“எனது தந்தை ராஜீவ் காந்தியை கொலை செய்தவர்களை நானும் எனது சகோதரியும் முழுமையாக மன்னித்து விட்டோம்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சிங்கப்பூரில் கூறியிருப்பது (11.03.2018) இன்று பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வந்திருக்கிறது.
அவரது காலம் கடந்த பெருந்தன்மை கண்டு தமிழ்நாடே நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும் அடைந்திருக்கிறது. ராஜீவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற குரல்கள் இனிவரும் நாட்களில் உச்சஸ்தாயியில் கேட்கலாம்.
இந்த விஷயத்தில் தனிப்பட்ட வகையில் ராகுலின் பெருந்தன்மை கண்டு புல்லரிக்கிறது. இந்த பெருந்தன்மை அவரது வழிகாட்டலில் காங்கிரஸ் பல்லாண்டுகள் ஆண்டபோது வெளிபடாததன் ரகசியம் புரியவில்லை. இப்போதைக்கு பார்வையாளர்களின் கரவொலிக்காக தனது பரந்த மனப்பான்மையை அவர் வெளிப்படுத்தி இருப்பதாகவே தோன்றுகிறது.
ராஜீவ் இவரது தந்தையாக இருக்கலாம். ஆனால் இந்நாட்டின் பிரதமராக இருந்தவர். அவரைக் கொன்றவர்கள் தனிப்பட்ட குடும்பப் பகைக்காக அவரைக் கொல்லவில்லை. அந்தக் கொலை, நாடு தாண்டிய பயங்கரவாதத்தின் கோர முகம். இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்பியதன் மூலமாக தமிழ் ஈழப் போராளிகளை ராஜீவ் நசுக்கினார் என்பதனால்தான் அவர்கள் அவரை பழிவாங்கும் வகையில் கொன்றார்கள். அதை மறக்க முடியுமா? வெளிநாட்டு மண்ணில் அமைதிப்படை சிக்கிக்கொண்டு, நண்பர் யார், பகைவர் யார் என்று தெரியாமலே போரிட்டு 1200 பேர் இறந்தனர் என்பதையும் ராகுல் அறிவாரா?
இலங்கை விவகாரத்தில் ராஜீவ் மேற்கொண்ட முயற்சி நல்லெண்ணத்துடன் தான் இருந்தது. ஆனால், அவரை ஜெயவர்த்தனாவும் சிங்கள அரசியல்வாதிகளும் ஏமாற்றிவிட்டனர். அதற்கேற்றாற்போல விடுதலைப்புலிகளும் அமைதிப்படையை எதிரியாக்கிக் கொண்டனர்.
நான் ராஜீவின் அபிமானி அல்ல. என்றாலும், அவர் விடுதலைப்புலிகளை அழிப்பதற்காக அமைதிப்படையை அனுப்பவில்லை என்பதை அன்றைய செய்திகளைப் படித்தவன என்ற முறையில் அறிவேன்.
ராஜீவின் அப்பாவித்தனமும், அவரை வழிநடத்தியவர்களின் முன்யோசனையற்ற போக்குமே அதற்குக் காரணம். அதனால் தான் அவர் கொல்லப்பட்டார். அவருடன் காவலர்கள் உள்ளிட்ட 14 பேரும் கொல்லப்பட்டனர். மிகவும் மோசமான ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்தால் அந்த பயங்கரவாத சமபவம் அரங்கேற்றப்பட்டது. அதன் பின்னணியில் உலக அரசியல் சதிகளும் இருந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதலாமவரான பிரபாகரன் 2009-இல் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டுவிட்டார். இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவிப்போரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் அவ்வப்போது எழுந்த வண்னம் உள்ளன. அதற்குத் தூபமிடுவதுபோல ராகுலின் சிங்கப்பூர் பேட்டி அமைந்திருக்கிறது.
