரன் பிரகாஷ்
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.