ஒருபக்கம் பார்த்தால் விக்கி லீக்ஸ் இணையதளம், ஊழலை அம்பலப்படுத்தி வெளுத்து வாங்குகிறது. மற்றொருபக்கம் பார்த்தால் யோகா குரு ராம்தேவின் குருúக்ஷத்திரப் போராட்டம்.
விக்கி லீக்ஸ் விஷயங்களை ராம்தேவ் இந்தியாவின் எல்லா நகரங்களிலும் ஆங்கில அறிவு இல்லாத சாதாரண மக்கள் புரிந்துகொள்ளும் முறையில், எளிய ஹிந்தியில் நேரிலும்,
டி.வி. மூலமும் கொண்டு சென்றது மட்டுமல்ல; கறுப்புப்பணத்தை எதிர்த்து மக்களைப் போராடவும் தூண்டிவிட்டுள்ளார்.
விக்கி லீக்ஸ் வழங்கும் தகவலின்படி இந்தியாவில் வரி கட்டாமல் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் ரூ.67,50,000 கோடி. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் ரூ.1.76 லட்சம் கோடியைப்போல் 38 மடங்கு அதிகம். அந்நிய தேசங்களில் பதுக்கியுள்ள கறுப்புப்பணம் ரூ.50 லட்சம் கோடியா, 60 லட்சம் கோடியா, 70 லட்சம் கோடியா என்ற கேள்வி ஒருபக்கம் இருக்கட்டும். ""அப்பணத்தைப் பறிமுதல் செய்து இந்தியச் சொத்தாக அறிவிக்க வேண்டும்'' என்று ராம்தேவ் கூறுவதில் என்ன தவறு உள்ளது? சோனியா காந்தியின் சார்பாக திக்விஜய் சிங், கறுப்புப்பணத்துக்குப் பதில் சொல்லாமல், ""ராம்தேவ் ஒரு தக்'' என்று கூறியுள்ளார். அதாவது ""கொள்ளைக்காரன்'' என்று கூறியுள்ளார்.
ராம்தேவின் இயற்பெயர் ராமகிருஷ்ண யாதவ். ஹரியாணா மாநிலத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். எட்டாவது படித்தபின் வேதவித்யா குருகுலத்தில் சம்ஸ்கிருதமும் யோகமும் பயின்றவர். யோகா செய்வதில் இவர் குருவை மிஞ்சியது மட்டுமல்ல, பதஞ்சலி யோக சூத்திரத்தை முழுமையாகக் கற்றுப் பயின்று அப்படியே செய்பவர். ராம்தேவ் அந்த அளவுக்கு யோகக்கலையில் முன்னேறியவர்.
இளவயதில் பிரம்மச்சரியத்திலிருந்து சந்நியாசம் பெற்றுவிட்டார். இவருக்கு 46 வயதானாலும் 25 வயது இளைஞராகக் காட்சி அளிப்பது மட்டுமல்ல, வெள்ளையே இல்லாமல் இவருடைய கருகருதாடி சிலரை மயங்க வைத்திருக்கலாம்.
இந்தியாவிலிருந்து மிளகு, முந்திரிப்பருப்பு, பிண்ணாக்கு ஏற்றுமதியாவதுபோல் யோகவித்தை, ஆயுர்வேதம் ஏற்றுமதியாகிறது. ராம்தேவ் பணம் சம்பாதித்தார். பதஞ்சலி யோகபீட அறக்கட்டளையை ஹரித்வாரில் நிறுவினார். ஆயுர்வேத மருந்தகம் ஆசார்ய பாலகிருஷ்ணர் பொறுப்பில் விடப்பட்டுள்ளது. 4-6-2011 சம்பவத்துக்குப்பின் ஆசார்ய பாலகிருஷ்ணர் மீதும் திக்விஜய் சிங் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளார். சுவாமிகள், சந்நிதானம் என்றால் சொத்தும் சேரும்.
யோகா குரு ராம்தேவ், கொள்ளையடித்தோ, ஏமாற்றியோ, லஞ்சம் வாங்கியோ, சட்டத்துக்குப் புறம்பாகவோ இவர் சொத்துச் சேர்க்கவில்லை. இவருடைய வளர்ச்சியில் பொறாமையுற்றவர்கள் இவர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். இருப்பினும் ஒரு கேள்வி எழுகிறது.
இந்தியாவில் ராம்தேவைப்போல் ஆயிரக்கணக்கான மடாதிபதிகளும், பீடாதிபதிகளும் உள்ளனர். இவரைப்போல் யாரேனும் ஒருவர் தேசாபிமான உணர்வில் ஊழலுக்கு எதிராகவும், கறுப்புப்பணத்துக்கு எதிராகவும் கேள்வி எழுப்பித் தெருவில் இறங்கிப் போராடியது உண்டா?
