மற்ற கழகங்களுக்கு மாற்றாக பாரதிய ஜனதாவிற்கு வாக்களியுங்கள்

தமிழகத்தின் 14 வது சட்டசபைத் தேர்தல் வரும் ஏப். 13 ம் தேதி நடக்கவுள்ள நிலையில், இது வரையிலான தமிழகத் தேர்தல் களங்களுக்கு மாறான ஒரு காட்சி தெளிவாகவே தென்படுகிறது. அது, கழகங்களுக்கு மாற்றாக பாஜக உருவெடுத்திருப்பது தான்.

காமராஜர் தலைமையிலான ஆட்சிக்கு முடிவுரை எழுதிய 1967 சட்டசபைத் தேர்தலை அடுத்து, திமுக, அதிமுக ஆகிய இரு கழகங்களே மாறி மாறி தமிழகத்தை ஆண்டு வந்துள்ளன. இவ்விரு கட்சிகளும் எதிரெதிரே செயல்படுவதுடன், எதிரிக் கட்சி மீதான மக்கள் அதிருப்தியைப்

பயன்படுத்தியே அரசியல் நடத்தி வந்துள்ளன. இந்த இரு கழகங்களுக்கும் மாற்றாக சென்ற தேர்தலில் உருவான நடிகர் விஜயகாந்தின் தேசிய திராவிட முற்போக்குக் கழகமும் இத்தேர்தலில் அதிமுகவுடன் அணி சேர்ந்துவிட்டது.

காங்கிரஸ் வழக்கம் போல சவாரி செய்யத் தோதான தோளைக் கண்டு தாவிவிட்டது. இரு கழகங்களையும் மாறி மாறி சார்ந்திருந்த காரணத்தாலேயே காங்கிரஸ் தமிழகத்தில் காற்றில் கரைந்த பெருங்காயமாகி விட்டது. தற்போது அது வெறும் காலி பெருங்காய டப்பா மட்டுமே. ஆனால், தேசிய அளவில் காங்கிரசுக்கு மாற்றாகவும் பிரதான எதிர்க்கட்சியாகவும் இருக்கும் பாரதீய ஜனதா கட்சி, இப்போது, தமிழகத்தில் மாற்றங்களை விரும்பும் நடுநிலை வாக்காளர்களின் தளமாக உருவெடுத்திருக்கிறது.

 

பாரதீய ஜனதாவின் அரசியல் பயணம்

ponji_tதமிழகத்தில் பாஜக பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சக்தியாக 1996 வரை இருந்ததில்லை. எனினும் மாநிலம் முழுவதும் பல்லாயிரக் கணக்கான தொண்டர்களுடன் வலுவான அடித்தளம் பாஜகவுக்கு உண்டு. ஜெயலலிதாவுக்கு எதிரான மக்களின் அதிருப்தி அலை பொங்கிப் பிரவகித்த 1996 சட்டசபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, குறிப்பிடத்தக்க வாக்கு சதவிகிதம் பெற்றதுடன், குமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதியில் வெற்றியும் பெற்றது. சி.வேலாயுதன் சட்டசபைக்கு பாஜக உறுப்பினராகச் சென்றபோது தான் கட்சியின் இருப்பு புலப்பட ஆரம்பித்தது. அத்தேர்தலில் அதிமுக 4 தொகுதிகளையே கைப்பற்ற முடிந்தது என்பதும், மதிமுக- கம்யூனிஸ்ட் கூட்டணிக்கு 2 இடங்கள் மட்டுமே கிடைத்தன என்பதும், மதிமுக ஓரிடத்திலும் வெல்லவில்லை என்பதும் குறிப்பிட வேண்டிய ஒப்பீட்டுத் தகவல்கள்.

அடுத்து வந்த நாடாளுமன்றத் தேர்தலில் (1998) பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றன. 30 தொகுதிகளில் வென்ற அக்கூட்டணியில் பாஜக 3 தொகுதிகளில் வென்றது. இந்த வெற்றியே மத்தியில் வாஜ்பாய் ஆட்சி அமைய அடிகோலியது. எனினும் ஜெயலலிதா ஆதரவை விளக்கிக் கொண்டதால் நாடு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தது (1999).

