துக்ளக் இதழில் எச் ராஜா எழுதிய சாட்டையடி கடிதம் !!
அன்புடைய சகோதரர் திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு…
வணக்கம்!
அண்மையில் தங்களுடைய 61–ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினீர்கள். தங்களுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள் கிறேன்.
உங்களுடைய பிறந்த தினத்தை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில், நீங்கள் பேசிய கருத்துக்கள் இக்கடி தத்தை எழுதத் தூண்டியுள்ளது. தங்களுடைய பல கருத்துக்கள் தெய்வநம்பிக்கை, கடவுள் மறுப்பு, பகுத்தறிவு வாதம் என்பவற்றைச் சுற்றியே இருந்தது.
தாங்கள் நாஸ்திகனும் அல்ல, ஆஸ்திகனுமல்ல, ஒரு பகுத்தறிவுவாதி என்றும், அதற்குக் காரணம் நாஸ்திகம், ஆஸ்திகம் ஆகிய சொற்கள் சமஸ்க்ருதச் சொற்கள் என்றும் கூறியுள்ளீர்கள். ஆமாம், கமல்ஹாசன் என்கின்ற சொல், தமிழ்ச் சொல்லா? அதுவும் சுத்த சமஸ்க்ருதச் சொல்லே! வேதங்களைக் குறிக்கும் ஸமஸ்க்ருதச் சொல்லான ‘ஸ்ருதி’ என்பதையே, தங்களுடைய அன்பு மகளுக்கும் சூட்டியுள்ளீர்கள். எனவே, ஒரு நல்ல தமிழ்ப் பெயருக்கு முதலில் நீங்கள் முயற்சி செய்யலாம்.
‘தெய்வங்கள் ஒருவரின் பாக்கெட்டில் இருக்கட்டும்; அடுத்தவர் மீது திணிக்க வேண்டாம்’ என்கின்ற உங்களது கருத்தை வரவேற்கிறேன். ஆன்மிகவாதிகள் எவரும், ஒருவர் நாஸ்திகராக இருப்பதை ஆட்சேபிப்பதில்லை. ஆனால், நாஸ்திகவாதிகள்தான் தங்களது கருத்தை ஆன்மிகவாதிகள் மீது திணிப்பதற்காக, ஆன்மிகத்தை இழிவுபடுத்துவதோடு, வன்முறையிலும் ஈடுபடுகின்றனர். பகுத்தறிவுவாதத்திற்கு தந்தையாகக் கருதப்படும் ஈ.வெ.ரா.வின் சிலைகளில்,
‘கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி, நம்புபவன் முட்டாள், பரப்புபவன் அயோக்கியன்’ என்பது போன்ற வாசகங்களைக் காணலாம். ஆனால், எந்தக் கோவில்களிலும் ‘கடவுளை நம்பாதவன் காட்டுமிராண்டி, நம்பாதவன் முட்டாள், தெய்வபக்தி இல்லாதவன் அயோக்கியன்’ என்று எழுதி வைக்கப்படவில்லை. எனவே, தங்களது அறிவுரை பகுத்தறிவுவாதிகளுக்கே அவசியம் தேவை.
ஆமாம், ‘தெய்வங்களுக்கு காலாவதி உண்டு’என்கிறீர்களே, யார் சொன்னது? தமிழகத்தின் பகுத்தறிவுத் தலைமை மடத்தின் மடாதிபதியின் வாரிசு, கோயில் கோயிலாகச் சென்று கொண்டிருப்பதைத் தாங்கள் கேள்விப்படவில்லையா? நாஸ்திகமும், பகுத்தறிவுவாதமும் காலாவதியாகத் துவங்கி பல காலம் ஆகி விட்டது.
தமிழ் மொழிக்கு ஆன்மிக வழிபாட்டில் இடம் இல்லை என்பது போல் கருத்துத் தெரிவித்துள்ளீர்கள். தேவாரமும், திருவாசகமும், பிரபந்தங்களும் இல்லாத வழிபாடு எங்கேயுள்ளது? ஹிந்து மதமும், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், ராமாயணம், மஹாபாரதம் போன்ற நூல்களும்தான் தமிழ் மொழிக்கு அழியாப் புகழை ஈட்டித் தந்துள்ளன. இதுபோல நாஸ்திகர்கள் தமிழ்ச் சேவை செய்துள்ளதாகக் கூற முடியாது. மேலும் எந்த மொழியில் பிரார்த்தனை செய்வது என்பது இதில் நம்பிக்கை உள்ளவர்களின் விருப்பம். சிலர் ஆண்டவனை சமஸ்க்ருதத்தில் வணங்கலாம்; சிலர் அரபு மொழியில் வணங்கலாம். அது அவரவர் விருப்பம்.
