பத்து வயது முதல் ஐம்பது வயது வரையிலான பெண்கள் ஐயப்பன் ஆலயத்திற்கு சொல்ல இருந்த தடை தவறு! செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி இருக்கிறது!
அதற்கு சொல்லப்பட்ட காரணங்களில் முக்கியமானவை:-
1.இந்து மத வழிபாட்டு உரிமைகளில் ஆண்- பெண் பேதம் விதிக்கப்பட்டவில்லை! அப்படியொரு வேறுபாட்டை நடைமுறை படுத்த ஐயப்பன் வழிபாடு ஹிந்து மதத்தின் தனியான பிரிவு அல்ல.அதனால் நடைமுறையில் இருக்கும் தடை பெண்களின் வழிபாட்டு சம
உரிமைக்கு எதிரானது!
2. மாதவிலக்கை காரணம் காட்டி பத்து வயது முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுப்பது உடற்கூறு இயக்கங்களைக் காட்டி பாகுபடுத்துவதாகும்! அது அரசியலமைப்பு சட்டம் வழங்கி உள்ள தனி மனித உரிமைக்கு எதிரானது!
நீதிமன்ற காரணங்களும் சந்தேகமும்!
ஐயப்பனை வழிபடுவோர் தனி பிரிவினர் அல்ல அதனால் தனியான நெறிமுறைகள் கூடாது!
ஆமாம் , சிவ வழிபாட்டால் சைவம் என்றும், விஷ்ணு வழிபாட்டால் வைணவம் என்றும்
பிரிவுகள் உள்ளன. இன்னும் பல பிரிவுகள் உள்ளன. ஆனால் , சைவைப் பிரிவினரில் பலர் விஷ்ணு ஆலயங்களுக்கு செல்கின்றனர். விஷ்ணுவை வழிபடுபவர்களில் பலர் சிவ ஆலயங்களுக்கு செல்கின்றனர்!
ஹிந்து மதத்தின் தனிப் பிரிவுகளாக இருந்த கணாபத்யம் என்கிற தனிப் பிரிவு கிட்டத்தட்ட மறைந்து போய் சகல பிரிவினரும் வழங்கும் தெய்வமாக கணபதி வழிபாடு மாற்றம் அடைந்து இருக்கிறது! அதே சமயம் கணபதிக்கான தனி ஆலயங்கள் உள்ளன.
அதே போல சுப்பிரமணியரை வணங்கும் தனிப் பிரிவு இப்போது இல்லை! சக்தி வழிபாட்டு பிரிவான சாக்தம் இப்போது தனியாக இல்லை. சூரிய வழிபாட்டு பிரிவு தனியாக இப்போது இல்லை!
அதனால் சிவ வழிபாட்டுத் தலங்களில் கணபதிக்கும் சுப்பிரமண்யருக்கும் ஆலயங்கள் இருப்பது தங்களது தனிப்பிரிவு வழிபாட்டு உரிமைக்கு புறம்பானது.அவற்றை அகற்ற வேண்டும் என்று சைவர் ஒருவர் வழக்கு தொடுத்தால் அந்த நபரின் வழிபாட்டு உரிமையை
நிலை நாட்ட , அவர் கோரும் படி அகற்ற உத்தரவிடுமா?
ஆஞ்சனேய வழிபாடு வைணவம் சார்ந்தது. ஆனால் தனி ஆலயங்கள் உள்ளன.அங்கு அவர் பிரதான தெய்வமாக நிலை கொண்டு இருக்கிறார். அதனால் அவரை தனிப் பிரிவின் தெய்வம் என்று முத்திரை குத்த வேண்டுமா? தனிப் பிரிவுக்கான தெய்வம் அல்ல என்பதால் அவரது வழிபாட்டு முறைகளில் தனியான நெறிமுறைகளை பின்பற்றினால் நீதிமன்றத்தால் அது தவறாக பார்க்கப் படுமா?
சிவ ஆலயங்களும் விஷ்ணு ஆலயங்களும் முறையே சிவ வழிபாட்டிற்கும் விஷ்ணு வழிபாட்டிற்கும் உரியவை! இந்த ஆலயங்களில் குடிகொண்டுள்ள தேவிகள் சாக்த வழிபாடு என்னும் பிரிவைச் சேர்ந்தவர்கள்! அதனால் தங்களது வழிபாட்டு பிரிவின் தனித் தன்மைக்கு பங்கம் வந்து விட்டது என்று சைவ மற்றும் வைணவ பிரிவைச் சேர்ந்த யாராவது வழக்கு தொடுத்தால் நீதிமன்றம் வழக்கு தொடுத்தவரின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுகிறோம் என்று சக்தி சந்நிதிகளை அப்புறப்படுத்தும் தீர்ப்பை வழங்குமா?
இங்கெல்லாம் வழிபாட்டிற்கான தடைகள் இல்லையே – எதற்கு இந்த கேள்வி என்ற சந்தேகம் எழுகிறது அல்லவா? வெவ்வேறு திருக்கோயில்களில் வெவ்வேறு பத்ததிகள் பின்பற்றப் படுகின்றன. பூஜா விதிமுறைகள் உள்ளன. அவைகளை சரி என்று ஏற்றுக் கொண்டால் ஐயப்பன் ஆலயத்திற்கு என்று உள்ள தனிப்பட்ட விதிமுறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்! என்பதற்காகவே இந்த கேள்விகள்
அவ்வளவு ஏன், வட இந்திய திருக்கோயில்களில் இறைவனின் திருமேனியை பக்தன் தொட்டு
வணங்கலாம்.தென்னிந்திய திருக்கோயிலில் இது முடியாது! வட இந்திய சிவ பக்தர் ஒருவர்
தென்னிந்திய திருக்கோயிலில் ஸ்வாமியை தொட்டு பூஜிக்க உரிமை வேண்டும் என்று கோரினால் நீதிமன்றம் சரியான கோரிக்கை என்று ஏற்று தீர்ப்பு வழங்கிவிடுமா?
