நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யும் மூன்றாவது நிதிநிலை அறிக்கை இது. இதுவரையில் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கைகளில், பல முன்மாதிரித் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இருந்தன. தொழில்துறையை முடுக்கிவிட்டுப் பொருளாதாரத்திற்கு சுறுசுறுப்பு ஏற்படுத்தப் பல முயற்சிகள் இருந்தன.
இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சற்று மாறுபட்டதாக இருக்கிறது. எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனங்களை முன்வைக்க முடியாத அளவிலான நிதிநிலை அறிக்கையை அருண் ஜேட்லி சாமர்த்தியமாகத் தாக்கல் செய்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அது மட்டுமல்ல, நரேந்திர மோடி அரசைக் "கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான அரசு' என்று குற்றம் சாட்டுபவர்களின் வாயை மூடுகிறது இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை. இந்த நிதிநிலை அறிக்கையில் வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களுக்கு (கார்ப்பரேட்) குறிப்பிடும்படியாக எந்தவித சலுகைகளும் இல்லை என்பது பளிச்செனத் தெரிகிறது.
அருண் ஜேட்லியின் முந்தைய நிதிநிலை அறிக்கைகளில், முன்மாதிரியான, தொலைநோக்குப் பார்வையுடனான சில திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அந்தத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியாவில் மிகப்பெரிய மாற்றமும், அதிசயிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அவை முறையாக நடைமுறைப்படுத்தப்படாததால் அந்தத் திட்டங்களின் பலன் இதுநாள்வரை கிடைக்கவில்லை.
"முத்ரா' வங்கித் திட்டம் மூலம், தச்சு வேலை செய்பவர், இஸ்திரி வண்டி வைத்திருப்பவர், அன்றாடம் தெருத் தெருவாகக் காய்கறி விற்பவர், செருப்புத் தைக்கும் தொழிலாளி என்று சொந்தமாகத் தொழில் செய்து பிழைப்பவர்கள் கடனுதவி பெறவும், அதன் மூலம் செழிப்படையவும் வழிகோலப்பட்டது. அந்தத் திட்டம் ஒரு வருடமாகியும் இன்னும்கூட அடித்தட்டு மக்களைச் சென்றடையவில்லை. அதற்கான வழிமுறைகளை வங்கிகள் மேற்கொள்ளவுமில்லை. முழுமையாக விளம்பரம் செய்யப்படவும் இல்லை. திட்டத்தின் குறிக்கோள் நன்றாக இருந்தும், செயல்படுத்துவதில் முறையான திட்டமிடல் இல்லாததால் முடங்கிக் கிடக்கிறது.
இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதுபோன்ற பிரமாண்டமான திட்டங்களை முன்வைக்காமல், அடுத்த ஓராண்டில் செயல்படக்கூடிய, விளைவுகள் பொதுமக்களைச் சென்றடையும் விதத்திலான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருப்பது அருண் ஜேட்லியின் சாமர்த்தியம். கடந்த ஆண்டுகளில் அவரது இலக்கு நகர்ப்புறவாசிகளை முன்னிலைப்படுத்தியது என்றால் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பெரும்பகுதி கிராமப்புறங்களுக்கு நன்மை அளிப்பதாகவும், அடித்தட்டு மக்களின் மேம்பாட்டை முன்னிலைப்படுத்துவதாகவும் அமைந்திருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் 8% வளர்ச்சி காண வேண்டுமானால், விவசாயம் 4% வளர்ச்சி அடைந்தால் மட்டுமே சாத்தியம் என்கிற புரிதலுடன் நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையைத் தயாரித்திருப்பதற்காகப் பாராட்டலாம். 2022க்குள் உற்பத்தியையும், விவசாயிகளின் வருமானத்தையும் இரட்டிப்பாக்குவது என்பது வரவேற்கத்தக்க இலக்கு. என்றாலும்கூட, இந்த நிதிநிலை அறிக்கையை விவசாயிகளுக்கானது என்றோ, கிராமப்புறங்களை மையப்படுத்தியது என்றோ சொன்னால்கூடத் தவறில்லை.
விவசாயம், கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி ஆகிய நான்கு இன்றியமையாத துறைகளில் இந்த நிதிநிலை அறிக்கை அதிக கவனம் செலுத்தி இருக்கிறது. அதிலும் குறிப்பாக விவசாயம், கல்வி, மருத்துவம் மூன்றிலும் இந்த நிதிநிலை அறிக்கை ஏற்படுத்தப்போகும் தாக்கம் மிகமிக அதிகமானதாக இருக்கப் போகிறது.
விவசாயத்திற்காக மட்டும் ரூ.35,984 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நீர்ப்பாசன மேம்பாட்டுக்காக ரூ.17,000 கோடி என்பது விவசாயம் 4% வளர்ச்சி அடைவதற்கு உதவும். கிராம முன்னேற்றத்திற்காக மட்டும் ரூ.2.78 லட்சம் கோடி என்பதும், கிராமப்புறச் சாலைகளின் மேம்பாட்டுக்காக ரூ.19,000 கோடி என்பதும் இந்திய கிராமங்களில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதை அடுத்த ஒரு வருடத்தில் இந்த அரசால் செய்து காட்ட முடிந்தால், மக்கள் மத்தியில் இந்த ஆட்சியின் மீது ஏற்படக்கூடிய நம்பிக்கை அளப்பரியதாக இருக்கும்.
தேசிய அளவிலான "டயாலிசிஸ்' சிகிச்சைத் திட்டம், 3,000 அடிப்படை (ஜென்ரிக்) மருந்துகளை விற்கும் கடைகள் இரண்டுமே சாமானிய மனிதர்களை நேரிடையாகச் சென்றடைந்து பயனளிக்கக் கூடியவை. இவை இரண்டுமே வலுப்படுத்தப்பட்டு, முறையாக நிறைவேற்றப்படுமானால், பரவலாக அடித்தட்டு, நடுத்தர வகுப்பினர் மிக அதிகமாக பயனடைவார்கள்.
நடைமுறைக்கு உகந்த புத்திசாலித்தனமான முடிவு, நேரடி வரிவிதிப்பில் விலக்குகளுக்கு விடை கொடுக்கும் முயற்சி. வருமானவரிப் பிரிவு 14-அ, தேவையில்லாமல் வழக்குகளுக்கு வழிகோலுகிறதே தவிர, அதனால் பயனில்லை என்பதை சரியாகப் புரிந்து கொண்டதற்காக நிதியமைச்சரைப் பாராட்டலாம்.
கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று இனி எதிர்க்கட்சிகள் குறைகூற முடியாது. பல மாநிலங்கள் கடுமையான வறட்சியை எதிர்கொள்ளும் நிலையில், இதுவரையில் இல்லாத அளவுக்கு ரூ.38,500 கோடியை நூறு நாள் வேலை உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கியிருப்பது அரசியல் ரீதியாகவும், சூழ்நிலைக்கு ஏற்பவும் சரி. ஆனால், மானியங்களை ஒழிக்க வேண்டும் என்கிற இந்த அரசின் முனைப்புக்கு மாறுபடுகிறது.
சில சின்னச் சின்ன குறைகள் காணப்பட்டாலும்கூட, நிர்வாக ரீதியாகப் பழுது காண முடியாத அதேநேரத்தில் வாக்குவங்கியைக் கவரக்கூடிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கும் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் புத்திசாலித்தனத்துக்குப் பாராட்டுகள்!
நன்றி தினமணி
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது. |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.