மேலும் பகுத்தறிவுவாதிகள் என்பவர்கள் வெறும் Reactionary forces. இவர்களின் நோக்கம் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது மட்டுமே. உதாரணமாக, விநாயகர் சிலைகளை ஈ.வெ.ரா. உடைத்தார். ஆனால், எந்த நாஸ்திகவாதியும் பிற மதத்தின் சின்னங்களை இதுபோல் அவமதிக்கத் துணிந் ததுண்டா? பகுத்தறிவு வாதம் என்பது வெறும் ஹிந்து விரோதம் மட்டுமே.
‘சுனாமி, ஏழ்மை ஆகியவை ஏன் வருகிறது? ஆண்டவன் ஏன் இவற்றை தடுக்கவில்லை’ என்றும் கேள்வி எழுப்பியுள்ளீர்கள். இதற்கு ஹிந்து மதத்தின் வினைப்பயன் சித்தாந்தம் சரியான விளக்கமளித்துள்ளது. பிற மதங்கள்தான், ‘எல்லாம் ஆண்டவனின் கொடை, ஆண்டவனின் விருப்பப்படி அனைத்தையும் படைக்கிறான்’ என்று கூறுகின்றன. ஆனால், ‘ஒருவன் ஏழையாகவும், மற்றொருவன் பணக்காரனாகவும், ஒருவன் அறிவாளியாகவும், மற்றொருவன் முட்டாளாகவும், ஒருவன் ஆரோக்கியமானவனாகவும், மற்றொருவன் நோயாளியாகவும் இருப்பதற்குக் காரணம், அவனது வினைப்பயனே ஆகும்’ என்கிறது ஹிந்து மதம்.
நல்வினை செய்தவன் நல்லது பெறுகிறான். தீவினை செய்தவன் தீயது பெறுகிறான்.
‘மாட்டுக்கறி உண்பது கெடுதி என்று விஞ்ஞானப்பூர்வமாக என்னால் கூற முடியும்; ஆனால், என் தட்டில் என்ன உணவு இருக்க வேண்டும் என்பதை நான்தான் முடிவு செய்ய வேண்டு’மென்று கூறியுள்ளீர்கள். பசுவதை தடை பற்றியும், மாட்டுக்கறி உண்பது பற்றியும் முழு விவரங்களை அறியாமல், பலரும் 5 குருடர்கள் யானை எப்படி உள்ளது என்பது பற்றிக் கருத்துச் சொல்வதைப் போல் பேசி வருகின்றனர்
ஒரு சட்டம் தங்களுக்கு ஏற்புடையதா, இல்லையா என்பது முக்கியமல்ல. சட்டப் புத்தகத்தில் உள்ள சட்டம் பராமரிக்கப்பட வேண்டும் என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நம் அரசியல் சட்டப் பிரிவு 48–ல், மாநிலங்கள், ‘பசு மற்றும் அதன் சந்ததியைப் பாதுகாக்கச் சட்டம் இயற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. பசுப் பாதுகாப்பு, மாநில அரசின் அதிகாரத்திற்குட்பட்டது. நம் நாட்டில் கேரளா, மேற்குவங்கம், அஸ்ஸாம் மற்றும் 5 சிறிய வடகிழக்கு மாநிலங்களில் (மணிப்பூர் தவிர) மட்டுமே பசுவதைத் தடைச் சட்டம் இயற்றப்படவில்லை. மீதமுள்ள அனைத்து மாநிலங்களிலும் பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ளது. ஜம்மு– காஷ்மீர் மாநிலத்தில் 1932–ல் இச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சமீபத்தில் ஜம்மு– காஷ்மீர் மாநில உயர் நீதிமன்றம், இச்சட்டம் செல்லுபடி ஆகும் என்று தீர்ப்புக் கூறியுள்ளது. மேலும் மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா தவிர, பிற மாநிலங்களில் கடந்த 60 ஆண்டுகளாக காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்டுள்ள இச்சட்டம் அமலில் உள்ளது.