இப்போதும் கூட்டணி பாஜகவை மையமாகக் கொண்டுதான் அமைந்தது. அதன் தமிழகத் தலைமையாக திமுக மாறியது. முந்தைய கூட்டணியிலிருந்த கட்சிகளில் அதிமுகவுக்கு பதிலாக திமுக மட்டும் மாறியது. அத்தேர்தலில் 26 தொகுதிகளில் கூட்டணி வென்றது; பாஜக 4 தொகுதிகளில் (கோவை-சி.பி.ராதாகிருஷ்ணன்; நீலகிரி- மாஸ்டர் மாதன்; திருச்சி- ரங்கராஜன் குமாரமங்கலம், நாகர்கோவில்- பொன்.ராதாகிருஷ்ணன்) வென்றது. வாஜ்பாய் ஆட்சியும் தொடர்ந்தது.

2001 சட்டசபை தேர்தலில் திமுக அணியில் இருந்த பாஜக 4 தொகுதிகளில் (காரைக்குடி- ஹெச்.ராஜா; மயிலாடுதுறை- ஜெகவீரபாண்டியன்; மயிலாப்பூர்- கே.என்.லட்சுமணன்; தளி- கே.வி.முரளிதரன்) வென்றது. எனினும் அத்தேர்தலில் திமுக ஆட்சியை அதிமுகவிடம் இழந்தது. எதிர்க்கட்சி வரிசையில் பாஜக தனது ஜனநாயகக் கடமையை செவ்வனே செய்தது.

இந்த இரு (1998, 1999) தேர்தல்களும், பாரதீய ஜனதா கட்சியை தீண்டத் தகாத கட்சியாகக் கருதி வந்த இரு கழகங்களின் மனப்பான்மையில் ஏற்பட்ட மாற்றத்தை அம்பலப்படுத்தின. அதன் விளைவாகக் கிடைத்த வெற்றியிலும், மத்தியில் அமைந்த ஆட்சியிலும் அவை பங்கெடுத்தன.

ஆனால், 2004 தேர்தலில் தேசிய அளவில் பாஜக தலைமையிலான தே.ஜ.கூட்டணி பிரகாசிக்கவில்லை. அத்தேர்தலில் காங்கிரசை மையப்படுத்தி அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தமிழகத்திலும் (39 தொகுதிகளிலும்) தேசிய அளவிலும் வென்று ஆட்சி அமைத்தது. அதிமுக, பாஜக கட்சிகள் மட்டும் ஒரு புறமும் பிற கட்சிகள் அனைத்தும் மறுபுறமும் அணி மாறி நின்ற நிலையில், வாக்குக்களின் கூட்டணியால் எதிரணி வென்று வாகை சூடியது. ஆயினும் அதிமுக- பாஜக கூட்டணி 41 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றது.

அதன் பிறகு மீண்டும் அரசியல் தீண்டாமைப் படலம் துவங்கியது. ஜெயலலிதா பாஜகவை சுமையாகக் கருதி நாசூக்காகக் கழற்றிவிட்டார். வாஜ்பாய் ஆட்சியில் சக்திவாய்ந்த துறைகளில் கோலொச்சியதை மறந்துவிட்டு, 'மதச்சார்பின்மை காவலர்' என்று கூறிக்கொண்டு, பாஜகவை வசைபாடத் துவங்கினார் கருணாநிதி.