வட இந்திய ஆலயங்களில் பின்பற்றப்படும் ஆகம விதிகள் வேறு. தென்னிந்திய ஆலய ஆகம விதிகள் வேறு! இந்தியா முழுவதும் ஒரே ஆகம முறையை பின்பற்ற வேண்டும் என்று கூட நீதிமன்றம் சொல்லத் துணிந்து விடுமோ?
ஐயப்ப தோற்றம் சிவ விஷ்ணு ஐக்கிய தத்துவத்தின் வடிவம்! இந்த தத்துவத்தின் தோற்ற உருவம் சபரிமலையில் மட்டுமே காணக்கிடைப்பது அல்ல. சங்கரன் கோவிலில் சங்கர நாராயணர் இந்த தத்துவத்தின் தெய்வமாக காட்சியளிக்கிறார்!
சிவ விஷ்ணு ஐக்கிய ரூபன் சபரிமலையில் பிரம்மச்சரியத் தவநிலை தெய்வமாக விளங்குகிறார்! பிரம்மச்சாரி நிலையில் ஐயப்பன் துலங்குவதால் வழக்கத்தில் உள்ள கட்டுப்பாடை இப்போது நீதிமன்றம் ஆண் பெண் சம உரிமை பாகுபாடாகப் பார்த்து தீர்ப்பு வழங்கி இருக்கிறது! இது இயந்திரத் தனமான சட்டத்தின் பார்வை!
சபரிமலை வழிபாட்டில் ஆண் பெண் பாகுபாடு நிலவுகிறது என்ற நீதிமன்றத்தின் பார்வையே தவறானது! எந்த வயதிலும் பெண்கள் செல்ல முடியாது என்று தடை விதிக்கப்பட்டு இருந்தால்
அது தான் பெண்களுக்கு எதிரான பாகுபாடு! பத்து வயதுக்கு உட்பட்ட மற்றும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சென்று வழிபட ஏற்கனவே உரிமை இருக்கிறது! இந்த வயது வரம்புக்கு உட்பட்ட அனுமதியை அனுமதி மறுப்பாக நீதிமன்றம் பார்க்கிறது!
மாதவிலக்கு நாட்களில் திருக்கோயில்களுக்கு செல்லக் கூடாது என்ற நடைமுறை இருக்கிறது! இந்த நடைமுறை எப்படித் துவங்கி இருக்கும்? அந்த நேரத்தில் பெண்கள் வரக் கூடாது என்று கோயில்களில் இருந்து தான் கட்டுப்பாடு வந்து இருக்க வேண்டும்! அது பழகிய
நடைமுறை ஆகிவிட்டதால் காலப்போக்கில் வாழ்வியல் வழக்கமாகி இருக்கிறது!
அந்த குறிப்பிட்ட நாட்களில் வரக் கூடாது என்ற கட்டுப்பாடு எல்லா கோயில்களுக்கும் பொதுவான ஒன்று. அந்த வயதில் வரக் கூடாது என்பது சபரிமலை கோயில் கட்டுப்பாடு!
உடலின் இயற்கையான விளைவுகளின் அடிப்படையில் அமலில் இருக்கும் தடையானது அரசியலமைப்பு சட்டம் ஆண் பெண் இரு பிரிவினருக்கும் சமமாக வழங்கியுள்ள உரிமைக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறுகிறது!
ஆனால் இந்த உடற் கூறு மாற்ற விளைவு பெண்களுகென்றே இயற்கை அளித்த அருட் கொடை! அதுவே புதிய உயிரின் ஜனனத்திற்கு ஆதாரமாகிறது . அப்படி அல்லத போது அதுவே கழிவாக ஆகிறது! இந்த வித்தியாசங்களை இயற்கையே இயல்பாக்கி இருக்கிறது!
உடற் கூறு காரணமாக பெண்களை இழிவாக பார்க்காமல் இருக்க வேண்டும் என்று இந்திய மக்களுக்கு கற்பிக்க நீதிமன்றம் இந்த வழக்கை காரணமாக எடுத்துக் கொண்டு இருக்கத் தேவையில்லை! அவர்களுக்கு பயன் அளிக்கக் கூடிய பல வழக்குகள் நீதிமன்றத்தில் இருக்கின்றன!
ஹிந்து சமய வழிபாட்டு முறைகள் என்பது எல்லையற்ற பெருங்கடல்! அதன் காரண காரியங்களை சட்டப் பிரிவுகளை மட்டுமே வரிக்கு வரி எழுத்துக் எழுத்து என்று முடிவு செய்து அளிக்கப்படும் தீர்ப்புகளை அறியாமையின் வடிவமாக பார்க்கப்படும் காலம் ஒன்று வரும்!
நன்றி வசந்த பெருமாள்
You must be logged in to post a comment.
அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ... |
முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ... |
நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ... |
3reliability