வாஜ்பாய் மனிதருள் மாணிக்கம்

அடல்பிகாரி வாஜ்பாய் அவர்களுக்கு, பாரத ரத்னா விருது  வழங்கப்பட்ட பொது கே.எஸ் இராதாகிருஷ்ணன் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு பத்திரிகையில் எழுதிய கட்டுரை.

 

பாரத ரத்னா விருது பெற்ற  வாஜ்பாய் அவர்கள் ஒரு சிறந்த கவிஞர், இலக்கியகர்த்தா, ரசனைமிகுந்தவர், ஆங்கிலத்திலும் இந்தியிலும் சிறப்பாக மக்களை ஈர்க்கக் கூடிய பேச்சாளர், சிறந்த நாடாளுமன்றவாதி, மென்மையானவர்,  அரசியலில் அடிமட்டத்திலிருந்து வளர்ந்தவர்.  இவருடைய நாடாளுமன்ற பேச்சுக்கள் நான்கு தொகுதிகளாக புத்தகமாக வெளிவந்துள்ளன. அவை இந்தியாவின் சமகால அரசியலைப்பற்றி சொல்கின்ற ஆவணங்களாகும்.

அயோத்தி பிரச்சனையும், குஜராத்தில் நடந்த கோத்ரா பிரச்சனையும் இவர் இதயத்தை குத்துகின்ற சம்பவங்களாக இருந்தது. அரசியலில் இவருடைய சகாக்களை மதவாத தீவிரவாதிகள் என்று விமர்சிக்கின்றவர்கள் கூட வாஜ்பாய் அவர்களை மனம்திறந்து பாராட்டுவார்கள்.  ரைட் மேன் இன் ராங் ப்லேஸ் (Right Man in Wrong Place)  என்று பலர் இவரைச் சொல்வதுண்டு.

தன் இளமைக்காலத்தில் இவரும் எல்.கே அத்வானியும் டெல்லியில் ஒரு சிறு அறையில் தங்கி, இவர்களே சமைத்து உண்டு , அரசியல் பணிகளை மேற்கொண்டாகள். தலைவர் என்ற வார்த்தைக்கு இலக்கணமாகத் திகழ்பவர் வாஜ்பாய். மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்த ஜனதா ஆட்சி காலத்தில், வெளியுறவுத்துறை  அமைச்சராக வாஜ்பாய் இருந்தார்.  அப்போது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருந்த இருநாட்டு உறவுகளை சமச்சீராக அமைத்துக் கொண்டவர்.

1975ம் ஆண்டு இந்திராகாந்தி அவசரநிலையை பிரகடனம் செய்தபோது அதைத் தீவிரமாக  எதிர்த்தவர். வங்க தேச விடுதலைக்கு இந்திராகாந்தி ஆற்றிய பணிகளைப் பாராட்டி  “எங்கள் துர்கா தேவியே” என்றும் அழைத்தவர். இப்படி இவருடைய சிறப்புகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். 1986லிருந்து 2000 வரைக்கும் இவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்புகள் அமைந்தன.

டெல்லியில்  வை.கோ அவர்களை கேபினட் அமைச்சர் ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன்,   எந்தத் துறை வேண்டும் என்று மட்டும் என்னிடம் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார் வாஜ்பாய். ஆனால், .வை.கோ   “வெறும் நான்கு எம்.பிக்களைக் கொண்டு எனக்கு அமைச்சர் பதவி வேண்டாம். தமிழ்நாட்டில் என்னுடைய கட்சியை வளர்க்கவேண்டும்” என்றார். அதற்கு பதிலளித்த வாஜ்பாய் அவர்கள், “ ராமகிருஷ்ண ஹெக்டே மூன்று எம்.பிக்களை வைத்துக் கொண்டு வணிக  அமைச்சராக இல்லையா… என்றபோது வை.கோ வேண்டவே வேண்டாம் என்று தலையசைத்துவிட்டார். அப்போது ஒரு கூட்டணிக் கட்சியை  ஒரு பிரதமர்  எப்படி மதித்தார் என்று கண்கூடாகப் பார்த்திருந்தேன். இன்றைக்கும் அது நினைவில் உள்ளது.

வாஜ்பாய் அவர்களது ஆட்சியில் அரசியல் அமைப்புச் சட்டம் மாறுதல் குறித்து நீதிபதி வெங்கடாச்சலைய்யா குழுவில் அல்லது கேபினட் அந்தஸ்தில் உள்ள காதி கிராம வளர்ச்சி வாரியத்தில் தலைவராக என்னை நியமிக்க தன் கைப்பட எழுதிய கடிதத்தை வை.கோ அவர்களின் பரிந்துரையில் கையொப்பமிட்டு “ஆல் தி பெஸ்ட்” என்று சொல்லி அவருடைய காலை உணவை உண்டுவிட்டு, பப்பாளி பழத்தினை சாப்பிட்டுக்கொண்டே என்னைப் பார்த்து தலையசைத்துப் புன்னகைத்த நிமிடங்களை மலரும் நினைவுகளாக எண்ணிப்பார்க்கிறேன். (பின் 1998 இறுதியில் ஜெயலலிதா மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவைத் திரும்பப் பெற்றதால்,  பொதுத்தேர்தல் வந்தது.  இதற்கிடையில் இந்த பொறுப்பு கிடைக்காமல் போனது வேறுவிஷயம்)