2009 நாடாளுமன்றத் தேர்தலிலும் அரசியல் தீண்டாமை தொடர்ந்தது. தமிழகத்தில் காங்கிரஸ்- திமுக கூட்டணி, இடதுசாரிகளுடன் கைகோர்த்த திமுக கூட்டணி ஆகியவற்றுடன் பாஜக தனித்து மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. எதிர்பார்த்தது போலவே பாஜக தோல்வியுற்றது. திமுக கூட்டணி 27 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி 12 தொகுதிகளிலும் வென்றது. பாஜக 2.3 சதவிகித வாக்குகளைப் பெற்றது. கன்யாகுமரி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 2.54 லட்சம் வாக்குகள் பெற்று, 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

இந்நிலையில்தான் தற்போது தமிழக சட்டசபைத் தேர்தல் வருகிறது. இரு கழகங்களும், வெல்வதற்கு அடிப்படையான வாக்கு வங்கி, தேர்தல் கூட்டணிகளின் அடிப்படையில் வியூகம் அமைத்த காரணத்தால், இம்முறையும் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது. ஆனால், இந்த தனிமைப்படுத்தப்பட்ட நிலையே பாஜகவின் தனிச்சிறப்பாக மாறி இருக்கிறது.

மாற்றாக உருவெடுக்க கிடைத்த வாய்ப்பு

பாஜகவுடன் கூட்டு சேர்வது சிறுபான்மையினரின் ஒட்டுமொத்த வாக்குகளை இழக்கக் காரணமாகி விடும் என்ற கணக்கீட்டால்தான் பாஜகவை தமிழக அரசியல் கட்சிகள் புறக்கணிக்கின்றன. அதே சமயம், தமிழகத்தின் இரு முக்கிய கட்சிகளான திமுக, அதிமுக மட்டுமல்லாது, மதிமுக, பாமக போன்றவையும் பாஜகவுடன் கூடிக் குலாவியவைதான். தற்போது அவை நெருக்கம் காட்டாமல் விலகி இருக்கக் காரணம் கொள்கை தான் என்று சொன்னால் மக்கள் சிரிப்பார்கள். இப்போதைக்கு பாஜகவிடம் பெரும் வாக்கு வங்கி இல்லை என்ற கருத்தால் தான் அக்கட்சிகள் தீண்டாமையைக் கடைபிடிக்கின்றன. அந்நிலையை மாற்ற பாஜகவுக்குக் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு இத்தேர்தல்.

சென்ற சட்டசபைத் தேர்தலில் இரு கழகங்களுக்கும் போட்டியாக உருவெடுத்த தேமுதிக, ஊழல் ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற குறிக்கோளுடன் அதிமுகவுடன் அங்கம் வகிக்கிறது. இதே அதிமுகவும் ஊழல் குற்றச்சாட்டுக்கு அப்பாற்பட்டதல்ல என்பது தமிழக மக்கள் அறிந்தது. இப்போது தமிழக மக்கள் முன்னுள்ள ஒரே வாய்ப்பு 'இரு கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்று தேர்ந்தெடுப்பதாகவே இருக்கிறது.

அதிமுகவுடன் ஊடல் கொண்டு மதிமுக தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தேமுதிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் ஐக்கியமான நிலையில், திமுக- காங்கிரஸ் கூட்டணிக்கு எதிரான – ஊழலை சற்றும் ஏற்காத மக்களின் வாக்குகளை பெறும் முனைப்பில் பாஜக மட்டுமே இருக்கிறது. இது பாஜகவின் பலம். தனித்து போட்டியிடுவது பாஜகவின் பலவீனமல்ல; பலம் என்பதை இத்தேர்தல் நிரூபிக்கும்.

தேசிய அளவில் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலை அம்பலப்படுத்தியதில் பாஜகவின் பங்களிப்பு அதிகம். காங்கிரஸ் கட்சியின் ஒவ்வொரு ஊழலையும் வெளிப்படுத்தி நாட்டைக் காக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பாஜகவுக்கு மட்டுமே, நேர்மையாளர்களின் வாக்குகளைக் கோர உரிமை உள்ளது. குஜராத், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், இமாச்சல், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தனித்தும் ஜார்க்கன்ட், பீகார், பஞ்சாப் மாநிலங்களில் கூட்டாகவும் ஆளும் பாஜகவுக்கு, ஆட்சித்திறனின் அடிப்படையில் தமிழக மக்களிடம் வாக்கு கோரவும் தகுதி உள்ளது.