இன்றைய இந்தியா ஊழலின் உச்சகட்டத்தில் உள்ளது. ""மக்கள் எங்களை மீண்டும் தேர்ந்தெடுத்துவிட்டதால் எங்கள் பாவம் கரைந்துவிட்டது. நாங்கள் புனிதராகிவிட்டோம்'' என்று இந்த நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங் கூறுகிறார். இப்படிப் பேச வெட்கமே இல்லையா? ஊழலில் திமுக மட்டுமா? காங்கிரஸ் அமைச்சர்கள் கரைபடாதவர்களா என்ன? மடியில் கனம் இருந்தால் வழியில் பயம் உண்டு.
விக்கி லீக்ஸின் புள்ளிவிவரப்படி, ஏழைகளிடமிருந்து கொள்ளையடித்த வரிப்பணம் சுவிஸ் வங்கியில் உலகளாவிய நிலையில் கறுப்பாக உள்ள அளவு ஏழரை டிரில்லியன் யூரோ. அனைத்துலக ஊழல் – லஞ்ச ஒழிப்புத் துறை வழங்கியுள்ள கணக்கு இது. 2006-ம் ஆண்டு வெளியிடப்பட்ட சுவிஸ் வங்கி டெபாசிட் விவரப்படி உலகிலேயே அதிக அளவில் கறுப்புப்பண டெபாசிட்டில் இந்தியாவே முதல் நிலையை வகிக்கிறதாம். முதல்நிலை மட்டுமல்ல, வேறு எந்த நாடும் முந்தமுடியாத அளவில் அதிக லீடிங் நிலையில் உள்ளது.
இந்தியா மறைத்துள்ள சுவிஸ் வங்கிக் கறுப்புப்பணம் 1,456 பில்லியன் டாலர். இரண்டாவது, ரஷியாவின் கறுப்புப்பணம் 470 பில்லியன் டாலர். இங்கிலாந்து 390 பில்லியன் டாலர். உக்ரைன் 100 பில்லியன் டாலர். சீனா 96 பில்லியன் டாலர். மேற்படி ஐந்து நாடுகளில் இந்தியா நீங்கலாக, நான்கு இதர நாடுகளின் கூட்டுத்தொகை 1,006 பில்லியன் டாலர். அப்படியும் 450 பில்லியன் டாலர் லீடிங். யார் கொள்ளைக்காரர்?
சோனியா காந்தியின் சார்பாகப் பேசும் திக்விஜய் சிங் கூட்டம் கொள்ளையர்களா? யோகா குரு ராம்தேவின் கூட்டம் கொள்ளையர்களா? திக்விஜய் சிங்கும், கபில் சிபலும் பேசுவதெல்லாம் உண்மை என்று நம்புவதற்கு மக்கள், காதில் பூச் சுற்றியவர்கள் இல்லை.
யோகா குரு ராம்தேவ் திடீரென்று 4-6-2011 அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து ராம்லீலா மைதானத்தில் உட்காரவில்லை. 4, 5 மாதங்களுக்கு முன்பே திட்டமிட்டு பாரதிய ஸ்வாபிமான் இயக்கத்தைத் தொடங்கி, இந்தியாவின் பல மாநிலங்களில் யோகா பயிற்சியுடன் கறுப்புப்பண எதிர்ப்புப் பிரசாரத்தையும் இணைத்து வழங்கியுள்ளார்.
அரசியலைச் சுத்தம் செய்வதும் யோகத்தின் ஓர் அம்சம் என்று கூறுவதிலும் என்ன தவறு? யோகத்துக்கெல்லாம் குருவாக இருந்த கிருஷ்ண பகவான், குருúக்ஷத்திரத்தில் சூத்ரதாரியாக அர்ச்சுனனின் தேரோட்டியாகவில்லையா?
குருúக்ஷத்திரப் போரில் என் சகோதரர்களை என்னால் கொல்ல முடியாது என்று கூறிய அர்ச்சுனன் காண்டீபத்தை நழுவவிட்டபோது, பரமயோகியான கிருஷ்ண பரமாத்மா, ""பேடித்தனம் கொள்ளாதே. இது உனக்குப் பொருந்தாது. அற்பமான மனத்தளர்ச்சியை ஒழித்துவிட்டு எழுந்திரு, எடு காண்டீபத்தை. தருமத்தை நிலைநாட்ட சகோதரர்கள் என்றாலும் பகைவர்களைக் கொல்லத் தயக்கம் ஏன்?'' என்றல்லவா கூறினார். ஒரு சத்தியாக்கிரகப் போராட்டம் யோகத்தின் ஓர் அம்சமே என்று பகவான் கிருஷ்ணர் மட்டுமல்ல, மகாத்மா காந்தியே கூறியுள்ளார்.