கடந்த 1998 செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை எழுச்சி நாள் என்று சென்னைக் கடற்கரையில் வை.கோ அவர்கள் நடத்தினார். அந்த நிகழ்வை முன்னின்று நடத்தியது அடியேன். அன்றைக்கு பிரதமர் வாஜ்பாய் சென்னைக்கு வருகை தந்திருந்த பொழுது, விமான நிலையத்தில், 1993ல் தி.மு.கவிலிருந்து வெளியேறிய வை.கோ மீண்டும் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்திக்க அன்றைக்குத் தான் வாய்ப்பு ஏற்பட்டது.

விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அன்றைய பிரதமர் வாஜ்பாய் வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிவடைந்தவுடன், ராஜ் பவன் செல்ல தயாரான போது என்னிடமிருந்த சேது சமுத்திர திட்டம் சம்பந்தமாக வைகோ எழுதியிருந்த கடிதத்தை வாங்கி பிரதமரிடம் “சேது சமுத்திர கேனால்….” என்று சொல்லி கொடுக்கும்போதே தன் கைகளைக் காட்டி……  “கடிதத்தை வைத்துக் கொள்ளுங்கள்.. சேது சமுத்திர திட்டம் பற்றிய மனுதானே…  இன்றைக்கு மாலை அதைப் பற்றி அறிவிப்பேன்” என வை.கோவிடம் சிரித்துக் கொண்டே சொன்னார்.

திட்டமிட்டவாறு அன்று மாலை  எழுச்சியான கூட்டம் நடைபெற்றது . கூட்ட மேடைக்குப் பின்புறம் தமிழக உணவு வகைகள் சுடச்சுட மணக்கும் வகையில் தயாராகி இருந்தது. மேடைக்குப் பின்புறம் வந்த பிரதமர் வாஜ்பாய் இதைப்பார்த்தவுடன் வை.கோவிடம் “சாப்பிடலாமா” என்று உரிமையுடன் கேட்டு ருசித்துச் சாப்பிட்ட பின்,  சமையல்காரரைப் பார்த்து “நன்றாக இருந்தது” என்று சந்தோசத்தோடு  பாராட்டவும் செய்தார்.  இதை தன்னோடு நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்.கே.அத்வானி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், பாருக் அப்துல்லா, பிரகாசிப் பாதல், வெங்கைய்யா நாயுடு போன்றவர்களிடம் “நான் தமிழக உணவுகளை நேசிக்கிறேன். நீங்களும் சாப்பிடுங்கள்” என்று சொன்னதையெல்லாம் மறக்க முடியாது.

ஒருமுறை   தீப்பட்டித்தொழில் பிரச்சனைகள் குறித்து சிவகாசி, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி போன்ற அவ்வட்டார  தீப்பட்டி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளை அழைத்துக் கொண்டு, டெல்லியில் உள்ள  பிரதமர் அலுவலகத்தில் சிவகாசி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வை.கோ அவர்கள் சென்றிருந்தார். அவர்களை  வாஜ்பாயைச் சந்திக்க வைக்கும்போது பிரதிநிதிகள்  அனைவரோடும் தேனீர் அருந்திவிட்டு, ஒவ்வொருவர் பெயரையும் கேட்டுத் தெரிந்துகொண்டு இரண்டு நிமிடத்தில் மனுவை வாங்கிவிட்டு அனுப்பவேண்டிய பிரச்சனையை, ஒரு நாட்டின் பிரதமராக இருபத்து ஐந்து நிமிடங்கள் எங்களோடு செலவிட்டார்.

ஈழத் தமிழர்கள் பிரச்சனையில், தமிழர்களுக்கு ஆதரவாகவே தம் ஆட்சிகாலத்தில் முடிவுகளை மேற்கொண்டார். இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கும் ஒப்பந்தந்தை நிறுத்திவைத்ததோடு, எதிர்காலத்திலும் ஆயுத தளவாடங்கள் எதுவும் இலங்கைக்கு அளிக்கக்கூடாது என்று தெளிவான உத்தரவைப் பிறப்பித்தார். பம்பாயிலிருந்து இவர் ஆட்சிகாலத்தில் இந்தியாவின் போர்கப்பல் ஒன்று இலங்கைக்கு அனுப்ப இருந்ததை தடுத்து ஆணையிட்ட இரும்பு மனிதர் .