இன்று தேசிய அளவில் முன்னேற்றம் அடைந்துள்ள மாநிலங்கள் அனைத்தும் தே.ஜ.கூட்டணி ஆளும் மாநிலங்களே. குஜராத் மாநிலம் நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி சதவிகிதத்தைவிட தனிப்பட்ட அளவில் பல மடங்கு வளர்ச்சியை எட்டி இருக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் புகார்களும் (கர்நாடகா தவிர) இல்லை. ஆக, தமிழகத்தை நாசமாக்கும் ஊழல் மயமான அரசியல், இலவசத் திட்டங்களால் விலை பேசப்படும் மக்கள், மதுவில் மூழ்கி மடியும் இளைய தலைமுறை போன்ற இழிவுகளை நீக்குவதற்கான ஒரே மாற்றாக பாஜக மட்டுமே உள்ளது.

தனித்துப் போட்டியிடும் பாஜக, தனக்கென உள்ள வாக்கு வங்கியை மேம்படுத்தவும், ஊழல் புகழ் கழகங்களிடமிருந்து மக்களை மீட்க மாற்றுத் தளமாக உருவெடுக்கவும் கிடைத்துள்ள வாய்ப்பு இத்தேர்தல்.

மாற்று அணியின் வேட்பாளர் படை

இம்முறை தான், பிற கட்சிகளை சார்ந்திருக்காமல் தனித்துக் களம் காண துணிவுடன் முடிவெடுத்தது தமிழக பாஜக. அதன் மூலமாக, இரு கழகங்களை சார்ந்து அரசியல் நடத்திவந்த நிர்பந்த நிலையை மீறி, தனக்கென சுய மரியாதை உள்ளதை (இதைத் தான் தங்கள் மூலதனமாக வாயளவில் இரு கழகங்களும் முழங்குகின்றன). பாஜக நிரூபித்தது. அது மட்டுமல்ல, மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 208 தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் களமிறங்கி உள்ளனர். இதில் பாஜக 193 தொகுதிகளிலும் ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் ஐக்கிய ஜனதாதளம் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

பாஜக தமிழகத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவில் தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக போட்டியிடுகிறார். பாஜக மாநில செயலாளர் வானதி சீனிவாசன் (மயிலாப்பூர்), மாநிலத் துணைத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் (வேளச்சேரி) ஆகியோரும் களம் காண்கின்றனர்.

193 தொகுதிகளில் பாஜக போட்டியிட்டாலும் சுமார் 50 தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்துகிறது; அதிலும் குறிப்பாக 15 தொகுதிகளில் வெற்றியை இலக்காகக் கொண்டு திட்டமிட்டு பணி புரிந்து வருகிறது. மலை போன்ற இரு கழகங்களின் பணபலம், ஆதிக்கம், பிரசார பலத்தின் முன் பாஜகவின் பலம் குறைவுதான் என்றாலும், கொள்கையில் ஊன்றிய தொண்டர் படை, தேசியத் தலைவர்களின் வழிகாட்டுதல், பாஜக மாநில முதல்வர்களின் பிரசாரம் ஆகியவற்றின் ஆதரவில் தமிழக பாரதீய ஜனதா உற்சாகத்துடன் வாக்குகளை சேகரித்து வருகிறது.