தனது தந்தையும் பாட்டியும் கொல்லப்பட்டதை நினைவுபடுத்துவதன்மூலம் ஒரு தியாக பிம்பத்தை உருவாக்க அவர் முயல்வது தெரிகிறது. தனது பெருந்தன்மையையை அதுவும் சிங்கப்பூரில் வெளிப்படுத்துவதன் மூலமாக தனது உயர்ந்த பண்பாட்டை (?) உலகிற்கு அவர் வெளிக்காட்டி இருக்கிறார்.
ஆனால், நீதித் துறையும் சட்டமும் கருணை காட்ட உருவாக்கப்படவில்லை. குற்றத்துக்கு தகுந்த தண்டனை இல்லாவிட்டால் சட்டத்தின் ஆட்சிக்கு் அர்த்தமே இல்லை.
தவிர, ராஜீவ் கொல்லப்பட்டபோது உடன் பலியான 14 பேரின் குடும்பத்தினரும் கொலையாளிகளை மன்னிப்பார்களா? ராஜீவ் கொலைக்குப் பின் ராகுலுக்குக் கிடைத்த புகழும் வெளிச்சமும், இந்த 14 பேரில் ஒருவருக்குமே கிடைக்கவில்லையே? அவர்கள் தியாகிகள் அல்லரா? எனவே, ராகுலின் காலம் கடந்த பெருந்தன்மை கண்டு, அவர் மீது பரிதாபமே ஏற்படுகிறது.
1991, மே 21- இரவில், ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என்ற தகவலை அறிந்தவுடன், நானும் எனது நண்பர்களும் அடைந்த அதிர்ச்சி இன்னமும் நினைவில் இருக்கிறது.
ராஜீவ் சார்ந்த காங்கிரஸ் கட்சிக்கு அன்னியமானவனாக இருந்தபோதும், ஷாகா நண்பர்களுடன் சேர்ந்து இரங்கல் சுவரொட்டிகளை எனது கிராமம் (வடசித்தூர்) முழுவதும் ஒட்டினோம். அதற்காக பேட்டரியின் கரியை எடுத்து, பத்திரிகைகளின் பழைய போஸ்டர்களை வாங்கி வந்து ”பயங்கரவாதத்துக்கு பலியான முன்னாள் பிரதமர் ராஜீவுக்கு வீர வணக்கம்” என்று எழுதினோம். அவற்றை மைதா பசை காய்ச்சிக்கொண்டு இரவு முழுவதும் ஒட்டினோம். அரசியல் ரீதியாக எதிர்த்தரப்பில் இருந்தாலும், ராஜீவுக்கு நாங்கள் செலுத்திய இதயபூர்வமான அஞ்சலி அது. இதற்காக எங்களுக்கு யாரும் சொல்லித் தரவில்லை!
இன்றும் ராஜீவ் காந்தி ஓர் அப்பாவி என்றே நான் கருதுகிறேன். தனது தாய் கொல்லப்பட்டவுடன் திடீரென அரசியல் களத்தில் இறக்கிவிடப்பட்ட, கள்ளமற்ற இளைஞர் அவர். தனது தந்தையின் மரணத்தை அரசியல் லாபத்துக்குப் பயன்படுத்தும் ராகுல் போன்றவர் அல்ல அவர்.
ராகுலின் மன்னிப்பு யாருக்கு வேண்டும்? எங்கள் நாட்டின் முன்னாள் பிரதமரைக் கொன்றவர்களை அவர் மன்னித்தால் ஆகிவிடுமா? எனவேதான் பாஜக ராஜீவ் கொலையாளிகளை மன்னிக்கத் தயாரில்லை. இத்தகைய தேசிய நலன் சார்ந்த சிந்தனையை ராகுலிடம் எதிர்பார்ப்பது நமது தவறு! ஏனெனில் தற்போது அவரை வழிநடத்து்ம் ப.சி., கபில் சிபல், அகமது படேல் போன்றோரின் தன்மை அப்படி!
Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ... |
உணவு உண்ணும் முன்பாக 60 – 110 மில்லிகிராம்% (வெறும் வயிற்றில் எடுக்க ... |
Leave a Reply
You must be logged in to post a comment.