சாராணமான என்னைப்போன்ற எளியவர்களையே ஈர்த்த மாமனிதர் தான் அடல்பிகாரி வாஜ்பாய். விவசாயிகள் பிரச்சனை, சுரேஷ் பிரபு தலைமையில் நதிநீர் இணைப்புக்கு ஆய்வுக்குழு அமைத்தது,  நாட்டில் இன்றைக்கு எளிதில் பயணிக்க முடிகின்ற நாற்கரச் சாலைகள் போன்ற பல அரிய சாதனைகளை நாட்டுக்கு அர்பணித்த அற்புத மனிதர்.

1986ம் ஆண்டு  மே மாதம் மதுரை பந்தயத்  திடலில் டெசோ மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் திரு வாஜ்பாயும் கலந்துகொண்டார். அப்போது அவரையும், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த எச்.என் பகுணாவையும் மறுநாள் விடியற்காலையில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்கள் தங்கியிருந்த பாண்டியன் ஓட்டலிலிருந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டுத் திரும்பும் போது, வாஜ்பாய் “இட்லி தோசா சாப்பிடலாம்” என்றார். உடன் வந்திருந்த பகுணாவும் இந்தியில் “சாப்பிடலாமே” என்று சொல்ல, காலேஜ் ஹவுஸ் உணவு விடுதிக்கு இருவரையும்அழைத்துச் சென்றேன்.

காலை 9.00மணியளவில் ஓட்டலுக்கு வெளியே வந்ததும்,  “அமைதியாக எங்களை யாருக்கும் அடையாளம் தெரியாதவாறு கோவிலைச் சுற்றிக் காண்பித்து, நல்ல உணவையும் சாப்பிட வைத்ததற்கு நன்றி” என்றார் வாஜ்பாய் அவர்கள்.   மீண்டும் பாண்டியன் ஓட்டலுக்குத் திரும்பிய போது வாஜ்பாயிடமும் பகுணாவிடமும் அடுத்தவாரம் நடைபெற இருந்த  தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், வை.கோ, தமிழக மற்றும் ஈழத்தலைவர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள் கலந்துகொள்கின்ற என்னுடைய திருமணவிழா அழைப்பிதழைக் கொடுத்தேன். உடனே இருவரும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.

ஆனாலும்  வாஜ்பாய் அவர்கள்  டெல்லிக்கு சென்ற பின்,   திருமண நாளான 12-05-1986 அன்று நினைவில் வைத்து எனக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பி இருந்தார். இந்தப்  பதிவை எனக்கு உதவியாக இருக்கும் படைப்பாளி கார்த்திக் புகழேந்தி தட்டச்சு செய்யும் பொழுது, என் தாயறிய இதய சுத்தியோடு சொல்கிறேன் என் கண்களிரண்டிலும் கண்ணீர் திரண்டு நிற்கின்றது. என்னுடைய 42வருட பொது வாழ்க்கைக்கு  இதைவிட வேறு என்ன பெரிய பெருமை வேண்டும். எம்.எல்.ஏவாகவும், எம்.பியாகவும்  ஆகவில்லையென்று என்னுடைய நண்பர்களும், நெருங்கியவர்களும், என் நலம்விரும்பிகளும் ஆதங்கப்பட்டாலும்  இந்த பேறுகள் எல்லாம் யாருக்குக் கிடைக்கும்…

இத்தகைய அன்பான மனிதருக்கு தாமதமாக பாரத ரத்னா வழங்கப்பட்டாலும், பொறுத்தமான மனிதருக்கே வழங்கப்பட்டுள்ளது என்று பாரத ரத்னாவுக்குத்தான் பெருமை.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… ம ...

அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்… மொத்த செலவும் மத்திய அரசே உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்தமாதம் ராமர் கோயில் திறக்கப்பட்டது. ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்க ...

அரசியலுக்காக பேசும் பேச்சுக்கள் வலியை ஏற்படுத்துகிறது இந்தியாவை வளர்ந்த நாடாக்க பிரதமர் மோடி சபதம் ஏற்றுள்ளார். ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம ...

கட்சியில் வாரிசுகள் இருக்கலாம்.  கட்சியே வாரிசுகள் கையில் இருப்பது ஆபத்து லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களில் ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங ...

எங்கள் குழந்தை ராமர் இனி கூடாரங்களில் வசிக்க மாட்டார் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் ராமச்சந்திர மூர்த்திக்கு ஜெயம் உண்டாகட்டும் வணக்கத்திற்குரிய ...

பாகுபாடு, திருப்தி படுத்தும், அ ...

பாகுபாடு,  திருப்தி படுத்தும், அரசியல் பிரச்சனைகளை வளர்த்தது நம்பாரதம் 1,500 ஆண்டுகளாக அன்னியரை எதிர்த்து போராடியது வரலாறு. ...

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர்

புனிதத்துவத்தை உணர்ந்த மனிதர் இந்தமனிதன் நினைத்திருந்தால் நேரடியாக ஜனவரி 22 ஆம் தேதி ...

மருத்துவ செய்திகள்

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

குடல்வால் தேவையா?

மனிதனின் உடலில் சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்தில் குடல்வால் எனும் ஒரு ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...