tnbjpz

இத் தேர்தலில் பாஜக நம்பிக்கையுடன் களம் காணும் தொகுதிகள் பட்டியலில், குமரி மாவட்டத் தொகுதிகள் ஆறும் உள்ளன. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதிகளில் பாஜக பெற்ற வாக்குகளே இந்த நம்பிக்கைக்கு காரணம். பெரும்பாலான தொகுதிகளில் இரண்டாமிடம் பெற்ற பாஜக, குறைந்தபட்ச வித்தியாசத்தில்தான் வெற்றியைத் தவற விட்டது. இம்முறை கடும் உழைப்பாலும் திட்டமிட்ட பிரசாரத்தாலும் நாகர்கோவில் (பொன் ராதாகிருஷ்ணன்), கன்யாகுமரி (எம்.ஆர்.காந்தி), பத்மநாபபுரம் (சுஜித்), குளச்சல் (ரமேஷ்), விளவங்கோடு (ஜெயசீலன்), கிள்ளியூர் (சந்திரகுமார்) ஆகியோரை சட்டசபைக்கு அனுப்ப தீவிர களப்பணி புரிகின்றனர் பாஜக தொண்டர்கள். ''இரு கழகங்களின் யோக்கியதையும் தெரிந்துவிட்டதால், இம்முறை தங்களை மாற்றாகக் கருதி மக்கள் தேர்வு செய்வார்கள்'' என்கிறார், பொன்.ராதாகிருஷ்ணன்.

அடுத்தபடியாக கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தளி (கே.எஸ்.நடராசன்), ஓசூர் (பாலகிருஷ்ணன்) தொகுதிகளிலும் வாகை சூட முடியும் என்று பாஜக கருதுகிறது. கர்நாடகா மாநிலத்தின் அண்டையில் உள்ளதாலும், இங்கு ஏற்கனவே பாஜக வென்றுள்ளதாலும், வெற்றி வாய்ப்பு பிரகசாமாக இருக்கிறது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா இங்கு வந்து பிரசாரம் செய்தால் பாஜகவின் வெற்றி உறுதியாகும்.

அடுத்ததாக இந்து இயக்க செல்வாக்கு மிகுந்த கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பாஜக பார்வையைப் பதித்துள்ளது. குறிப்பாக கோவை தெற்கு (சி.ஆர்.நந்தகுமார்), கோவை வடக்கு (சுப்பையன்), மேட்டுப்பாளையம் (கே.ஆர்.நந்தகுமார்), தொண்டாமுத்தூர் (ஸ்ரீதர மூர்த்தி), திருப்பூர் வடக்கு (பாயிண்ட் மணி), திருப்பு தெற்கு (பார்த்திபன்) ஆகியோர் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளது. சற்று கடுமையாக உழைத்தால் கழக கூட்டணிகளுக்கு இவர்களால் கடும் நெருக்கடி கொடுக்க முடியும். கடைசி நேர மாற்றங்களால் வெற்றி பெறவும் வாய்ப்புண்டு.

கோவையைச் சேர்ந்தவரும் பாஜக மாநில செய்தி தொடர்பாளருமான எஸ்.ஆர்.சேகர், "இம்முறை பாஜக ஆளும் மாநிலங்களின் வளர்ச்சியைச் சுட்டிக்காட்டி பிரசாரம் செய்கிறோம். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கோவை, திருப்பூர், சென்னையில் பிரசாரம் செய்து சென்றது தொண்டர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடுநிலை வாக்காளர்களிடம் சுஷ்மாவின் பிரசாரம் பலனளித்துள்ளது" என்கிறார்.

சென்னையில் மயிலாப்பூர் (வானதி சீனிவாசன்), வேளச்சேரி (தமிழிசை சௌந்தர்ராஜன்) ஆகியோர் நல்ல போட்டியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தவிர, திருச்செந்தூர் (ராமேஸ்வரன்), ஈரோடு மேற்கு (பழனிசாமி), திண்டுக்கல் (பி.ஜி.போஸ்), திருச்சி மேற்கு (திருமலை), சிதம்பரம் (வி.கண்ணன்), சிவகங்கை (பி.எம்.ராஜேந்திரன்), காரைக்குடி (சிதம்பரம்), பரமக்குடி (சுப.நாகராஜன்), மயிலாடுதுறை (கே.வி.சேதுராமன்), தென்காசி (எஸ்.வி.அன்புராஜ்) ஆகியோரும் தேர்தல் களத்தை மாற்றும் வேட்பாளர்களாக பவனி வருகிறார்கள். திருப்பத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுபவர் இஸ்லாமியரான ஷேக்தாவூத் என்பது குறிப்பிட வேண்டிய தகவல்.

