மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியருக்கு அருகே ஒருசிறிய ஊரில் எளிய குடும்பத்தில் 1924 டிசம்பர் 25 ஆம் தேதி பிறந்த அடல்பிஹாரி வாஜ்பாய், பாரதிய ஜனதாவை உருவாக்கிய சிற்பிகளில் ஒருவர். அவருக்குப் படிப்பில் மிகுந்த ஈடுபாடு. இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலத்தில் நல்லதேர்ச்சி. அரசியலில் முதுகலையில் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றார். கவித்துவமான மனம் கொண்ட வாஜ்பாயின் தாத்தாவும் ஒரு பண்டிதர். பள்ளி ஆசிரியரான தந்தையும் கவிஞர்.
சிறுவயதிலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தார் வாஜ்பாய்.
1948-இல் மகாத்மா காந்தி மறைவுக்குப் பிறகு அந்த இயக்கம் தடை செய்யப்பட்டு கடுமையான நெருக்கடி இருந்தநேரத்தில், பிற்காலத்தில் பாரதிய ஜனசங்கத்தின் தலைவராக இருந்த தீனதயாள் உபாத்தியாயாவுடன் இணைந்து பத்திரிகையாளராகப் பணியாற்றினார். பேச்சிலும், செயலிலும் அவர் காட்டிய வேகம் உபாத்தியாயாவைக் கவனிக்க வைத்தது. காஷ்மீர்ப் பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்தபோது ஜனசங்கத்தின் முக்கியமுகமானார். உபாத்தியாயாவின் மறைவுக்குப் பிறகு, 1968-இல் ஜனசங்கத்தின் தேசியத் தலைவராக வாஜ்பாய் பொறுப்பேற்றபோது அவருக்குப் பக்கபலமாக இருந்தவர் எல்.கே. அத்வானி.
இந்திரா காந்தியால் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது கைதாகிச் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையானதும் நடந்த தேர்தலில் வெற்றி. மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சரானார். பல நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்தினார்.
ஜனதா அரசு கவிழ்ந்ததும் ஜன சங்கத்தை பாரதிய ஜனதா என்கிற அரசியல் இயக்கமாக முன்னெடுத்தார். அதன் தேசிய தலைவரானார். காங்கிரஸ் அரசின் மீது நியாயமான, கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ராமஜென்ம பூமியை முக்கிய லட்சியமாக மையப்படுத்தினார்.
1984-இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெற்ற தொகுதிகள் இரண்டு. பிறகு குஜராத், மஹாராஷ்டிரம், கர்நாடகம் என்று அடுத்தடுத்து பல மாநிலங்களில் வெற்றி. 1996 தேர்தலில் வெற்றி பெற்றும் பெரும்பான்மை இல்லாத நிலையில், பிரதமராகப் பொறுப்பேற்றார் வாஜ்பாய். 13 நாள்களில் ஆட்சி கவிழ்ந்தாலும், அடுத்தடுத்து இரண்டுமுறை பிரதமரானார் வாஜ்பாய். காங்கிரஸ் அல்லாத ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் நீடித்த முதல் பிரதமர் இவரே.
98-இல் பொக்ரானில் அணு குண்டு சோதனை செய்து பல நாடுகளின் கவனத்தை ஈர்த்தார். 1999-இல் கார்கில்போரை வெற்றிகரமாக நடத்தினார். பாகிஸ்தான் பின்வாங்கியதால் போர் முடிவுக்கு வந்தது. பா.ஜனதா மீது இந்தியர்களுக்கு உணர்வுபூர்வமான நெருக்கம் உருவானது.
தமிழகத்தைப் பொருத்தவரை திராவிடக் கட்சிகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்க முக்கியக் காரணமாக இருந்தவரும் வாஜ்பாய்தான். மதச்சார்பற்ற அடையாளமான அப்துல் கலாமை அவர் குடியரசுத் தலைவராக்கியது தமிழர்களிடம் மகிழ்வை உண்டாக்கியது. தமிழ்நாட்டைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்ற பெண்மணி பாராட்டுப் பெற்றபோது வாஜ்பாயின் காலில் விழுந்து வணங்க, பதிலுக்கு அவரும் அந்தப் பெண்மணியின் காலில்விழ முற்பட்டது தமிழகத்தில் வியந்து பேசப்பட்டது.
பிரதமர் ஆவதற்கு முன்பு ஒரு முறை ராமேஸ்வரத்திற்கு வந்திருந்தார் வாஜ்பாய். கோவிலுக்குப் போய்விட்டு மதுரைக்கு காரில் சென்று கொண்டிருந்தபோது வழியில் கார் பழுதாகி நின்று விட்டது. மாலையில் அவர் மதுரையில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. கூட வந்திருந்தவர்கள் தவித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பக்கம் அரசுப்பேருந்து வந்தது. அதில் ஏறி சாதாரண இருக்கையில் அமர்ந்தபடியே மதுரைக்கு சென்றார். விழா ஏற்பாடு செய்தவர்களுக்கு வியப்பு தாங்கவில்லை.
பிரதமராக இருந்த காலத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவுபடுத்தி நவீனப்படுத்தினார். பாகிஸ்தானுக்குப் பேருந்து இயக்கினார். மொழிவளத்துடன் நாடாளுமன்றத்தில் அவர் பேசிய பேச்சு எதிர்க் கட்சியினரையும் ரசிக்க வைத்தது. ஐ.நா. சபையில் இந்தி மொழியில் உரையாற்றியவரும் அவர்தான். வாஜ்பாய்க்கு சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்’ விருது வழங்கப்பட்டபோது கட்சி வேறுபாடுகளைக் கடந்து பலரும் பாராட்டினர்.
பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகள் அவரைத் தேடி வந்தன. அவர் உடல் நலிவுற்றிருந்த நிலையில் அவருடைய வீட்டுக்கே சென்று பாரத ரத்னா’ விருதை வழங்கும்போது பிரதமர் நரேந்திரமோடி மிகுந்த மனநிறைவுடன் சொன்னார்: நாட்டுக்காகத் தன் வாழ்வையே அர்ப்பணித்தவர். என்னைப் போன்று பல இந்தியர்களுக்கு ஊக்கம் அளிக்கக்கூடியவராக இருந்திருக்கிறார்’.
38 ஆண்டுகளுக்கு முன், பாரதிய ஜனதா என்கிற இயக்கத்திற்கான விதையை ஊன்றிய பீஷ்மர் அவர்.
நன்றி தினமணி
பிரசாத்
You must be logged in to post a comment.
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ... |
டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ... |
3aspects