பசுவதைத் தடைச் சட்டம் அமலில் உள்ள மாநிலங்களில் அது செயல்படுத்தப்பட வேண்டுமென்றும், பிற மாநிலங்களிலும் அரசியல் சட்டப் பிரிவு 48– ன் படி பசுவதை தடைச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டுமென்றும் கோரிக்கை வைப்பது சட்டப்படியான உரிமையே.
கியூபாவில் சர்க்கரைத் தொழில் பின்னடைவைச்சந்தித்ததால், கரும்பு விவசாயிகள் மிகப் பெரிய நஷ்டத்தை அடைந்தனர். எனவே, கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த, 2003–ல் கியூபா அரசு, பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இதை யாரும் சகிப்புத்தன்மையற்ற ஹிந்துத்துவா செயல் என்று விமர்சிக்கவில்லை. மேலும், அனைத்து முஸ்லிம் நாடுகளிலும் பன்றி இறைச்சி தடை செய்யப்பட்டுள்ளது. இவற்றைப் பற்றிய விவரங்களை மறைத்து, மக்களிடம் விஷமப் பிரசாரத்தில் இன்று நாஸ்திக, கம்யூனிஸ, ஜிஹாதி சக்திகள் கூச்சல் போடுவது என்பது மோடி பிரதமரானதைச் சகித்துக் கொள்ள முடியாத செயலே ஆகும்.
ஆன்மிக பலமே ஒருவருக்கு தன்னம்பிக்கை தரும்; கஷ்டம் வரும்போது, பகுத்தறிவு வாதிகள் நிலை குலைந்து போவார்கள் என்பதற்கு தாங்களே சிறந்த உதாரணம். தங்களுடைய ‘விஸ்வரூபம்’ படத்திற்கு முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்தன. அதைத் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டினார்கள். சென்னையில் அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டது. தாங்களும் மிரண்டு போனீர்கள். ‘அப்படம் வெளியிடப்படா விட்டால், தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்த பணம் நஷ்டப்படும்; இந்தியாவை விட்டே வெளியேற வேண்டி வரும்’ என்றெல்லாம் கூறினீர்கள். காரணம், பகுத்தறிவுவாதிகள் பணம், பொருள், பதவிச் சுகம் ஆகியவற்றையே பிரதானமாகக் கும்பிடுபவர்கள். இவை தங்களை விட்டுச் சென்று விட்டால் வாழ முடியாது என்று எண்ணுபவர்கள். எனவேதான், நாட்டை விட்டே வெளியேற வேண்டி வரும் என்று புலம்பினீர்கள். ஆனால், பணம் நஷ்டப்பட்டால் நாட்டை விட்டே வெளியேறுவேன் என்று எந்த ஆன்மிகவாதியும் கூற மாட்டார்.
மேலும், தங்கள் படத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மிரட்டிய வன்முறைவாதிகளின் கட்டளையை சிர மேற்கொண்டு, படத்தில் பல வெட்டுக்களை நீங்கள் அனுமதித்தீர்கள். ஆனால், தங்கள் உணர்வுகள் புண் படுகிறது; எனவே தங்கள் சமுதாயத்தைக் கொச்சைப் படுத்தும் ஒரு வரியை நீக்க வேண்டுமென்று வேறு ஒரு அமைதியான சமுதாயம் கேட்டதைத் தாங்கள் பொருட்படுத்தவில்லை. நீங்கள் மட்டுமல்ல, தமிழ கத்தில் உள்ள எல்லா பகுத்தறிவுவாதிகளும் வன் முறையாளர்கள் முன் மண்டியிடுகின்றனர். எளிய வரை ஏகடியம் பேசுகின்றனர். எனவே, பகுத்தறிவு வாதிகள், கோழைகள். ஹிந்து விரோதிகள் என்றஇலக்கணத்திற்கு உலக நாயகனும் விதிவிலக்கல்ல. எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும்.
வணக்கம்.
நன்றி துக்ளக்
சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ... |
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.