பதஞ்சலி யோகத்தில் இன்று 93 வயதுள்ள பி.கே.எஸ். அய்யங்காரைப் பலரும் அறிவார்கள். அய்யங்கார்போல் வேறு சில யோகிகளும் பதஞ்சலி யோகத்தில் வல்லவர்கள் உண்டு. இப்படிப்பட்ட யோகிகளை ஒன்றுதிரட்டிய ராம்தேவ் இந்த ஆண்டுத் தொடக்கத்தில் உலக மாநாடு கூட்டி அனைவரையும் கௌரவப்படுத்திய பின்பு பாரதிய ஸ்வாபிமான் இயக்கம் புத்துணர்வு பெற்று வளர்ந்தது.
இன்று பேசியதை அன்றே பேசியவர்தான் திக்விஜய் சிங். இவர் கறுப்புப்பணத்தை இந்தியச் செல்வமாக அறிவித்துப் பறிமுதல் செய்ய வேண்டுமென்று கூறிய மறுநாளே, ராம்தேவ் ஒரு கொள்ளையர் என்று கூறி, அவரிடம் உள்ள கறுப்புப்பணத்தை யார் பறிமுதல் செய்வது என்று கேட்டவர். ராம்தேவ் அன்றே கூறிவிட்டார். வருமானவரித் துறையினர் வந்து எனது நிறுவனங்களைச் சோதனை செய்யலாம். என்னிடம் உள்ள எல்லா வரவுக்கும் கணக்கு வைத்துள்ளேன். கணக்குக் காட்டாத பணம் என்னிடம் இல்லை என்றார். தன் குற்றத்தை மறைக்கக் குற்றம் சுமத்துபவன் மீதே பாயும் வேலையைத்தான் காங்கிரஸ் செய்கிறது.
சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப்பணம் பற்றி ராம்தேவ் மட்டுமா பேசுகிறார். உலகமே பேசி காறி உமிழ்கிறதே. உண்மையைச் சொன்னால் கோபம் ஏற்படும். கோபம் வந்தால், நள்ளிரவில் உறக்கத்தில் உள்ள சத்தியாகிரகிகள் மீது தாக்குதல் செய்வதா? கடந்த ஒரு மாதமாகவே டி.வி. மூலம் 4-6-2011 உண்ணாவிரதப் போராட்டத்துக்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கில் எனது பக்தர்கள் குவியப் போகிறார்கள் என்று ராம்தேவ் அறிவித்தவண்ணம் இருந்தாரே! சட்டப்படி இது தவறு என்று கூறி, 4-ம் தேதி காலையிலேயே அவரை ஏன் கைது செய்யவில்லை? அன்று நள்ளிரவில் சத்தியாக்கிரகிகள் தாக்கப்பட்டு விரட்டப்பட்டனர்.
ராம்தேவைக் கொலை செய்யும் முயற்சி நடந்தது. தில்லி போலீஸ் மேடைக்குத் தீ வைத்ததை விடியோவில் தெளிவாகக் காண்பிக்கப்பட்டது. ராம்தேவ் உயிர் பிழைத்துப் புறப்பட்ட இடமான ஹரித்வாருக்கே துரத்தப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் 15 நாளில் இந்த நள்ளிரவுத் தாக்குதலுக்குப் பதில் தரவேண்டுமென்று தில்லி போலீஸôருக்கும், தில்லி முதல்வருக்கும், உள்துறைக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள திராவிடக் கட்சிகள் தவிர, அனைத்துக் கட்சிகளும் ராம்தேவ் மீது நிகழ்த்திய தாக்குதலைக் கண்டித்துள்ளன. ஊழலை எதிர்த்து மீண்டும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அண்ணா ஹசாரே கூறியுள்ளார். தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக இளைஞர் இயக்கம் ஒன்றைத் தொடங்க அப்துல் கலாம் ஆயத்தமாகிவிட்டார்.
இந்தியா முழுவதும் ராம்தேவ் மீது நடத்திய தாக்குதலுக்கு 5-ம் தேதி ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள்.
கடந்த 9 நாள்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய யோகா குரு பாபா ராம்தேவ், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து ஞாயிற்றுக்கிழமை தனது போராட்டத்தை முடித்துக் கொண்டார்.
ஓர் அவசரச்சட்டம் இயற்றப்பட்டு சுவிஸ் வங்கியில் மறைத்து வைக்கப்பட்டுள்ள இந்தியக் கறுப்புப்பணத்தைப் பறிமுதல் செய்து இந்தியச் சொத்தாக மாற்றப்பட்டு அப்பணம் ராம்தேவ் கூறுவதுபோல், இந்திய விவசாயிகளைத் தற்கொலை செய்துகொள்ளாமல் பாதுகாக்கும் அளவில் விவசாய மேம்பாட்டுக்குச் செலவிடும் வரை – ராம்தேவின் குருúக்ஷத்திரப் போர் ஓய்ந்துவிடும் என்று தோன்றவில்லை!
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.