கடமையைச் செய்: பலன் தானாக வரும்

பகவத் கீதையில் கண்ணன் கூறிய உபதேசம் இது. இந்தக் கண்ணோட்டத்துடன் தான் தமிழக பாஜக தேர்தலில் போட்டியிடுகிறது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரு பெறும் தலைகளிடையே, இரு கழகங்களின் பணபலத்திடையே, கொள்கையற்ற இரு கூட்டணிகளிடையே போராடுவது பத்மவியூகத்தில் அபிமன்யூ போராடுவது போன்றது தான். பாரத அபிமன்யூவுக்கு உதவிகள் தடுக்கப்பட்டன. ஆனால், தமிழக பாஜகவின் உதவிக்கு வந்திருக்கிறது பிற மாநில முதல்வர்கள் படை. எனவே, இந்த அபிமன்யூ களத்தில் சாதித்துக் காட்டுவான்.

குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவ்கான், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்டவர்கள் தமிழகம் வந்து பிரசாரம் செய்வது பாஜக வேட்பாளர்களுக்கு கண்டிப்பாக உறுதுணை புரியும். கழகங்களின் தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக லேப்டாப் இலவசம், பசு இலவசம் ஆகிய கவர்ச்சிகரமான வாக்குறுதிகளுடன், பூரண மதுவிலக்கு, விவசாயத்திற்கு தனி நிதிநிலை அறிக்கை, தனி வாரியத்திடம் ஹிந்து கோயில்கள், மதமாற்றத் தடைச் சட்டம், மத்தியில் தமிழை ஆட்சி மொழி ஆக்குதல் உள்ளிட்ட தனித்துவ அம்சங்களுடன் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மக்களை சிந்திக்கச் செய்துள்ளது.

தமிழகத்தை ஆளும் கூட்டணியும், அதனை எதிர்க்கும் பிரதானக் கூட்டணியும் பேசும் மதச்சார்பின்மை போலியானது என்பதும், அக்கூட்டணிகளிலுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத கட்சிகள் மூலம் உறுதியாகிறது. அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய மக்கள் கட்சி, கோவை குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்கள் அங்கம் வகிக்கும் தமுமுகவின் அரசியல் அமைப்பு. திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள முஸ்லிம் லீக், தேசப்பிரிவினைக்கு வித்திட்ட அரசியல் அமைப்பு. அந்தக் கட்சிகளுடன் கைகோர்த்துக் கொண்டே பாஜகவை இந்துமத வெறியர்களின் கட்சி என்று கூப்பாடு போடும் கழகங்களின் மாய்மாலங்களுக்கு இத்தேர்தல் படிப்பினை அளிக்க இருக்கிறது.

சிறுபான்மை மாணவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் கல்விக் கடனுதவி முறையற்றது; அதனை அனைத்து மாணவர்களுக்கும் வழங்க வேண்டும் என்று கோரி மாநிலம் முழுவதும் பிரசார யாத்திரை சென்ற மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனின் பயணத்திற்கு அப்போது நல்ல ஆதரவு கிடைத்தது. அதனை வாக்குகளாக மாற்ற இத்தேர்தல் வழிகோலும்.

தவிர பாரதீய ஜனதா சார்ந்த சங்க பரிவார் அமைப்புகளான ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்), ஹிந்து முன்னணி, விஸ்வ ஹிந்து பரிஷத், பாரதீய மஸ்தூர் சங்கம் (பி.எம்.எஸ்), அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி), வனவாசி கல்யாண் ஆசிரமம், பாரதீய கிஸான் சங்கம் (பி.கே.எஸ்), சேவாபாரதி உள்ளிட்ட அமைப்புகள் கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் ஆற்றிய பணிகளால் தனி முத்திரையைப் பதித்துள்ளன. இந்த அமைப்புகள் ஒவ்வொன்றுக்கும் தமிழகத்தில் தனித்தனியே ஆயிரக் கணக்கான கிளைகளும் தனித்த தொண்டர் படையும் உண்டு. இவை நேரடியாக தேர்தல் களத்தில் குதிக்காவிட்டாலும், பாஜகவின் அடிப்படை வாக்குவங்கியை உருவாக்கியுள்ளன. இவற்றின் வெளிப்படையான தாக்கமும் இத்தேர்தலில் தெரியவரும்.

அரசியல் என்பதே வியாபராமாகவும், கூட்டணி என்பதே பேரம் பேசுவதற்கான உபாயமாகவும் மாறியுள்ள சூழலில், தனித்தன்மையை இழக்காமல், சொந்தக்காலில் நின்று தேர்தலைச் சந்திக்கிறது தமிழக பாரதீய ஜனதா கட்சி. ஊழல் கறை படியாத கட்சி, நாட்டின் நலனுக்கு பாடுபட்ட வாஜ்பாயை பிரதமராக்கிய கட்சி, மத வேறுபாடு இல்லாமல் அனைவரையும் சமாகக் கருதும் கட்சி என்ற அடிப்படைகளுடன் மக்களை அணுகுகிறது பாஜக.

போட்டியிடும் வேட்பாளர் எவருமே சரியில்லை; எனவே '49 – ஓ' வுக்கு வாக்களிப்போம் என்று கூறுகிற அவநம்பிக்கையாளர்களுக்கும், தேர்தலை ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கும் மதிமுகவினருக்கும் வாக்களிக்கும் வாய்ப்பை பாஜக அளித்துள்ளது. இரு கழகங்களும் தமிழகத்தில் மாறி மாறி நடத்திவரும் அராஜகங்களுக்கும் கலகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மாற்று அரசியல் விரும்புவோருக்கு முன்பு, வாக்குகளை கோரி நிற்கிறது பாஜக.

ஆளும் அணி முதலணி; எதிர்க்கும் அணி இரண்டாவது அணி; பிறர் மூன்றாவது அணி என்ற வழக்கமான ஊடக ஒப்பீடுகளைப் பற்றிய கவலையின்றி, மாற்று உருவாக்குவதே முக்கியம் என்ற அடிப்படையில் போராடும் பாஜக அதிகபட்ச வாக்குகளையும், இயன்ற வெற்றிகளையும் பெறுவது தமிழக நலனுக்கு நல்லது. கடமையை செய்கிறது தமிழக பாஜக. பலன் கிடைக்காமலா போய்விடும்?

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற ...

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் திமுக -வினர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர் – அண்ணாமலை புகார் தமிழகத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், தொடர்ந்து அதிகரித்து ...

உர மானிய திட்டம் – மத்திய அமைச ...

உர மானிய திட்டம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் விவசாயிகளுக்கு பெரும் பலனளிக்கும் வகையில், டி.ஏ.பி., எனப்படும் டை ...

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் ...

கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் ஆலோசனை தோஹா, கத்தாரின் பிரதமர் மற்றும் வெளியுறவு அமைச்சரான ஷேக் ...

விவசாயிகளின் நலனை மோடி மேம்படு ...

விவசாயிகளின் நலனை மோடி மேம்படுத்துவதில் பாஜக அரசு முழு ஈடுபாட்டுடன் உள்ளது – பிரதமர் மோடி '' விவசாயிகளின் நலனை மேம்படுத்துவதில் பா.ஜ., அரசு முழு ...

2025-ல் சீர்த்திருத்தங்கள் நிகழும ...

2025-ல் சீர்த்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக மாற்றுவோம் – ராஜ்நாத் சிங் இன்று தொடங்கிய 2025ம் ஆண்டை சீர்திருத்தங்கள் நிகழும் ஆண்டாக ...

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ...

கல்வித்துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் சென்றது? அண்ணாமலை கேள்வி 'கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்ட ரூ.44,042 கோடி எங்குதான் செல்கிறது? ...

மருத்துவ செய்திகள்

இரத்தபோளம் (கரியாபோளம்)

இது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...